Wednesday, August 12, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 18

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“நல்லதொன்னு நடக்கணும்னா, படைச்சவனை நம்பணுங்க
அல்லதெல்லாம் ஒதுக்காவிட்டால், ஆண்டவனும் கேப்பாங்க!
பொல்லாத நேரமெல்லாம் சொல்லாம தானே வரும்,
எல்லார்க்கும் நல்லதொரு படிப்பினையை தானே தரும்!!”

எல்லாம் சொல்லிக்கில்லியும், மீரான் சாயபு மனசு அசையிறாப்புல இல்ல. அதுக்கு பல காரணம். நல்லது சொல்ல நாலு பேர் இருந்தாக்கா, கெட்டது சொல்லவும் நாலு பேர் இருப்பாங்களே. அதுவும் கச்சாமா எடுத்து வளத்துன புள்ள. சட்டப்படி சொத்துல பாத்தியம் கிடையாது. இவராப் பார்த்து எழுதி வெச்சாத்தான். அதான் இப்படி தூபம் போட்டு ஆகாம பண்ணிட்டா, சொத்து அவளுக்கு போகாதுன்னு சில பேர் கங்கணம் கட்டிக்கிட்டு அலைஞ்சாங்க.

அது மட்டுமில்ல, என்ன தான் தஸ்தீர் கெட்டவனா இருந்தாலும், பேச்சுல சாமார்த்தியகாரன். படுபயங்கர புத்திசாலி, எல்லா விஷயத்திலும். கொஞ்ச நாளு, சொத்த தம் பேருல எழுதி வைக்கணும்னு, அவன் நல்லவனாட்டம் நடிச்சுப் பார்த்தான். ஆனா, அது வேலையாகல. கச்சாமாவுக்கு தந்தாலும் தருவாங்க, தனக்கு தர மாட்டாங்கன்னு அவனுக்கு திட்டவட்டமா புரிஞ்சு போச்சு. அப்புறம் என்ன மறுபடியும் பழைய குருடி கதவத் தொறடி கத தான்.

கச்சாமாவுக்கு புருஷனால ஒரு பிரயோசனம் உண்டுனு சொன்னா, அது வருஷம் தவறாம புள்ள பெத்துக்கறது தான். இப்பத் தான் குழந்த மவுத்தாப்போச்சு. அதுக்குள்ள, இப்ப வவுத்துல நாலாவது புள்ள. கணக்குக்கு பார்த்தா, புள்ள மவுத்தான உடனே இது தரிச்சிருக்கும் போல. பாவி மகன் பச்ச ஒடம்புன்னு கூட பார்க்கறது இல்ல. அதான் பொண்டாட்டி எப்பவும் புருஷங்கிட்ட புன்சிரிப்பத் தவிர எதையுமே காட்டுனதில்லையே! அதத்தான அவன் சாதகமாக்கிக்கிறான்.

நாலாம்பிள்ளை உண்டானது யாருக்குமே தெரியாது. கச்சாமாவுக்கு சொல்ல புடிக்கல. வயிறு வீங்க வீங்க, மும்மக்காவே சேதி கண்டு, போய் பாத்திமா கிட்ட சொல்லித் தான் அப்பன் ஆயாவுக்கே தெரியும். ஆனா, அவங்க தான் மகள படி ஏறக்கூடாதுன்னு வெறுப்பா சொல்லிப் போட்டாங்களே?! அது மட்டுமா, அவள எந்தளவுக்கு வார்த்தையால கொல்ல முடியுமோ, அந்த அளவுக்கு கொன்னு போட்டாங்க. இப்பவும், அவ, லைன் கெணத்துல தண்ணி எறைக்கறப்ப, பார்த்துட்டா, சாடை மாடையா பேசுவா பாத்திமா. அந்த பேச்சுக்கு பயந்துக்கிட்டே, கச்சாமா, ராத்திரி, பதினோரு மணிக்கு மேல ஊரெல்லாம் அடங்கின பின்னால கெணத்து மேட்டுக்கு வருவா.

எல்லாத்த விட கொடுமை என்னன்னா, அவ, தனக்கு தானே பிரசவம் பார்த்துக்கிட்டது தான். உதவிக்குக்கூட ஆள் யாருமில்லை; ஆனா, அவளுக்கு ரொம்ப சிரமம் கொடுக்காம, பொடக்கானியிலேயே புள்ள பொறந்திருச்சு.

ஊருக்குள்ள சொல்லுவாங்க, கோழி அடை வெச்சா, கச்சாமா வீட்டுல வைய்யுங்க, அப்பத்தான் பொட்டக் குஞ்சா பொரிக்குமுன்னு. அந்த வாக்கு தப்பாம, நாலாவதும் பொம்பள புள்ள தான்.

ஆனா, இது நல்ல கலரா, அழகா, சுருள் சுருளா முடியோட, லட்சணமா இருந்தது. நல்ல உருண்டை முகம், கருப்பு கண்ணு, சொப்பு வாய், குண்டு கன்னம், சின்ன மூக்குனு பார்க்க பார்க்க பார்த்துக்கிட்டே இருக்கலாமாட்டம் இருந்துது.

