Wednesday, August 12, 2009

பயிற்சி சிறுகதை மிமிக்ரி கலாட்டா

என் பயிற்சி சிறுகதையை படித்தவர்களுக்கும், படிக்காமலே படித்தது போல நடித்தவர்களுக்கும், புரிந்தவர்களுக்கும், புரியாமலே புரிந்ததாக காட்டி கொண்டவர்களுக்கும், பின்னூட்டத்தில் கடித்தவர்களுக்கும், என் கடி கண்டு துடித்தவர்களுக்கும், என் முகத்தில் குத்துவதாக நினைத்துக் கொண்டு ஓட்டை குத்தியவர்களுக்கும், ஓட்டை கதைக்கு ஓட்டா என்று கத்தியவர்களுக்கும், இன்னும் எத்துணை நாள் துன்பம் தருவது என்று நான் ஒரு முடிவு எடுத்துவிட்டேன்.

அதனால், முதலில் யாருக்கும் புரியாமல் எழுதி பாட்டு வாங்கிய பயிற்சி கதையை, இரு வேறு வடிவங்களில், தனி தனியாக இரு கதையாக எழுதினேன். எத்துணை நாளைக்கு இந்த அவஸ்த்தை என்று கொஞ்சம் நீள........மாக இருந்தாலும், இனியும் சித்ரவதை பண்ணகூடாது என்ற நல்ல எண்ணத்தில், அதை ஒரே பதிவாக போடுகிறேன்.

அதிலும், நம்ம வாசகர் நிஜாம் அண்ணா வேறு, உரையாடல் வடிவில் வேண்டும் என்றார். பாவம், உரையாடல் என்ற பெயரைக் கேட்டாலே அங்கே இரண்டு பேர் நடுங்கிக் கொண்டிருப்பது இவருக்கு எங்கே தெரியப்போகிறது?

அதோடு, நந்தவேரன், வேறு இன்னொரு விமரிசன கதை எழுதும் ஆசையை போன கதையின் பின்னூட்டத்தில் வெளிப்பத்திடுத்தி இருந்தார். பாவம் அவர் ஆசையை நாம ஏனுங்க கெடுக்கணும்?

முதலில் தத்துவார்த்தமான நடையில் எழுதியது இங்கே: வாழ்வியல் முரண்
அது பற்றி எழுதிய காமடி கதை இங்கே: வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு...

தலைப்பு: நானும் பைத்தியமும் (அல்லது) நானும் பைத்தியம் தான்.

“ராகினி, அந்த ஜன்னல கொஞ்சம் நல்லா திறந்து வை காத்து வரட்டும்”

சே! இப்படித்தான் தினமும் காலங்காத்தால கரண்ட் போய் தொலைக்குது. என்னமோ, எங்க வீடு ஆத்தங்கரையோரமா இருக்கறதுனால, அவ்வளவு வெக்க காணல.

“நேத்து மிச்சமான ரொட்டிய அதுக்கு குடுத்துருன்னன்ல? குடுத்தியா?”

“இல்லைங்க, அது தூக்குல நிறையா சோறு வெச்சிருந்துச்சு. அதான் இன்னிக்கு குடுத்திரலாம்னு பிரிஜ்ல வெச்சிட்டேன்”

அதுங்கறது அவள் தான். ஆனா, கடவுள் மிருகங்களைப் போல இவளுக்கு அஞ்சறிவ மட்டும் கொடுத்திட்டதனால, எல்லாரும் அது, இதுன்னு தான் சொல்வாங்க.

ஆனா, பைத்தியம்ங்கற காரணத்துக்காக, யாருக்கும் எந்த தொல்லையும் குடுக்கறது கிடையாது. அது பாட்டும், கிடைக்கறத சாப்டுட்டு, எதுத்த திண்ணையில தூங்கிரும். கை காலுங்க, கோணயா வளைஞ்சு இருக்கும். அதை பார்க்கறப்ப, ஆண்டவன் எதுக்கு இதுகளை படைச்சு வாழ வெச்சிட்டு இருக்கான், பேசாம உசிர வாங்கிக்கிட்டா நிம்மதியாவாவது போயிருமேனு அடிக்கடி நினைப்பேன். யார் இது போயிருச்சுனா கவலைப்பட போறாங்க?

