Monday, August 24, 2009

இல்லறம் ஒரு காவியம்

காவியமொன்றுருப் பெற்றிடவே
...கற்பனையில் படைத்திடவே
ஓவியத்தை வரைகின்றேன்
...உயிர் கலந்து கொடுக்கின்றேன்.

அற்புதமான இல்வாழ்க்கை
...அனுசரிக்கும் நல்கணவர்
கற்கண்டாய் மணிக்குழந்தை
...கிடைத்திட்டால் எது தேவை?

அளவான ஒரு வீடு
...அதனோடு திருப்பேறு
வளமான அன்போடு
...வாழ்ந்திடுவேன் சீரோடு.

வண்ணத்தில் வரும் கனவு
...வரையில்லா நல்லுணர்வு
எண்ணத்தில் எதிர்பார்ப்பு
...உள்ளத்தில் ஒரு நிறைவு!

அழகான ராஜாங்கம்
...அமைந்திட்டால் இனிதாகும்
விழலாகா வரமாகும்
...வித்தங்கு மரமாகும்.

மாணிக்க ஒளிவிளக்கு
...மாதவத்தின் பயனாகும்.
காணிக்கை நான் தரவே
...காதலுடன் உறவாடும்!

மலரம்பு எய்துவிட
...மன்மதனும் வெற்றிபெற
புலர்காலை பூத்துவிட
...புது வாழ்வு அடைந்திடுவேன்.

கலியாண மலர்மேடை
...கதம்பத்தின் மணம்வீசும்
சலியாத சுகவாழ்வு
...சொர்க்கத்தின் கதைபேசும்.

காதலரைக் கைப்பிடித்து
...காரியத்தில் கைகொடுப்பேன்
மாதரறம் பேணிடவே
...மாட்சி பெற்று மகிழ்ந்திடுவேன்.

மனமொத்த தாம்பத்தியம்
...மதுரத்தேன் பிரவாகம்
தினம் வாழ்த்தும் புதுராகம்
...சம்சார சங்கீதம்.

கண்போலக் குடும்பத்தைக்
...கற்போடு பேணிடுவேன்.
மண்மீது எம்காதல்
...மறையாதென் றியம்பிடுவேன்.

உள்ளங்கள் சேர்ந்து விட்டால்
...உலகங்கள் காலடியில்
கள்வராய் மனம் கவர்வார்
...கணவரெனும் ஓர் வடிவில்.

வசந்தங்கள் வீசிடுமே
...வாழ்வினிலே சேர்ந்துவிட்டால்
கசக்காது காதலின்பம்
...கணவரென்று ஆகிவிட்டால்.

இனியென்ன நம் தேவை
...இனிய வாழ்வு அமைந்துவிட்டால்
கனிந்திடுமே தாயுள்ளம்
...நல் மழலை பெற்றுவிட்டால்.

காலைமுதல் மாலைவரை
...கொண்டவரை மகிழ்விப்பேன்
மாலை கொண்ட மன்னனோடு
...மனம் நிறைந்து இணைந்திடுவேன்.

அதிகாலை எழுந்திடுவேன்
...அன்றாடம் குளித்திடுவேன்
பதிதேவை நானுணர்ந்து
...பண்போடு அளித்திடுவேன்.

பணி செல்லப் புறப்பட்டால்
...பாசவிடை பகன்றிடுவேன்.
தணியாத அன்புணர்வால்
...சென்ற பின்னே கலங்கிடுவேன்.

கண நேரம் பிரிந்திடினும்
..கண்மயங்கி ஏங்கிடுவேன்
மணமிழந்த இல்லத்தை
...பூஜ்யமாக உணர்ந்திடுவேன்.

வரும் வழியில் விழிதொடுத்து
...வாசலிலே நின்றிருப்பேன்
விரும்பியவர் வரும்வரைக்கும்
...விழிமூடாதிருந்திடுவேன்.

பத்தினியாய் காத்திருப்பேன்
...வரும் வரையில் பசித்திருப்பேன்
இத்துணைதான் அன்பென்ற
...அளவனைத்தும் தாண்டிடுவேன்.

ருசியோடு சமைத்திடுவேன்.
...ரகம் ரகமாய் படைத்திடுவேன்.
பசியாற்றிப் புசித்திடுவேன்
...பூமுகத்தைப் பார்த்திருப்பேன்.

வதனத்தின் வேர்வைதனை
...முந்தனையால் துடைத்திடுவேன்
கதம்ப மலர் பூச்சரத்தை
...கருத்தோடு சூடிடுவேன்.

ஒளிவோடு வாழ்ந்திடவே
...ஒற்றுமையாய் இருந்திடுவேன்
எளிமையாக அலங்கரித்து
...பதிமனதை கவர்ந்திடுவேன்.

