Thursday, June 18, 2009

சின்ன சின்ன ஆசை


மண் பானை அடுப்பேற்றி சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து
கூட்டஞ்சோறு ஆக்கி அதை ருசி பார்க்க ஆசை.

கல்லா மண்ணா ஜில்லிக்கரம் பசங்களோடு கிரிக்கெட்டில்
அழுக்கான துணி கண்டு அம்மா திட்ட ஆசை.

வேப்ப மர நிழலடியில் போட்ட கணக்கு தப்பாகி
டீச்சர் எந்தன் காதை திருகி திருத்தித் தர ஆசை.

பள்ளி நேரம் முடிந்த பின்னே உடைந்து போன சாக்பீஸில்
ப்ளாக் போர்டில் டீச்சரைப் போல் எழுதிப் பார்க்க ஆசை.

ரைன் நதியின் கரையோரம் ரகசியமாய் ஒரு காதல்
என்னவரின் நெஞ்சோடு சாய்ந்து கொள்ள ஆசை.

ஊட்டி போன ஹனிமூன் நாட்கள் பதினெட்டு வயதினிலே
திரும்பக் கிடைக்க வேண்டுமென்று தினம்தினமும் ஆசை.

தாஜ்மஹாலை ரசித்த நேரம், சிம்லாவின் இனிய பொழுது
மறுபடியும் அனுபவிக்க மனம் முழுக்க ஆசை.

இந்த வருடம் போன ஹஜ்ஜு இனிதாக நிறைவேறி
இறையோனின் அருளெனக்குப் பெற்றுக் கொள்ள ஆசை.

கைசூப்பும் பழக்கத்தை என்பையன் மறந்து விட
தாயாரின் கால்வலியும் குணமாக ஆசை.

நிலவுருக்கி நகைசெய்து நட்சத்திரக் கல் பதித்து
அழகுமகள் கழுத்தினிலே அணிவிக்க ஆசை.

மாமனார்க்கு சேவை செய்து நல்லபடி கவனிக்கவும்
சகோதரர்கள் வாழ்வென்றும் செழித்தோங்க ஆசை.

முடிவாக ஒரு ஆசை அடிமனதின் ஆழத்தில்
மரணத்திலும் மச்சானுடன் இணைந்துவிட பேராசை.

-சுமஜ்லா

 2009ல் எழுதியது. சில நியாயமான ஆசைகள் நிறைவேறிவிட்டன. இறுதி ஆசை மட்டும் ஆழ்மனதில் இன்னும் பேராசையாய்.....

5 comments:

S.A. நவாஸுதீன் said...

பின்னோக்கியும் முன்னோக்கியும் - நல்ல ஆசைகள்.

"உழவன்" "Uzhavan" said...

உங்களோட எல்லா ஆசைகளும் நிறைவேற வேண்டும் என்பதுதான் எங்களின் ஆசையும்.

"மண் பானை அடுப்பேற்றி சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து" என்பதை "சுள்ளிக் குச்சி பொறுக்கி வந்து மண் பானை அடுப்பேற்றி " என்று மாற்றினால் மிகச் சரியாக இருக்குமே..
காளமேகப் புலவருக்கு தெரியாததா என்ன.. :-)

SUFFIX said...

6 ல் இருந்து 100 வரை, நல்ல ஆசைகள், நடந்ததும்.. நடக்க இருப்பதுமாக. வாழ்க்கையின் ஒவ்வொரு படியையும் அழகாக எடுத்து வைத்துள்ளீர்கள்.

துபாய் ராஜா said...

உங்களின் எல்லா ஆசைகளும் நிறைவேற எல்லாம்வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நான் மண்பானையை அடுப்பேற்றுவதற்குள், என் தோழர்(ழி) சுள்ளி குச்சி பொறுக்கி வந்து விடுவார். சோ, ஐதர் வே ஓக்கே!

ஷஃபி நாலு நாளாய் என்னால் நெட்டுக்கு வர முடியவில்லை.

பாராட்டிய, வேண்டிய அனைவருக்கும் நன்றி!