Saturday, August 29, 2009

சிங்கள தீவினிற்கோர்...

நண்பர் தங்கமணி பிரபு ஈழத்தமிழர்களுக்கு நடக்கும் வன்கொடுமை பற்றி எழுத சொல்லி பின்னூட்டமிட்டிருந்தார். எனக்கு இரண்டு ‘யல்’லில் எப்போதும் இண்ட்ரெஸ்ட் குறைவு! ஒன்று அரசி‘யல்’, இன்னொன்று, சமை‘யல்’!

ஆனால், ஈழதமிழர்களுக்கு நேரும் கொடுமைகளைப் பற்றி எழுத அரசியல் தேவையில்லை, கொஞ்சம் மனிதாபிமானம் போதும்! இதோ, அவர் போட்டிருந்த போட்டோ:

மக்களை ஒட்டு துணியில்லாமல் மாக்களாக்கி, சுட்டுப் பொசுக்கும் சுதந்திரத்தை இவர்களுக்கு தந்தது யார்?

என்னிடம் மட்டும் ஒரு துப்பாக்கி தந்தால்...
அவ்விடத்தில் நான் இருந்தால்...
என் துப்பாக்கியின் தோட்டா...
அவர்களின் துப்பாக்கியை தூள்தூளாக்கும்!

பின்னே, அவர்களை நான் சுட்டு விட்டால், எமக்கும், அவர்க்கும் என்ன வேறுபாடு?
அது தானய்யா...அடிப்படையான மனிதாபிமானம்!

அவர்களுக்கு இருதயம் இறுகிவிட்டதோ?!
இல்லை புலி விழி ஒளியால் கறுகிவிட்டதோ?!

ஏற்கனவே நான் லங்கைமக்களின் வாழ்வு பற்றி ஒரு கவிதை எழுதியிருந்தேன், அதிலிருந்து இரு வரிகள்:

“கண்ணீர் துளியின் வடிவத்தினால், லங்கையில் என்றும் கண்ணீராய்,
புண்ணில் வெந்நீர் தெளிப்பதனால், வடிவது இப்போ செந்நீராய்!!”

ஆனா, செந்நீர் வடிக்கக்கூட வழியில்லாத அளவுக்கு, நேரடியாக இதயம் துளைக்கப்படுகிறதே! மனிதம் தூள் தூளாக்கப்படுதே!!

“சிங்கள தீவினிற்கோர் பாலம் அமைப்போம்
சேதுவை மேடுறுத்தி வீதி சமைப்போம்”

என்று எழுதிய பாரதி, இன்று இருந்திருந்தால், இப்படி எழுதி இருப்பாரோ?

“சிங்கள வெறியர்க்கோர் பாடம் தருவோம்
ஏதுமறி யாதமக்கள் பீதி குறைப்போம்”

எம்கையில் என்ன இருக்கிறது? ஆனானப்பட்ட ஐ.நா.சபையே வேடிக்கை பார்க்கும் போது, சாமானியர்களான நாம், ஒரு துளி கண்ணீர் மட்டும் தான் வடிக்க முடியும்...

எழுதலாம், அவ்வேதனைகளை! கூரிய பேனா முனை, எத்தணையோ கத்திகளையும் குத்தி துளைத்திருக்கிறது! ஆனால், அந்தோ என்னிடம் இருப்பது, கணினியின் விசைப்பலகை மட்டுமே! தட்டுகிறேன், விசையை..., நீங்களும் தட்டுங்கள் என்னுடம் சேர்ந்து....! இது என்றாவது ஒரு நாள் தட்டட்டும், சிங்கள கோட்டை கதவை!

-சுமஜ்லா.

12 comments:

ஈரோடு கதிர் said...

//எனக்கு இரண்டு ‘யல்’லில் எப்போதும் இண்ட்ரெஸ்ட் குறைவு! ஒன்று அரசி‘யல்’, இன்னொன்று, சமை‘யல்’! பாருங்க, நேற்றிரவு, சஹருக்காக, கறிக்குழம்பு வைக்க ஆரம்பித்து, பவர்கட்டாகி, தேங்காய் அரைக்க முடியாமல், அதை பிரியாணியாக மாற்றி ஒரு வழியாக ஒப்பேற்றினேன்.//

இந்த இடுகையில் இதை நீங்கள் தயவு செய்து தவிர்த்திருக்கலாம்.


