Tuesday, August 18, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 19

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)


“விதியின் மொழியது யாருக்கு புரியும்
சதி என்று எதுவும் சரித்திரம் இல்லை
புதிதாய் வாழ்வு துவங்கிடும் வேளை,
எதுதான் விழிநீர் துடைத்திடும் நாளை?!”


நல்லது நடக்கும் நல்லது நடக்கும்னு ஏங்கி ஏங்கி தவமிருந்தவ, அல்லது நடக்கும்னு என்னிக்குமே நினைக்கலியே!

ஊராரின் உள்ளங்களில், உறவுகளின் நெஞ்சங்களில் உயிருக்குயிராய் பழகி நீங்காத இடம் பிடித்த கச்சாமாவின் முடிவு இவ்வளவு சீக்கிரம் இருக்கும் என்று யாருக்குமே தெரியாதே?!

மூணே நாள் காய்ச்சல், மூளைக்காய்ச்சலாக மாறி, பச்சிளம் சிறுமிகள் மர்ஜி, ஆப்பியையும் பத்துமாத குழந்தை பாஜிலாவையும் பரிதவிக்கவிட்டு மரணத்தில் கொண்டு விடுமென்று பெற்றவங்களுக்கு கூட தெரியலையே?!

சாலோடு தண்ணி சாய்ச்சு சாய்ச்சு குடிச்சாலும், தாயோடு பிள்ளை சேர்ந்தாத்தான் தாகம் தீருமுன்னு, ஒன்னு சேர்ந்தாங்க. அந்த மனநிறைவோ என்னமோ, மீரான் சாயபு, கொஞ்சம் கொஞ்சமா தேறி கைத்தாங்கலா நடக்க ஆரம்பிச்சாரு.

மகளுக்கு வறுமை புருஷனால தீராட்டியும் பெத்தவங்கனால, தீர்ந்தது ஒரு வழியா. எல்லாத்துக்கும் விடிவு இருக்கும்னு தான் எல்லாருமே எதிர்பார்த்தாங்க. ஆனா….

வாடிப்போன மலராக கூடத்தில் படுக்க வைக்கப்பட்டிருக்கும் கச்சாமா! பக்கத்தில், தாயின் கையை தொட்டு தொட்டு பார்க்கும் ஆப்பி! தாய்முகமென்றால் என்னவென்றே தெரியாமல் தொட்டிலில் உறங்கும் பாஜிலா. தூங்கும் தாயை என்ன செய்து எழுப்பலாம் என்று குறும்புத்தனமாக யோசித்தபடி மர்ஜியா. ஒரு ஓரமாக தலையை தொங்கபோட்டபடி தஸ்தகீர்.

சுற்றிலும் அரற்றும் சொந்தங்கள். அடக்க முடியாமல் கதறி கதறி அழுகிறாள் சைதா, பாஜிலாவின் தொட்டிலை ஆட்டியபடி. அழுகையும் மௌனமும் மாறி மாறி அந்த சூழ்நிலையில், மும்மக்கா மகன் ஜாயிரு தான் ஆக வேண்டிய ஏற்பாடுகளை கவனித்து கொண்டிருந்தான்.

சல்மா குப்பியும், அய்சாமா குப்பியும் சோர்ந்து போய் கிடந்த மர்ஜியையும் ஆப்பியையும் விளையாட்டு காட்டி சாப்பிட வெச்சிட்டு இருந்தாங்க. சாதிக்கலிக்கு முகத்துல சுரத்தே இல்லை. அப்படி ஒரு வாட்டம். சல்மாவோட மகன் அஹமது, அய்சாமா மகன் காதர் ரெண்டு பேரும் கப்ருஸ்தானுக்கு குழி வெட்ட சொல்லவும் கபன் எடுக்கவும் போயிட்டாங்க.

கச்சாமாவை குளிப்பாட்டினாங்க. கடைசியா, மர்ஜியை ஆப்பியையும் அழைத்து போய், கடைசி தண்ணி ஊத்த சொன்னாங்க. விவரம் புரியாமயே ரெண்டு பேரும் அழ ஆரம்பிக்க, சமாதானம் செய்ய பெரும்பாடு ஆகிவிட்டது.

