Tuesday, July 7, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 13


(உலவும் மனிதர்களின் உண்மைக்கதை)

“பாதி ராத்திரி ஆன போதும் பாவி மச்சானக் காணலியே,
சேதி ஒன்னும் தெரியாம, தூக்கமும் வரக்காணோம்?!
வீதியில நின்ன போது, விளக்கணஞ்சு போனதம்மா….
சாதிசனம் ஊராரும் எந்தன் துன்பம் அறிவாரோ?!”

மோட்டு வளையைப் பார்த்தபடியே உட்கார்ந்திருந்தா கச்சாமா. ராத்திரி மணி பதினொன்னு ஆயிருச்சு. மச்சானை இன்னும் காணோம்னு விசனமா லைனுக்குள்ள நடந்துகிட்டிருந்தா. சித்தைக்கொரு தரம், வாசல் படிக்கு வர்ரதும், எட்டிப் பார்த்துட்டு ஏமாத்தமா உள்ள போறதுமா இருந்தா. காத்தால, அம்மோட்டுல நடந்தது வேற அவளை ஒரேடியா உலுக்கி போட்டுச்சு.

காலைல அம்மோட்டுக்கு போனா,
“அம்மா, கொஞ்சூண்டு ஆணம் இருந்தா குடுமா, மச்சானுக்கு!”

“ஏன் நீ காய்ச்சலையா?”

“ம்ஹூம்” மனசுக்குள்ளயே முணங்கினாலும், வீட்டுல ஆணங்காய்ச்ச ஜாமானம் இல்லாதத அம்மாட்ட சொல்ல பயம். சொன்னா பேச ஆரம்பிச்சிடுவாளே!

“நீ வேணும்னா இங்க வந்து சாப்பிடு! அதென்ன மச்சானுக்கு… மச்சானுக்குன்னு?! நீ ரொம்ப எடங்குடுக்கறதுனால தான் அந்தாளு ரேஸுல கொண்டுப் போயி காச விடறான். கொஞ்சம் உட்டுப் பிடிச்சீனாத்தான் சரியாவரும்”

திட்ட வாங்கிக்கிட்டு, அம்மா தந்த துளியூண்டு ஆணத்த வாங்கிக்கிட்டு, ஊட்டுக்கு வந்திட்டா. புள்ளையப் பத்தின கவல இல்ல. மர்ஜியா எப்பப்பாரு பாத்திமா ஊட்டுல தான் கிடப்பா.

காத்தால தஸ்தீரு சோறு தின்னுட்டு போனவன் தான். இவளும் காத்தால ரெண்டு இட்லி, இட்லிக்காரம்மாகிட்ட வாங்கி சாப்பிட்டா. மத்தியானம் ஒன்னுமே இல்ல ஊட்டுல. தஸ்தீரு வர மாட்டான். கேட்டா அம்மா வீட்டுலயே சாப்பிட்டுக்கறதா சொல்லிருவான். இவ ஒருத்திக்காக ஒல வெச்சு, கொஞ்சூண்டு சோறு வடிச்சா. பச்சத்தண்ணிய ஊத்தி கரச்சு, வெங்காயத்த கடிச்சுக்கிட்டு குடிச்சது தான்.

ராத்திரி அந்த சோறு கொஞ்சமா இருந்துச்சு. ஒரு ஆளுக்கு தான் பத்தும். கொஞ்சம் மச்சானுக்காக ரசம் வெச்சு வெச்சா. வீட்டில் இருந்த சில்லரையப் பொறுக்கி, மச்சானுக்கு தொட்டுக்க ஒரு வாழைப்பழம் வாங்கி வெச்சிருந்தா.

இப்ப இவளுக்கு பசி தாங்கல. மத்தியானமும் சரியா சாப்பிடாதது வேற சேர்ந்துக்கிச்சு. நேரா லைன்ல குடியிருந்த மும்மக்கா வீட்டுக்குப் போனா.

“மும்மக்கா…..”

“வா, கச்சாமா….வா….”