வழக்கம் போல புள்ள பொறந்து மூணு நாளு சிண்டு தான் தஸ்தீரு வந்தான். தகப்பனோட கடமையா அதுக்கு பாஜிலானு பேர் வெச்சான். பச்ச புள்ளைய பார்க்கக்கூட வராத கல்லு மனசா மீரான் சாயபு இருந்தது தான் வேதனையிலும் வேதனை. மர்ஜியா, ஆப்பி மூலமாத்தான், அந்தூட்டு சேதி இங்கயும், இந்தூட்டு சேதி அங்கயுமா கொஞ்சம் போல தெரியும்.

அப்பத்தான் யாரும் எதிர்பார்க்காத ஒன்னு நடந்துச்சு. ஒரு நாளு வழக்கம் போல சந்தைக்கு போயிட்டு வந்த மீரான் சாயபு, சுருண்டு படுத்தவரு தான். வாதம் வந்து இடது கையும் இடது காலும் முடங்கிப் போச்சு. பதறிப் போயிட்டா பாத்திமா. என்ன ஏதுன்னு அவளுக்கும் விளங்கல.

டவுனுக்கு வண்டி கட்டிக்கிட்டு டாக்டர்கிட்ட போனாங்க. பை நிறைய மருந்து மாத்திரை, வேளா வேளைக்கு சாப்பிட்டுக்கிட்டு இருந்தாலும், அவரு மனசில ஏதோ உறுத்தல் இருந்துக்கிட்டே இருந்திச்சு. அப்பத்தான் அவரைப் பார்க்க அய்சாமா வந்தா,

“அண்ணா, நா ஒன்னு சொன்ன கோச்சுக்க மாட்டியே?”

“சொல்லு அய்சாமா என்னன்னு..”

“அண்ணா, நீ அநாதைப் புள்ளைய எடுத்து வளர்த்தி கல்யாணம் முடிச்சு வெச்ச, ஆனாலும், இப்ப அவள நீயுஞ்சேர்ந்துக்கிட்டு கஷ்டப்படுத்தறதுனால தான் இந்த மாதிரி கை கால் இழுத்துக்கிச்சுனு எல்லாரும் ஊருக்குள்ள பேசறாங்கண்ணா”

”அவ எங்கம்மா எம்பேச்ச கேக்கறா?”

“இருந்தாலும்… நீ பெத்த புள்ளையா இருந்திருந்தா இப்படி தவிக்க விட்டிருப்பியானு ஊர்சனமே வாயூறிப் போகுதேண்ணா”

அவருக்கும் இது புரியாம இல்ல. ஆனா, என்ன செய்யுறது பாலாப் போன கவுரவம் தான் தடுக்குது. ஆனாலும், இப்ப என்னமோ புதுசா புரிஞ்சுது.

ஜாயிரக் கூப்பிட்டு, ரெண்டு மூட்டை அரிசியக் கொண்டு போயி, கச்சாமா வீட்டுல போட்டுட்டு வர சொன்னாரு.

கச்சாமா இத எதிர்பார்க்கல. அவளுக்கும் அப்பாவுக்கு நல்லால்ல ஒடம்புன்னு கேள்விப்பட்டதிலிருந்து மனசு தவியாத் தவிச்சுக்கிட்டு தான் இருந்தது. அரிசி வந்தவுடனே, பாசத்தோட கண்ணீரும் பொத்துக்கிச்சு.

பாஜிலாவத் தூக்கிக்கிட்டு, ஊட்டுக்கதவ சங்கிலி கூட போடாம, ஓடி வந்திட்டா தகப்பன் மொகத்தப் பார்க்க. புள்ளைய அப்பா பக்கத்துல போட்டுட்டு, காலைப் புடுச்சுக்கிட்டு கதறினா.

எதுக்காக அந்த அழுகை? தன் புருஷனின் பொறுப்பின்மைக்கா? அப்பாவின் பாராமுகத்துக்கா? இல்ல, உடல் நலமின்மைக்கா? நாலாம் பேறுக்கு எல்லாம் இருந்தும் அநாதையா நின்னதுக்கா? இல்ல, மனசுக்குள்ள மறைச்சு வெச்சிருந்த பாசம் பொங்கினதுக்கா? அந்த அழுகைக்கான அர்த்தம் யாருக்கும் தெரியாது!

அடுத்து நேரப் போவது தெரியாம, மனசுல இருந்த அழுக்கையெல்லாம் கரைச்சிட்டா அம்மா மேல சாய்ஞ்சுக்கிட்டு…

(வளரும்)

-சுமஜ்லா.

4 comments:

Jaleela said...

இந்த‌ வார‌ம்
ரொம்ப‌வே சோகமா இருக்கு, அடுத்து என்ன ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

தொட‌ர‌ட்டும் உண்மை க‌தை....

SUMAZLA/சுமஜ்லா said...

என்ன அக்கா செய்வது, சோகம் தான் கச்சாமாவின் வாழ்க்கை என்று ஆகிவிட்டது!

NIZAMUDEEN said...

அதுதான் வாப்பாவோடவும் அம்மாவோடவும் கச்சாமா
சேர்ந்திட்டாள் போலிருக்கிறதே...

இனி எல்லாம் சுகம்தானே?

Biruntha said...

எது எப்பிடியோ அம்மா அப்பாவோட கச்சாமா சேர்ந்தது நிம்மதியைத் தருகின்றது. இனியாவது கச்சாமாவின் வாழ்வில் கொஞ்சம் கொஞ்சமாக ஒளி வீசுமா?

எதிர்பார்ப்புடன்
பிருந்தா