Saturday, August 8, 2009

என் ரசனை இவ்ளோ தாங்க!

எந்த வித பேதமும் இல்லாமல், எழுதியவர் யார் என்று பார்க்காமல், ஒரு சாமானிய பெண்ணின் பார்வையிலிருந்து, பரிசு பெற்ற கதைகளை விமரிசித்திருக்கிறேன். பொதுவா, சிறந்த கதையில் கதை இருக்கணும். அப்படி இருக்கானு நான் தேடியதன் முடிவுகள் தான் இவை. தவறிருந்தால், திட்டுங்கள். ஆனா, ரொம்ப திட்டாதிங்க... என்னால தாங்க முடியாது.

1.பெண்கள் இல்லாத ஊரின் கதை - ரெஜோ வாசன்.
குண்டுகுண்டான எழுத்தை பார்த்ததுமே பயந்துட்டன், முதலில்... முழுசா படிக்க முடியல. கஷ்டப்பட்டு படித்தேன். எடுத்தவுடன் படித்த இந்த வரிகள்

//என் அப்பாவிற்கு எழுதத் தெரியும் என்பதே இன்னமும் என்னால் நம்ப முடியவில்லை. அவர் பேசி நான் என்றுமே கேட்டதில்லை. எங்களைப் போல் ஒலி எழுப்ப அவருக்குத் தெரிந்ததில்லை. சதா நேரமும் வீட்டுத் திண்ணையில் அமர்ந்திருப்பார். வினோதமான சைகைகளுடன் கத்திக் கொண்டே இருப்பார். //

இது கால சக்கரத்தை தாண்டிய கால கதை என்று நமக்கு சொல்லாமல் சொன்னது. கதையில் முப்பட்டகம் என்று அடிக்கடி வரும் வார்த்தைக்கான அர்த்தம் எனக்கு விளங்கவேயில்லை. பெண்ணை ஒரு விலங்காக சித்தரித்து, அவளிடம் ஒரு ஆண்மகன், தன் தந்தையின் எச்சரிக்கையையும் மீறி, மாட்டிக் கொள்வதாக கதை. அவள் இவனை முழுவதுமாக ஆட்கொள்கிறாள். அதன் விளைவுதான் கடைசியில் வரும் சிறுவனா தெரியவில்லை. காமத்தை அழகாக சொன்னது அழகு! மற்றபடி என்னை இக்கதை ஈர்க்கவில்லை.

2.பிரசன்னம் - யோசிப்பவர்
ரசித்தேன்! நவீன போலி சாமியார்களைப் பற்றி என்று நினைத்து வாசித்தால், வித்தியாசம் காட்டி இருக்கிறார். சாமியார் சொன்ன இந்த //இந்த தீர்த்ததோட வீர்யம் நாலு நிமிஷம்தான். // வார்த்தைகளின் அர்த்தம் புரியாததால், பரிதாப முடிவு!

சைண்டிஃபிக் சாமியார் நல்ல கற்பனை.

//டைம் வார்ப்னு கேள்விப் பட்டிருக்கியா? மூன்று பரிமாணங்கள் கொண்ட ஸ்தூல சரீரத்தோட, காலம்ங்கற நாலாவது பரிமாணம், நிரம்பவும் சுருங்கிப் போகும். அந்த சரீரத்துக்கு நாலு நிமிஷங்கறது நாலு மணி நேரமாயிடும். அதாவது ஒரு சாதாரண ஆளுக்கு நாலு நிமிஷமாத் தெரியறது, அந்த சரீரத்துக்கு மட்டும் நாலு மணி நேரமாத் தெரியும். இந்த மாதிரி ஒரு சூழலில், அந்த சரீரம் அதனோட ஒரு நிமிஷத்தில் நிதானமா செய்ற எந்தக் காரியமுமே, சாதாரணமானவங்களுக்கு அசுர வேகத்தில், கிட்டத்தட்ட கண்ணால் பார்க்க முடியாத வேகத்தில் செய்த காரியமா இருக்கும்.”//

இந்த வரிகள் தான் நமக்கு கதையின் ஓட்டத்தை புரியவைக்கிறது. கதையில் பரிதாப நகைச்சுவை.

3.அம்மாவுக்கு புரியாது. - RV
இதுவும் சூப்பர் கதைதான். நடுவர்களின் ரசனைக்கு ஒரு எடுத்து காட்டு! கதையின் முதல் வரியிலேயே கதையை புரியவைத்து, கடைசி வரியிலே அதற்கான முடிவையும் கொடுத்தது, நன்றாக இருந்தது.

