Sunday, August 2, 2009

சிம்லாவை நோக்கி...

இதன் முன் பகுதி இங்கே: பாலைவன பயணம்


டில்லிக்கு செல்லும் எங்கள் பஸ் கிளம்பியது. வால்வோ பஸ் பயணம் சுகமாக இருந்தாலும், சிறிது நேரத்தில் ஏ.ஸி.யினால், மிகவும் குளிரெடுத்து விட்டது. அதிகாலை நான்கு மணிக்கு டில்லியை அடைந்தோம். அங்கிருந்து ஆட்டோ பிடித்து, ரயில்வே ஸ்டேஷன் போய், ஹிமாலயன் குயின் எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறினோம். அது அதிகாலை 5.30 க்கு டில்லியில் இருந்து புறப்பட்டு, 11.30 மணிக்கு கல்கா சென்றடைந்தது. இனி அங்கிருந்து சிம்லா செல்ல வேண்டும்.


ஹிமாலயன் குயினுக்கான டிக்கட் ஏற்கனவே ஆக்ராவில் புக் செய்திருந்தோம். சேர் காரில் தான் இடமிருந்தது. நெருக்கமான இருக்கைகளினால், பயணம் மிகவும் சலிப்பாக இருந்தது. கல்காவில், ஹாலிடே ஸ்பெஷல் டிரைன், ஏதோ காரணத்தால், அன்று கேன்சல். அதனால், வழக்கமான ஒரு டிரைன் மட்டுமே சிம்லாவுக்கு இருந்தது.


இது ஊட்டி செல்லும் மலை ரயில் போன்ற டாய் டிரைன் என்று சொல்லக் கூடிய மிக சிறிய வண்டி. டிக்கட் எடுக்க சென்றால், மிகப் பெரிய கூட்டம். வரிசையில் நின்றால், டிக்கட் கொடுக்க மாட்டேன், வண்டியில் இடமில்லை என்றார் அப்பெண். ஸ்டேண்டிங்காக இருந்தாலும் பரவாயில்லை என்று சொல்லி, நான் டிக்கட் வாங்கி போனால், அங்கு எல்லா கம்பார்ட்மெண்ட்டும் பிதுங்கிக் கொண்டிருக்கிறது கூட்டத்தால்! நிற்கக் கூட இடமில்லை. முண்டியடித்து ஏறினோம். ம்..ஹும்... முடியவில்லை.


டாய் டிரைனில் போகும் ஆசை மனதில் இருந்தாலும் என்ன செய்வது? மீண்டும் மச்சான் க்யூவில் நிற்கிறார், டிக்கட்டை கேன்சல் பண்ண. அந்த பெண் கேன்சல் செய்ய மாட்டேன் என்று சொல்ல, என்னிடம் வந்தார். நான் போய் கேட்கவும், மீண்டும் வரிசையில் வாருங்கள் என்று அவர் சொல்ல, எனக்கு கோபம் வந்து விட்டது. தலைக்கு 35 ருபாய் கொடுத்த எடுத்த டிக்கட்டை, கிழித்து, அவள் கவுண்டருக்குள் வீசி விட்டு, வெளியே வந்தேன்.


அங்கு பலரும், இது போல அவதிப்பட்டுக் கொண்டிருந்தார்கள். இப்படியாக ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது. மொத்தம் மூன்று குடும்பங்கள். ஒன்பது பேர். மொத்தம் சுமார் 100 கிலோ மீட்டர் இருக்கும் சிம்லா அங்கிருந்து. அதற்கு 9 சீட்டர் வேன் பிடித்தோம். 1800 ருபாய், அதாவது தலைக்கு 200 ருபாய். வேன் கிளம்பியது, அப் த ஹில்.


தொடர்ந்த பிரயாணமும், ரெஸ்ட் இல்லாத அலைச்சலும், தலைசுற்ற வைக்கும் பயணமும், ஆக, நிரம்ப கடினமாக உணர்ந்தேன். வழியில், வண்டியை நிறுத்தி ஒரு முறை வாமிட் செய்த பின் கொஞ்சம் ரிலாக்ஸாக பயணத்தை ரசிக்க ஆரம்பித்தேன்.


மாலை 4.30 மணிக்கு சிம்லா சென்றடைந்தோம். சிம்லா சிட்டியில் நுழைந்ததுமே, எங்களை இறக்கி விட்டு விட்டு, போய் விட்டான் வேன்காரன். இனி, ரூம் தேட வேண்டும். ஒரு புரோக்கர், எங்களை அழைத்துச் சென்றார்.


