(உலவும் மனிதர்களின் உண்மை கதை)
“பாலூட்டி சீராட்ட, இல்லையொரு பிள்ளையினுஆலாப்பறந்தார்கள், அப்பனோடு, அம்மையுமே, - இங்கு
கேளாமல் வந்த பிள்ளை கேடாக முடிந்ததென்று,
தாளாமல் அழிக்கப் பார்த்தா, தாய்க்குலத்தின் குலவிளக்கு!!”
எது, எப்ப, எப்படி நடக்கணுமோ, அது, அப்ப, அப்படி நடந்துருது. சில விஷயங்களுக்கு காரண காரியம் கிடையாது. ஏனென்று யாருக்கும் சொல்ல தெரியாது. அதைத்தான் நாம் எல்லோரும் விதி என்கிறோம். அதே விதி தான் கச்சாமாவையும் துரத்தியது.
எல்லாரும் விதியில் இருந்து தப்பிக்க, ஓடுவாங்க. ஆனால், ஓடிய தூரத்தின் இறுதியில் தான் அது நடக்க வேண்டும் என்பதாக இருக்கும். அது தான் அவங்களை ஓட வெச்சிருக்கும். ஆனா, கச்சாமாவோ, விதியை என்னிக்கும் சிரிச்சுக்கிட்டே வரவேற்கிற ஆளு!
கச்சாமாவைப் பார்க்கிறவங்க யாரும், இந்த பெண் வாழ்க்கையில் துன்பமே பட்டதில்லையோனு நினைப்பாங்க. அந்தளவுக்கு மொகத்துல புன்சிரிப்பும் தெளிவும் எப்போதும் இருக்கும். இது அவளோட பலமா, இல்லை பலவீனமானு அவளுக்கே தெரியாது.
தரிச்ச கரு, பப்பாளிக்காய்க்கும் சூரணத்துக்கும் மசியவே இல்லை. இவளும், விடுவதாக இல்லை. யார் என்ன சொன்னாலும் செய்தா. டவுனுக்கு ஆளனுப்பி, அன்னாசி வாங்கி சாப்பிட்டா. ஆஸ்பத்திரிக்குப் போயி, புள்ளைய கலைக்க ஊசி கூட போட்டுட்டு வந்தா. ஆனா, கரு நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமா வளரத்தான் செய்தது.
அம்மாகிட்ட அவளா சொல்லவே இல்லை. ஆனா, முத்தம்மா வழியா சேதி கேட்டு, பொரி, பொரினு பொரிஞ்சு தள்ளிட்டாங்க, பாத்திமாவும் மீரான் சாயபும். ஒரு மாசஞ்சிண்டு, மெதுவா மச்சாங்கிட்ட சொன்னா! தஸ்தீரோ, யாரோட புள்ளையோ, யாருக்கோ உண்டாகி இருக்கற கணக்கா, வயிறு ரொம்ப சோத்தைத் தின்னுட்டு, தூங்கும் முன்னாடி, கச்சாமாவையும் இரையாக்கிக்கிட்டு, திரும்பிப் படுத்துக்கிட்டான்.
வவுத்துல மட்டுமல்ல, மனசிலயும் பாரம் கூடியவளாய்... ஆனாலும் அப்போதும், அதே புன்னகை. வரும் உறவுகளிடம் மென்னகை. இந்த சுபாவத்தினால், எல்லாருக்கும் அவளைப் பிடிக்கும், தாய் தந்தையரைத் தவிர.
எட்டாம் மாசத்திலேயே வலியெடுத்து, குழந்தை பொறந்துருச்சு, வீட்டிலேயே! பாத்திமாவும் முத்தம்மாவும் வந்து பிரசவம் பார்த்தாலும், இதுவும் பொட்டப்புள்ளைனு தெரிஞ்சதும், மூஞ்சியத் தூக்கி வெச்சுக்கிட்டாங்க, என்னமோ, இது கச்சாமாவா உருவாக்கிக்கிட்ட மாதிரி!
குழந்தை ரொம்ப ஒல்லியா இருந்திச்சு; சவலைப் பிள்ளை. சதா அழுகை வேற. ஆனா, அழகு அப்பேர்ப்பட்ட அழகு! பிச்சுத் தின்னுறலாம் போல! ஒரு நல்ல நாள் பார்த்து, சனோஃபர் ரிஜ்வானானு அதுக்கு பேர் வெச்சாங்க.
கச்சாமாவுக்கு மொத ரெண்டு பொண்ணுங்களையும் வளர்க்க அப்படி ஒன்னும் கஷ்டமாத் தெரியல. ஆனா இந்தப் புள்ள பாடா படுத்துச்சு. ராவு தூக்கமும் இல்ல, பகல் தூக்கமும் இல்லனு தான் சொல்லணும் அவளுக்கு!
