Tuesday, August 11, 2009

வாழ்வியல் முரண் (பயிற்சி சிறுகதை)

சிறுகதை போட்டியில் தோற்றபின், நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தோன்றியது. முந்தாநாள் இரவு ஒரு மணிக்கு திடீரென்று தோன்றிய கதை கரு, எங்கே விடிந்ததும் மறந்து விடுமோ என்று அப்பவே தட்ட ஆரம்பித்தேன், கீபோர்டை! இரவு இரண்டு மணிக்கு இக்கரு பிரசவித்தது. உரையாடல் போட்டியில் பரிசு பெற்ற நண்பர், நந்தவேரன், விமர்சனம் எழுதி தருகிறேன் என்றதால் வெளியிடுகிறேன், இங்கு! அனைத்து நண்பர்களும் இக்கதையின் குறை நிறைகளை சுட்டிக்காட்டி, பின்னூட்டத்திலோ, ப்ரொஃபல் கீழ் இருக்கும் மின்னஞ்சலிலோ அனுப்பலாம். மின்னஞ்சல் அனுப்பப்படுவதை தொகுத்து ஒரு தனி பதிவாக வெளியிடலாம் என்று இருக்கிறேன். நன்றி!

வாழ்வியல் முரண்

கைவிரல் ஐவிரல்களின் ஆள்காட்டி விரலைப்போல, ஏகாந்தத்தில் எதையோ சுட்டிக் காட்டியபடி, முந்திரிக் கொட்டையாய் நீட்டியிருந்த மூக்கு நீட்டி பாறையின் மேல் குதிக்க தயாராக நின்றிருந்தேன். சுழித்தோடும் நீரின் வெந்நுரையை ரசித்தபடி, சவாரியில்லாமல் கவிழ்த்து வைக்கப்பட்டிருந்த பரிசலின் அருகில், இன்னும் சிறிது நேரத்தின் சுகமான நீராடல்.

எம்பி ஆகாசத்தில் மிதக்கும், அமானுஷ்ய நொடிகள், கால சுழற்சி மிகவும் வேகம் தான் அந்நொடியில், ஐம்புலன்களையும் சுருக்கி, அதோடு ஆறாவதாக கால்களையும் குறுக்கி, கீழே சுகமாய் விழுவதற்காக, ஈர்ப்பு விசையை மிஞ்சி மேலே போய், என் கால் பாத நுனியை காற்றில் ஒளி பிம்பமாய் வரைந்தால், கிடைப்பது கேள்விக்குறி வடிவம், என் மனதை போலவே.

விஷ்க்கென்று கேள்விக்குறியை பறக்கடித்து, ஜலத்துளி பட்டு தெறிக்க விழுந்தேன், எழுந்தேன். என்னளவு எடையுள்ள நீர், மேலே எழும்பியிருக்குமே, என் எடையை உள்வாங்கி, அந்த நீரை அள்ளினேன் கைகளில். ஆனந்த குளியல், பரவசமாய், சகலத்தையும் மறந்த பாலகனாய், மன அழுக்கெல்லாம் அகற்றிய சன்னியாசியாய்.

இல்லை, ஒரு போதும் இல்லை, விழுந்த வடிவ கேள்வி குறி போல, என் மன வினா, நீரில் கரையும் அழுக்கைப் போல அவ்வளவு சுலபமாக கரைவதாயில்லை. பிறவிப்பயன் என்பார்கள், மானுட பிறவி என்பார்கள், ஆனால், பிறவியே சுமையாய் ஒரு பிறவி, கொஞ்ச காலமாக என் கண்களில் அடிக்கடி படுகிறது. எங்கிருந்து வந்தது, ஏன் வந்தது, எங்கே போகப் போகிறது, எதுவும் புரிதலில்லை எனக்கு.

அது பெண் என்பது மட்டும் எல்லாரும் நன்கு புரிந்திருந்தார்கள். ஆனால் யாரும் ஒரு போதும், தப்பி தவறி கூட அவள் என்று சொன்னதில்லை. அது அதுவாகவே, ஒரு அஃறிணையாகி போனது. உணவு எங்கிருந்து வருகிறது, யாருக்கும் தெரியாது, ஆனால், ஒரு போதும் அது பசித்து களைத்து பார்த்ததில்லை.