இப்போ, சிம்லாவை பற்றி சில விஷயங்கள் சொல்ல வேண்டும். ஹிமாசலப் பிரதேசத்தின் தலைநகர் சிம்லா என்பது நமக்கெல்லாம் தெரிந்த விஷயம். இங்கே, காற்று மாசுபடாமல் தூய்மையை காக்க, சில சட்டங்கள் உள்ளன. முக்கியமான வீதிகள் தவிர, மலையின் மேல் ஏறிவிட்டால், எந்த வாகனமும் பார்க்க முடியாது. ஒரு டூ வீலர் கூட அந்நகரில் கிடையாது. அதே போல, ஆட்டோ, பஸ் எதுவும் கிடையாது. டேக்ஸி மட்டுமே, அதற்கான ரூட்டில் மட்டும் செல்லும். மற்றபடி எங்கு சென்றாலும் நடந்து தான் செல்ல வேண்டும்.


அது மலைப்பாங்கான பகுதி என்பதால், சில இடங்களில் மேடாகவும், சில இடங்களில் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்டுள்ளன. அங்கு மலை ஏறி சென்றால், மால் எனப்படும் கடைத்தெரு. இது கமர்ஷியல் ஏரியா. எந்த பொருளாக இருந்தாலும், கூலிகள், தங்கள் முதுகில் சுமந்து தான் கொண்டு வந்து சேர்க்கின்றனர். ஆப்கன்ஸ் போன்ற முக அமைப்பில் கூலிகள், கயிறு போன்ற ஒன்றை தம் உடலில் கட்டி, சுமந்து செல்கின்றார்கள்.


மால் ஏரியாவுக்குப் போவதற்கு பொது லிப்ட் இருக்கிறது. தலைக்கு ஏழு ருபாய் கட்டணம். நம்மை ஒரு குறிப்பிட்ட உயரத்தில் லிப்ட் இறக்கிவிட, இன்னொரு லிப்டில் ஏறி, மீண்டும் சென்றால் மால் ஏரியாவை அடையலாம். போக்குவரத்துக்கு லிப்டை பயன்படுத்துவது எனக்கு புதுமையாக இருந்தது.


இனி கதைக்கு வருவோம். புரோக்கருடன், நாங்களும், எங்களுடன் காரில் வந்த இரு சிறு பிள்ளைகளுடன் கூடிய தம்பதியினரும் நடக்க ஆரம்பித்தோம். பல லாட்ஜுகளுக்கு சென்று காண்பித்தார். எங்களுக்கு எதுவுமே பிடிக்கவில்லை. கடைசியாக, BrightLand Inn எனப்படும் லாட்ஜுக்கு சென்றோம். அங்கு லாட்ஜுகளில் ரொம்பவும் கெடுபிடி. இருவருக்கான ரூமில், சிறு பிள்ளைகள் கூட உடன் தங்க முடியாது.


என்னால் நடக்க முடியவில்லை. அதனால், அங்கேயே ரூம் போட்டுக் கொண்டோம். ஒரு நாள் வாடகை 850 ப்ளஸ் டேக்ஸ். எங்கள் உடன் வந்தவர் நால்வருக்கான ரூம் எடுக்க வேண்டும் என்றும் அதற்கான கட்டணம் 1400 ருபாய் என்றும் சொல்ல, அவர்கள் டபுள் ரூமிலேயே அட்ஜஸ்ட் செய்து கொள்கிறோம் என்றார்கள். ஹோட்டல்காரர், முடியாது என்று சொல்ல அவர்கள் கிளம்பி விட்டார்கள், வேறு லாட்ஜ் தேடி.


அடுத்த நாள் அவர்களை சந்தித்தோம். 200 ருபாய் வாடகைக்கு மிக அருமையான, சவுகரியமான, டீசண்டான லாட்ஜ் கிடைத்தது என்று சொல்லவும், எங்களுக்கு மிகவும் ஆச்சரியம். ஒரு விஷயம் புரிந்தது, அதாவது, வாகன போக்குவரத்து இல்லாததால், எவ்வளவுக்கு எவ்வளவு மலையில் மேலே செல்கிறோமோ, அவ்வளவுக்கவ்வளவு வாடகை மிகவும் குறைவு. களைப்பான பயணிகள் யாரும், மேடேறி செல்ல பிரியபடுவதில்லை, அதனால் இவ்விதமாக உள்ளது.


இதோ நாங்கள் தங்கியிருந்த லாட்ஜ்:





எங்கள் ரூம் சிறியது தான். ஆனால், டிவி, ஹாட் வாட்டர் என்று சவுகரியமாக இருந்தது. பொதுவாக நாங்கள், எங்கு சென்றாலும், உணவு போன்ற விஷயத்துக்கு தாராளமாக செலவு செய்வோம். ஆனால், ஆடம்பரம் செய்யாமல், மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியுடன் நடந்து கொள்வோம். அதனால், அதிகம் செலவாகாது.