ஆனா, காமாசோமானு, துணி போட்டுக்கிட்டு அலையும். அதனால, எல்லா எளவட்ட காலி பசங்களோட கண்ணும் அது மேல இஷ்டத்துக்கு மேயும். அதுலயும் அந்த மணி ரொம்ப மோசம். அன்னிக்கு பார்க்கறேன்,

“ஏய், வா அங்கிட்டு போகலாம்” மணி

மணி கையில இருந்த பிரியாணி பொட்டல வாசத்துக்கு மயங்கி இதுவும் பின்னாடியே போவுது. ஜன்னல் வழியா நா அம்புட்டும் பார்த்து கிட்டே தான் இருக்கேன், என்ன நடக்க போவுதுன்னு!

மணியோட கை எசகுபிசகா விளையாட, அதுக்கு ஆறாவது அறிவு கொஞ்சூண்டு வேளை செய்ய, கோவத்துல, கைல இருந்த தட்ட அவன் மூஞ்சி மேல விசிறி அடிச்சிருச்சு.

“இருடி! உன்னிய இன்னொரு நா பாத்துக்கரேன்” அங்காரத்தோட சொல்லிக்கிட்டு பின் வாங்கிட்டான் மணி.

அன்னிக்கு, என் பொண்டாட்டி, என்னை அரை தூக்கத்தில எழுப்பினா.

“ஏங்க, பக்கத்து வீட்டு பாப்பா, வெள்ளாண்டுட்டு இருந்தப்ப கார் மோதி செத்துருச்சுங்க, இப்பத்தான் சீமாச்சு சொன்னான். நா எழவுக்கு போயிட்டு வர்ரேன். நீங்களும் சுருக்கா குளிச்சிட்டு வந்து சேருங்க!”

“அட கடவுளே, அம்புட்டு அழகா இருக்குமே அந்த பாப்பா, நெதமும் வாய் ஓயாம பேசிட்டு, அதுக்கா இந்த கதி? அதுக்கு வந்த சாவு, அழுகறக்கு கூட ஆளில்லாத இந்த பைத்தியத்துக்கு வந்திருந்தாலாவது ஆவும் ”

எழவு வீட்டு முன்னாடி சிரிச்சிக்கிட்டு உட்கார்ந்திருச்சு அது. அன்னிக்கு புதுத்துணி, நல்ல சோறு கிடைக்கும்ல.

இது யார் எந்த துணி கொடுத்தாலும், பழச கழட்டிட்டு புதுச மாட்டிக்கும். ஒரு நாள் பூராவும் மணி கொடுத்த, உள்பாடிய மட்டும் மாட்டிக்கிட்டு அலைஞ்சுது. நாந்தான் மனசு கேக்காம, நல்ல சட்டை ஒன்ன எடுத்து, ராகினிக்கிட்ட கொடுத்தனுப்பினேன்.

“ராகினி....நா ஆத்துக்கு போயி குளிச்சிட்டு வந்திர்ரேன்”

சின்ன வயசில இருந்து ஆத்தங்கரையோரமா குடியிருந்ததுனால, எனக்கு நீந்தறது ரொம்ப பிடிக்கும். அதுலயும், பாறை மேல இருந்து குதிக்கறதுன்னா...அந்த பாறை வளைஞ்சு, மூக்கு மாதிரி நீட்டிக்கிட்டிருக்கும். அதனால, நாங்க அத மூக்கு நீட்டி பாறைன்னு தான் சொல்வோம்.

அங்க இருந்து குதிச்சா ரொம்ப ஆபத்துன்னு சொல்லுவாங்க. ரொம்ப ஆழமா இருக்கும். ஆனா, எனக்கு இது தான் ஆனந்தம். வானத்துல ஒரு பறவையா மாறி பறக்கற மாதிரி இருக்கும். தண்ணிக்குள்ள போயிட்டா, உலகமே மறந்துரும். வெளிய வரவே மனசு வராது...

ஆன மட்டும் வேகமா எம்பி குதிச்சேன். வழக்கமா குதிக்கறதுனால, எங்க பாறை எங்க பாசின்னெல்லாம் நல்லா தெரியும் எனக்கு.

