Saturday, August 1, 2009

பாலைவன பயணம்

இதன் முன் பகுதி இங்கே: ஆக்ரா கோட்டை


பதேபூர் சிக்ரி சுற்றி பார்த்து விட்டு, திரும்பும் வழியில், சாப்பிட்டோம். வட இந்தியா போனதிலிருந்து திரும்பும் வரை உணவு தான் பிரச்சினை. தென்னிந்திய உணவு சகிக்காது. ஆனால், வர சப்பாத்தி விலை மிக மலிவு. சாப்பாடு, ஐஸ்கிரீம், எல்லாம் திருப்தியாக சாப்பிட்டு விட்டு, திரும்பினோம்.


பொதுவாகவே, வட நாட்டில், தென்னாடு அளவுக்கு யாருக்கும் ஆங்கிலம் தெரியாது. அப்படியே தெரிந்தால் கூட பேச மாட்டார்கள். எனக்குத் தெரிந்த அரை குறை ஹிந்திதான் கைகொடுத்தது. சரியோ தவறோ, பேரம் பேசுவதில் இருந்து, ஆட்டோக்காரருக்கு வழி சொல்வது வரை, நான் பாட்டுக்கும் பேசிக்கொண்டே இருப்பேன். பின்ன எப்படிங்க பழகுறது?


ஆக்ராவில் ஒரு இடத்தில் டிரைவர் காரை நிறுத்தினார். பாரம்பரிய ஆக்ரா ஸ்வீட் வாங்குகிறீர்களா? என்றார். நல்ல வேளை, அவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. அந்த ஸ்வீட் கடையில் அவருக்கு கமிஷன் போலிருக்கிறது. ஆனால், வெள்ளை பூசணியில் செய்த அந்த ஸ்வீட் எங்களுக்கு பிடிக்காது. அதோடு, ஊர் திரும்ப இன்னும் நாள் இருந்தது, அதனால் வேண்டாம் என்று சொல்லி விட்டேன்.


அடுத்து, அருகில் இருந்த டிராவல் ஏஜன்ஸியில் ஏதாவது டிக்கட் புக் செய்கிறீர்களா? என்று கேட்டார். சரி என்று போனோம். டில்லியில் இருந்து கல்கா(சிம்லாவின் அடிவாரம்) வுக்கும் சிம்லாவில் இருந்து, திரும்ப கல்காவுக்கும், கல்காவில் இருந்து திரும்ப டில்லிக்கும் புக் செய்து தந்தார்கள். டிக்கட்டுக்கு 50 ருபாய் அதிகம். கல்காவில் இருந்து சிம்லாவுக்கு செல்லும் டாய் ட்ரைனில் டிக்கட் கிடைக்கவில்லை என்று சொல்லி விட்டார்கள். எல்லாம் கன்பர்ம் டிக்கட் என்று சொல்லியிருந்தார்கள். ஆனால், அதில் ஒன்று கடைசி வரை கன்பார்ம் ஆகவில்லை. அதனால், இது போன்ற விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.


டிராவல் ஏஜென்ஸியில் இருந்த நாலைந்து பேர், மச்சானிடம், ‘நீங்கள் ரஜினி காந்த் போலவே இருக்கிறீர்கள்’ என்று சொல்லவும், எங்களுக்கு என்னடா, இரண்டாவது ஆளாக இவர்கள் இப்படி சொல்கிறார்கள், என்று குழம்பிப் போனோம். வட இந்தியர்கள் ரஜினியை சரியாக பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.


அடுத்து, நாங்கள் செல்லும் இடமான ஜெய்ப்பூரில் தங்குமிடம் வேண்டுமா என்று கேட்க, நாங்கள் ஆம் என்றோம். அதன் படி அட்வான்ஸ் தொகை பெற்றுக் கொண்டு, ரசீது தந்தார்கள். ஜெய்ப்பூர் போய் இறங்கியவுடன், அவர்களே வந்து அழைத்துச் செல்வார்கள் என்று சொல்லி, ஹோட்டலின் விசிட்டிங் கார்டு தந்தார்கள். சும்மா சொல்லக்கூடாது, வெறும் 600 ருபாய் தான் வாடகை, ஏசி ரூமுக்கு!