//“ஆர். முகுந்த்? அப்போ அந்த சுந்தரம்?”
என் அம்மாவுக்கு நான் பக்கத்தில் இருந்தது ஒரு நொடி மறந்து போயிருக்க வேண்டும். தன் கைகளை விரித்தாள். உச்சுக் கொட்டினாள். பிறகு சொன்னாள்.
“உனக்குத்தான் எல்லாம் தெரியுமேடி! சுந்தரம் முதலியாராச்சே! என் அம்மாவுக்கு என்னால புரிய வைக்க முடியலே!”//

இது தான் கடைசி வரி. நான் புரிந்தது, அந்த அம்மாவுக்கு ரெண்டு புருஷன் என்பது. இல்லை வேறு கருத்து இது சொல்லுதுன்னா, எனக்கு சொல்லுங்களேன், பின்னூட்டத்தில்...

4.அம்மாவின் மோதிரம் - எம்.ரிஷான் ஷரீப்
இது ரிஷான் ஷரீஃப் ஸ்டைல் என்று தான் சொல்ல வேண்டும். கதையில் வரும் அனைத்து மாந்தர்கள் பற்றியும் தனி தனியாக கதை சொல்லி, அதை ஒன்றாக கோர்த்து, வடிவாக்கி, நம்ம விகடன் ஸ்டைல் கதை. ஏனோ என்னை ரொம்பவும் இத்தகைய கதைகள் ஈர்ப்பதில்லை. ஆனா, சின்ன வயசுல பாட்டி சொல்லும் கதை மாதிரியான ஸ்டைல் என்பதால், பலருக்கு பிடிக்கலாம். உரையாடல்கள் இல்லாததால், கொஞ்சம் அசுவாரஸ்யம். கதையின் கடைசி வரி பஞ்ச்! ஒரு மோதிரத்தினால், என்னென்ன தீங்கு நிகழ்ந்தது, கடைசியில், அதை இழந்ததால், எவ்வளவு பெரிய கஷ்டம் நேர்ந்தது என்று சொல்லி இருக்கிறார். ஒரு மோதிரத்தை வைத்து இவ்வளவு பெரிய கதை இவர் ஒருவரால் தான் எழுத முடியும்.

5.அப்பா வருவாரா - கவிதா
கதையோட்டம் நல்லா இருக்கு, கிட்டதட்ட, நான் எழுதிய கதை மாதிரியான நடை! கணவன் மனைவிக்குள் வரும் பிரச்சினையால், ஒரு சிறு பெண் எவ்வளவு பாதிக்கப்படுகிறாள் என்ற மெஸேஜ் இருக்கு! ஆனாலும், முடிவு மிஸ்ஸிங்! அப்பாவின் மேல் பொதுவாக பெண் குழந்தைகளுக்கு இருக்கும் ஈர்ப்பை,

//அப்பா மரநாற்காலியில் அமர்ந்து இருந்தார். அனுஷா ஓடி சென்று அப்பாவின் மேல் ஏறி கழுத்தைக்கட்டி க்கொண்டு யாருக்கும் தெரியாமல் ரகசியமாக..."அப்பா...என்னை கூட்டிட்டு போயிடுங்க. .எனக்கு இங்க பிடிக்கலை , பயம்மா இருக்கு... ஸ்கூல் போகனும்.." என்றாள்.//

இந்த வரிகள் மூலம் அழகாக வெளிப்படுத்தியது என்னை கவர்ந்தது.

6. நீர் வழிப்படுஊம் புணை - சேரல்
தலைப்பு புரியவில்லை. என்னங்க அர்த்தம் அதுக்கு? லாட்ஜ் பாயாக வேலை செய்யும் ஒரு பெரியவர் படும் கஷ்டத்தை, உணர்வு பூர்வமாக விளக்கி இருக்கிறார். அவரின் பழையகாலங்கள், அதோடு முரண்பட்ட நிகழ்காலம் என்று அசை போடுகிறார். இதில் கதை என்று பார்த்தால், இந்த வரிகள் தான்.

//'யோவ்..... ஒரு காண்டம் வாங்கிட்டு வர்றதுக்கு இவ்வளவு நேரமா? சாவணும்யா உங்கூட....' என்றபடி அவர் கையில் இருந்ததைப் பிடுங்கிக் கொண்டு, ஒரு பத்து ரூபாயைத் திணித்து, அறைக்கதவை அடைத்துக் கொண்டான்.//

7. அவளாக இருந்திருக்கலாம் - நந்தவேரன்
சூப்பரான கதை! என் ரசனைக்கு ரொம்ப பிடித்தது, அதுவும், எதிர்பார்க்காத கடைசி வரிகள்.

//“பரஸ்பரம் வாய்ப்புகளை தட்டிப் பறித்த நாங்கள், ஒருவரை ஒருவர் இனிமையாக பழிவாங்கிவிட்டோம்! இப்போ அவங்க, மிசஸ் சாஹித்யா நந்தகோபால்!”//

சற்றே செயற்கைதனம் இருந்தாலும், உழைப்பின் உயர்வை அழகாக, மிக அழகாக சொல்லுது. அதே சமயம், நடிகைகள் செய்யும் பந்தாவையும் ரசனையோடு அசால்ட்டாக சாடுகிறார்.