ரெண்டு மணி நேரம் சுகமான குளியல், முடிஞ்சு வெளிய வரலாம்னு இருக்கையில தான் அந்த சத்தம்,

“காப்பாத்துங்க...சீக்கிரம் யாராச்சும் காப்பாத்துங்க”

யார் விழுந்தாங்களோனு ஒரே பதைபதைப்பா...வேகவேகமா நீந்தினேன்.

கரையோரமா பலூன் வெச்சி விளையாடிட்டிருந்த பையனா? இல்ல, தண்ணி கொடத்தோட வந்த நாலைஞ்சு புள்ளைங்கல்ல யாராவது? ரொம்ப நேரம் யோசிக்கக்கூட இல்லை,

தலைமுடிய கொத்தா பிடிச்சு கரைக்கு நீந்திட்டு வர வரவே தெரிஞ்சிருச்சு, இது அதுன்னு.

நல்லவேளை ஒண்ணும் ஆகல.

இதுக்கெல்லாம் எப்பத்தான் சாவு வருமோன்னு, நெனச்சுக்கிட்டிருந்த நானே, அதை காப்பாத்தி இருப்பது தெரிஞ்சுது...இது தான் விதியின் விளையாட்டா?

தண்ணீரில் நனைந்ததால், நடுங்கிக்கிட்டே, கொஞ்ச தூரம் நடந்தது அந்த பைத்தியம்.

அப்பத்தான், அவனை பார்க்குது மறுபடியும் பரிசல் மறைவிலிருந்து வெளிவருவதை.

எச்சி பாத்திரத்துல அடிவாங்கியும், புத்தி வராம, எப்படியாச்சும் அத எச்சியாக்கிரணும்னு அவன் வேட்கையோட அலையுறது புரிஞ்சுது.

ஒரே ஒரு நிமிஷம் தான்...

அவனை பார்த்த உடனே, மிரண்டு, பார்வை நிலை குத்தி போய், திரும்பி காத்தை விட வேகமா ஓடிப் போயிருச்சு, மூக்கு நீட்டி பாறைக்கு.

தன்னால எவ்வளவு முடியுமோ, அவ்வளவு உயரமா எம்பி...

அய்யைய்யோ இப்பத்தான காப்பாத்தினேன், அதுக்குள்ள...

கடவுள் என்னைப் பார்த்து சிரித்தார்,

“மடையா...சீக்கிரம் செத்து போயிரணும் அவ நினைச்சிக்கிட்டு இருந்த நீ, ஒரே ஒரு தடவை காப்பாத்தின காரணத்துனால, இவ்ளோ கவலைப்படறியே? எத்திணி நாளா நா அவள காப்பாத்திட்டு வர்ரேன்”


(நண்பர் நந்தவேரன் வேப்பிலை அடிச்சதுல நான் திருந்திட்டேனா இல்லையானு மட்டும் சொன்னா போதும்)


-சுமஜ்லா.

அடுத்த வெர்ஷன் இது.

ஏங்க வாய்ஸ் மிமிக்ரி மட்டும் தான் பண்ணனுமா? கதை மிமிக்ரி பண்ணக்கூடாதா? அதான் அந்த பயிற்சி சிறுகதையை, பரிசு பெற்ற சிறுகதை, ‘அம்மாவின் மோதிரம்’ எழுதிய தம்பி ரிஷான் ஷரீஃப் எழுதியிருந்தா, எப்படி இருக்கும்னு ஒரு சின்ன கற்பனை.

சிம்மாவின் சூத்திரம்

சிம்மா படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தான். இமைகளை பிரித்த பின், அவன் கண்கள் வழியாக தூக்கம் பறந்து போனது. அப்போது தான் புரிந்தது, நாலு மணித்தியாலம் அவனை அறியாமல் தூங்கி இருப்பது. சில நேரம் இப்படித்தான், மதியத்தில் தூங்கி விட்டு ராத்திரியில் மாட்டிக் கொள்வான். அவன் அப்பா இருக்கும் வரை மதியம் தூங்கவே விட மாட்டார். அதுக்கு அவர் காரணமும் சொல்வார். அவர் சின்ன வயசில தூங்கு மூஞ்சியா இருந்து, தொந்தி பெருத்து, சீக்கிரமா இதய நோய் வந்துவிட்டது. அதோடு, நேரங்கெட்ட நேரம் தூங்கி, ஒழுங்கான நேரத்துக்கு சாப்பிடாம வயிற்று புண் வேறு. அதனால் தானோ என்னமோ, சீக்கிரமே போயிட்டார்.