அதுக்கு ரெண்டு கையும் ரெண்டு காலும் வளைந்து நெளிந்திருக்கும். எப்போதும், அதன் கையில் இருக்கும் பிச்சை பாத்திரம் நிறைந்தே இருக்கும், சமயத்தில் மிதமிஞ்சி தெருநாய்க்கும் இது புரவலனாய். மிச்ச மீதி வாங்க ஆளில்லாமல் இருப்பது கூட ஒரு பஞ்சமாய் வீடுகளின் உள்வாசிகள், இதுகள் போன்ற வெளிவாசிகளை பஞ்சம் போக்க நாடுவது இவர்களின் வாழ்தலுக்கு அர்த்தம் தந்தாலும், இது இருந்து என்ன செய்யுது, பேசாம செத்துப்போய் விட்டால் நிம்மதி அதுக்கு என்று எனக்கு அடிக்கடி தோன்றும்.

பொத்தான் இல்லாத மேல்சட்டை, சில காலிகளின் கேலிக்கு வித்தாய், பெண் என்ற ஒரே காரணத்துக்காக, சீண்டிப்பார்க்கும், சவங்களுக்கு உயிர் மருந்தாய், மூளையில் ஊனம், கூடவே கைகால்களிலும், ஆனால், பெண்மையில் குறையில்லை.

விலகும் முந்தானைக்கே எச்சில் வடிக்கும் ஒரு கூட்டம் அப்பட்டத்தை விட்டு வைக்குமா....என்றாவது ஒரு நாள், அதுவை அவளாய் கொண்டு, தான் அவனாக வேண்டும் என்ற வேட்கையுடன் அலையும் அந்த கூட்டத்தை பார்க்கும் போது, சீக்கிரம் இது செத்து தொலைக்க வேண்டுமென்ற எண்ணம் வருவதை என்னால் தவிர்க்க முடியவில்லை.

எண்ணம் செயலாய் மாறுமென்று உரக்க ஓங்கி எண்ணுவேன் இதை பல முறை. அர்த்தம் இல்லாத வாழ்வு இது தானோ? ஏன் இதுகள் படைக்கப்படுகின்றன? ஏன் இதுகள் வாழ வேண்டும்?

உள்ளே பெண்கள் அணிவது, பல நேரங்களில் இதற்கு வெளியாடையாய், சற்றும் பொருந்தாத, நீண்ட முடி தான் மானம் காக்கும் அப்போது. யார் எது கொடுத்தாலும் உடுத்திக் கொள்ளுது இது என்று தாமசமாய் தான் புரிந்தது. இதற்காகவே, கிழிந்ததை கொடுத்து ரசிக்கும் கூட்டம்.

அன்று அப்படித்தான், வளைந்த கரத்தால், குனிந்து சோறுண்ண, பின்னாலிருந்து ஒருவன்... என்ன செய்தான் என்று சொல்வதை விட, சட்டென்று உணர்ந்த அஃறிணையான பெண்மை அப்போது மட்டும் உயர்திணையாய் பின்வாங்கி, பின்வாங்கி, கண்ணில் மிரட்சியுடன் ஆத்தங்கரை வரை வந்து விட்டது. அவனும் தொடர்கிறான், பெண் என்ற ஒரே காரணத்துக்காக.

ஒரு நொடி, ஒரே நொடிதான் தன் கைவசப்படுத்த அவனுக்கு தேவைப்பட்டது; யாரும் எதிர்பார்க்கவில்லை, அவன் முகத்தை பிச்சைபாத்திரத்தின் எச்சில் பதம் பார்க்குமென.

இரை கிடைக்காத ஓங்காரத்துடன், அலறல். புன்னகைக்கும் அழுகைக்கும் வித்தியாசம் தெரியாத முகத்தில், தன்னிச்சையாய் புன்னகை. அவஸ்தை தான், நொடி நொடியும். இது சீக்கிரம் செத்து விடணும். கூட்டுக்குள் இருக்கும் ஊமையான உயிர் மட்டும் விடுபட்டு விட்டால், கணக்கு நேராகி விடாதோ? மோட்ச கடாட்சம் கிடைத்தாலாவது, அணு அணுவாய் சித்ரவதைப்பட்டு, பாதுகாப்பு கவசம் உருவாக்கும் கஷ்டம் நீங்காதோ? இப்படி ஒரு பிறவி, அதுவும் பெண் என்ற முத்திரையோடு, யாருக்கு என்ன லாபம்?

