Tuesday, June 23, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 11


(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“என்னென்னமோ ஆயிப்போச்சு, பாதை தடம் மாறிப்போச்சு!
கண்ணுக்குள்ள பொத்தி வெச்சது, முள்ளாக வளர்ந்து போச்சு!
மண்ணில் ஏந்தா பொறந்தோமுன்னு, வாழ்வே பார மாகிப்போச்சு
புண்ணாக்கியது மலர்கொடியை!, சுத்தி இருக்கவங்க ஏச்சு பேச்சு!”

“வவுத்துல புள்ள உண்டாகி இருக்கற இந்த நேரத்துல நல்லா ஓய்வு எடுக்கணும்... பாக்கவே சோகையா இருக்காங்க, வேளா வேளைக்கு நல்லா சாப்பிடணும்”

சொல்லிக்கிட்டிருந்த நர்ஸம்மா குரல் கேட்டு, கண்ணு முழிச்சு பார்த்தா கச்சாமா. அலறியடிச்சு போயி எந்திரிச்சு உட்கார்ந்தா. சுத்திமுத்தியும் மச்சான தொலாவ, தலைமாட்டுல அவர் நின்னுட்டு இருக்கறத பார்த்தொன்ன, பெண்ணினத்துக்கே உண்டான இயல்பான வெக்கம் மனசுல தோன, அவரை நிமிந்து பார்க்கவும் கூச்சப்பட்டவளாக, தலைய குமிஞ்சுக்கிட்டா.

மனசுக்குள்ள பூப்பூவா பூக்குது. புருஷன் கொஞ்சம் பாசமா இருக்கற மாதிரி தோணிச்சு. பெரிசா ஒன்னும் இல்ல, அப்பப்போ சாப்பிட்டியானு, கேக்குறதே அவளுக்கு ஒரு கூடப் பூவை தலையில கொட்டுன மாதிரி இருந்துச்சு. மாமியாவோட குத்தல் பேச்சு, இப்ப அவள ஒன்னுஞ் செய்யறதில்ல. வவுத்து புள்ளையோட நெனப்புலயே, ஒரு தவமாட்டம் நாளுங்கள ஓட்ட ஆரம்பிச்சா.

விஷயத்த காதுல கேட்டுட்டு, மீரான் சாயபும் பத்திமாவும் மகளைப் பார்க்க வந்தாங்க, ஒரு கூட தீனியோட. மாசமா இருக்கற கண்ணுமவள சீராட்ட ஆசையா இருக்காதா பின்ன...

“புள்ளைய ஒரு ரெண்டு மாசம் நம்ம வீட்டுக்கு அனுப்பி வையுங்க அம்மா! கொஞ்சம் வாய்க்கு ருசியா குடுத்து, ஒடம்ப தேத்தி அனுப்பி வெக்கிறன்”

மீரான் சாயபு சொன்னத கேட்டு நொடிச்சா ருகையா.

“ஆமாமா! போனவாட்டி கூட பத்து நாளுன்னு போயிட்டு, மூணே நாலுல திரும்பி வந்திட்டா! நீங்க அவ மனசுக்கு புடிச்சா மாதிரி நடந்திருந்தா, ஏன் வரப்போறா?”

மாமியா சொன்னத கேட்டொன்ன, கச்சாமாவுக்கு இப்படி ஒரு கோணம் இருக்கானு தோணிச்சு. உங்க மகன் வராததுனால தான் வந்தேனு சொல்ல நினைச்சா... ஆனா சொல்ல முடியல. ஒரு ஆண்மகனோட அருகாமைக்காக ஒரு பெண் ஏங்குறாங்கறதை கேவலமாத்தான சமுதாயம் இன்னமும் பார்க்குது. காமத்தை விட காதல் வலிமையானதுன்னு யார் புரிஞ்சு வெச்சிருக்காங்க?! ஏந்தான் எம்மனச புரிஞ்சுக்க அழிச்சாட்டியமா மறுக்கறாங்களோ... ஏக்கத்தோட புருஷன் மூஞ்சிய பார்த்தா...

“கவலைப்படாம போயிட்டு வாங்க மாமு! ரெண்டொரு நாளுல, கச்சாமாவ நானே கொண்டாந்து விடறேன்!”