8. மலைகள் காணாமல் போன தேவதைகள் - தமிழன் - கறுப்பி
சிங்கள தமிழில் புகுந்து விளையாடி இருக்கிறார். ஏனோ, முழுதாக படிக்க, பொறுமை போகிறது. பயணக்கட்டுரை போல ஆரம்பித்து, காதல் உருவாவது போல வந்து கடைசியில் காமத்தில் முடிகிறது. இந்த கதை என் ரசனைக்குள் அடங்கவில்லை. அல்லது இந்த கதையை ரசிக்கும் அளவுக்கு எனக்கு யோக்கியதை இல்லை. மொத்தத்தில் புரியவில்லை. புரியாததை தான் இலக்கியம் என்று சொல்வார்கள் சிலர், இது அந்த வகை போலும் என்று எண்ணி கொண்டேன்.

9.வாழையடி வாழை - வெட்டிபயல்
ரொம்ப பிடிச்சது எனக்கு. பிழிய பிழிய சோகம். ஆனால் பல குடும்பங்களில் நடக்கும் நிதர்சனம். ஏழைக்கொரு நீதி, பணக்காரர்களுக்கு ஒரு நீதி என்பதை அழகாக வாக்கியபடுத்தியிருக்கிறார். விரசமில்லாத, நல்ல மெஸேஜ் உள்ள, சமூக சிந்தனை மிக்க கதை. கதை என்றாலும், அந்த எஜமானியம்மா மேல் ஏனோ கோபம் வருது, அதுவும் அகம்பாவம் மிக்க இந்த வரிகளைப் படிக்கும் போது....

//“என் பையன் நானுத்தி அம்பத்து நாலு வாங்கினான். நீயும் தான் படிக்கிறேன் படிக்கிறேனு சாயந்தரம் ஆறு மணிக்கு எல்லாம் ஓடற. என்னத்த படிச்சியோ தெரியல”//

எத்தணையோ வீடுகளில் வேலை செய்யும் சிறு பெண்களின் கஷ்டத்தை கதையாக்கி இருக்கும் விதம் அருமை.

10. மனையியல் - ரா.வசந்த குமார்
கதையை மொத்தம் ஆறு பிரிவா பிரிச்சிருக்கார். ஒவ்வொரு பிரிவையும் தனி தனியாக வாசித்தால், ஒரு தனி கதை கிடைப்பது இதன் சிறப்பு! ஒரு ரயில் பயண பிண்ணனியில் எழுதபட்டது. தகப்பனிஸத்தை அழகாக சொல்லும் வரிகள்:

//காதல் மணம் செய்து கொண்டு, ஆரம்ப தேன் நிகழ்வுகள் கரைந்த பின் டயாஃபரும், செரலாக்ஸும் தூக்கிக் கொண்டு, பாப்பா பின் அலைந்து, முன்னிரவு, பின்னிரவு முறையில்லாமல் தூக்கங்கள் கலைந்து, களைத்து தந்தைமையில் திணறும் வரை, //

சிறுவயது காதலி, வயதான பின், அதே காதலருடன் சேர்வது, அரத பழசு என்றாலும், கதை சொல்லும் உத்தி நன்று! போரடித்தால், பாதியில் நிறுத்தி விட்டால் கூட அதுவும் ஒரு தனி கதை ஏற்கனவே சொன்னது போல...

11. அவள் பத்தினி ஆனாள் - ராமசந்திரன் உஷா
வரலாற்று கதை. ராஜா ராணி மேட்டர். ஆனாலும், இதிகாசத்தை நினைவூட்டம் குருட்டு ராஜாவுக்கு வம்படியாய் வாழ்க்கை படும் பத்தினி, அவனை கவரவெனவே சில காரியங்கள் செய்கிறாள்.

//என் குல தெய்வம் துர்க்கையின் மீது ஆணை! என் கணவர் பார்க்க இயலாத, இவ்வுலகை நானும் இனி என் உடலில் உயிர் உள்ளவரை பார்க்க போவதில்லை//

எதையோ நினைவூட்டும் இவ்வரிகள். மனைவியின் சாணக்கியத்தனம் தான் இக்கதையே! வரலாற்று கதை ஒன்றையாவது தேர்வு செய்ய வேண்டும் என்பதற்காக தேர்ந்தெடுத்திருந்தால், ஓக்கே நோ கமெண்ட்ஸ்.