இடுகைக்கு நன்றி

நட்புடன் ஜமால் said...

ஈழத்து விடயங்கள் எழுதியாயிற்று

இன்னும் மெருகேற்றுங்கள் தங்கள் எழுத்துகளை.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி நண்பர்களே,
ஒழுங்காக சமைக்கக்கூட தெரியாத என்னையும் ஆழமான ஈழபோர் பற்றி எழுத வைத்து விட்டது....தங்கமணி பிரபுவின் கோரிக்கை என்பது தான் இதன் அர்த்தம்.........

venkat said...

என்றாவது ஒரு நாள் நல்லது நடக்கும், என்ற நம்பிகையிலேயே 50 வருடங்கள் ஓடிவிட்டன.தமிழன் துயரம் மட்டும் தீரவில்லை.அனைவரும் சேர்ந்து தட்டுவோம், நம்புகையுடன்.

சீமான்கனி said...

//அந்தோ என்னிடம் இருப்பது, கணினியின் விசைப்பலகை மட்டுமே! தட்டுகிறேன், விசையை..., நீங்களும் தட்டுங்கள் என்னுடம் சேர்ந்து....! இது என்றாவது ஒரு நாள் தட்டட்டும், சிங்கள கோட்டை கதவை!//

பலிக்கட்டும்...

நெஞ்சு பொறுக்குதில்லையே...
இந்த நிலைகேட்ட மனிதரை..
நினைத்துவிட்டால்....

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

அரசியலில் ஆர்வம் இல்லைதான்;
ஆனால் மனதில் மனிதாபிமானம்
உண்டு என்பதை உணர்த்தினீர்கள்
பதிவில். விடியல் வரும்.

Basheer said...

`கண்களால் காண்பது பொய். காதால் கேட்பதும் பொய்.தீர விசாரிப்பதே மெய்.I feel pity for you.You don't know the real ground situation in Srilanka. Dont read Daily Thanthi always read The Hindu.
நன்றி

SUMAZLA/சுமஜ்லா said...

உண்மை என்னவென்று யாருக்கும் தெரியாது...உங்களுக்கும்...

என் எழுத்தில் சில மாற்றங்கள் செய்து விட்டேன்.

இப்னு அப்துல் ரஜாக் said...

5:32
இதன் காரணமாகவே, "நிச்சயமாக எவன் ஒருவன் கொலைக்குப் பதிலாகவோ அல்லது பூமியில் ஏற்படும் குழப்பத்தை(த் தடுப்பதற்காகவோ) அன்றி, மற்றொருவரைக் கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையுமே கொலை செய்தவன் போலாவான்;. மேலும், எவரொருவர் ஓர் ஆத்மாவை வாழ வைக்கிறாரோ அவர் மக்கள் யாவரையும் வாழ வைப்பவரைப் போலாவார்" என்று இஸ்ராயீலின் சந்ததியினருக்கு விதித்தோம். மேலும், நிச்சயமாக நம் தூதர்கள் அவர்களிடம் தெளிவான அத்தாட்சிகளைக் கொண்டு வந்தார்கள்; இதன் பின்னரும் அவர்களில் பெரும்பாலோர் பூமியில் வரம்பு கடந்தவர்களாகவே இருக்கின்றனர்.

Biruntha said...

இப்பொழுது நம் மக்களைக் கலங்க வைத்துள்ள காணொளியை நீங்களும் போட்டு உங்கள் மனிதாபிமானத்தைக் காட்டியதற்கு மிக்க நன்றி சகோதரி.

