Wednesday, July 15, 2009

தேடல்

கல்லுக்கூட்டி அடுப்பாக்கி,
சொப்பு வெச்சு விளையாடி
ஆலிலையில் ருசிபார்த்த
வேகாத கூட்டாஞ்சோறு!

திரும்பி பார்த்து நீ ரசித்த
சேற்றில் பதிந்த பாதச்சுவடு!
நெருங்கி காதில் கிசுகிசுக்கும்
காற்றில் கலந்த மண்வாசம்!

சுரைபீடி குடிச்சுப் போட்டு
சுறுசுறுப்பாய் கதை கேட்டு,
தேர் அடியில் உன்னோடு
பகிர்ந்து கொண்ட சிறுமுத்தம்!

எதுக்கென்று எனை அடித்து
‘டூ’ விட்டு முகம் திருப்ப,
திருட்டு மாங்காய் பறித்துதந்து
காயை நான் பழமாக்க,

உதடு தீண்டி புளிப்பை உணர்ந்து,
உயிர்வரைக்கும் வெட்கப்பட்டு
தோளோடு சேர்த்தணைத்து,
காதோடு கதைபேச,

மாப்பிள்ளைத் தோழனான போதும்,
மனம் விட்டு அகலவில்லை,
காதலென்றே தெரியாமல்
காதலித்த பலநாட்கள்!

தொலைந்து போன இதயத்தை
மரித்துப் போன மனிதத்தை
காணவில்லை இதுவரைக்கும்
உலக அகல வலைதளத்தில்!!(world wide web)!

-சுமஜ்லா.

7 comments:

நட்புடன் ஜமால் said...

தேர் அடியில் உன்னோடு
பகிர்ந்து கொண்ட சிறுமுத்தம்!

எதுக்கென்று எனை அடித்து
‘டூ’ விட்டு முகம் திருப்ப,
திருட்டு மாங்காய் பறித்துதந்து
காயை நான் பழமாக்க,\\

வயதுகளின் எதார்த்தம் ...

நட்புடன் ஜமால் said...

தொலைந்து போன இதயத்தை
மரித்துப் போன மனிதத்தை
காணவில்லை இதுவரைக்கும்
உலக அகல வலைதளத்தில்!!(world wide web)!\\

அருமையான வரிகள்.

இன்னும் தேடல் தொடர்கிறது வலைவழி

Ungalranga said...

ரொம்ப ரசித்தேன்..

ரொம்ப ருசித்தேன்..

கடைசி வரிகள் ஒவ்வொன்றும் மனதை பிசைந்தது.

அழகோ அழகான வரிகள்..

வாழ்த்துக்கள்!!!

S.A. நவாஸுதீன் said...

கவிதை ரொம்ப நல்லா இருக்கு. கடைசி வரிகள் அருமை.

ஈரோடு கதிர் said...

//திருட்டு மாங்காய் பறித்துதந்து
காயை நான் பழமாக்க//

ரசித்த வரிகள்

Anonymous said...

கிராம பின்னனியில் பிண்ணி கருத்தை அழகா வடிவமைத்து கடைசியில் நவீன உலகத்தின் உண்மையை ஒப்பிட்டு அதை கவிதையாய் சொன்ன விதம் அழகு..

SUMAZLA/சுமஜ்லா said...

தேடல் என்பது உள்ளவரை வாழ்வில் ருசி இருக்கும் பாடல், எல்லாருக்கும் பொருந்தும் தானே?!

பாராட்டிய நண்பர்கள், ஜமால், ரங்கன், நவாஸ், கதிர், தமிழரசிக்கு நன்றி!