சரியாக மாலை 5 மணிக்கு, எங்களை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கி விட்டு விட்டார். நான் போய் க்யூவில் நின்று டிக்கட் எடுப்பதற்குள், மச்சான் போய், க்ளாக் ரூமில் ஒப்படைத்திருந்த லக்கேஜை பெற்று வந்தார். லக்கேஜுக்கு 10 ருபாய் தான் வாடகை; ஆனால், தூக்கி சுமக்கும் வேலை மிச்சமாகிறதே?!


குவாலியர் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏறி, இரவு சுமார் 10 மணிக்கு ஜெய்ப்பூர் வந்தடைந்தோம். சொன்னபடியே போன் செய்தவுடன், எங்களை ஆட்டோவில் வந்து பிக்கப் செய்து கொண்டார்கள் லாட்ஜ்காரர்கள்.


ரூம் ஒரு இரவுக்கு மட்டும் தான் என்று ஏற்கனவே சொல்லி இருந்தோம். ஜெய்ப்பூர் பாலைவனப் பிரதேசம் என்பதால், வெய்யில் அங்கு மிக உக்கிரமாக இருக்கும். அதனால், அங்கு எல்லா இடத்தில் ஏ.சி. இருக்கும். ரூம் மிக சவுகரியமாக டீசண்டாக இருந்தது. ஆக்ராவிலேயே புக் செய்தது களைப்பான இந்த நேரத்தில் மிகவும் பயன் தந்தது. இதோ அதன் புகைப்படம்:




அங்கே ரூம் பாயிடம் உணவு ஆர்டர் செய்து சாப்பிட்டு விட்டு, அலுப்பு தீர குளித்து விட்டு, நன்கு ரெஸ்ட் எடுத்தோம். தொடர்ச்சியான பிரயாணத்தால் ஏற்பட்ட களைப்பு ஓரளவு நீங்கி விட்டது.


அடுத்த நாள் அஜ்மீர் போகலாம் என்று திட்டம். ரூமுக்கு செக் அவுட் டைம் பகல் 12 மணி என்று சொல்லி விட்டார். நாங்கள் எப்படியும் அன்று இரவு தங்கப் போவதில்லை. அதனால், ரூமைக் காலி செய்து, அந்த ஹோட்டலிலேயே இருந்த லக்கேஜ் அறையில் சாமான்களை ஒப்படைத்து விட்டு, அஜ்மீருக்கு பஸ் ஏறினோம்.


ஜெய்ப்பூரில் இருந்து அஜ்மீர் சுமார் 120 கிலோ மீட்டர் இருக்கும். 3 மணி நேர பயணம். பாலைவன வெய்யில் என்றால் என்ன என்று அந்த பயணத்தில் தான் தெரிந்து கொண்டேன். பஸ் நிற்கும் போதெல்லாம், ஐஸ்கட்டி போன்ற ஜில்லிப்பில் ஜன்னலருகே வந்து தண்ணீர் பாட்டில் விற்கிறார்கள். சிறிது நேரத்தில் அது சுடு தண்ணீர் போல மாறி விடுகிறது. நா வரண்டு போகிறது. 3 மணி நேர பயணத்தில் தண்ணீருக்கு மட்டும் 100 ருபாய்க்கும் மேல் செலவாகி இருக்கும்.


வழியில், எங்கும் வெட்டவெளி மைதானம். ஓரிரு கள்ளிச் செடிகளைத் தவிர எந்த தாவரமும் இல்லை. சில இடங்களில், சுழன்றடித்த மணல் புயல்களை தூரத்தில் காண முடிந்தது. எங்கும் சூடான புழுதி மணல் தான். இன்றைக்கும் அதை மறக்க முடியாது.


சுமார் மதியம் ஒரு மணிக்கு அஜ்மீர் சென்று சேர்ந்தோம். அங்கிருந்து 30 ருபாய் கொடுத்து ஒரு ஆட்டோவில் தர்கா போனோம். பொதுவாக, தர்கா வழிபாடு எங்களுக்கு பிடிக்காத வெறுப்பான ஒன்று. இது ஆண்டவனுக்கு இணை வைக்கும் காரியம் என்று கண்டு மனம் வெதும்பும். ஆயினும், ஒரு பிக்னிக் ஸ்பாட்டை சுற்றிப் பார்க்கும் நோக்கத்துடன் சென்றோம்.