12. கிணற்றில் மிதக்கும் நிலவின் சடலம் - நிலாரசிகன்
பாகம் பாகமாக பிரித்து எழுதி இருக்கிறார். ஒற்றைப்படையை தனியாகவும், இரட்டைபடையை தனியாகவும் படித்தால் கதை புரியும். ஒன்று இறந்த காலம், இன்னொன்று நிகழ்காலம். பெரும்புள்ளியிடம் தன்னை இழந்து, தகப்பன் பெயர் கூறாமல் பிள்ளை வளர்த்து, தன் உயிரையே மாய்த்துக் கொள்ளும் பெண்ணின் கதை. இதோ, இவரின் டிரேட் மார்க் வரிகள்:

//"உலகத்துலயே அழகானது நிலாதானய்யா?" "இல்ல ராசாத்தி நிலாவ விட அழகான உன் முகந்தான்" என்றான் அவன். //

பிள்ளை பருவத்தை விளக்கியிருக்கும் விதம் ரசிக்கும் படி உள்ளது. ஆனா, சாமானியர்கள் கதை புரிய, இரண்டு முறை படிக்க வேண்டும். அல்லது நான் சொன்னபடி, ஒற்றைபடை, இரட்டை படை என்று...

13. காத்திருத்தல் - சரவணன்.P
கதை ரொம்ப மென்மை. பெண்மையின் ஃபீலிங்ஸும், ஆண்மையின் கனவும், கனவு நனவாகும் போது உண்டாகும் தவிப்பும் மிக அழகாக இருக்கிறது. காதலிக்கும் போது, ஊருக்கும் உலகுக்கும் பயப்படும் பெண், சிறு காயம் பட்டபின், எப்படி தலைகீழாக மாறுகிறாள் என்று சுவையாக சொல்லி இருக்கிறார். பெண்மையின் நாணம், தமிழ் மண்ணுக்கே உரியதாக இருந்தாலும், ஏதோ, ஆங்கில சிறுகதை படித்தது போன்ற உணர்வு. காரணம் இதே ஸ்டைலில் நான் ஒரு ஆங்கில கதை படித்திருக்கிறேன்.

திருவிழாவில் ஒரு குழந்தை, பலூன், ராட்டினம் முதலான எல்லா விஷயத்துக்கு ஆசைப்பட, அதை பெற்றோர் கண்டு கொள்ளாமல் விட, கடைசியாக, அக்குழந்தை தொலைந்து போகிறது. அதை கண்டெடுப்பவர், அதை சமாதானம் செய்ய முயலுகிறார். அதன் பொருட்டு, அக்குழந்தை முதலில் ஆசைப்பட்ட அத்தணை பொருட்களையும் வாங்கி தர முயலுகிறார். ஆனால், அக்குழந்தையோ, ‘எனக்கு அம்மாவும் அப்பாவும் தான் வேண்டும். இதெல்லாம் வேண்டாம்’ என்கிறது, கடைசி வரை பிடிவாதமாக!

இதே கதையில் சாயல் சிறிது இருக்கிறது இதில். ஒருவேளை எழுதியவர், இக்கதையை தழுவி, சூழ்நிலையை சற்று மாற்றி எழுதியிருக்கலாம்.

14. நீரும் நெருப்பும் - வெண்ணிலா
இதுவும் சமூக சாடல் உள்ள கதை தான். கதை புரியுது, ஆரம்ப வரிகளான இவை

//"முல்லைத் தெருவுல தண்ணியடிச்சிட்டு பத்து நிமிசத்துல வந்துடறேன் கொஞ்சம் புள்ளைய பாத்துக்கோங்க""என்ன காலங்காத்தாலயேவா ? ம்ம் நாங்க அடிச்சா மட்டும் தப்பு. சரி போய்ட்டுவா பாத்துக்கிட்டு மட்டும் தான் இருப்பேன். //

யார் யாரிடம் சொல்கிறார்கள் என்று புரியவில்லை. மற்றபடி ஓக்கே தான். பொதுவா, இது போல உரையாடல் வடிவில் எழுதப்படும் கதைகள், எல்லா தரப்பு ரசிகர்களையும் கவரும்.

சின்னப்பையனின் மேல் பெற்றவள் வைத்திருக்கும் பெரிய நம்பிக்கையும், அவன், புகைப்பதை, சிறுவனுக்கே உரிய பார்வையில் புரிந்திருப்பதும், சபாஷ்!

15. நான் அல்லது நான் - நந்தா குமாரன்
ஸ்பிரிச்சுவல் ரியாலிட்டி வகை இது. எனக்கு புரியவில்லை. அவனும் அவனுடைய ஆன்மாவும் என இருவேறு கூறுகள், ஒருவன் ரசனையானவன், ஒருவன் ரசனையற்ற யதார்த்தன்; ஒன்றோடு ஒன்று போட்டியிட, ஒன்றை ஒன்று துரத்த, இறுதியில், ஒன்றிணைகிறார்கள் அல்லது ஒன்றாக அழிகிறார்கள், எழுத்தாளரின் இவ்வரிகள் மூலம்...