சொல்லுறது தன்னோட புருஷனானு, அவளுக்கு ஒரே ஆச்சரியம். இந்த நேரத்துல அவளுக்கும் அம்மா வீட்டுல போய் ஓய்வெடுக்கணும்னு தான் இருந்திச்சு. மச்சான் வருவாரோ மாட்டாரோனு ஒரே கவலைல எதுவும் பேசல. இப்ப, மச்சானே இப்படி சொன்னொன்ன, அவ மனசு கொள்ளாத பூரிப்பு.

சும்மாவா சொல்லவாந்தரம் சொல்லறாங்க, ‘சாலோட தண்ணி சாய்ச்சு சாய்ச்சு குடிச்சாலும் தாயூட்டு தண்ணி குடிச்சாத்தான் தாகம் தீரும்’னு?!

அன்னிக்கு ராத்திரி, தஸ்தீரு ரொம்ப பிரியமா, அவ பக்கத்துல உட்கார்ந்து பேசிட்டு இருந்தான். பாருடா, மசக்கையானவுடன, நம்ம மேல பாசம் வருதோ இல்லையோ, வவுத்துல இருக்கற அவங்க ரத்தத்து மேல தானா பிரியம் வந்திருதுனு அவளுக்கு சந்தோஷம். பாலவனத்து வெய்யில்ல அலைஞ்சு திரிஞ்சு சோர்ந்தவன், வாராது வந்த மாமழயை, நாக்க நீட்டி, வாயால குடிக்கறா மாதிரி இருந்துச்சு. வாழ்க்கை இப்படியே சந்தோஷமா முடிஞ்சிறாதானு நெனச்சா கச்சாமா.

அம்மா வீட்டுக்கு போயிட்டா, இத, இந்த பாசத்த எழந்து போவோமேனு கவலயா இருந்திச்சு. விடிஞ்சொன்ன, அவளை தஸ்தீரே, அம்மா வீட்டுக்கு கூட்டிட்டு போறேனு சொல்லி இருந்தான்.

அன்னிக்கு ராத்திரி, வழக்கத்துக்கு மாறா சீக்கிரம் வீட்டுக்கு வந்துட்டான் தஸ்தீரு. நேரங்காலத்தோட சோறு தின்னுட்டு, ஜல்தியாவே உள்ளறைக்கு வந்திட்டாங்க.

“கச்சாமா! நாளைக்கு ஒரு நாளைக்கு நான் ஆபீஸுக்கு லீவு போட்டுடறேன்! காலைல ரெண்டு பேரும் அம்மா வீட்டுக்கு போயி, மத்தியானம் அங்கயே சாப்பிட்டுட்டு, ஒரு நாளு அங்கியே தங்கிட்டு வரேன் நானு! சீக்கிரமா பொறப்பட்டுரு! என்ன!”

“சரிங்க மச்சான்! அப்புறம் தெனமும் அங்க வருவீங்கள்ள, என்ன பாக்குறதுக்கு?!”

“வராம எங்க போப்போறேன்? அப்புறம், அடுத்த வாரம் எந்தம்பிக்கு பொண்ணுக்கு போப்போறம்ல, அதுக்குக் கூட நீ வேண்டானு எங்கம்மா சொல்லிட்டாங்க! வெளியூரு வீணா ஏன் அலைய வெக்கிணும்னு! மூணு மாசத்துல, கண்ணாலம் வெச்சிக்கிடலாம்னு பேசியிருக்காங்க!”

“எனக்கும் வரணும்னு ஆசையாத்தான் இருக்குது. ஆனா, நம்ம குழந்தைய பாதுகாப்பா வெச்சிக்கணும்ல! வயித்தைப் போட்டுட்டு ஊர்சாரிக்குப் போனா, கண்ணு பட்டுப் போகும்னு, எங்கம்மா கூட சொன்னாங்க!”

“அப்புறம் கச்சாமா! உனக்கு காசீமாலை போட்டம்ல, அது வேணும்னு அம்மா சொன்னாங்க! அதத்தான் தம்பி பொண்டாட்டிக்கு போடப் போறாங்களாம்!”