ஜன்னல் வழியா பார்த்தான். அங்க அந்த பைத்தியம், சோத்தை அள்ளி அள்ளி பாதி கீழேயும், பாதி வாயிலுமாக தின்று கொண்டிருந்தது. அது எங்கிருந்து வந்தது என்று யாருக்கும் தெரியாது. ஊர் மட்டுமல்ல, உறவும் தெரியாது. ஆனா, அது யாருக்கும் எந்த தொந்திரவும் தருவதில்லை. தான் பாட்டுக்கும் இருக்கும். எல்லா வீட்டுக்காரங்களும், அப்பப்போ சாப்பிட எதாவது தருவாங்க. துணி மணிங்களும் தருவாங்க.

மனைவி காப்பி கொண்டு வந்து கொடுத்த போது, அவள் கைகளில் கிலுங்கிய கண்ணாடி வளையல்கள், வெய்யில் பட்டு, சுவரில், வண்ணக்கோலம் தீட்டியிருந்ததை ரசித்தபடி வாங்கினான். படுக்கையில் இப்படி காப்பி தரும் வழக்கம் அம்மாவுக்கு பிடிக்காது. கொஞ்சம் நேரம் தூங்கினாலும் பல் விளக்கி விட்டு வர சொல்லுவாள். அம்மாவுக்கு எப்பவும் எதிலும் சுத்தம் இருக்கணும். ஒரு தடவை, சின்ன வயசுல விளையாடிட்டு, அழுக்கோட வந்த அவனை ராத்திரின்னு கூட பார்க்காம, கிணற்று பக்கம் கூட்டிட்டு போய் வாளியில தண்ணிய இறைத்து இறைத்து ஊற்றி கழுவி விட்டாள்.

இப்ப மனைவி வந்தது, ஏக சவுகரியம் அவனுக்கு. எந்நேரம் வரைக்கும் தூங்கினாலும் ஒன்னும் கேட்க மாட்டா. ஆனா, அவன் குடித்தவுடன் தான் தான் குடிப்பாள். அதுவும் அதே டம்ளரில் விட்டு. அவள் ரொம்பவும் நல்லவள். எல்லாருக்கும் நல்லது தான் செய்வாள். பைத்தியத்து மேல ஒரு தனி பரிவு அவளுக்கு. அது ஒரு பெண்ணுங்கறது கூட அதுக்கு காரணமா இருக்கலாம். எல்லாரும் மிச்ச மீதி வெளியே போனா போதும்னு அதோட தேவைக்கும் மேல இருந்தாலும், அதோட தூக்கு போசியில கொட்டிடுவாங்க. ஆனா இவனோட பொண்டாட்டி அப்படி செய்ய மாட்டாள். நாலு நாளா இருந்தாலும், அதை ஐஸ்பொட்டியில வைத்து பாதுகாத்து, எப்போ அதுக்கு சாப்பாடு இல்லையோ, அப்ப கொண்டு தருவாள்.

அது, எல்லாத்துகிட்டயும் பிச்சை வாங்கினாலும், அதுக்கு மீந்து போறதை ஒரு தெரு நாய்க்கு போடும். அந்த நாயும் அது தரும் சோற்று பருக்கைக்காகவே, அவளை சுற்றி சுற்றி வரும். ஆனா, எல்லாரும், அவ ரொம்ப அழுக்கா இருக்கறதுனால தான் நாய் அவளை சுத்துதுன்னு சொல்லுவாங்க. என்ன தான் அழுக்கா இருந்தாலும், அது அழகா தான் இருக்கும். அதுனாலதான், அது பைத்தியமா இருந்தாலும், சில திமிர் பிடித்த பையன்கள் அதும் பின்னாடி அலைவானுங்க. எப்படியாவது அதை ருசி பார்த்துவிடணும்னு அவனுங்களுக்கு ஆசை.