மேலேயுள்ள ஒரு சகோதரரின் பதிவு மிகவும் வேதனையடையச் செய்கின்றது. எது பொய்? நாம் தினம் தினம் அனுபவித்த அனுபவித்துக் கொண்டிருக்கும் எல்லாம் பொய்யா?? அல்லது சிங்கள அரசு வெளி உலகிற்கு தன்னைப் பற்றிப் பெருமிதமாக எடுத்துச் சொல்பவை பொய்யா??
அங்குள்ள மக்கள் தம் மானத்திற்காகவும் உயிருக்காகவும் பயந்து வாய் திறக்காமல் இருக்கின்றனர். அதை வைத்து நாம் எல்லாமே பொய் என்று சொல்ல முடியாது.
ஊரிலிருக்கும் எவ்வளவோ உறவுகள் எங்களுடன் தொடர்பு கொள்ளும்போது "எப்படியாவது இங்குள்ள எமது நிலமைகளை வெளிநாட்டு அரசுகளுக்குத் தெரியப் படுத்தி எங்களுக்கு ஒரு விடிவை ஏற்படுத்தித் தாருங்கள்" என்றுதான் கெஞ்சுகின்றனர்.
நானே அனுபவித்தவைகளையும் என் கண்ணால் பார்த்தவற்றையும் கூண்டில் ஏறிச் சாட்சி சொல்லத் தயார். ஆனால் என் உயிருக்கும் மானத்திற்கும் சிங்களவரிடம் இருந்து உத்தரவாதம் தரமுடியுமா??
உயிர்?? போனால் போகட்டும். ஆனால் அது பிரியும் முன் செய்யப்படும் கொடுமைகள்...??!!
என்னைப்போல் எத்தனை ஆயிரம்.. ஆயிரம் என்ன ஆயிரம்.. இலட்சக்கணக்கானோர் நெஞ்சங்களில் எரியும் தீ... இதை அவ்வளவு சீக்கிரத்தில் அணைத்து விடமுடியாது. எல்லோரும் அவ்வளவு தூரம் பாதிக்கப் பட்டிருக்கின்றனர்.

இன்றும் கூட நான் வாழும் நாட்டில் இருக்கும் ஆமிகாரரையோ பொலிசுக்காரரையோ கண்டால் என் மனதில் ஏற்படும் பயம்.. விமானச் சத்தம் கேட்டால் ஏற்படும் ஒரு நடுக்கம்..ஆமிக்காரர் துரத்துவதாக, சுட வருவதாகக் காணும் கனவு.. இவை எதனால்?? இவை எல்லாமே பொய்யா??

SUMAZLA/சுமஜ்லா said...

பிருந்தா, உங்கள் எழுத்து எம் கண்களில் ஒரு துளி நீரை வரவழைத்து விட்டது.

நான் எழுதினாலும், உங்கள் வார்த்தைகள் உள்ளத்தின் ஆழத்திலிருந்து...உயிரின் வேகத்தோடு வருபவை...எனக்கு புரிகிறது தோழி!

ஒவ்வொரு மேகத்துக்கு பின்பும் சூரியன் இருக்கிறது, ஒவ்வொரு பகலுக்கு பின்பும் இரவு இருக்கிறது...நல்லதே நடக்க பிரார்த்திப்போம்.....

க. தங்கமணி பிரபு said...

தங்கள் பதிவு தமிழினத்தின் குரலாக ஒலித்தமைக்கு நன்றியும் வணக்கங்களும்!
வலியும் ஆற்றாமையும் மிகுந்த இந்த சூழலில் சிலநூறு ஆண்டுகள் நிகழ்ந்த நம் இந்திய சுதந்திர போரையும், நம் பள்ளிக்கூட வரலாற்று பாடங்களில் இடம் பெறாத பெயரறியாத எண்ணற்ற நம் இந்திய விடுதலை வீரர்களையும், அவற்றால் நாம் இன்று பெற்றுள்ள பயனையும் நினைவு படுத்திக் கொள்கிறேன்! இலங்கையில் நாம் கண்ட, காணாத பல கொடும் மரணங்கள் மிகவிரைவில் ஐக்கிய நாடுகள் சபையில் தமிழீழ கொடியினை ஏற்றப்போகும் அஸ்திவார செங்கற்களாகவே கொள்வோம் எனும் என் நம்பிக்கைதனை பகிர்ந்துகொள்கிறேன்! தமிழ் இலக்கியத்தில் புறநானூறுடன் இரண்டாயிரத்தின் ஈழப்போரும் தமிழர் வீரத்துக்கு சாண்றாக பதிவுபெறும் என திட்பமாக நம்புகிறேன்! நன்றி!