தண்ணீரில் பரவினேன், குப்புற. கால்களை அசைத்தேன். காற்று வெளியிடை பறப்பதன் ஒத்திகையென, பறவையானேன். பட்டாம்பூச்சியானேன். மன அழுக்கையெல்லம் புறம் தள்ளி, உடல் அழுக்கு உருவிப்போக, உருவமில்லா அருவமென, எடையிழந்தேன். உடலைவிட இன்னும் இன்னும் லேசான இதயம், எல்லா லேசான பொருட்களும் பறப்பது போல, மிதப்பது போல, ஜலகிரீடை தந்த மகிழ்ச்சியில், வெளியேறி கொஞ்சம் கொஞ்சமாய் பறக்கிறது, ஒன்றுமில்லாத வெளியில். மகிழ்ச்சி அதிகரிக்க, இதயம் இன்னும் லேசாகி போக, பட்டம் போல மேலேறி பறக்கும் அதை செலுத்தும் நூலாய் என் நினைவலைகள்.

நீருக்குள் தலையை முட்டி, தண்ணீருக்கு கிச்சு கிச்சு மூட்ட, சலக் புலக் என்ற பெண்ணிய சிரிப்போடு, நீர் என்னில் மோதி விளையாடியது. உள்ளே முங்கி திறந்த விழிகளில், பச்சை பாசியின் ஊசலாட்டம், பாறையில் தொக்கிய உறவு எந்நேரமும் விடுபட்டு விடும் முனைப்புடன். இரண்டு மணி நேரம், இரண்டு நொடியாய்...போதுமென்று முதுகை வளைத்து நிமிர,

“காப்பாத்துங்க....காப்பாத்துங்க” கரையோரத்தில், பலகுரல் ஓலம்.

வெய்யிலுக்கு சுக குளியல் போட்ட யாரோ, சுழலில் சிக்கியிருப்பாரோ...

என் இதய பட்டத்தை போலவே பலூனை பறக்க விட்டு விளையாடிய சிறுபிள்ளை, கால் தவறி...

தோழிகளுடன் சுவாரஸ்ய தமிழ் பேசியபடி, தண்ணீரில் கால் நனைத்து விளையாடிய யுவதிகளில் யாராவது...

மீண்டும் ஓலம், விசிறிப்போட்டேன், கரங்களையும் கால்களையும், முங்கிக் கொண்டிருந்த உருவத்தை நோக்கி!

கொத்தாய் தலைமுடியை பிடித்து, உயிர் வேகத்தோடு நீந்தினேன், கரையை நோக்கி. தரை காலுக்கு தட்டுபட, வளைந்த கால்கள், தண்ணீருள் இருந்ததால், இன்னும் வளைந்து...

செத்து போய்விட வேண்டும் என்று இச்சித்த பரிதாப ஜீவனை நானே காப்பாற்றி இருப்பது புரிந்தது...

அதோடு யார் இதுக்காக அக்கரை கொள்ள போகிறார்கள் என்ற எண்ணத்தை மீறி, இதுக்காக ஒலித்த ஓலமும்...

வாழ்வியல் முரண் புரிந்தது.

வெளியே வந்த அது, மூச்சு வாங்கி விட்டு, ஈரத்தில் நடுங்கியபடி...நடக்க ஆரம்பித்தது.

சிறிது தூரத்தில், பரிசல் மறைவிலிருந்து வெளிப்பட்ட அவன்....

எச்சிலை முகத்தில் வாங்கிய அதே அவன்...

அவனைப் பார்த்ததும், மிரண்ட பார்வை ஒரு கணம் நிலை குத்த, இமைக்கும் முன் திரும்பி ஓடியது, மூக்கு நீட்டி பாறையை நோக்கி...இதன் கால்நுனிகள் தீட்டிய ஒளிப்பாதையும் அதே கேள்விக்குறி வடிவில்...

நல்லெண்ணம் நாடி அதுவின் முடிவுக்காக ஏங்கிய என் உள்மனம் இப்போது, எனக்கு உருமாறி தெரிந்தது,

ஒரு சாத்தானாய்...

பூதகணமாய்...