லைன்ல வாடகைக்கு குடியிருக்கற மும்மக்கா அன்னாடங்காய்ச்சிதான். ஊடு நெறைய மக்க. அதில ஜாயிரு தான் மீரான் சாயபோட செல்லப் பிள்ளை.

“அக்கா, வயிறு ரொம்ப பசிக்குது அக்கா! இருந்த சோத்த மச்சானுக்கு வெச்சிட்டேன். கொஞ்சூண்டு சோறு இருந்தா குடுக்கா…”

தயக்கத்தோடு மெண்டு முழுங்கிக்கிட்டே கேட்டா. பசி வந்திட்டாதான் மான அவமானந் தெரியாதே! அதோட, மும்மக்கா அவ மேல ரொம்ப பிரியமா இருப்பா.

யாருக்கு தான் கச்சாமா மேல பிரியம் இல்ல? எல்லார்கிட்டயும் கலகலனு அவ கஷ்ட நஷ்டத்தை மறந்து பேசிச் சிரிக்கற சுவாபம். அவ பலமும் அதான் பலவீனமும் அதானே?!

உரிமையோட தாவக்கட்டையைப் பிடிச்சுக்கிட்டு சோறு கேக்கற பொண்ணப் பார்த்ததும், கண்ணுல மழுக்குனு தண்ணி வந்திருச்சு மும்மக்காவுக்கு.

“தோ கச்சாமா மத்தியானம் உங்கம்மா கொடுத்த குஸ்கா சோறும் குருமாவும் ஒரு பாசன் அப்படியே இருக்கு! இந்தா புள்ள எடுத்து சாப்பிடுமா”

அவங்கம்மா ஊட்டுல, மத்தியானம் சோறாக்கி, நன்மைக்காக ஒரு பாசன் சோறு மும்மக்காவுக்குக் கொடுத்திருக்கறது புரிய அவளுக்கு ரொம்பவும் நேரமாகல. நம்மள பெத்த புள்ளையாவும் நினைக்க மாட்டேங்கறாங்க, ஒரு மிஸ்கீனாவும் நினைக்க மாட்டேங்கறாங்களே! அட, பெத்திருந்தாத்தானே புள்ளையா நினைப்பாங்க. நாம என்ன அவங்க வவுத்துலயா பொறந்தோம்?!

சாப்பாட்ட பார்த்தவுடனே, அவ கண்ணுல தெரிஞ்ச ஒளியப் பார்க்க மும்மக்காவுக்கே பாவமா இருந்துச்சு. எப்படி வளர்ந்து எப்படி இருக்க வேண்டிய புள்ள? அவ ரொம்ப புருஷன் புருஷன்னு பார்க்கறதுனால தானே அவங்க அம்மாவும் அப்பாவும் அவளை ஒரடி தள்ளியே வெச்சிருக்காங்க. புருஷன உட்டுட்டு வா, அவன் தானா திருந்துவான்னு சொல்லறாங்க அவங்க. ஆனா, இவ வருவாளா?!

“அக்கா, நான் ஊட்டுல போயி சாப்பிட்டுக்கறேன் அக்கா” தட்டை வாங்கிக்கிட்டுப் போனா. அவ, அதில முக்கால்வாசி புருஷனுக்கு வெச்சிருவாங்கறது மும்மக்காவுக்கு தெரியாதா என்ன?!

அந்த பசியிலயும், வெகு நேரம் புருஷன எதிர்பார்த்து சாப்பிடாமத்தான் இருந்தா. மயக்கமா வந்ததும், கொஞ்சூண்டு தின்னுட்டு, இதோ இப்ப, வாசலுக்கும் ஊட்டுக்குமா நடந்துக்கிட்டிருக்கா, புருஷன எதிர்பார்த்து.

வீதிவாசல்படியில நின்னுக்கிட்டிருந்தப்ப, லைனுக்குள்ள எரிஞ்சிட்டு இருந்த குண்டு பல்பு அமிஞ்சிருச்சு. தன்னோட அப்பாவோ, அம்மாவோ பீஸ புடிங்கிக்கிட்டாங்கன்னு, கச்சாமாவுக்கு நல்லாவே தெரியும். அதென்ன அவ, புருஷனுக்காக விடிய விடிய லைட்டப் போட்டுக்கிட்டு ஒலாத்திக்கிட்டே இருக்கறதுன்னு அவங்களுக்கு பிடிக்காது. அவ, வாசல்படியில நிக்கறது தெரிஞ்சாலே பீஸ பிடிங்கிடுவாங்க. இது அடிக்கடி நடக்கறது தானே?!