மிகப்பெரிய தர்கா அது. ஆள் காணாமல் போய்விட்டால், கண்டு பிடிப்பது மிகவும் சிரமம். தர்காவினுள்ளே இருந்த விதானத்துக்கு தங்க முலாமிட்டு இருந்தார்கள். வெள்ளி கம்பியால், கைப்பிடி சுவர்கள் அமைத்திருந்தார்கள். ஏனோ, அங்கு புகைப்படம் எடுக்க பிடிக்கவில்லை. லுஹர் அங்கு தொழுது விட்டு, ஒரு யாஸீன் ஓதிவிட்டு, வெளியே வந்தோம். அங்கு, மிக பிரம்மாண்டமான தேக்சாக்கள்(பாத்திரங்கள்) இரண்டு மூன்று வைத்திருக்கிறார்கள். அதில் மக்கள், அரிசி பருப்பு போன்றவற்றை போட்டு செல்ல, அந்த கலவையை சமைத்து எல்லாருக்கும் வழங்குகிறார்கள். அந்த தேக்சாவின் உள்ளே போட, படிக்கட்டு வழியாகத்தான் ஏறிச் செல்ல வேண்டும். அவ்வளவு பெரியது.


அங்கு தர்காவில், சமைக்கப்பட்ட சாப்பாட்டை பிரசாதம் போல வழங்கிக் கொண்டிருந்தார்கள். நாங்கள் சதகா பொருள் சாப்பிடுவதில்லை என்பதால், அதை வாங்க வில்லை. வெளியே கடை வீதிக்கு வந்தோம். நிறைய கடைகள். பல நல்ல அழகழகான கலைப் பொருட்கள். கலைவேளைப்பாடு மிக்க செருப்புகள் விலை மலிவு. பிறந்த குழந்தையான என் தம்பி மகனுக்கு ஏற்ற மிகக் குட்டியான, தங்க நிற கட்ஷூ, மற்றும் கொஞ்சம் ஷாப்பிங் எல்லாம் முடித்து விட்டு, சைக்கிள் ரிக்‌ஷாவில் பஸ் ஸ்டாண்ட் அடைந்து, மதிய உணவு சாப்பிட்டு விட்டு, கிளம்பி ஜெய்ப்பூர் இரவு 8 மணிக்கு வந்தடைந்தோம்.


அங்கு ஜெய்ப்பூர் அரண்மனை, கோளரங்கம், போன்றவை எல்லாம் இரவு ஆனதால், பூட்டி விட்டார்கள். எனவே, சும்மா ஊரை சுற்றிப் பார்க்கலாம் என்று, ஒரு ஆட்டோவில் ஏறி போனோம். அங்கு துணி பஜார் இருக்கிறது. அழகான வேலைப்பாடு மிக்க துணிகள். ஆனால் எல்லாமே ரொம்ப காஸ்ட்லி. அதனால் எதுவும் வாங்கவில்லை.


ஜெய்ப்பூரை ரோஸ்பின்க் சிட்டி என்பர். அங்கு ஒரு பகுதியில், அந்நிறம் தவிர வேறெந்த நிறத்திலும் பெயிண்ட் அடிக்கக் கூடாது என்று சட்டமே இருக்கிறதாம். பாரம்பரிய பெயரைக் காப்பாற்ற இந்த நடவடிக்கை. ரோஸ் பின்க் சிட்டியின் நுழைவாயில், இதோ, ஆட்டோவில் இருந்தபடியே எடுத்த புகைப்படம்.



எங்கு பார்த்தாலும், பழைய கால அழகு கட்டிடங்கள், பின்க் நிறத்தில். ரோஸ் கார்டனில் நுழைந்தது போன்ற உணர்வு தவிர்க்க முடியாது. ஆட்டோவில் சென்று கொண்டிருந்ததால், பல அழகான கட்டிடங்களை போட்டோ எடுக்க முடியவில்லை. என் கேமராவில் சிக்கியது இது தான்:



ஊரைச் சுற்றிப் பார்த்து விட்டு, லாட்ஜ் சென்று எங்கள் லக்கேஜை எடுத்துக் கொண்டு, பஸ் ஸ்டாண்ட் வந்தோம், டில்லி செல்ல. இப்போ, எங்கள் அடுத்த ப்ளான் சிம்லா. ஆனால், டில்லி போய் தான் போக முடியும்.