“அதெப்படிங்க! எனக்கு போட்டத கொண்டு போயி...”

“என்ன பண்ணுறது சொல்லு! அம்மா கேக்கறாங்க! கொடுக்காட்டி, இன்னமும் உன்னைய வைய்யுவாங்க! அதான் பாக்கிறேன்! நகையா பெரிசு... நம்ம கவுரவம் தான முக்கியம்... சபைல கொண்டு போட்டாவுணுமே”

கச்சாமாவுக்கு இப்ப தான் பொலபொலன்னு புரியுது, இரண்டு நாளா நல்லவனாக நடிக்கும் நாடகம் எதுக்குண்டு! ஆண்கள் இம்முட்டு சொயநலக்காரவங்களா. காரியம் ஆகுனும்னா எம்முட்டி தொல எறங்கி போறாங்க... காரியம் முடிஞ்சொன்ன, காத்துல பறந்து போவுதே, பசப்பு வார்த்தையெல்லாம்... இது அந்த வக்கத்த பொண்ணுக்கு மொல்லமா தான் ஒறச்சுது...

கண்ணாலத்துல கொண்டாந்து மாப்பிள்ளை ஊட்டு சீதனமாக போட்டது, இன்னொரு மொறை மணமேடை ஏறப்போவுது, இன்னொரு பெண்ணுக்கு சொந்தமாக! அடுத்தடுத்து இன்னும் ரெண்டு தம்பிங்க இருக்காங்களே, அப்போ அந்த நக வரப்போகும் பெண்ணுக்கும் சொந்தமில்லையா, கேட்க நினைத்தும் கேட்கவில்லை, கச்சாமா!

“வந்து... கச்சாமா... நாந்தான மூத்த பையன்! நகைய நீ தராட்டி, காசு பொரட்ட, நாந்தான், அதிக நேரம் வேல பாக்கணும்! புரிஞ்சுக்குவேனு நெனைக்கறேன்!”

இது மெரட்டல் மட்டுமில்ல..., தனக்கு அதிக வேலைன்னா, தன் பொண்டாட்டி அப்டியே உருகிப்போய் ஒப்புக்குவானு செய்யும் தந்திரம். இப்ப மட்டும், நேரத்தோடவா வீட்டுக்கு வர்ராரு! சீட்டுக்கும் ரேஸுக்கும் செலவளிக்கிற காசு இருந்தா போதுமே!

மயிலே மயிலேனொன்ன எறகு போடாட்டி, வெடுக்குனு புடுங்கிக்குவாங்கன்னு நல்லா தெரியுமே அவளுக்கு! நேரா போயி, பீர்வாவ தொறந்து, காசிமாலைய கொண்டாந்து புருஷன் கையில கொடுத்திட்டா. நகை என்ன பெரிய நகையின்னு, மனசில நெனப்ப வலுக்கட்டாயமா வரவழைச்சாலும், முணுக்குனு கண்ணுல துளிச்ச கண்ணிர அவனறியாம தொடைச்சுக்கிட்டா!

ஆச்சு! அம்மா வீட்டுக்கு வந்து, நாலு நாள் ஆயிருச்சு. கொண்டாந்து விட்டவன், இடையில ஒரு வாட்டி, வந்து பார்த்துட்டுப் போனதோட சரி. கொழந்த வவுத்துக்குள்ள இருக்கற சந்தோஷத்துல, எதையும் பெரிசா எடுத்துக்கிடல.

அந்த முத்தத்து வாசல்ல குந்தவெச்சு உட்காந்து குருவிக்கு குருணை போட்டுட்டே யோசிச்சா... நாம பொம்பள ஜெம்மம்... ஆன கஷ்டம் வந்தாலும் புருஷந்தான் நமக்கு... இங்கெல்லாம் சும்மா ஒரம்பறையாட்டம் தான் வந்து போவணும். வேற வழி என்ன?