ரூமில் செட்டில் ஆனவுடன் வெளியே போய், நூடில்ஸ் சாப்பிட்டு விட்டு, அன்று நன்றாக ரெஸ்ட் எடுத்தோம். சில்லென்ற அந்த கிளைமேட் ஒன்றே போதும், நாம் அனுபவிப்பதற்கு. அன்று அங்கு பார்த்த டி.வி. நியூஸில் தான் தெரிந்து கொண்டோம், பிரதீபா பாட்டில் என்ற பெண், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட செய்தியை.


அன்று முழுவதும், ரூமைவிட்டு எங்கும் செல்லவில்லை. வெளியே நேரம் ஆக ஆக நல்ல குளிர். திருமணம் ஆன புதிதில் ஹனிமூனுக்கு ஊட்டி சென்ற நாட்களை நினைவு படுத்துவது போல அந்நாள் அமைந்தது.


அடுத்த நாள் எழுந்து குளித்ததும் பிரஷ்ஷாக இருந்தது. வெளியே வராண்டாவில் இருந்த ஜன்னலில் பார்த்தால், எதுவுமே தெரியவில்லை. எங்கும் பனி மூட்டம். அதை கீழே புகைப்படத்தில் பார்க்கலாம்.





சிறிது நேரத்தில் பனி விலகிய பின், அதே இடத்தை மீண்டும் க்ளிக்கியது இதோ:





அந்த கண்ணாடியின் வழியாக தூரத்தில் தெரிந்த பனி போர்த்திய இமயமலைத் தொடரையும், கேமராவில் சிறை பிடித்தேன்:





காலை உணவு ரூமுக்கே வரவழைத்து சாப்பிட்டோம். பின், கடை வீதியை சுற்றிப் பார்த்துவிட்டு வரலாம் என்று கிளம்பினோம்.


சிம்லாவை சுற்றிப் பார்த்தது பற்றி அடுத்த பதிவு இந்த லின்க்கில்: இமயமலை சாரலிலே...


இதன் முதல் மூன்று பதிவுகள்:

1. தாஜ்மஹால் ஓவிய காதல்.
2. ஆக்ரா கோட்டை.
3. பாலைவன பயணம்.


Related Links: Shimla Travel Guide


-சுமஜ்லா.

10 comments:

S.A. நவாஸுதீன் said...

எனக்கும் குடும்பத்தோடு சிம்லா போய் வரவேண்டும் என்ற ஆசை இருக்கிறது.

S.A. நவாஸுதீன் said...

பயணக் கட்டுரை பிரமாதமாக எழுதி இருக்கின்றீர்கள் சகோதரி

Unknown said...

மிகவும் அருமையாக இருக்கு உங்கள் பதிவு.

உங்கள் அனைவருக்கும் எனது நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்

துபாய் ராஜா said...

இனிய நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.

பிரபாகர் said...

//பொதுவாக நாங்கள், எங்கு சென்றாலும், உணவு போன்ற விஷயத்துக்கு தாராளமாக செலவு செய்வோம். ஆனால், ஆடம்பரம் செய்யாமல், மிடில் க்ளாஸ் மெண்டாலிட்டியுடன் நடந்து கொள்வோம். அதனால், அதிகம் செலவாகாது//

பயண அனுபவங்கள் அருமை.

எல்லோரும் பின்பற்றுவதற்குகந்த அருமையான தகவல். நிறைய எழுதுங்கள்...

பிரபாகர்.

SUMAZLA/சுமஜ்லா said...

பாராட்டிய அனைவருக்கும் நன்றி!

நவாஸ் நிச்சயம் போய் வாருங்கள். அதிகம் செலவாகாது. என் மொத்த செலவு தொகையில் கடைசியில் சொல்கிறேன்.

பாயிஜா, துபாய் ராஜா, நவாஸ், பிரபாகர் மற்றும் அனைத்து வாசக சகோதர சகோதரிகளுக்கும் நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்.

ப்ளாகிங் மூலம், முகம் தெரியாத பல நல்ல நட்புள்ளங்கள் கிடைத்துள்ளது எனது பாக்கியம்.

NIZAMUDEEN said...

சிம்லாவில் எடுத்த புகைப்படங்கள் பனிப்போர்வையுடன்
அழகுற இருக்கின்றன. அதிலும் பனியுடன் இமய மலைத்
தொடர் புகைப்படம் வெகு அழகு!

நமது
நண்பர்களுக்கும்
நண்பர்களாக வரயிருப்பவர்களுக்கும்
நண்பர்கள்
நாள்
நல்வாழ்த்துக்கள்!

Menaga Sathia said...

அனைவருக்கும் இனிய நண்பர்கள் தினவாழ்த்துக்கள்!!

வடுவூர் குமார் said...

நன்றாக இருக்கு பயணக்கட்டுரை.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி, நிஜாம் அண்ணா, மேனகா, வடுவூர் குமார்!