அலங்கார தேவதையாய்
...அவர் முன்னே தோன்றிடுவேன்
நிலவங்கு நின்றாட
...நெஞ்சத்தை வென்றிடுவேன்.

கண்ணுக்கு விருந்தாவேன்
...காலத்தின் விளக்காவேன்
புண்ணுக்கு மருந்தாவேன்
...நுகர்தற்கு மலராவேன்.

விலையில்லாப் பொன்னாவேன்
...விளையாடும் பொருளாவேன்
கலையோடு கணவருடன்
...கவிபாடும் பெண்ணாவேன்.

எல்லையற்ற உள்ளழகால்
...ஓருருவாய் சமைந்திடுவேன்
முல்லை நிகர் புன்னகையால்
...மோகமுத்தம் ஈந்திடுவேன்.

நெருக்கத்தின் மயக்கத்தில்
...நிறைவாகும் தருணத்தில்
பருவத்தின் பரிமாறல்
...பன்னீரின் பூத்தூவல்.

மங்காத உயிர்க்காதல்
...மறையாத சந்தோஷம்
பொங்கிடுமே பூபாளம்
...புது இன்பம் ஏராளம்.

சித்தம் தான் கலங்கிடவே
...சிந்தனைகள் ஊறிடவே
அத்தருணம் அவர் வரவே
...அன்பினிலே அமிழ்ந்திடுவேன்.

கொஞ்சும் தேன் மொழியாலும்
...களியேற்றும் பேச்சாலும்
நெஞ்சத்தை நிறைத்திடுவேன்
...நினைவெங்கும் சூழ்ந்திடுவேன்.

உருவாகும் நல்லிணக்கம்
...உறங்காத செயலாக்கம்
கருவாகும் கனியாகும்
...கனவங்கு நனவாகும்.

இணக்கத்தை ரசித்திருப்பேன்
...இன்முகத்தைப் பார்த்திருப்பேன்
கணக்கில்லா காதலதை
...கரையின்றி நான் தருவேன்.

அகத்தில் நிறைந்த அன்பரையே
...அனுதினமும் சேவிப்பேன்
நகத்தில் கூட அழுக்கெடுப்பேன்
...நித்தம் உயிராய் பாவிப்பேன்.

தலை கூட துவட்டிடுவேன்
...தளிர் சிரிப்பில் மயங்கிடுவேன்
கலையாத கனவின்று
...அரங்கேற சிலிர்த்திடுவேன்.

ஆசை முகம் ததும்பிடவே
...அமுதூறப் போற்றிடுவேன்
நேசக்கரம் அணைத்திடவே
...நெஞ்சோடு சேர்ந்திடுவேன்.

கன்னத்தில் முத்தமொன்று
...கலைதீப ரத்தினமாய்
தன்னழகில் நிலைமறந்து
...என்மனதைப் பறிகொடுப்பேன்.

அன்பென்னும் நெறியினிலே
...நல்லறங்கள் வளர்த்திடுவேன்
துன்பமினி இல்லையென்று
...தலைவணங்கித் தழுவிடுவேன்.

கொவ்வையிதல் நகைவீச
...காதல்பயிர் வளர்த்திடுவேன்
செவ்வொளியில் முகம் மலர
...கவிதையுரம் தூவிடுவேன்!

தென்னை மர சலசலப்பில்
...தெவிட்டாத இன்பங்கண்டு
சின்னப்புள் மெல்லொலியில்
...சுகராகம் பாடிடுவேன்.

மண்ணுலக நல்லோசை
...மாலைனேர சாரத்தில்
பண்ணிசைத்தவ் வொலியனைத்தும்
...பதமாக சேர்ந்திசைப்பேன்!

கானக்குயில் கதைசொல்ல
...காட்டுமரம் பூச்சொரிய
மோன நிலை எய்திடவே
...மடியினிலே முகம் புதைப்பேன்.

வான் தனிலே பறந்துவரும்
...சின்னஞ்சிறு பறவைதரும்
மேனியது சிலிர்க்குமந்த
...இன்பத்தில் திளைத்திருப்பேன்.

நீலப்பெருங் கடலினிலே
...நீந்திவரும் அலைகளிலே
கோலத்துடன் ஒன்றிணைந்து
...காலமென்றும் கைகோர்ப்பேன்.

வானமெனும் வீதியிலே
...மையலுற்ற போதினிலே
ஞானமதில் நல்லரோடு
...நாட்டமுடன் நாடிடுவேன்.

தென்றலங்கு தாளம் போட
...தெம்மாங்கு பாடிவர
சென்று நானும் ஆடிடுவேன்
...மீன்விழியால் தேடிடுவேன்.

ஆற்றுநீரின் ஓசையிலும்
...அருவி சிந்தும் ஒலியினிலும்
காற்றுவெளி சூழலிலும்
...காதல் நித்தம் புரிந்திடுவேன்.

