Wednesday, August 5, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 17

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“எதார்த்ததை சூதாக மாத்திக்கிட்டு வாழறவங்க
சதாசர்வ காலத்திலும், சண்டைக்குனு நின்னவங்க…
அதச்சொல்லி, இதச்சொல்லி ஆறுதலும் கொள்ளாம,
எதச்சொல்லி அழ முடியும், ஏமாந்து போனவங்க?!”

நாலு நாள் காய்ச்சலில், நைந்து போன துணி போல், மூலையில் முடங்கி விட்டாள் கச்சாமா. பெத்தவங்களும் ஏனு வந்து கேக்கல. கட்டுனவனும், எந்த குதிரையின் மேல பந்தியம் கட்டிக்கிட்டு திரியறானோ புரியல. ஆனா, கையில் தம்பிடி காசு இல்ல.

வரிசையா புள்ளைங்க மட்டும் பெத்துக்க தெரியுது, சூதானமா பொழைக்க தெரியல இந்த புள்ளைக்குனு ஊர் சனம் பேசறது மீரான் சாயபுக்கு அவமானமா தெரிஞ்சுது. ஆனா, தான் அனுசரிச்சு ஆதரிச்சு, அந்த கொற தெரியாம காப்பமுன்னு அவருக்கு தோணவே இல்ல. விட்டுப் புடிக்கணும்னு நெனச்சாரு.

மாப்பிள்ளையா வாச்சவன் மேல மனசு பூராவும் வெறுப்பு மண்டிக்கெடந்தது. ஒரு நா, சம்பந்தி ஊட்டுக்குப் போயி, மருமகப்பிள்ளையோட லட்சணத்தை, புட்டு புட்டு வெச்சிட்டுத் தான் வந்தாரு. ஆனா, கூள ருகையாவா அசையிற ஆளு! பையன் அப்படித்தான் இருப்பான், நீங்க தான் அனுசரிச்சு போகணும்னு அழிச்சாட்டியம் பேசறா!

கடைசியா சுல்தானிமா மவுத்தன்னிக்கு புள்ளைய கூப்பிட்டுப் பார்த்தாரு,
“கச்சாமா, இங்க இருந்து என்ன நீ சுகப்பட்ட? நம்ம வீட்டுக்கே வந்திரு! தஸ்தீரு எக்கேடோ கெட்டுப் போவட்டும்; நீ ஏன் அவங்கூட சேர்ந்து கஷ்டப்படற?”

“அப்பா, வாழ்வோ சாவோ அது அவர் கூடத்தாங்கிறது, என்னோட விதியாப் போச்சுப்பா. நா எப்படியோ சமாளிச்சிக்கிறேன். என்னிக்காவது திருந்துவாரு! நா விட்டுட்டு வந்திட்டா, இன்னும் மோசமாத்தான் போயிருவாரு!”

“நீ திருந்த மாட்ட, எக்கேடோ கெட்டுத் தொலை; எந்த ஒதவியும் கேட்டு எங்க வாசப்படிய மிதிச்சிராத. நீயாச்சு உம்புருஷனாச்சு. புருஷனாம் புருஷன். புருஷனப்பாரு மயிரப்பாரு! தூ” காறி துப்பிட்டு போன பிறகு, அம்மாவீட்டுக்கு போக கால் வரல, அந்த புள்ளைக்கு.

நெதமும் நொய்யரிசியப்போட்டு கஞ்சி காய்ச்சி, அதத்தான் மூணு வேலையும் குடிச்சா. காய்ச்ச வாய்க்கு எதுவுமே புடிக்கல. வரிசப்புள்ளையா பெத்ததனால, ஒன்னரை வயசான ஆப்பிக்கு, மாருல கட்டின பாலமுத கொடுத்தா.

ரெண்டு நா சிண்டு வந்தான் தஸ்தீர். அவங்கிட்ட கெஞ்சி கூத்தாடி, கொஞ்சம் சந்த சாமான் வாங்கி வெச்சிக்கிட்டா. ஆனா, கையில் ஒரு ஆத்திர அவசரத்துக்குக்கூட காசு தர்ர பழக்கம் இல்ல அவங்கிட்ட.

வெறுஞ்சோறு வடிச்சிட்டு, மும்மக்கா வீட்டுல ஒரு சின்ன கொட்ராவ குடுத்து அனுப்பி விடுவா, ஆப்பிக்கிட்ட, ஆணம் கேட்டு. மும்மக்கா யாரு? ஒரு அன்னாடங்காய்ச்சி! லைனுக்குள்ள வாடகைக்கு குடியிருக்கறவ. பாத்திமா வீட்டுல எடுபிடி வேலை செஞ்சு குடுப்பா. பாத்திமாவும் மிச்சம் மீதி, பழையது இருந்தா மும்மக்காவுக்கு குடுப்பா. அத கொட்ராவுல ஊத்தி, ஆப்பிக்கிட்ட கொடுத்தனுப்புவா மும்மக்கா. இப்படியாக தாய் வீட்டு பழையது எல்லாம் கச்சாமா வயிற்றை நிரப்பும்.

மர்ஜி நன்னீமாவோட செல்ல பிள்ளை; சோறு தண்ணி எல்லாம் அங்க தான். ஆப்பி கூட விளையாட மட்டும் இங்க வருவா. மத்தபடி ராத்தூக்கம் கூட நன்னீமாகூடத்தான். நன்னீமாவ அம்மானு தான் கூப்பிடுவாங்க ரெண்டு பேரும். கச்சாமாவ, அம்மானு கூப்பிடாம, ‘பூக்காமா’ நு கூப்பிடுவாங்க.