ஊட்டிக்கு மேட்டுப்பாளையம் அடிவாரம் போல, சிம்லாவின் அடிவாரம் கல்கா(kalka) என்பதாகும். சோ, டில்லி வரை பஸ்ஸில் போய், டில்லியில் இருந்து, அதிகாலை 5.30க்கு கிளம்பும் ஹிமாலயன் குயின் எக்ஸ்ப்ரெஸ்ஸில் கல்கா போவது எங்கள் ப்ளான்.


பஸ் ஸ்டாண்டின் பஸ் கிடைக்கவில்லை. வட இந்தியாவில் பொதுவாக, பஸ் டிக்கட் விலை ரொம்ப அதிகம். அடுத்த பஸ், இரவு 12.30க்கு. ஆனால், அதில் சென்றால், டிரைனை பிடிக்க முடியாது. என்ன செய்வது என்று யோசித்தோம். நல்லவேளையாக, வால்வோ பஸ் இருந்தது. மிகவும் டயர்டாக இருந்ததால், விலை கூட இருந்தாலும் பரவாயில்லை, என்று வால்வோ பஸ்ஸில் செல்ல முடிவு செய்தோம். டிக்கட் விலை தலைக்கு 460 ருபாய்.


உடலில் களைப்போடும், கண்களில் கனவோடும் பஸ்ஸில் ஏறி அமர்ந்தோம்.


இதன் தொடர்ச்சி இந்த லின்க்கில்: சிம்லாவை நோக்கி...


இதன் முதல் இரு அத்தியாயங்கள் இந்த லின்க்கில்

தாஜ்மஹால் ஓவிய காதல்,
ஆக்ரா கோட்டை.


Related Links: Jaipur Travel Guide

-சுமஜ்லா.

14 comments:

கிரி said...

//வட இந்தியர்கள் ரஜினியை சரியாக பார்த்திருக்க மாட்டார்கள் போலும்.//

ஒரே வேளை பாட்ஷா ரஜினியை மனதில் வைத்து கூறுகிறீர்களோ! :-)

//தர்கா வழிபாடு எங்களுக்கு பிடிக்காத வெறுப்பான ஒன்று. //

தர்கா வழிபாட்டில் என்ன செய்வார்கள்! (தெரிந்து கொள்ள கேட்கிறேன்)

//ஒரு பகுதியில், அந்நிறம் தவிர வேறெந்த நிறத்திலும் பெயிண்ட் அடிக்கக் கூடாது என்று சட்டமே இருக்கிறதாம். //

சுவாராசியம்!

நல்ல இருக்குங்க உங்க பயண அனுபவம்..போர் அடிக்காம இருக்கு படிக்க

அரங்கப்பெருமாள் said...

படிக்க நன்றாக இருக்கிறது. நீங்களு லேனா தமிழ்வாணன் ஆயிட்டீங்களா?... தொடர்ச்சியையும் படிப்பேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//தர்கா வழிபாட்டில் என்ன செய்வார்கள்! (தெரிந்து கொள்ள கேட்கிறேன்)//

தெரிந்துகொள்ள கேட்டாலும், இது ஒரு சர்ச்சைக்குறிய கேள்வி(யப்பா எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். யாரும் சண்டைக்கு வந்துறாதிங்க)

இஸ்லாம் ஏக இறைவணக்கத்தை போதிக்கும் மார்க்கம். ஏகனுக்கு இணையாக இன்னொருவரையோ, இன்னொரு பொருளையோ, மனதால் நினைத்தால் கூட அவருடைய ஈமான் என்று சொல்லக்கூடிய இறை நம்பிக்கை பறிபோய் விடும்.

ஏக இறையைத் தவிர யாருக்கும் தலை வணங்கக் கூடாது, அது கட்டிய கணவனாக இருந்தாலும் சரியே! இங்கே தலை வணங்கக் கூடாது என்றால் கீழ்படியக்கூடாது என்ற அர்த்தமல்ல. மாறாக, சிரம் தாழ்த்தி வணங்கக் கூடாது என்பதாகும்.

அதே போல, அடக்கஸ்தலங்களில் மீது கட்டிடங்கள் கட்டுவதை, நபிகள் நாயகம்(ஸல்) வெறுத்துள்ளார்கள்.

ஆயினும், பல நல்ல மார்க்கப்பற்றுள்ள பெரியார்களின் அடக்கஸ்தலத்தின் மீது, அவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக கட்டிடங்கள் கட்டியுள்ளார்கள். அதைத் தான் தர்கா என்கிறோம்.

