Saturday, July 25, 2009

இளமையின் முத்திரை

புதிய மாறுதல்கள் வரவிருக்கின்றது,
பூபாள ராகம் தொடங்குகின்றது!
பெண்மை பொலிவு பெருகின்றது,
கண்ணிமை கனவைத் தொடுகின்றது!

இன்ப உணர்ச்சிதான் காரணமா?
வானவில் வர்ணத்தில் தோரணமா?
மனதில் புகுந்து ஆசைக் குயில்கள்
இசைத்து மகிழும் நாயனமா?

அறிமுகமாகும் புதிய பந்தம்!
அழிந்திடாத மனதிற்கு சொந்தம்!!
கதுப்புகள் சிவக்க உடலும் சிலிர்க்க
ஆரம்பமாகும் இளைய வசந்தம்!!

இளமை வழங்கிய இனிய முத்திரை!
கண்கள் நான்கும் மறந்திடும் நித்திரை!!
அந்தி பொழுது மலரும் மல்லிகை
அங்கே வந்து சொல்லும் வாழ்த்துரை!!

சூடப்படுமொரு சுகமான வாகை!
தோல்வி கண்டு துவளும் தோகை!!
உணர்ச்சிக் கலவை உள்ளம் வருட
பூரிப்பில் முகத்தில் நாண ரேகை!!

உள்ளம் விட்டு நீங்கியது வாட்டம்!
உறவில் மலர்ந்த உணர்வில் கொண்டாட்டம்!!
இன்பம் பகிர்ந்து எழுந்து தாலாட்டும்,
இனம் புரியாத எண்ணவோட்டம்!!

இதயத் துடிப்பில் ஆடிடும் நடனம்!
எண்ணச்சிறகில் ஏறிடும் பயணம்!!
முடிவில்லாத உதயங்கள் நோக்கி
மதிவதனத்தின் காலடி சரணம்!!

எழுத எழுத என் கவிதை வளரும்!
நீலவொளியில் நிலவு மலரும்!!
சீராய் பரவிடும் சிந்தனை போலே
இன்ப உணர்வு என்றும் தொடரும்!!

-சுமஜ்லா

15 comments:

நட்புடன் ஜமால் said...

எதுகை மோனையும்

ஓடிப்பிடித்து விளையாடுகின்றன


[[இளமை வழங்கிய இனிய முத்திரை!
கண்கள் நான்கும் மறந்திடும் நித்திரை!!]]

இன்று இங்கு இரசித்தது.

Vidhoosh said...

வோட்டு போட்டுட்டேன்.
ஒரு புன்னகை மட்டும் இந்த கவிதைக்காக

Unknown said...

உங்களின் எழுத்தை ரசிக்கும் ஓர் ரசிகை.. மிகவும் அருமை சுமஜ்லா

SUFFIX said...

//இளமை வழங்கிய இனிய முத்திரை!
கண்கள் நான்கும் மறந்திடும் நித்திரை!!//

அருமையான கற்பனை

SUFFIX said...

//எழுத எழுத என் கவிதை வளரும்!
நீலவொளியில் நிலவு மலரும்!!
சீராய் பரவிடும் சிந்தனை போலே
இன்ப உணர்வு என்றும் தொடரும்!!//

தொடருட்டும், நாங்களும் தொடர்வோம் இந்த கவியின் வரிகளை

SUMAZLA/சுமஜ்லா said...

//எதுகை மோனையும்

ஓடிப்பிடித்து விளையாடுகின்றன//

எதுகையும் மோனையும் என்னும் இடத்தில், ஆண்மையும் பெண்மையும் என்று போட்டாலும் சரியாகத் தான் வரும்!

SUMAZLA/சுமஜ்லா said...

//வோட்டு போட்டுட்டேன்.
ஒரு புன்னகை மட்டும் இந்த கவிதைக்காக//

உங்கள் ஓட்டுக்கு நன்றி! அத்தோடு, சிக்கன புன்னகைக்கும்!

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்களின் எழுத்தை ரசிக்கும் ஓர் ரசிகை.. மிகவும் அருமை சுமஜ்லா//

கேட்க சந்தோஷமா இருக்கு! நன்றி பாயிஜா!

SUMAZLA/சுமஜ்லா said...

//அருமையான கற்பனை! தொடருட்டும், நாங்களும் தொடர்வோம் இந்த கவியின் வரிகளை//

இந்த கவிதை இன்று எழுதியது அல்ல. இதுக்கு ஒரு சுவையான பின்னணி உண்டு.

என் திருமண நிச்சயத்துக்குப் பின், (என் வயது 18 அப்போ) அவருக்கு அனுப்பிய காதல் கடிதத்தில் எழுதி அனுப்பினேன், தலைப்பு மட்டும் வைக்கவில்லை.

அவரிடம் தலைப்பு எழுதி வையுங்கள். திருமணத்துக்குப் பின் கேட்டுக் கொள்கிறேன் என்று சொல்லி இருந்தேன்.

அதே போல் எழுதி வைத்திருந்தார். ஆனால் இந்த தலைப்பு அல்ல. அது பர்ஸனல்!

Starjan (ஸ்டார்ஜன்) said...

supper

அப்துல்மாலிக் said...

எதுகை மோனைகளில் கலக்கி இருக்கீங்க‌

முழுதும் ரசித்தேன்

SUMAZLA/சுமஜ்லா said...

பாராட்டிய ஸ்டார்ஜனுக்கும், அபுஅஃப்ஸருக்கும் நன்றி!!!

நிஜாமுத்தீன் said...

கவிதாயினி சுமஜ்லா,
கவிதையின் அனைத்து வரிகளும் அருமை!
'நீலவொளியில் நிலவு மலரும்' என்பதில்வரும்
'நீலவொளி' என்றால் இரவு என்று பொருளா?

SUMAZLA/சுமஜ்லா said...

//'நீலவொளியில் நிலவு மலரும்' என்பதில்வரும்
'நீலவொளி' என்றால் இரவு என்று பொருளா?//

அது படிப்பவரைப் பொறுத்தது. நீலக்கலர் ஜீரோ வாட்ஸ் பல்ப் என்று கூட வைத்துக் கொள்ளலாம். ‘நீல’ கலர் (ப்ளூ) பொதுவாக, எதைக் குறிக்கும் என்று எல்லாருக்கும் தெரியும்.

நீல வானத்தின் கலர் என்றும் வைத்துக் கொள்ளலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, நான் இந்த கவிதை எழுதி, கிட்டத்தட்ட 15 வருஷம் ஆச்சு. அப்ப என்ன நினைத்து எழுதினேன் என்று எனக்கு இப்ப மறந்தே போச்சு.