கச்சாமா குழந்தையை தொட்டிலில் போட்டு ஆட்டிக் கொண்டிருந்தா. குழந்தையும் விடாம அழுதுக்கிட்டிருந்துச்சு... அரை நாழியா. ‘என்ன, இப்படி அழுவுது, இது’ என்று பார்க்க, தொட்டியில் மூத்திரம் விட்டு நனைச்சிருந்துச்சு. அந்த துணித் தொட்டியை, இரு புறமும் புடிச்சு, ‘சொய்ங்’ என ஒரு சுத்து சுத்தி, திருப்பி விட்டா. கொஞ்சம் அழுகையை நிறுத்தி கண் மூடிச்சு.
கச்சாமா உஸ்…அப்பாடா…. என்று வெளியே வந்தா. மூத்தவ மர்ஜியா ஊற வைத்திருந்த அரிசிய அள்ளி அள்ளி பாதி வாயிலும் பாதி கீழேயுமா எறச்சு வெச்சிருந்தா.... முதுகிலே இரண்டு போட, கத்திக்கிட்டே நன்னீமா வீட்டுக்கு ஓடினாள் மர்ஜி.
ரிஜ்வானாவுக்கு நோவே தொலையிலனு எல்லாரும் பேரை மாத்தி வைக்க சொன்னாங்க. அதுக்கும் சரின்னு, ஆளப்பிடிச்சு, அம்பப்பிடிச்சு, அஜ்ரத்தக் கூப்பிட்டு, சுல்தானினு பேரை மாத்தினா.
பேரை மாத்தியும் சுல்தானிமாவுக்கு அடிக்கடி அல்லையக் கட்டிக்கிட்டு மூச்சு வாங்கும். உடம்பு அப்படியே நீலம் பூத்திரும். அது கூட, ஒரு ஆறேழு மாசம் அல்லாடினா கச்சாமா.
ஒரு நாள் புள்ளைய தொட்டியில போட்டுட்டு குளிக்க போயிட்டா. வந்து பார்த்தா புள்ள அமைதியா தூங்கிக்கிட்டிருக்கு. வழக்கத்துக்கு மாத்தமா இன்னேரம் வரைக்கும் புள்ள தூங்குதேனு, தொட்டிய விலக்கிப் பார்த்து தூக்கினவ, அப்படியே வீர்னு கத்திட்டா.
பேரழகான அந்தக் குழந்தை, சொர்க்கத்துக் குழந்தையாயிருச்சு. அன்னிக்கு பூராவும் தஸ்தீர் வரவே இல்ல. மும்மக்கா மகன் ஜாயிரு தான் சைக்கிள் எடுத்துக்கிட்டு போயி, அவர ஆபீஸ்ல பார்த்து விசயத்த சொல்லி கூட்டிட்டு வந்தான். அவர் தான் உணர்ச்சிகளை வெளியே காட்டாத ஜடமாச்சே!
அழுதழுது கச்சாமாவுக்கு முகமே வீங்கிப் போச்சு. ஆனாலும், புள்ள வவுத்துல இருக்கப்ப, அவ அத அழிக்க செஞ்ச முயற்சியும் மனசுக்குள்ள பிராண்டிக்கிட்டே இருந்துது. அப்ப செய்ய துணிஞ்சா, ஆனா இப்ப மனசு தாங்கலையே?
பெருஞ்சனக்கூட்டம் வந்தது, துக்கம் விசாரிக்க. புள்ளைய துணியில சுத்தி, கொண்டு போயிட்டாங்க அடக்கம் பண்ண. இருந்தாலும், இங்க கச்சாமா மாருல கட்டிக்கிட்ட பாலு, அவ சோகத்த சொல்லாம சொல்லுது.
அம்மா அழுவறதப் பார்த்து, மர்ஜியும் ஆப்பியும் விவரம் தெரியாமலே அழுதது தான் பார்க்க பாவமா இருந்திச்சு.
எல்லாம் முடிஞ்சதும், அப்பாவும் அம்மாவும் கிளம்பிப் போயிட்டாங்க. பக்கத்து வீடுதானே... அழுதுக்கிட்டே தூங்கினவ, அடுத்த நா காலையில கண்ணு முழிக்கிறப்ப தான் தெரிஞ்சது, காய்ச்ச அனலா கொதிக்கிறது.
(வளரும்)
-சுமஜ்லா
.
.
Tweet | ||||
4 comments:
உண்மை கதை உண்மையிலேயே உடல் சிலிர்த்து விட்டது.
இத்தனை துயரத்திலும் சிரித்த முகமாக இருக்கும் குணம் ஒரு சிலருக்கு தான் வரும்.
படித்ததும் மனசு கஷ்டமாயிடுச்சு.அந்த குழந்தையின் இறப்பு அவளால் நிச்சயம் மறக்க முடியாதது தான்.
http://sashiga.blogspot.com/2009/07/blog-post_28.html.pls take it!!
மேனகா தங்கள் விருதை ஏற்றுக் கொண்டேன்.
தொடர்ந்து படித்து வருவதற்கு நன்றி!
Post a Comment