Sunday, June 28, 2009

எப்போது? யாரிடம்?


உயிரோடை சிறுகதைப் போட்டிக்காக எழுதப்பட்டது.

போட்டி விதிமுறை: ச.முத்துவேல் எழுதி, உயிர்மை.காமில் வெளியான கவிதையைத் தழுவி எழுதப்பட வேண்டும்.

புகைப்படம்: http://www.uyirmai.com///அவரைப் பார்க்க ஆசை

ஏற்பாடு செய்யும் நண்பருக்கே
விருந்தாவாள்
விலை மகள்

இடமும், பணமும் என
எல்லாமும் ஏற்கும் புரவலரோ

ஓடிப்போன
தன் மனைவியின்
உடைகளை, நகைகளை
விலை மகளுக்கு அணிவித்து
நாற்காலியில் அமரச்செய்து
விலகி உட்கார்ந்து
பார்த்து ரசித்து
விக்கித்து அழுவதோடு சரி
- ச.முத்துவேல்//

எப்போது? யாரிடம்?

குட்டையான பாப் கூந்தலுடன் செயற்கையான அலங்காரம். உதட்டு லிப்க்ளாஸ் மணம் உள்ளறையெங்கும் பரவியிருக்க, குட்டைப் பாவாடையில் ஒரு நெட்டை தேவதை. கனவிலும் இம்சைப் படுத்தக்கூடிய கன்னத்தின் பிங்க் சாயம். கலரிங் செய்த முடிகள், காற்றில் படபடத்து, கூவாமல் கூவி அழைத்தன. காதோரச்சுருள்கள், சிகரெட் புகை வளையத்துக்கு சவால் விடுவது போல, சுழித்து சுழித்து இறங்கியிருந்தது. மெல்லிய பனியன் மேனியைத் தழுவியிருக்க, இவை எதையும் ரசிக்காமல், எங்கோ வெறித்தபடி அமர்ந்திருந்தான் அவன்.

உள்மனகாயம் இன்னமும் ஆறவில்லை. உடலின் தேவையை மனம் உணரவில்லை. உயிரில் இடம் கொடுத்து, உள்ளத்தில் நிறைத்திருந்தவள், இன்று இன்னொருவனோடு! ‘என்ன கண்டாள் என்னிடம் இல்லாத ஒன்றை?’ என்ற எண்ணமே, துளித்துளியாய்ப் பெருகி, விஷமாகி, விஷப்பாம்புமாகி, அவனைத் தீண்டிக்கொண்டிருந்தது. மனதில் ஒரு போராட்டம் உருவாகியிருந்தது.

பழிக்குப் பழி வாங்க வேண்டுமென்று, சொன்ன நண்பன் ஏற்பாடு செய்திருந்தான், இவளை. ‘இவளை மட்டும் அல்ல, ஒருத்தி போனால் என்ன, இன்னும் ஆயிரம் பேரை நீ அனுபவிக்க வேண்டும்’, மனதில், சுதி ஏற்றியிருந்தான். ஓடிப்போனவள், மீண்டும் தவறை உணர்ந்து ஏற்றுக் கொள்ளச் சொல்லி தூதனுப்பி இருக்கிறாளே?, ஏற்றுக் கொள்வோமா? அதெப்படி எச்சில் தானே? சீச்சீ! எண்ணமே அருவருத்தது. அப்படியானால், இவள் மட்டும்? பதி விரதையா?

ஒரு நாளைக்கென்றால், எச்சில் சரி! காலம்பூராவுக்கும் என்றால் தவறு! என்ன சித்தாந்தம் இது? மனோவேகம் பூச்சாண்டியாய் பயமுறுத்தியது. சம்பந்தா சம்பந்தம் இல்லாமல், தனக்கு அடுத்து இருக்கும் ஐந்து தங்கைகளின் நினைவு வந்தது. கடந்த கால வறுமையில், கைம்பெண்ணான தாய், நெறி வழுவாமல், தம்மையும் காத்து தம் மக்களையும் காத்தது, மனதில் ஊடாடியது.

இறுதியாக ஏற்பட்ட உந்துதலால் எழுந்தான். தன் திருமணச்சேலையை எடுத்து வந்து தந்தான். அவன் எண்ணவோட்டத்தை புரிந்து கொண்டாள், அந்த தேவதை. அத்துடன், நில்லாமல், முதலிரவில், தான் அன்பு பரிசாய் போட்டு விட்ட மோதிரத்தைப் போட்டு விட்டான். இன்னும், கைவளவியும், கழுத்தட்டியும், கால்கொலுசும் பூட்டி விட்டான். ஸ்பரிசம் கூட படாமல், இவையெல்லாம் செய்து விட்ட அவன் மேல், அவளுக்கு மரியாதை கூடியது. ஒத்துழைத்தாள்.

முடிந்தது உடுப்பும் அணியும். இன்னமும் ஏதோ ஒரு குறை இருப்பது, அவன் கண்களில் தெரிந்தது. அவன் உள்ளக்கிடக்கை புரிந்து விட்டது. பாரம்பரிய பெண்ணாக, உடையில் தோன்றினாலும் உடலில் தோன்றவில்லையென்று புரிந்து கொண்டாள் அம்மாது. இப்போது, அவனை சந்தோஷப்படுத்த வேண்டும் என்ற ஆவல் தோன்றி விட்டது. முகம் கழுவி, மஞ்சள் பூசி, மையிட்டு, குட்டை சடைபோட்டு, கூந்தலில் மலர் சொருகினாள். வெளிப்பட்டாள், அவன் முன் தமிழ் குடும்ப, நன்மகளாய்.