கபன் துணியை உடுத்தி, கட்டி, கண்ணுக்கு சுருமா போட்டு விட்டு நடு ஆஜாரத்துல கிடத்தி இருந்தத பார்க்க பார்க்க, கூடியிருந்தவங்க, கோனு மறுபடியும் கதற ஆரம்பிச்சிட்டாங்க. எந்த கஷ்டத்திலியும் சிரிச்சிக்கிட்டே இருந்த கச்சாமா, மௌத்தாகிப் போயும், அவ உதடுல ஒரு வித புன்சிரிப்பு நெளிந்து தங்கி போயிருந்தது.

அந்த சிரிப்புக்கு என்ன அர்த்தம்? எல்லா துன்பத்துக்கு விடுதலை கிடைத்தது என்றா? இனி, தன் கணவனுக்கு தான் பாரமாக இருக்க மாட்டோம் என்ற நிம்மதியா? ஒரு மகளை தள்ளி வைத்த தாயே! இனி, மூன்று மகள்களுக்கு நீ பார்க்க வேண்டும் என்ற எண்ணமா?

அடக்கம் முடிந்து மூன்றாம் நாள் ஜியாரத்துக்கு சுண்டல் வேவிச்சு, பேரிச்சம்பழம் பங்கி எல்லாம் முடிச்சாச்சு. ஊரும் உறவும், பச்சை பாலகிகளை பார்த்து பார்த்து அழுதது.

கண்களில் கண்ணீர் வற்றி விட்டாலும், மனதில் கவிதை வற்றாத, சைதாவின் அண்ணன் காதர், ‘மலர்ந்தும் மலராமல்’ என்ற பாட்டின் மெட்டில், பாட்டெழுதி, அந்த பூங்குருத்துக்கு அஞ்சலி செலுத்தினான்.

அந்த பாட்டை படித்து அழாதவரே இல்லையெனும்படி உருக்கமான பாடல் இதோ:

மலர்ந்தும் மலராமல் பாதி மலர் போல மடிந்த கதை சொல்லவா?
எங்கள் மனதில் இடம் பெற்று மண்ணில் புதைந்திட்ட மலரின் பெயர் சொல்லவா?

சிரித்து கதை பேசி செழிக்க உறவாடி மகிழ்ந்த பூந்தென்றலே
என்றும் விழிக்க முடியாத உறக்கம் தனைக் கொண்டு உறங்குகின்றாயம்மா!

சீரும் சிறப்பாக கணவனுடன் நீயும்
வாழப் பிறந்தாயம்மா – உயிர்
வாழப் பிறந்தாயம்மா

எங்கள் கண்கள் குளமாக நெஞ்சங்களும் வேக
மண்ணில் மறைந்தாயம்மா – இந்த
மண்ணில் மறைந்தாயம்மா!

கண்ணே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ

மலர்ந்தும் மலராமல் பாதி மலர் போல மடிந்த கதை சொல்லவா?
எங்கள் மனதில் இடம் பெற்று மண்ணில் புதைந்திட்ட மலரின் பெயர் சொல்லவா?

சிரித்து கதை பேசி செழிக்க உறவாடி மகிழ்ந்த பூந்தென்றலே
என்றும் விழிக்க முடியாத உறக்கம் தனைக் கொண்டு உறங்குகின்றாயம்மா!

பிஞ்சு மொழி பேசி நெஞ்சில் உறவாடும்
மழலை எனைக் கேட்கிறாள் – உந்தன்
மழலை எனைக் கேட்கிறாள்.

என் அன்னை எங்கே என் அன்னை எங்கே
என்றென்னை அவள் கேட்கிறாள் - தினம்
என்னை அவள் கேட்கிறாள்

கண்ணே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ

மலர்ந்தும் மலராமல் பாதி மலர் போல மடிந்த கதை சொல்லவா?
எங்கள் மனதில் இடம் பெற்று மண்ணில் புதைந்திட்ட மலரின் பெயர் சொல்லவா?