//நாங்கள் ...ஆழ்ந்து போனோம்
அமிழ்ந்து போனோம்
அழிந்து போனோம்.//

எனக்கு ரசனை போதவில்லை!

16. வழியனுப்பிய ரயில் - உமா சக்தி
காதலாகி கனிந்து, காமத்தில் கரைந்து, இறுதியில் இந்த வரிகள் உணர்த்துபவை என்ன?

//என்கிட்ட உனக்கு என்ன வேணும்னாலும் என்னால தரமுடியும், ஆனா என்னைத் தவிர..உன்னால இல்லைமா யாராலேயும் என்னை புரிஞ்சுக்கவே முடியாது. எனக்கு வானம் அளவுக்கு ஸ்பேஸ் தேவை, உன்னால கையளவு கூட அதைத் தர முடியாது...தரேன்னு இப்ப சொன்னாலும் அதெல்லாம் சாத்தியமாகதுடா..இப்படி இருக்கத்தான் எனக்குப் பிடிச்சிருக்கு’//

நெத்தியடியான இவ்வரிகள் என்ன சொல்லுது? தன் ஆதர்ச நாயகனுக்கான தேடல், முடிந்தபின் அவன் கிடைக்கிறான் என்பதால், அவனின் தேவை இல்லாமல் போயிற்று என்பதையா? இல்லை மனதில் இருப்பதற்கு முரணாக ஆன்மாவின் தேடல் உள்ளது என்பதையா? புரிஞ்சவங்க சொல்லுங்களேன். மொத்தத்தில் உணர்வுகளின் தொகுப்பு இக்கதை, ஆனா, மெஸேஜ் இல்லை!

17. வள்ளியம்மையின் பழுப்பு கண்கள் - புபட்டியன்
தசாவதாரம் ஸ்டைலில், முந்திய ஜென்ம ஞாபகமோ? காலமும் மாறி மாறி வருது நினைவலைகள் போல...

//பத்தோடு பதினொன்றாக அரசி வேடம் தரிப்பதை விட விடுதலையுடன் பிச்சைக்காரியாக இருத்தல் ஆனந்தமே//

பஞ்ச் டயலாக். நிறைய உரையாடல் வந்தாலும், படிக்க அலுப்பு தட்டுது. யார் யாரிடம் பேசுகிறார்கள். என்ன உறவு? என்ன உணர்வு? ஒன்னும் புரியல.

18. மைய விலக்கு - சத்யராஜ் குமார்
மைய விலக்கின் மைய கதையை வேறெங்கோ வாசித்திருக்கிறேன், வேறு வடிவில். ஆனால், கீழே சொல்லும் வடிவில் அல்ல.

தந்தை, மரப்பெட்டியில் வைத்து, தன் வயதான தகப்பனை ஆற்றில் விட்டுவர, அதை பார்க்கும் மகன், தானும் ஒரு பெட்டி செய்கிறான், தன் தந்தைக்கு வயதான பின் உபயோகிக்க! அதே ஸ்டைல், அதே யுத்தி!

வார்த்தையாக்கம் கதையை போரடிக்காமல் படிக்க வைத்தாலும், கொஞ்சம் கதைக்காக புனையப்பட்ட, செயற்கைதனம் கொஞ்சம் இருக்கிறது.

19. தற்செயலாகப் பறிக்கப்பட்ட ஒரு மலர் - அகநாழிகை
சேர்ந்து வாழ்தல் என்ற பண்பாட்டில் ஒரு ஆண்மகன் வேலைக்காரனாகி போகிறான். எல்லாவற்றையும் சந்தோஷமாக அவளுக்காக, ‘அவள்’ குழந்தைக்காக செய்யும் அவன், அவள் பாதை மாற தொடங்கியதும், இவனும் அவள் பாதையை விட்டு மாறி போகிறான்.

பத்தி பிரிக்காமல் இருப்பதால், படிக்க சற்று சிரமம். கதை சுமாராக இருக்கிறது. ஆனால், எழுதிய விதம் நன்று!

//கீழிறங்கி வந்து சுற்றிக் கொண்டிருக்கும் மின் விசிறியை நின்றபடியே பார்த்தான். பல்லிகளைக் காணவில்லை. இரை கிடைத்திருக்கக்கூடும். அல்லது பகலில் புணர்ச்சிக்கென பதுங்கியிருக்கக் கூடும்.//

மிருகங்களின் காமத்தை கூட விட்டு வைப்பதில்லை நம்மாளுங்க. ஆனா, கையாண்ட விதம் இக்கதைக்கு பொருத்தம். ஏனென்றால், அந்த பல்லியைப் போல ஒதுங்கி பதுங்கியவன் தான் கதை நாயகனும்.