வேற வழியில்லாம கதவை சாத்திக்கிட்டு உள்ளாற வந்தா கச்சாமா. எந்நேரம் வரைக்கும் ஒரு பொம்பள வீதியில் நிக்கறது?! அதுவும் வெளக்கு கூட இல்லாம?

இனி மச்சான் வரும்பாடு தெரியலைன்னுட்டு, அந்த சோத்த சூடு பண்ணி வெச்சிட்டு, போய் படுத்துக்கிட்டா. மர்ஜியா தொட்டியில தூங்கிக்கிட்டிருந்துச்சு. அத காலைல வந்து மும்மக்கா தூக்கிக்கிட்டு போயிருவா அம்மா வீட்டுக்கு, ராத்திரி தூங்குனவுடனே கொண்டாந்து கொடுத்திருவா. பொழுதுக்கும் அது அங்கயே தான். சரி, புள்ள பாலுக்கு பிரச்சினை இல்லைனு இவளும் விட்டிருவா. ஆனா, கச்சாமாவுக்கு தான் இப்பவெல்லாம் அம்மா வீட்டுக்கு போறறதுக்கு காலே வர்ரதில்லை. போனா, மச்சானக் குத்திக் காட்டி, ஏசுவாங்க. அதனால, அவளோட இல்லாமையக் கூட சொல்லறது இல்ல.

அவங்க போட்ட நகைய அவங்க வாங்கிக்கிட்டாங்க. இவங்க போட்ட நகைய இவங்க வாங்கிக்கிட்டாங்க. கருகமணியும், ப்ளாஸ்டிக் வளையலுமா இவ திருப்தி பட்டுக்கிட்டா.

வந்து படுத்தொன்ன, ஓங்கரிச்சது. காலியா இருந்த வவுத்துல, எண்ணெய்ச்சோறு சாப்பிட்டது தான் இப்படியாக்கும்னு, எந்திரிச்சு உட்கார்ந்தா! அப்பவும் வயிற்றுப் பிரட்டல் தாங்காம, பொடக்காலிக்குப் போய், எக்கி எக்கி வாந்தி எடுத்திட்டு வந்தா! காலைல இருந்து தலைசுத்தல் வேற. அப்பத்தான், அந்த மாசம் வீட்டுக்கு தூரமாகாதது சுருக்குனு ஒறச்சுது... மர்ஜியாவுக்கு இப்பத்தான் மூணாம் மாசம் முடியுது அதுக்குள்ள அடுத்தது……

(வளரும்)

-சுமஜ்லா.

5 comments:

asiya omar said...

கச்சாமாவிற்கு விடிவு பிறக்கும்னு பார்த்தால் திரும்பவும் இன்னொரு குழந்தையா ?ஏன் சில பேரோட வாழ்க்கையை அல்லாஹ் இப்படி கொண்டு போறான்,இதத்தான் விதின்னு சொல்றதா?

Jaleela said...

//தனியா வைத்தும் அவளுக்கு விடிவு காலம் வரலையா? ஒரு குழந்தை பிறந்தே பொருப்பு வரல, இதில் இன்னும் ஒன்றா? அவ்வளவு தான் கச்சாமாவிற்கு விடிவு காலம் ஏது?
//
வழக்கம் போல் உண்மை சரித்திரம் இன்னும் மெருகேருகிறது?

SUMAZLA/சுமஜ்லா said...

என்னத்தை சொல்ல, என்னத்தை விட?! சொன்னால் கதையோட சுவாரஸ்யம் போய்விடுமே?!

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

Biruntha said...

பாவம் கச்சாமா... இன்னொரு குழந்தை வேற.. பாவம்.. கச்சாமா வாழ்வில் சந்தோஷமே இல்லையா?

அன்புடன் பிருந்தா