சிரித்து கதை பேசி செழிக்க உறவாடி மகிழ்ந்த பூந்தென்றலே
என்றும் விழிக்க முடியாத உறக்கம் தனைக் கொண்டு உறங்குகின்றாயம்மா!

மர்ஜியா, ஆப்பி, பாஜிலா என்னும்
மூன்று முகம் பார்க்கிறேன். - சின்ன
மூன்று முகம் பார்க்கிறேன்.

ஒரு அன்னை இல்லாத பிள்ளை இவள் என்று
உலகம் இனி சொல்லுமே – இந்த
உலகம் இனி சொல்லுமே

கண்ணே ஆரிராராரோ ஆரிராராரோ ஆரிராராரிரோ

மலர்ந்தும் மலராமல் பாதி மலர் போல மடிந்த கதை சொல்லவா?
எங்கள் மனதில் இடம் பெற்று மண்ணில் புதைந்திட்ட மலரின் பெயர் சொல்லவா?

சிரித்து கதை பேசி செழிக்க உறவாடி மகிழ்ந்த பூந்தென்றலே
என்றும் விழிக்க முடியாத உறக்கம் தனைக் கொண்டு உறங்குகின்றாயம்மா!

(வளரும்)

-சுமஜ்லா.

9 comments:

Jaleela said...

சிறிதும் எதிர் பார்க்கல கச்சாமாவின் முடிவை, கண்ணீர் வரவழைத்து விட்டது.பாடல் வரிகளை படித்தால் உடல் சிலிர்க்கிறது.

கவிக்கிழவன் said...

வாழ்த்துக்கள்.
இலங்கையில் இருந்து யாதவன்

SUMAZLA/சுமஜ்லா said...

ஜலீலாக்கா, உண்மையில் இந்த பாடல் நான் எழுதவில்லை. கதையில் வரும் காதர் எழுதியது தான். காதர்(உண்மை பெயர் வேறு) என்பது என் தாய் மாமா. அவரும் ஒரு கவிஞர்.

//வாழ்த்துக்கள்.//

சோகமாய் ஒரு கதை எழுதியிருக்கேன், வாழ்த்துக்கள் சொல்லி இருக்கிறீர்களே?!

Mrs.Menagasathia said...

சுகைனா எதிர்பர்க்கவே இல்லை,கச்சமா இறந்து போவாங்கன்னு படித்ததும் என்னையும் அறியாமல் கண்ணீர் வந்துடுச்சு.

கச்சமாவின் பிள்ளைகளும்,கணவர்களும் என்ன ஆனாங்க?

SUMAZLA/சுமஜ்லா said...

இனி வரும் வாரங்களில் உங்க கேள்விக்கு பதில் கிடைக்கும் மேனகா!

Mrs.Menagasathia said...

பாடல் வரிகள் மெய் சிலிர்க்க வைத்துடுச்சு.மிகவும் உருக்கமான பாடல்.

NIZAMUDEEN said...

கச்சாமா மிகுந்த பொறுமைசாலி. அவளை
இறைவன் அதிகம் சோதிக்காமல் விரைவில்
அழைத்துக் கொண்டான்.
கச்சாமாவுக்கு இத்தனை வயதில் இவ்வளவு
துன்பங்களா என்று வேதனைப் படும்போது
இந்த இளம் வயதிலேயே மௌத் வருமென்று
எதிபார்க்கவில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

இத்துணை வருடங்களாக, என் தாயார் இந்த பாடலை மறக்காமல் வைத்திருந்து சொன்னாரே!

நிஜாம் அண்ணா சொல்வது மிக சரி! ஒரு பெண் எவ்வளவு தான் சோதனைகள் தாங்குவாள்.

Biruntha said...

கச்சாமாவின் முடிவு என்னைக் கலங்க வைத்து விட்டது. பாவம் எவ்வளவு துயரத்தைத்தான் ஒரு பெண்ணால் தாங்க முடியும்? துயரங்களிலிருந்து விடுபட வேறு வழி இல்லை என இவ்வழியைத் தேர்ந்தெடுத்தானோ இறைவன்?
குழந்தைகள்தான் பாவம்.. என்ன கொடுமை இது?

அனுதாபத்துடன்
பிருந்தா