20. காதோரமாய் - ஸ்ரீதர் நாராயணன்.
எல்லாம் புரியுது, ஆனா, எதுவுமே புரியல. என்னவோ, இறந்திட்டாங்கறாங்க, அவன் இவளையே நினைச்சிருந்தாங்கறாங்க, ஒரு சைக்கோ ரேஞ்ச்சுக்கு கொண்டு போய், கடைசியில ஒரு திருநங்கையோவென சந்தேக படும் அளவுக்கு முடித்து... என்னை பொறுத்த வரை இந்த கதை நாட் ஓக்கே!

இந்த வரிக்கு அர்த்தம் புரிஞ்சாப்ல இருந்தது,

//தலைமுடியை சற்றே பின்னுக்கு தள்ளிக்கொண்டு என்னைப் பார்த்து சிரித்ததுக்கொண்டு, கூட்டினில் இருந்த விடுபட்ட பெண்மையாய், பேரானந்தமாய் அங்கே உட்கார்ந்திருந்தது அவன் இல்லை. //

அதுக்கப்புறமா இந்த வரிகளை படித்தவுடன், அந்த அர்த்தம் மறந்து, இல்லை மறைந்து போனது!

//சாம்பல் நிறத்தில் புஷ்டியாக இருந்த முயலை இரு கைகளிலும் பொத்திக் கொண்டு புருபுருவென மூக்கால் தேய்த்தபடி ஆங்கிலத்தில் கொஞ்சிக் கொண்டிருந்தாள் ஜென்னி.//

என்னோட ஸ்டைல்ல, விமர்சனம் எழுதியிருக்கிறேன். நடுவர்களை அவமதிக்கும் செயலாகிவிடும் என்பதால், பரிசுக்கு இவை தகுதியா இல்லையா என்ற கண்ணோட்டம் அல்ல இது.

-சுமஜ்லா.

21 comments:

M.Rishan Shareef said...

அன்பின் சுமஜ்லா,

உங்கள் விமரிசனத்தை வெகுவாக ரசித்தேன். நன்றி சகோதரி !

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

20 சிறுகதைகளின் விமர்சனம் படித்தேன்.
இருபது கதைகளையும் நான் படித்திருக்கவில்லை.
இந்த விமர்சனத்தில் கதை மையக்கருவை எடுத்து
விமர்சனம் செய்திருப்பதால், அக்கதைகளைப்
படித்ததுபோன்றே எண்ணமுடிகிறது.

கதையின் தலைப்புக்களைக் குறிப்பிட்டதோடு
கதாசிரியர்களின் பெயர்களையும் இணைத்துக்
குறிப்பிட்டிருக்கலாம்.

Starjan (ஸ்டார்ஜன்) said...

நல்ல விமர்சன்ம்

RV said...

சுமஜ்லா,

32 வயது சிறுமியை எல்லாம் ஆச்சி, அம்மணி என்று அழைக்க முடியாது. :-)

என் கதை உங்களுக்கு பிடித்திருந்தது மகிழ்ச்சியாக இருக்கிறது. முகுந்தனின் அம்மாவுக்கு இரண்டு புருஷனா, இல்லை சுந்தரம் காதலன் மட்டுமா என்பதை open-ended ஆகவே விட விரும்பினேன், அதனால்தான் அதற்கு மேல் எதுவும் எழுதவில்லை.

மற்ற கதைகளையும் அருமையாக அறிமுகப்படுத்தி இருக்கிறீர்கள். முடிந்தால் எனக்கு மிகவும் பிடித்திருந்த, ஆனால் பரிசு பெறாத யாக்கை கதையையும் படித்து பாருங்கள்.

நீங்கள் எழுதிய கதையை படித்தபோது என்னடா இவ்வளவு அரற்றுகிறார்களே என்று தோன்றியது. ஆனால் அது ஓரளவு சொந்த கதை என்று படித்தபோது மிகவும் கஷ்டமாக இருந்தது. உணர்ச்சிகள் மிகையாக சித்தரிக்கப்படுகின்றனவா இல்லையா என்பதை பட்டவர்கள்தான் சொல்ல முடியும் என்று புரிந்துகொண்டேன். அது சொந்த அனுபவம் என்று நான் புரிந்து கொண்டது தவறாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.

வாழ்த்துகளுடன்,
ஆர்வி

Anonymous said...

//அந்த அம்மாவுக்கு ரெண்டு புருஷன் என்பது. இல்லை //
அந்த அம்மாவும் வேற்று சாதி மனிதரை காதலித்திருக்கிறார் என்பது என் அனுமானம். வேற்று சாதி என்பதால் கல்யாணம் செய்து கொள்ளவில்லை

வெட்டிப்பயல் said...