கொடும் அரக்கனாய்....

-சுமஜ்லா.

11 comments:

thamizhparavai said...

:-((
????

சென்ஷி said...

நல்ல கதைக்கரு. ஆனால் மொழிநடை - இப்படி எழுதினாத்தான் நல்லாயிருக்கும்ன்னு எழுதுனது பயங்கர நெருடலாக எனக்குப் படுகிறது! :-(

-சென்ஷி

மணிஜி said...

சிறுகதை எழுத உங்களுக்கு தகுதி வந்துவிட்டது..

Thamiz Priyan said...

En intha kola veri... :(

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

சிறுகதைகள் எனக்கு ரொம்பப் பிடிக்கும்.
பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களின்
நவீனங்கள், 'உரையாடல்கள்' மட்டுமே
கொண்டு எழுதப்பட்டவை (அதாவது
வர்ணனைகளே இருக்காது) மிகவும்
பிடிக்கும்.


'உரையாடலுக்கு என் பகிரங்கக் கடிதம்'
பதிவைப் படித்துவிட்டு உடனே இந்த
'பயிற்சிக் கதை' பதிவை கிளிக்கினேன்.


இந்தக் கதைக்கான எனது விமர்சனம்
இந்தப் பின்னூட்டத்தின் முதலாவது
பத்திதான்.

SUMAZLA/சுமஜ்லா said...

அட, நீங்க வேற அண்ணா, நான் எழுதிய இந்த கதையை இரண்டு, மூன்று முறை வாசித்த பின் தான் எனக்கே புரிந்தது :-)

ஆனா, நீங்க எழுதிய விமர்சனம், ஐந்து முறை வாசித்தும் புரியவில்லை :-) :-)

SUMAZLA/சுமஜ்லா said...

அட, நீங்க வேற அண்ணா, நான் எழுதிய இந்த கதையை இரண்டு, மூன்று முறை வாசித்த பின் தான் எனக்கே புரிந்தது :-)

ஆனா, நீங்க எழுதிய விமர்சனம், ஐந்து முறை வாசித்தும் புரியவில்லை :-) :-)

நந்தவேரன் said...

சுமஜ்லா, என் பெயரை உங்கள் பதிவின் ஆரம்பத்திலேயே போட்டுவிட்டதால், உரிமையுடன் இந்த விமர்சனத்தினை இங்கே வைக்கிறேன்.

அதையும் ஒரு சிறுகதை வடிவிலேயே!

http://adtams.blog.com/2009/08/11/இன்னமும்-சீவப்படாத-நுங்க/

நன்றி!

- நந்தவேரன்

இரா. வசந்த குமார். said...

Dear Madam...

Please check the links i have provided in this post :: http://kaalapayani.blogspot.com/2009/08/blog-post_11.html

I have put much effort in collecting all the links for those who are fresh in story writing. Please have a look on all of them. Then surely u can get an idea how to write better.

Tnx.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நான் எழுதிய இந்த கதையை இரண்டு, மூன்று முறை வாசித்த பின் தான் எனக்கே புரிந்தது//

நீங்க ரொம்ப பொறு(திற)மைசாலிதான்...
உங்க கதை உங்களுக்கே புரிஞ்சிடுச்சே!

//உங்க கதை மாந்தர்கள் கொஞ்சமாச்சும் பேசி வாசகனுக்கு கதையைச் சொல்ல மாட்டாங்களா? மொத்தக் கதையையுமே நீங்கதான் சொல்லப்போறீங்கன்னா கேரக்டர்ஸ் எதுக்கு?”// [நன்றி; நந்தவேரன்]

வசனம் நிறைய இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்; வர்ணனை என்று நொய்-நொய்னு
இருந்தால் பிடிக்காது. இதுதான் எனது பின்னூட்டத்தின்
நீங்க இந்து முறை வாசித்தும் உங்களுக்குப் புரியாத கருத்து, புரியுதா?

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

வசனம் நிறைய இருந்தால்தான் எனக்குப் பிடிக்கும்; வர்ணனை என்று நொய்-நொய்னு
இருந்தால் பிடிக்காது. இதுதான் எனது பின்னூட்டத்தின்
நீங்க ஐந்து முறை வாசித்தும் உங்களுக்குப் புரியாத கருத்து, புரியுதா?