பாயவரும் நதியினிலும்
...பதி முகத்தை கண்டிடுவேன்
மாயமான மயக்கத்துடன்
...மஞ்சத்தை அலங்கரிப்பேன்.

இன்பத்தில் இன்புறுவேன்
...இதமாக சேர்ந்திருப்பேன்
துன்பத்தில் துன்புறுவேன்
...துயரத்தைப் போக்கிடுவேன்!

அன்பிற்கு எது எல்லை
...அவரின்றி ஒன்றில்லை
என்றுணர்ந்து கூடிடுவேன்
...பலகாலம் வாழ்ந்திடுவேன்!

- சுமஜ்லா
.

21 comments:

SUFFIX said...

நீளமான கவிதையால் நீண்ட காவியம், எல்லா வரிகளும் நல்லா இருக்கு!!

sakthi said...

எவ்வளோ பெரிய கவிதை

கலக்கல்

சீமான்கனி said...

//இன்பத்தில் இன்புறுவேன்
...இதமாக சேர்ந்திருப்பேன்
துன்பத்தில் துன்புறுவேன்
...துயரத்தைப் போக்கிடுவேன்!//

அழகான கவிதை அக்கா....
ஆசைகளின் ஆழம் சொல்லி இருக்கிறிர்கள் ...
அருமை....
தெம்மாங்கு பட்டிசையாய்
தெவிட்டாத தேனிசையாய்
தொடரட்டும்.....

Unknown said...

அம்மா எவ்வளவு பெரிய கவிதை...
கவிதை வரிகள் எல்லாமே நல்லா இருக்குங்க

அமர பாரதி said...

சுமஜ்லா,

ஒற்றை வார்த்தையில் சொன்னால் "அழகு". பொதுவாக கவிதை பதிவு என்றாலே உடனடியாக ப்ரவுஸரை மூடுபவன் நான். அதிலும் கவிதையென்றால் பதிவர்கள் தலைப்பிலேயே ஒரு ஹின்ட் கொடுத்தால் திறக்காமலே இருக்கலாமே என்று எண்ணுபவன். மறுபடியும் சொல்கிறேன் உங்கள் கவிதை "அழகு".

அமர பாரதி said...

சுமஜ்லா,

//சின்னப்புள் மெல்லொலியில்// சின்னப் புல்லா புள்ளா?

Anonymous said...

14 years back you have written this.Amazing,

நட்புடன் ஜமால் said...

வியந்து கொண்டேயிருக்கின்றேன் ...

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

நீளமான கவிதை;
ஆழமான கவிதை.

மச்சான் ஃபோன் நம்பரும் குடுத்திட்டீங்க.
மச்சானோட ஈமெயில் ஐடி தாங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்ஸ்ங்க எல்லாருக்கும்!

அமர கவி பாரதியின் பெயரை வைத்திருப்பவருக்கு, கவிதையின் மீது இவ்வளவு பற்றுதலா? என்னோட மற்ற கவிதைகளையும் வாசித்து பாருங்கள். இது தனி ரகமாக இருக்கும்!

அது சின்னப்புள் தாங்க! புள் என்றால் பறவை என்று அர்த்தம்!

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, துபாயில் இருப்பதால், போன் பண்ண முடியாது என ஈமெயில் ஐடி கேட்கிறீர்களோ?

இருவருக்குள்ளும் எந்த ஒளிவு மறைவும் இல்லாத காரணத்தால் ஒரே ஈமெயில் ஐடி தான். சில சமயம் அவர் திறந்து பார்த்து விட்டு, என்னிடம் சொல்வார், இந்த இந்த மெயில் வந்திருக்கு என்று!

அவருக்கு மெயில் அனுப்பும் அளவுக்கு பிரண்ட்ஸ் இல்லை :-) எல்லா பிரண்ட்ஸும் உள்ளூரில் தான். அவர் ஜஸ்ட் சும்மா பிரவுஸ் பண்ணி, என் பதிவுகளை படிப்பார், பின்னூட்டத்தை படிப்பார், நியூஸ் பேப்பர் படிப்பார், அதோடு சரி!

SUMAZLA/சுமஜ்லா said...

//14 years back you have written this.Amazing,//

Sir, I am writing from my age of 8. I will write oneday my first poem!

அரங்கப்பெருமாள் said...

அம்மாடி... எவ்ளோ பெரிய மாத்திரை.. ஆனாலும் அருமை.

//கசக்காது காதலின்பம்//

இது வேத சத்தியம்.காதலித்தால் புரியும்.

//புண்ணுக்கு மருந்தாவேன்//

இன்னும் சில வரிகள் கூட உண்டு.

இப்னு அப்துல் ரஜாக் said...