அதுல ஒருத்தன் மணினு பேர். அவன ரெண்டு பொண்டாட்டி மணினு தான் சொல்வாங்க. ஆனா, இப்ப கூட ஒரு பொண்டாட்டி கூட இல்லை. அதுக்கு காரணம் அவன் எந்நேரமும் போதையிலேயே இருக்கறது தான். முதல் சம்சாரம், ஒரு நாளு திடீர்னு செத்து போச்சு. எல்லாரும், இவன் தான் கல்ல போட்டு கொன்னிருப்பான்னாங்க. ஆனா, அன்னிக்கு தான் அவன் உண்மையா அழுத மாதிரி இருந்தது. ஊர் வாய அவனால மூட முடியல. அதனாலயே, அவனுக்கு பொண்ணே கிடைக்கல. எல்லாரும், இவன் குடிச்சு குடிச்சு செத்து போயிருவான்னு சொன்னாங்க. ஆனா, இவன் பக்கத்தூர்ல போயி, ஒரு பொண்ண கூட்டியாந்து குடும்பம் நடத்த ஆரம்பிச்சான். அந்த பொண்ணு கொஞ்சம் நாள்ள பக்கத்தூட்டுகாரனோட ஓடி போயிருச்சு. அதுக்கப்புறம், தனியாளாத்தான் திரியறான்.

தனியாளா இருக்கறதுனால, அவனுக்கு வேட்கை ரொம்ப அதிகமாயிடுச்சு. விடாம அந்த பைத்தியத்தை துரத்திக்கிட்டே அலைஞ்சான். ஆனா, ஒவ்வொரு சமயத்திலும் யாராவது வந்து காப்பாத்திருவாங்க. பக்கத்தூட்டுகாரம்மா இப்படித்தான் ஒரு நாள் அவனை பிடித்து நல்லா வைஞ்சாங்க. அதுக்கு காரணம், அவங்க பொண்ணும் இப்படித்தான் மூளை வளர்ச்சி இல்லாம இருக்குது. அதுக்கு இருவது வயசாயிருச்சு. ஆனா, இன்னும் கழுத்து கூட நிக்கல. வாயில எப்பப்பாரு எச்சில் ஒழுகிக்கிட்டே இருக்கும். அத பார்த்தா பாவமா இருக்கும் அவனுக்கு. எதுக்கு கடவுள் இந்த மாதிரி ஜென்மங்களை படைக்கிறார்னு கோவம் கோவமா வரும். சீக்கிரம் இதுங்களோட உசிர வாங்கிக்க கூடாதானு, மனசுக்குள்ள நினைப்பு அடிக்கடி வரும்.

அதுவும், அன்னிக்கு ஒரு நாள் அந்த ரெண்டு பொண்டாட்டிகாரன், அதுகிட்ட, ரொம்ப அத்து மீதி நடக்க முயற்சி செய்திருப்பான் போல. அது கொஞ்சம் கொஞ்சமா பின்வாங்கி ஆத்தங்கரையோரம் இருந்த மூக்கு நீட்டி பாறைக்கே வந்திருச்சு. அப்புறம் என்ன தோணிச்சோ தெரியலை, தன்னோட கையில இருந்த பிச்சை பாத்திரத்தை, அப்படியே வேகமா அவன் முகத்துல விட்டெரிஞ்சிருச்சு. பாத்திரமும் எச்சிலும், முகத்தை பதம் பார்க்க, ஆங்காரத்தோட, முகத்தை துடைத்து கொண்டே அவன் போய் விட்டான்.

சிம்மாவுக்கு அந்த மூக்கு நீட்டி பாறைன்னா ரொம்பவும் இஷ்டம். அதுவும், அங்க இருந்து தண்ணிக்குள்ள குதிச்சு, விளையாடுறதுன்னா ரொம்ப ரொம்ப இஷ்டம். அன்னிக்கு அப்படித்தான், வெய்யில் ரொம்பவும் அதிகமா இருந்தது. வெய்யிலோட வேட்கை தாளாம, கொஞ்ச நேரம் குளிச்சிட்டு போக வந்தான். பொதுவா அவன் இந்த மாதிரி வரும் போது, தனியா வருவது தான் பழக்கம். தனிமையை முழுவதுமாக ரசிக்க வேண்டும் என்று நினைப்பான்.