தங்களின் இந்த பணி பாராட்டத்தக்கது...

மிக்க நன்றி!!!

SUMAZLA/சுமஜ்லா said...

என் விமரிசனத்தை ரசித்து பாராட்டியவர்களுக்கு நன்றி! நிஜாம் அண்ணா, நீங்க சொன்னபடி பெயர்களை இணைத்துவிட்டேன். எழுதியவர் யார் என்று பார்க்காமல், விமர்சனம் படிக்க வேண்டும் என்பதால் தான் முன்னாடி பெயர் தரவில்லை.

SUMAZLA/சுமஜ்லா said...

RV அண்ணா, ஆச்சி, அம்மணினு நான் கூப்பிட சொல்லலையே! அவங்களா ஆச்சின்றாங்க, அவங்களா சிறுமின்றாங்க! எப்படியோ, மொத்தத்துல ஒரு பெண்ணா மதிச்சா ஓக்கே!

நீங்க சொன்னதுக்கப்புறம் படிச்சா, எனக்கு காதலன் என்ற அர்த்தம் தான் தெரியுது.

நான் எழுதிய கதை அரற்றுவது போல இருப்பதாக சொல்கிறீர்கள், ஒரு முறை படித்ததற்கே! என் கணவர், என் அரற்றல் கேட்டு எவ்வளவு கஷ்டப்பட்டிருப்பார்? :-)

ஒரு சாமானிய பெண்ணுக்கு அது கொஞ்சம் ஓவரா இருக்கலாம். ஆனா, வாழ்க்கையையே கவிதை போல வாழும் என்னைப் போன்றவர்களுக்கு, அது சாதாரணம். கதையில் தம்பி பாடலை மாற்றி பாடியது உட்பட, எல்லாம் அக்மார்க் உண்மை. உள்ளத, உள்ளபடி எழுதுவது சற்று சுலபமா இருந்துச்சு; அதான் இந்த கதை. இனி போட்டிக்கெல்லாம் சொந்த கதை நொந்த கதை எழுத போவதில்லை.

//அது சொந்த அனுபவம் என்று நான் புரிந்து கொண்டது தவறாக இருந்தால் ரொம்ப சந்தோஷப்படுவேன்.//

சொந்த அனுபவம் என்று சொன்ன பிறது, ஏன் இந்த வரிகள்? புரியவில்லை. ஆனால், நடந்து முடிந்தது, 2002ல். அதற்கு பிறகு 2003ல் என் மகன் பிறந்து என் மன காயத்தை ஆற்றினான்.

கதையின் இடையே, கவிதை என்று ஒரு லின்க் இருக்கும். அதை படித்து பாருங்கள். அது நான் அந்த பிள்ளை பிறக்கும் முன் எழுதியது தான். இடையில் 4 வரிகள் மட்டும் பிறந்த பின் சேர்த்தேன்.

RV said...

சுமஜ்லா,

சோகத்திலிருந்து எழுந்து வந்ததற்கு வாழ்த்துகள். உங்கள் குடும்பம் வளமாக வாழ வேண்டும் என்று நெஞ்சார வாழ்த்துகிறேன்.

உங்களுக்கே நடந்திருக்காதோ, நீங்கள் எங்கோ பார்த்த, கேட்ட சோக நிகழ்ச்சியாக இருக்கலாமோ என்ற நப்பாசைதான்.

சோகத்தை நீங்கள் அனுபவித்தீர்கள், அதில் அதிகம் அரற்றுதல் என்ன கொஞ்சம் அரற்றுதல் என்ன? அது உங்கள் உணர்ச்சிகளின் வெளிப்பாடு. ஒரு கதையாக எழுதும்போது உணர்ச்சிகளை மட்டுமே வைத்து எழுதுவது கஷ்டம் என்ப்து என் கருத்து, அவ்வளவுதான்.

உங்களுக்கு யாக்கை பிடிக்கவில்லை என்று படித்தேன். நமக்கு ரசனை மாறுபட்டிருக்கிறது, அவ்வளவுதான். இது அந்த மனிதர் செய்தது சரியா தவறா என்பதில்லை, அவரது பாத்திரம் நம்பகத்தன்மை உள்ளதாக இருக்கிறதா, அவரது frustration எப்படி வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது என்பவைதான் எனக்கு அங்கே முக்கியமாக இருந்தது. உங்களுக்கு
அவரது செய்கை முக்கியமாக தெரிந்திருக்கிறது. (இதுவே அவர் கொலை செய்வதாகவோ, திருடுவதாகவோ இருந்தால் அது சரியா தவறா, மார்க்கம் என்ன சொல்கிறது என்று யோசித்திருக்க மாட்டீர்கள்!)

சென்ஷி said...