நோக்கினான், விழி அகலாமல்... மனக்குழப்பம் அதிகரித்தது. தலையை, முகத்தை, கழுத்தை, மார்பை, இடுப்பை, கால்களைப் பார்த்துக் கொண்டே இருந்தான். கண்டு கொண்டான், கண்டு கொண்டான், கண்டு கொண்டான்! ஓடிச் சென்று, பின்புறமாய், அவள் ரவிக்கையை அகற்றினான். விலைமகளாய் இருந்தும் அவன் செய்கையால் விக்கித்து நின்றாள் அவள். ரவிக்கையை விலக்கியவன், மீண்டும் வந்து அமர்ந்து கொண்டு விசும்ப ஆரம்பித்தான்.

அழுதான் அழுதான் அழுது கொண்டே இருந்தான். பெருந்தொனியில்... அடிக்குரலில்... ஆற்றாமையின் அடையாளமாய்... இயலாமையின் வெளிப்பாடாய்....! வந்த நண்பனுக்கும் வந்தேறியவளுக்கும் குழப்பம்.

சிறிது நேரத்துக்குப் பின், அடுத்த அறையில் நண்பன் அவளோடு. தடுக்க நினைத்தும் தடுக்க முடியாமல் இவன். யாரிடம் போய் சொல்வான்? ஐந்தோடு ஆறாவதாகப் பிறந்து, தந்தையிழந்ததால், குழந்தையில் தத்துக் கொடுக்கப்பட்ட தங்கையிவள் என்னும் உண்மையை - அவள் முதுகு மச்சத்தைப் பார்த்து அறிந்து கொண்ட நிலைமையை - எப்படி?, எப்போது?, யாரிடம்?, என்று? சொல்லுவான்.

இனி நாளை அவன் மனைவியை மீண்டும் அழைத்து வருவது உறுதி!!!

-சுமஜ்லா.

10 comments:

S.A. நவாஸுதீன் said...

கவிதைக்கு பொருத்தமான கதை. இறுதியில் ரொம்ப ஓவர் ஸ்ட்ராங்ஆ தெரியுது.

S.A. நவாஸுதீன் said...

வெற்றி பெற வாழ்த்துக்கள்

ஷ‌ஃபிக்ஸ் said...

மச்சத்தில் தான் கதையின் மேட்டரா...ஓ.கே!! வெற்றிபெற வாழ்த்துக்கள் அக்கா!!

asiya omar said...

சுமஜ்லா ஏதோ மனதை அழுத்துகிறது,ஏன் இந்த கதை இப்படி?கதாசிரியர்கள் சிந்தனை விந்தையானது.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அக்கா! சும்மா போட்டிக்காக எழுதியது.

நவாஸுதீனுக்கு பின்னூட்டப் புலி என்றும் ஷபி தம்பிக்கு, பின்னூட்டப் புயல் என்றும் (நீங்கள் தான் புலியல்ல பூனை என்றீர்களே) பட்டம் தருகிறேன்.

நட்புடன் ஜமால் said...

வெற்றி பெற வாழ்த்துகள்!

" உழவன் " " Uzhavan " said...

வெற்றிக்காகவே படைக்கப்பட்ட மீண்டுமொரு அழகான படைப்பு. வாழ்த்துக்கள் :-)

அவனுக்கு இல்லாவிடால் இவனுக்கு.. இவனுக்கு இல்லாவிட்டால் அவனுக்கு. இப்படி யாரோ ஒருவருக்கு எபோதும் விலைமகளின் தேவை இருந்துகொண்டுதான் இருக்கிறது. என்ன செய்வது..

மச்சம்... ம்ம்.. கவுண்டமணி செந்தில் காமடி சீனுதான் ஞாபகத்திற்கு வந்தது. :-))

SUMAZLA/சுமஜ்லா said...

//வெற்றி பெற வாழ்த்துகள்!//

//வெற்றிக்காகவே படைக்கப்பட்ட மீண்டுமொரு அழகான படைப்பு. வாழ்த்துக்கள் :-)//

நன்றி ஜமாலுக்கும் உழவனுக்கும்...

கணவனைப் பிரிந்திருக்கும் பெண்கள் எல்லாம், நெருப்பாய் அவன் வழி பார்த்திருக்க, ஆண்களுக்கு மட்டும் ஏன் செருப்பால் அடிக்கும் இப்புத்தி? என்ன இருந்தாலும் நானும் ஒரு பெண்ணல்லவா?

ஆனால், விலைமகள்கள் இருப்பதால் தானே ஆண்கள் விலை போகிறார்கள் என்பது, வேதனையான உண்மை.

மச்சம் காமடியா? நான் பார்த்ததில்லை.

நிலாரசிகன் said...

//லிப்க்ளாஸ் //

இதென்ன?

கதையின் முடிவு நெஞ்சில் சுமை ஏற்றுகிறது.

வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

நிலாரசிகனே,
தங்கள் வருகைக்கு நன்றி!

Lipgloss என்றால் லிப்ஸ்டிக்கின் மேல், ஷைனிங்குக்காக, பூசும் வாசனை நிறைந்த ஜெல்.