மூக்கு நீட்டி பாறையில இருந்து, காற்றோடு கலந்து குதித்தான். குதித்த வேகத்தில் தண்ணீரில் இருந்து எழும் சப்தத்தை எப்போதும் மிகவும் ரசிப்பான். மீன்கொத்தி பறவை மாதிரி, உள்ள போய் வெளிய வந்து கையையும் காலையும் தண்ணீரில் அலைய விட்டு, மிதந்தான். குபுக்குனு உள்ள போய், உள்நீச்சம் அடிச்சுக்கிட்டே கண்ணை திறந்தான். பாறையில் கொஞ்சூண்டு மட்டும் ஒட்டி, மிச்சம் மீதி தண்ணீரில் ஆடிக்கிட்டிருந்த பாசி, எந்நேரமும் விடுபட்டு, நீரோடு அடித்து போகும் அபாயத்தை சொல்லாமல் சொல்லிக் கொண்டிருந்தது. தலையால் தண்ணிய முட்டி முட்டி கிச்சு கிச்சு மூட்டினான். கால்களை கடித்த மீன் குஞ்சுகளுக்கு போக்கு காட்டியவாறு நீருக்குள் உலாத்தினான்.

கரையில் அன்னிக்கு நிறைய சனக்கூட்டம். அதுல கொடத்தோட வந்திருந்த யுவதி கூட்டம் ஒன்னு. அதுல யார் ரொம்ப சிரிக்கறானு யாராலயும் சொல்ல முடியாதபடி, அவ்வளவு, சிரிப்பு! பலூனில், நூல்கட்டி, விளையாடிக்கொண்டிருந்த சிறுவன். அவனுக்கு ஆறு அல்லது ஏழு வயசு இருக்கலாம். அம்மாவும் அப்பாவும் சுவாரஸ்யமாக பேசிக்கொண்டிருக்க, இவன், பலூன் பின்னாடியே ஓடிக் கொண்டிருந்தான்.

திடீரென்று காற்றில் கலந்து ஒலித்தது பல குரல் ஓலம். காதுகளை தண்ணீருக்கு வெளியே கொண்டு வந்து கவனித்த போது தான் தெரிந்தது, யாரோ, நீரில் விழுந்து விட்டார்கள் என்று. யாரென்ற கவலையோட தூரத்தில் முங்கி கொண்டிருந்த உருவத்தை வேகமாக நீந்தி சடுதியில் பிடித்து விட்டான். கொத்தாக அள்ளிய தலைமுடியை பிடித்து, கரையில் சேர்க்க வருவதற்கு முன்பாகவே தெரிந்து விட்டது, இது அந்த பைத்தியம் என்று.

அது நடுங்கி கொண்டிருந்தது. ஈரத்தினாலா இல்லை வேறு காரணமா என்று அவனுக்கு புரியவில்லை. ஆனால், இது இருந்த என்ன பிரயோஜனம் என்று அடிக்கடி நினைத்தது மனதில் வந்தது. இப்ப இவனே அதை சாவிலிருந்து காப்பாற்றி இருப்பது அவனுக்கே விசித்திரமாக இருந்தது.

நடுங்கியவாறு நாலு எட்டு நடந்தது அந்த பைத்தியம். அப்போ தன், பரிசல் மறைவில் இருந்து அந்த ரெண்டு பொண்டாட்டிகாரன் வெளியே வருவதை பார்த்தான். பைத்தியமும் பார்த்து விட்டது. பார்த்ததும், அதன் நிலை மாறியது. கண்களில் அச்சம் குடிவந்தது. நடுக்கம் இன்னும் ஜாஸ்தியாக, ஒரு கணம் நிலை குத்திய பார்வையோடு நின்றது, திரும்பி வேகமாக ஓடியது மூக்கு நீட்டி பாறையை நோக்கி!

மூக்கு நீட்டி பாறையில் இருந்து காற்றோடு கலந்து மீண்டும் குதித்தது. குதித்த வேகத்தில் தண்ணீரில் இருந்து எழுந்த சப்தத்தை இப்போது அவனால் ரசிக்க முடியவில்லை.

-சுமஜ்லா.