முத்தம்மாவும், குப்பிமாருங்களும், பலகாரம் சுட்டுட்டு, வந்து பார்த்தாங்க. ஐனீஸும் பூரியானும் மோடுலாடும் முறுக்கும் சீப்பாத்து கடந்துது. சைதா, தெனம் வந்து போய்க்கிட்டிருந்தா! தனக்குக் கண்ணாலம் ஆயிருச்சுங்கறத கூட, சில சமயம் மறந்து, தோழிங்களோட, சைதாவோட, பேசிச் சிரிச்சு, கலகலப்பா இருந்துக்கிட்டிருந்தா, கச்சாமா!

ஒரு நாளு, பாத்திமா, மீரான் சாயபு எல்லாரும் கூடத்துல உட்கார்ந்து இருந்தாங்க, அப்பத்தான் பாத்திமா கேட்டா,

“கச்சாமா! ஒன்னோட காசி மாலைய எடுத்து கழுத்துல போட்டுட்டு வா! நாம முத்தம்மா ஊட்டுக்கு போயிட்டு வரலாம்!”

கச்சாமா திருதிருன்னு முழிக்கிறா. என்ன சொல்லறதுன்னு தெரியல. விஷயம் தெரிஞ்சா புருஷன திட்டுவாங்களேனு, கவலையா இருந்திச்சு! இருந்தாலும் எத்தினி நாளைக்கு முழுப்பூசினிக்காய சோத்துல மறைக்க முடியும்?

“அம்மா! வந்து வந்தும்மா, காசி மாலைய மச்சாங்கிட்ட கொடுத்திட்டேம்மா!”

“மச்சான்ட்ட குடுத்திட்டியா? என்னடி சொல்லற?”

“ஆமாம்மா! அவரு தான் கேட்டாரு! தம்பிக்கு பொண்ணுக்குப் போறாங்கல்ல, அதான் பொண்ணுக்கு போட வேணும்னு!” மெண்டு முழுங்கிட்டே சொன்னா.

அவ்வளவு தான், அப்பாவும் அம்மாவும் இவ்வளவு தூரம் விசுவரூபம் எடுப்பாங்கன்னு அவ நெனைக்கவே இல்லை. மாமியாவே பரவாயில்லைனு சொல்லற அளவுக்கு ஆட்டமா ஆடிட்டாங்க! மருமகன, வாய்க்கு வந்தபடியெல்லாம் ஏசினாங்க. துப்பு கெட்டவன், கையாலாகாதவன்னு மெண்டு துப்பினாங்க. கச்சாமா இதையெல்லாம் எதிர்பார்க்கவே இல்லை.

கச்சாமவையும் சேர்த்து வெச்சு பேசினாங்க. கச்சாமா எடங்குடுக்கறதுனால தான இந்த மாதிரியெல்லாம் நடக்குதுன்னு அவங்க நெனப்பு!

“ரொம்ப உம்புருஷனுக்கு எடங்குடுத்து கெடுத்து வெச்சிருக்க! கேட்டொன்ன தூக்கிக் குடுத்தர்ரதா! அவங்க போட்ட நகைய அவங்க புடிங்கி வெச்சிக்கிட்டாங்கன்னா, இனி நாங்க போட்ட நகையையும் நாங்க கொடுக்க மாட்டோம்! உன் நகைங்க எல்லாம் இனி எங்கள்ட்ட தான் இருக்கணும். மாமியா வீட்டுக்கு கொண்டு போகக் கூடாது! குடுத்தா, இப்படியே ஒவ்வொன்னா அழிச்சிருவான், தறுதல!”

பேசிக்கிட்டே போனாரு மீரான் சாயபு. ஒரலுக்கு ஒரு பக்கம் இடியின்னா, மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் இடிங்கறாப்புல, கச்சாமா பாடு தான் திண்டாட்டம் இனி! மாமனாரு மருமகனுக்குள்ள, ஒரு விரிசல் விழுந்ததுமில்லாம, கச்சாமாவுக்கும் கெட்ட பேரு, அதோட ஏச்சு பேச்சும் வேற!

அவங்க திட்ட திட்ட, மச்சானுக்காக கச்சாமா எச்சா பரிஞ்சு பேச, கோபம் பூராவும் இப்ப கச்சாமா மேல தான். கச்சாமாவுக்கு மச்சான் மேல, பாவம் அவரை இந்த பேச்சு பேசறாங்களேனு பாசம் கூடுச்சே தவிர குறையல. புருஷம்மேல கம்மூடித்தனமா பாசம் வெச்சுப்புட்டா வேற என்ன தான் பண்றது?..