மர்ஜியா ரொம்ப துறுதுறுப்பு; குறும்புக்கார பிள்ளை. எந்நேரமும் விளையாட்டு தான். எந்த சின்ன துரும்பா இருந்தாலும் அத வெச்சு விளையாட ஆரம்பிச்சிருவா. ஒரு நா பார்த்தா, நுங்கு மட்டைய சக்கரமாக்கி, நடுவில குச்சிய சொருகி, கயிறு கட்டி தர தரனு இழுத்துக்கிட்டு திரிஞ்சா. அதாவது பரவாயில்ல, இன்னொரு நாளு ஜாயிரு கிட்ட கெஞ்சி கூத்தாடி, தட்டாம்பூச்சி வாளுல கயிறு கட்டு பட்டமா பறக்க விட்டுக்கிட்டிருந்தா.

அவ பண்ணுற சேட்டைய எல்லாம் கச்சாமா ரசிக்க மாட்டா. என்னமோ மாற்றாந்தாய் புள்ள மாதிரி தான் அவ மேல கோபத்துல எரிஞ்சி எரிஞ்சு விழுவா. எந்தளவுக்கு அவ குறும்பு செய்யுறானு பார்த்தா, ஒரு நாளு அவ கக்கூஸ் போனப்ப, ஆயில, ஒரு வண்டு, ஒரு சின்ன கல்லு, ஒடிஞ்ச வெளக்குமாத்து குச்சி எல்லாம் வந்திருக்கு. இந்த காரணத்துனால, அவளைப் போட்டு அடிக்கடி சாத்துவா கச்சாமா.

ஆப்பியோ இதுக்கு நேரு மாரு. எந்நேரமும் அம்மா காலுக்கடியிலயே உட்கார்ந்து இருப்பா, என்ன சொன்னாலும் சமத்தா கேட்டுக்குவா. அம்மா சொல்லுற ஏவுன வேலை எடுத்த வேலையெல்லாம் பாந்தமா செஞ்சிடுவா. இதனால, கச்சாமாவுக்கு ஆப்பி மேல ரொம்ப பிரியம்.

கண்ணுக்கு மையில்லாம ஆப்பிய பார்க்கவே முடியாது. எப்பவும், மேக்கண்ணு கீக்கண்ணு ரெண்டுக்கும், வழிச்சு மை போட்டு, கன்னத்துல ஒரு பொட்டு, தாவக்கட்டையில ஒரு பொட்டும் வெச்சி விடுவா. ஆப்பிக்கு அது ரொம்ப பிடிக்கும். முடி நிறைய இருக்கும். அத எண்ணெய் போட்டு படிய வாரி, வழிச்சு, ரெண்டு பக்கமும் சடை பின்னி, ரிப்பன் வெச்சு மடிச்சு கட்டு விடுவா.

சைதாவும் அய்சாமா குப்பியும் வீட்டுக்கு வந்தாங்க. கச்சாமா வீட்ட பெருக்கிக்கிட்டு இருந்தா.

“வாங்க, வாங்க, உட்காருங்க”

“ஏ கச்சாமா, எப்ப நா வந்தாலும், வீட்ட கூட்டிக்கிட்டே இருக்கியே, ரொம்ப கூட்டிக்கிட்டே இருந்தா, வீட்டுல இரணமும் சேர்ந்து போயிரும்னு சொல்லுவாங்க”

“இல்ல, குப்பிமா, இப்பத்தான், மர்ஜி வெங்காயத்தோலை எடுத்து எறச்சிட்டா.”

“ஆளே பாதியா ஆயிட்ட! மச்சான் எங்க? இன்னும் வரலையா?”

“இன்னுங் கொஞ்ச நேரத்துல வந்திருவாரு! ஆனா, அம்மா தான் ரொம்ப கோவமா இருக்கு எம்மேல”

“கேள்விப்பட்டேன், நீ அங்க போறதில்லையாமா…”

“நா என்னத்த சொல்லுறது குப்பிமா! யாராவது அம்மா அப்பாவுக்கு வெளங்க வெச்சா பரவாயில்ல”

“இவ்வளவு சொத்து சொகம் யாருக்காக, உனக்காகத்தானே! நா, அண்ணங்கிட்ட சொல்லிப் பார்க்கிறேன்மா.”

(வளரும்)

-சுமஜ்லா

4 comments:

NIZAMUDEEN said...

சொத்து, சுகத்தோட உரிமையா தாய் வீட்டுல
சாப்பிடவேண்டிய கச்சாமாவுக்கு, தாய் வீட்டு
பழைய அமுது ஃபாத்திமா கூரியர்மூலம் வந்து,
அதைத்தான் சாப்பிடணும்னு படைச்சவனோட
எழுத்து. அப்படியிருக்கையில், சொத்துக்காக
அவள் தனது அம்மா வீட்டுக்குத்தான் போவாளா,
இல்ல, சொத்துக்காக புருஷன விட்டுப்புட்டு
அம்மா-அத்தாவிடம் சமரசம் ஆவாளா?

அய்சாமாவோட முயற்சி என்ன ஆவுதுன்னு
அடுத்த வாரம் தெரிஞ்சிடுமில்ல???

SUMAZLA/சுமஜ்லா said...

//அய்சாமாவோட முயற்சி என்ன ஆவுதுன்னு
அடுத்த வாரம் தெரிஞ்சிடுமில்ல???//

கண்டிப்பா தெரிஞ்சிடும்

Biruntha said...

புருஷன் எப்பிடிப்பட்டவனா இருந்தாலும் அவனை விட்டுட்டு பெத்தவங்க கூட எந்தப் பொண்ணுதான் போகும்? கச்சாமாவும் இதுக்கு விதி விலக்கல்ல.

பிருந்தா

Geetha6 said...

very nice.
ur blog is cute and colorful.
especially day and night.
excellent.
teach us how to add this code.