(நான் விளையாட்டுக்கு சொன்னதை எல்லாம் மனசுல வெச்சுக்காம ஓட்டுப் போட்டுட்டு போவிங்கன்னு எனக்கு நல்லா தெரியும்.)

.

7 comments:

ஜெகநாதன் said...

ரொம்ப கிண்டலா, ஜாலியா கஷ்டமான கதையை நகர்த்தி சென்றிருக்கிறீர்கள்! வித்யாசமான அணுகுமுறைக்கு வாழ்த்துக்கள்!

NIZAMUDEEN said...

இந்தக் கதை(களு)க்கு
என்ன கருத்து அளிப்பது
என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன்.

NIZAMUDEEN said...

பயிற்சிக் கதை
'ரீ-மிக்ஸ்'-ஆ இது!
எவ்வளவு ஃபாஸ்ட்டா முன்னேறிட்டீங்கப்பா!!!

நந்தவேரன் said...

ஹலோ, சுமஜ்லா! Gimmmeee a break! இவ்ளோ வேகமால்லாம் என்னால ரெஸ்பாண்ட் பண்ண முடியாது! I sway! நான் ஆடறேன்!

ஆனா இந்த முதல் வெர்ஷன் “நச்சுன்னு” இருக்கு! சிறுகதைக்குத் தேவையான ‘முரண்’ டயலாக் கடவுள் பேசறார்.

இன்னொரு விஷயம். இந்த வெர்ஷன்ல ’கதைசொல்லி’ ஒரு ஆண் அப்டீங்கறது தெளிவா தெரியுது. (”என் பொண்டாட்டி”) ‘பயிற்சிக் கதை’யில இது இல்லை.

வாசகனை சுத்தல்ல வுடாதீங்க. இரவுன்னு எஸ்டாப்ளிஷ் பண்ண முடியலையா? “சந்திர பகவானே” ந்னு ஒரு கேரக்டரை பெருமூச்சுவுட வெச்சுருங்க.

நன்றி.

- நந்தவேரன்

எம்.ரிஷான் ஷெரீப் said...

இப்ப நள்ளிரவு 12 மணி. இப்பதான் இந்தப் பதிவைப் பார்த்தேன். எப்படிங்க இதெல்லாம்? ஆச்சரியமா இருக்கு.
(உங்க நகைச்சுவையான மொழிநடை பார்த்து இன்னும் சத்தமா சிரிச்சிட்டே இருக்கேன்..பக்கத்துவீட்டுக்காரங்க பேய்னு நெனச்சுடப் போறாங்க..பரவால்ல..அதுபத்தியும் ஒரு கதை எழுதிடுவோம்:P )

Arangaperumal said...

இரண்டுமே நன்றாக இருந்தாலும், முதலில் எழுதப்பட்டதில் கொஞ்சம் வேகம் இருப்பது போல உணர்வு.
மிமிக்ரி என்பதும் பொருத்தம்தான் ஆனாலும் ஒரே ஆள் வேறுவேறு உடையில் தோன்றுவதைப் போல இருப்பதால்
"மாறுவேடப் போட்டி" என நினைக்கிறேன்.(அய்யோ.. சும்மா சொன்னேன்)

SUMAZLA/சுமஜ்லா said...

வாழ்த்து சொன்ன எல்லாருக்கு நன்றிகள் பல!

ரீ மிக்ஸ், மிமிக்ரி, மாறுவேட போட்டி, ஆகா என் கதைக்கு எத்துணை எத்துணை பெயர்கள்.

நந்தவேரன், உங்க கருத்துகளுக்கு மிக்க நன்றி!

ரிஷான், இதை மட்டும் தான் படிச்சிங்களா, இல்லை, ‘வயிறு வலிக்குதைய்யா சிரிச்சு’ பதிவை படித்தீர்களா? அப்புறம், எதைபத்தியும் கதை எழுதும் ஆர்வம், உங்களையும் தொத்திக்கிச்சா?

அரங்கண்ணா, உண்மையில், நான் பரிசு பெற்ற 20 பேரில் ஸ்டைலில் எல்லாம் இக்கதையை எழுத நினைத்தேன். ஆனா, வாசகர்கள் பாவம் இல்லையா, அதான் இதோட முடித்து கொண்டேன்.