இதுல யாரு கொடுத்து வச்சது?

மச்சானா,அக்கா நீங்களா?

SUMAZLA/சுமஜ்லா said...

//எவ்ளோ பெரிய மாத்திரை//

அதான் இந்த மாத்திரை கசக்காது என்று அடுத்த வரியில் நீங்களே சொல்லிவிட்டீர்களே?!

ஆனால், என்னுள் காதல் வரும் முன்பு, அதை கற்பனையில் கண்டு நான் எழுதியது இந்த கவிதை என்பது தான் இதில் முக்கிய விஷயம்.

இந்த கவிதை எழுதி ஒரு நான்கு மாதங்கள் கழித்து தான் திருமண நிச்சயம் முடிந்தது!

SUMAZLA/சுமஜ்லா said...

//இதுல யாரு கொடுத்து வச்சது?

மச்சானா,அக்கா நீங்களா?//

என்னைக்கேட்டால், நான் தான் கொடுத்து வைத்தவள், அவர் கிடைப்பதற்கு என்பேன். அவரைக் கேட்டால், தான் தான் என்பார்!

நிச்சயமாய், அவருடைய அமைதியான தங்கமான குணம், அனுசரிக்கும் தன்மை, நான் அதிகம் படித்திருக்கிறேன் என்று ஒரு போதும் எண்ணாமல், தெரியாததை என்னிடம் கேட்டு தெரிந்து கொள்ளும் பாங்கு, எங்கே சென்றாலும், நான் வரவில்லை என்றாலும் என்னை வற்புறுத்தி அழைத்துச் செல்வது, எந்த ஒரு முக்கிய முடிவும் என்னை கலந்து ஆலோசித்து செய்வது, எனக்கு கருத்து சுதந்திரம் தந்திருப்பது எல்லாம் பார்க்கும் போது நான் ரொம்ப கொடுத்து வைத்தவள் என்று தோன்றும்!

(மொத்தத்தில் எங்களுக்குள்ளும் சின்ன சின்னதாய் நிறைய சண்டை வருங்கோ! சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பது போல, கோபம் வந்தால் மூன்று நாளைக்கு மூஞ்சியை தூக்கி வைத்து கொள்வார். யார் மேல் மிஸ்டேக் என்றாலும், நான் தான் ஒவ்வொரு முறையும் விட்டுக் கொடுக்க வேண்டும். அதில்லாட்டி லைஃப் சுவாரஸ்யமாய் இருக்காதே!)

துபாய் ராஜா said...

ஊருக்கு வரும்போது மச்சானுக்கு போன் பண்ணி கேட்டுட வேண்டியதுதான். :))

ஆமா.இம்புட்டு நீளக்கவிதையை மச்சான் படிச்சிருக்காரா ? என்ன கருத்து ஜொள்ளுனார் !! :))

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

//நிஜாம் அண்ணா, துபாயில் இருப்பதால், போன் பண்ண முடியாது என ஈமெயில் ஐடி கேட்கிறீர்களோ?//


அட எப்படிங்க கண்டுபிடிச்சீங்க, நான் துபாயிலிருக்கிறேன்
என்று. அப்படித்தான் துபாயிலிருந்தாலும் ஃபோன் செய்யறது
என்ன ஒன்றும் பெரிய விஷயம் இல்லைங்களே.
குறிப்பு:- நான் தற்போது பணியிலிருக்குமிடம்:
பேங்காக், தாய்லாந்து.
(அட என்னங்க, விஷயத்தைப் போட்டு வாங்கிட்டீங்களே)

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆமா.இம்புட்டு நீளக்கவிதையை மச்சான் படிச்சிருக்காரா ? என்ன கருத்து ஜொள்ளுனார் !! :))//

திருமணத்துக்கு முன்பே இதை எழுதி அவருக்கு அனுப்பினேன். இவ்ளோ பெரிய கவிதையில், இரு வரிகளை மட்டும் கோட் செய்து, இதன் அர்த்தம் என்ன என்று விளையாட்டாக கேட்டார். நானும் என் பாணியில் பதில் தந்தேன். இந்த ப்ளாகை, என் தாய், சகோதரன் ஆகிய நெருங்கிய உறவுகள் படிப்பதால், அதை இங்கே வெளியிட இயலவில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

நிஜாம் அண்ணா, நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியாது, உங்க வருகை குறித்து ஃபீட்ஜிட்டில் பார்த்த போது, Asia Pacific என்று வந்தது, உண்மையை வெளிக் கொணர எப்படியெல்லாம் ஐடியா செய்ய வேண்டி இருக்கிறது?!

"உழவன்" "Uzhavan" said...

18ல எழுதுனதுனாலதான் இவ்வளவு நீநீநீநீநீளமான கவிதையோ :-)