நகையெல்லாம் எடுத்து வெச்சிக்கிட்டாங்க. அடுத்தடுத்த நாட்களில, ஒறவு இருந்தாலும், அவ்வளவு இனிப்பா இல்ல. இவங்க நகைய புடுங்கி வெச்சுக்கிட்டத, மச்சாங்கிட்ட, மாமியாகிட்ட சொன்னா, என்னாகும்னு பயம் அடி வயித்த கவ்விக்கிச்சு.

நாலு நாளைக்கு ஒரு தடவை தஸ்தீரு வந்து போயிட்டு இருந்தான். அங்க யாரும், அவன்ட்ட சரியா பேசல. ‘வா’னு கேக்கறதோட சரி. ஆனா, அதை ஒணருர அளவுக்கு அதிக நேரமும் அவன் அங்க இருக்கறது இல்ல. சோறும் திங்கறது இல்ல.

வந்து பாஞ்சு நாளைக்கு மேல ஆயிருச்சு. தாய் தந்தையின் பாராமுகம், மாமியா வீட்டுக்கே கிளம்பி போயறலாம்னு இருந்திச்சு. போனா கூள ருகையா எதாவது சொல்லி நொடிப்பா தான். நொடிச்சாலும் பரவாயில்லை. பாசமா இருக்கற அப்பாவும் அம்மாவும், இப்ப புது தினுசா பேசாம இருக்கறத விட, அது கொடுமயா இருக்காதுன்னு அவ மனசுல பட்டுச்சு.

அன்னிக்கு புருஷன் வரங்காட்டி, வீட்டுக்கு வரேன்னு சொல்லிட்டு, அவங்கூட கிளம்பிட்டா. ஆனா, நகையை அம்மா வாங்கி வெச்சுக்கிட்டத இன்னமும் சொல்லல. வயித்துலயும் பாரமா மனசிலயும் பாரமா கெளம்பி போனா நம்ம கச்சாமா...

(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

Jaleela said...

ம்ம் சுகைனா ரொம்ப அருமையான சரித்திரம், ம்ம் முதல் மருமகள் என்றால் இப்படி தான் பொருந்தி போகனும் என்பதும் கால காலமாய் தொடருகிறது.

என்ன இருந்தாலும் காசு மாலைய இவ்வளவு சீக்கிரம் புடுங்கி இருக்கக்கூடாது

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா,
மெயில் அனுப்பி உள்ளேன். பாருங்கள்.

குனிய குனிய கொட்டும் ஜாதி இருக்கத்தானே செய்கிறது!

Biruntha said...

திருமணமானபின் பெண்கள் நிறைய விடயங்களைக் கற்றுக் கொள்வார்கள். ஒவ்வொருவரிடமும் (அது பிறந்த விடானாலும் சரி புகுந்த வீடானாலும் சரி) மிகவும் கவனமாக சிந்தித்துச் செயல் படவேண்டும். பிறந்த வீட்டைப் பற்றிக் குறையாகவோ அதிகம் நிறைவாகவோ புகுந்த வீட்டிலும் புகுந்த வீட்டைப் பற்றி குறையாகவோ அதிகம் நிறைவாகவோ பிறந்த வீட்டிலும் பேசுவதால் தேவையில்லாத பிரச்சனைகளுக்கும் மனக் கஸ்டங்களுக்கும் இடம் அளிக்கும். இப்படி எல்லா விடயத்திலும் சிந்தித்துச் செயல்பட வேண்டி வரும்.
பாவம். அந்தப் பேதைப் பெண் கச்சாமா.

அன்புடன் பிருந்தா

asiya omar said...

தஸ்தீரின் திடீர் பாசம் என்னையும் ஒரு நிமிடம் கச்சாமவைப்போல் நெகிழவைத்துவிட்டது,அதன்பின்பு தான் தெரிந்தது எல்லாம் விஷயத்தோடுதான் என்று, பாவம் இனி எதை எல்லாம் புடுங்கப்போகிறார்களோ.