அப்பெரியார்கள், புனிதராக இருந்தாலும், மானிடரே! அவர் எங்கனம், இறையின் பால் முன்னோக்கினாரோ, அது போல நாமும், நம் வணக்கத்தின் மூலம் இறையை நெருங்கினால் புத்திசாலித்தனம்.

இதற்கு மாறாக, இன்று மக்கள் அறியாமையின் காரணமாக, அப்பெரியார்களுக்கு தலை வணங்க ஆரம்பித்து விட்டார்கள். பெரும்பாலான இஸ்லாமியர்கள், இது பாவம் என்று அறியாமலே செய்து வருகிறார்கள் என்பது தான் பரிதாபம்.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், சொன்னதை மட்டுமே நாம் செய்ய வேண்டும். அதை விடுத்து, புது புது சடங்கு சம்பிரதாயங்கள் உருவாக்கிக் கொள்வது, ‘பித் அத்’ என்னும் தேவையற்ற வெறுக்கத்தக்க செயலாகும்.

பல தர்காக்களில், இஸ்லாத்தில் இல்லாத சந்தன கூடு விழா, பாதப்பொட்டி, காணிக்கை போன்றவற்றை, சில சுயநலமிகள், சுய ஆதாயம் கருதி, மார்க்க சடங்கு போலவே நடத்தி வருகிறார்கள்.

இது போன்ற அனாச்சாரங்கள் நம் இறை நம்பிக்கையையே பாழ்படுத்திவிடும்.

இதை தடுக்க முற்பட வேண்டும். அல்லது ஒதுங்கி இருக்க வேண்டும்.

இது தான் தர்கா வழிபாடு என்பது. இவ்வழிபாடுகள் ஒவ்வொரு தர்காவிலும், மாறுபடும். இதைப் பற்றி எழுத வேண்டும் என்றால், ஒரு ஆராய்ச்சி நூலே எழுதலாம்.

பொதுவாக கப்ருகள் எனப்படும் அடக்கஸ்தலங்கள் இருக்கும் இடம் சென்றால், நாம் ஒரு யாஸீன்(குர் ஆனின் ஒரு அத்தியாயம்) ஓதி, ஜியாரத் செய்து, அவர்களுக்காக துவா செய்து, வர வேண்டும் என்பதே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டிச் சென்ற வழியாகும்.

இதற்கு மாறாக நடப்பது எல்லாமே தர்கா வழிபாடு வகையை சார்ந்தது தான்!

இப்போ தங்களுக்கு ஓரளவுக்கு தெளிவாகி இருக்கும் என்று நினைக்கிறேன், நண்பரே!

SUMAZLA/சுமஜ்லா said...

//நீங்களு லேனா தமிழ்வாணன் ஆயிட்டீங்களா?...//

லேனா தெரியும், ஆனால் ஏன் அவரை உதாரணம் சொன்னீர்கள் என்று புரியவில்லையே?!

கிரி said...

நன்றி சுமஜ்லா உங்கள் பதில் தெளிவாக உள்ளது.

இன்னும் தெரிந்து கொள்ள எனக்கு கேள்விகள் உள்ளன என்றாலும் இது உங்கள் பதிவின் போக்கை மாற்றி விடும் என்பதாலும், இது உங்களை வேறு ஏதாவது சிக்கலில் கொண்டு சென்று விடும் என்பதாலும் கேட்க ஆர்வம் இருந்தாலும் இதோடு நிறுத்தி கொள்கிறேன்.

உங்கள் விரிவான பதிலுக்கு மிக்க நன்றி.

SUMAZLA/சுமஜ்லா said...

புரிந்து கொண்டமைக்கு நன்றி நண்பரே! தங்களுக்கு இஸ்லாம் குறித்து சந்தேகம் தோன்றினால், என்னுடைய ப்ரொஃபைலின் கீழ் இருக்கும் மின்னஞ்சல் லின்க் மூலம் தொடர்பு கொள்ளுங்கள். என்னால் முடிந்தவரை தெளிவு படுத்துகிறேன்.

NIZAMUDEEN said...

லேனா தமிழ்வாணன் பல ஒரு பக்கக் கட்டுரைகள் எழுதுகிறார்.
அதோடு, சில பயணக் கட்டுரைகளும் எழுதுகிறார். அதேபோல்
தாங்களும் பயணக் கட்டுரை எழுதுகிறீர்கள்.(சரியா
திரு.அரங்கப்பெருமாள்?)

ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் வெவ்வேறு தலைப்புக்களா?

அப்துல்மாலிக் said...

// மணி நேர பயணம். பாலைவன வெய்யில் என்றால் என்ன என்று அந்த பயணத்தில் தான் தெரிந்து கொண்டேன்.//

நாங்க இங்கே தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம், உங்களோடு பயணம் செய்வது போல் அருமையான எழுத்தோட்டம்.. தொடருங்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

அரங்க பெருமாள் இந்த பெயரைக் கேட்கும் போது, ஐந்து தலை நாகத்துக்கு நடுவில், அரங்கம் கொண்டிருக்கும் பெருமாள் (தசாவதாரம் படத்தில் வருவது அல்ல) ஒவ்வொரு முறையும் நினைவு வருவது தவிர்க்க முடியவில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஒவ்வோர் அத்தியாயத்திற்கும் வெவ்வேறு தலைப்புக்களா?//

ஒரு வாசகர் எங்கிருந்து படித்தாலும், அவருக்கு புரியும் விதமாக எழுதி இருக்கிறேன். கவனியுங்கள். அதனால், இது ஒரு தனி கட்டுரை போல. தாஜ் மஹால் மட்டும் செல்ல விரும்புபவர்கள் மற்றதை படிக்க தேவையில்லை அல்லவா? அதனால் தான் இவ்விதம் தலைப்பிட்டேன். ஆனால், லின்க் கொடுத்துள்ளே, அத்தியாய முடிவில்.
அத்தியாய ஆரம்பத்தில் லின்க் கொடுப்பதால், தமிழ் மணத்தில் தேவையில்லாதது பதிவாகும். அதனால் இப்படி.

SUMAZLA/சுமஜ்லா said...

//நாங்க இங்கே தினமும் அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்//

புரியுது சகோதரரே, பாலை நிலத்தில் பாடுபடும் பல நூறு சகோதரர்கள் படும் இன்னலை - குடும்பத்துக்காக செய்யும் தியாகத்தை!

//உங்களோடு பயணம் செய்வது போல் அருமையான எழுத்தோட்டம்.. தொடருங்கள்//

உங்கள் ஊக்கம் என்னை உற்சாகப் படுத்துகிறது. நன்றி சகோதரரே!

ஆயினும் புரியாத எழுத்துக்கள் தான் இலக்கியம் என்று பலரும் நம்புவது தான் ஏனென்று எனக்குப் புரியவில்லை.

இப்னு அப்துல் ரஜாக் said...

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரி,தர்கா வழிபாட்டின் அயோக்கியத்தனத்தை,இறைவனுக்கு இணை வைக்கும் மாபெரும் துரோகத்தை அழகான முறையில்,மாற்று மத சகோதரருக்கு விளக்கியுள்ளீர்கள்.இன்ஷா அல்லாஹ் இன்னும் நீங்கள் பல விஷயங்கள் குறித்து எழுதி,மக்கள் பயன் பட செய்ய வேண்டும்.பீஸ் ட்ரைன் என்ற பெயரில் ஒரு பிளாக் நடத்துகிறேன்,உங்கள் மேலான கருத்தை சொல்லுங்கள்.உங்களைப்போன்ற அனுபவசாலிகளின் கருத்து இன்றியமையாதது.அல்லாஹ் நம் அனைவரையும் மன்னித்து,அருள்வானாக.ஆமீன்,.

http://peacetrain1.blogspot.com/

Basheer said...

தர்கா வழிபாடு எங்களுக்கு பிடிக்காத வெறுப்பான ஒன்று. இது ஆண்டவனுக்கு இணை வைக்கும் காரியம் என்று கண்டு மனம் வெதும்பும்.
So nice of you.May Allah swt reward you in this world and hereafter.Ameen

Unknown said...

Hi Sumazla,
Assalmu Alaikkum.

I think, thru your blog, your are spreading knowledge to others. I benefited also.

/நாங்கள் சதகா பொருள் சாப்பிடுவதில்லை என்பதால், அதை வாங்க வில்லை/

Prophet Muhammed (Peace be upon him)and his families, don't eat SADAKKA Foods.

May i know, reasons or knowledge behind this that you are not having that food.

When i performed Haj, some people distributed food and Softdrings, we took that and consumed it.
But now, i am planning to avoid.

Jazakkallah Khair

Mohamed Niyas
mniyas2005@gmail.com