;-)

நீங்க ஒரு பன்முக திறமை வாய்ந்த கலைஞர்ன்னு அடிக்கடி நிரூபிக்கறீங்க. 20கதையும் படிச்சு உடனே அதுக்கு விமர்சனமுமா! அசத்தல்... சும்மா மேலோட்டமா விமர்சிச்சது போலத்தான் எனக்கு தோணுது.இன்னும் ஆழமா அவங்க சொல்ல வந்த கருத்துக்களையும் அதுல இருக்குற முரணையும் எடுத்துக்காட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்.

வெட்டிப்பயல் said...

//இன்னும் ஆழமா அவங்க சொல்ல வந்த கருத்துக்களையும் அதுல இருக்குற முரணையும் எடுத்துக்காட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்//

சென்ஷி,
உன்கிட்ட இருந்து அதை எதிர்பார்க்கலாமா? :)

SUMAZLA/சுமஜ்லா said...

//சும்மா மேலோட்டமா விமர்சிச்சது போலத்தான் எனக்கு தோணுது.இன்னும் ஆழமா அவங்க சொல்ல வந்த கருத்துக்களையும் அதுல இருக்குற முரணையும் எடுத்துக்காட்டியிருந்தா நல்லா இருந்திருக்கும்.//

எனக்கும் அப்படித்தான் தோன்றியது. ஆனால், ஒவ்வொரு கதைக்கும் தனி பதிவு எழுத வேண்டும். ஒரே நாளில் முடியாது. முடிவு வெளியான பின், எத்துணை பேர் அதை ரசிப்பார்கள் என்று தான் விட்டு விட்டேன்.

manjoorraja said...

அனைத்துக்கதைகளையும் பற்றிய உங்களின் கருத்து (விமர்சனம்??) மேலோட்டமாக கதைகளைப் பற்றி தெரிந்துக்கொள்ள மிகவும் உதவுகிறது. (இதுவரை எந்தக் கதையையும் படிக்கவில்லை என்பது வேறுவிசயம்). எப்படியோ உங்கள் பதிவை காண ஜெஸிலாவின் பதிவின் மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது (அவன் அப்படித்தான்).

சுவையாக எழுதுகிறீர்கள்.

கதைகளை விரைவில் படித்துவிட்டு வருகிறேன்.
நன்றி.

இரா. வசந்த குமார். said...

அன்பு சுமஜ்லா மேடம்...

கதை பற்றிய தங்கள் கருத்துக்களுக்கு நன்றிகள். அக்கதையில் சொல்ல வந்தது, காதலித்து மணம் செய்து குழந்தை பிறந்ததும் இல்லற வாழ்வில் லேசான சலிப்பு தோன்றத் தொடங்கும். அந்த அலுப்பை நாயகன் இளைஞன் மேல் கூறும் வரிகளிலிருந்து புரிந்து கொள்ளலாம். பிறகு அந்தப் பெரியவர், தன் காதலுக்காக இந்த வயதிலும் தானாய் உழைத்து வாழ்வதைக் கண்டதும் 'தான் எத்தனை அதிர்ஷ்டசாலி' என்பதை உணர்கிறான்.

இத்தனை விளக்கமாய்த் தோன்றுமாறு கதை சொல்லாமல் விடப்பட்டது, படிப்பவர்களே புரிந்து கொள்ளட்டும் என்று தான். சரி தானே..?

நன்றிகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

வசந்த குமார்,
‘மண்டு உனக்கு என் கதை புரியல’ என்று சொல்லாமல் சொல்லும் உங்கள் நாசூக்கு எனக்கு பிடித்திருக்கிறது. எனக்கென்னவோ, அந்த கிழவன் கேரக்டர், வம்படியாய் உள்ளே நுழைத்தது போல் இருந்தது. மற்றபடி ஓக்கே!

அகநாழிகை said...

கதைகளைப் பற்றிய உங்கள் பார்வை நன்றாக இருந்தது.

“அகநாழிகை“
பொன்.வாசுதேவன்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி அகநாழிகை சார்!

கலையரசன் said...

இதுபோல செந்தழல் ரவியும் ஒரு தடவை எழுதியிருந்தார்...
உங்களது விமர்சனம் அதைவிட நன்று!!

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி கலையரசரே, அவரவர் பார்வை அவரவர் கோணத்தில்! அவர் ஏற்றது பெரும்பணி!

இரா. வசந்த குமார். said...

dear madam,

plz check :: http://kaalapayani.blogspot.com/2009/07/blog-post_02.html

this is the background of that story..!!

Tnx.

நந்தாகுமாரன் said...

இத்தனை வருஷம் கழித்து இப்பொழுது தான் என் கதைக்கான உங்கள் விமர்சனம் படிக்கிறேன் ... புரியவில்லை என்கிறீர்கள் ... பரவாயில்லை விடுங்கள் :) ... நன்றி