Thursday, August 20, 2009

(LPG) கேஸ் ட்ரபுளா?

“நான் கலெக்டரை பார்க்கணும்ங்க”

“என்ன விஷயம்மா? எதுக்கு பார்க்கணும்?”

“சிவில் சப்ளைஸ் சம்பந்தமா ஒரு புகார் இருக்கு! அவர்கிட்ட தான் நேர்ல சொல்லணும்!”

“தோ, அந்த ரூமுக்குள்ள போங்க டெபுடி கலெக்டர் இருப்பாரு! அவர்கிட்ட சொல்லுங்க!”

நேராக அந்த ரூமுக்குள் போனேன்.

“சார், LPG சிலிண்டர் சம்பந்தமா ஒரு புகார். நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலா கேட்கிறாங்க”

“எந்த கேஸ்மா? எவ்ளோ கேட்கிறாங்க? என்னன்னு விவரமா சொன்னாத்தானே புரியும்!”

“சார், எங்களுடையது, ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கேஸ், கேஸ் விலைக்கு மேல 30 ருபா கொடுத்தாதான் சப்ளை பண்ணுவேன், இல்லாட்டி கொடுக்க மாட்டேங்கிறாங்க! ஒரு சிலிண்டர் தான் அடிசனல் கிடையாது, அதனால என்ன விலை சொன்னாலும் கொடுத்துருவாங்கன்னு மிதப்பா பேசறாங்க”

“சொன்னது யாருமா? ஓனர் கிட்ட சொன்னிங்களா?”

“சார், ஓனர்கிட்டயே டைரக்டா நான் போன்ல பேசிட்டேன். அந்த போன் காலயும் ரெகார்டு பண்ணிட்டேன். இதோ போடறேன், நீங்களும் கேளுங்க!”



“பார்த்தீங்களா? நீங்க அவங்க மேல நடவடிக்கை எடுத்து, எனக்கு தக்க தீர்வு தரணும்! நாங்க பரவாயில்லை, காசு உள்ளவங்க, கொடுத்திடுவோம், ஆனா, கவர்ன்மெண்ட் இலவசமா கனெக்‌ஷன் கொடுத்திட்டு, இப்படி பண்ணினா, ஏழைங்க என்ன செய்வாங்க, சொல்லுங்க சார்!”

“சரிமா, உங்க புகாரை ஒரு பேப்பரில் எழுதி கொடுத்திட்டு போங்க”

“அதுமட்டுமில்லைங்க, நான் ஒவ்வொரு முறையும், இப்படி தட்டி கேட்கிறேங்கற காரணத்துக்காக, பாருங்க பில்லை; பில் போட்டு 5 நாளாச்சு, இன்னிக்கு தான் கொண்டு வர்ராங்க சிலிண்டர். ஒத்தை சிலிண்டர் வெச்சிருக்கோம்னு தெரிஞ்சிக்கிட்டே இப்படி பண்ணறாங்க. அடிசனலும் சப்ளை இல்லங்கறாங்க!”

“சரி, நாங்க நடவடிக்கை எடுக்கறோம். அந்த பில் ஜெராக்ஸோட, உங்க போன் நம்பரையும் கொடுத்திட்டு போங்க!”

கொடுத்து விட்டு வந்தேன். இது நடந்தது, 2 ஜூலை 2008ல்.

ப்ளேயரில் நீங்கள் கேட்டது போல, எங்க ஏரியாவில் புக்கிங் ஆஃபீஸ் என்று ஒன்று வைத்துக் கொண்டு, இங்கு மார்க்கெட் பிடித்தார்கள். குடோன் 16 கிலோ மீட்டருக்கு அப்பால்! புக்கிங் ஆஃபீஸில் சட்டப்படி கேஸ் ஸ்டாக் செய்ய கூடாது. ஆனால், ஸ்டாக் செய்திருந்ததை நான் புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்டேன்! ஒரு இடத்தில் கேஸ் ஸ்டாக் செய்தால், ஃபயர் எக்ஸ்டிங்கிஷர், மணல் பக்கிட் முதலானவை இருக்க வேண்டும். அதுவும் இல்லை. இதெல்லாம் எனக்கு வலுவான பாயிண்ட்டுகள். இதை பெரிதாக்கினால், அவர் லைசன்ஸே கேன்சலாகி விடும்.

இரண்டு நாள் கழித்து, ராயல் கேஸ் ஓனர் போன் செய்தார், “அம்மா, என்னம்மா நீங்க, இப்படி செய்திட்டிங்க. நானும் ஒரு பாய்தாம்மா! நம்ம மாவட்டத்திலேயே நம்ம ஆளு (முஸ்லிம்) ஒருத்தருக்காவது தரணும்னு, ரொம்ப கஷ்டப்பட்டு, அரசியல்வாதிகளைப் பிடித்து லைசன்ஸ் வாங்கினேன்மா! நீங்க புகாரை வாபஸ் வாங்கிக்கங்க! உங்களுக்கு நான் எல்லாத்தையும் சரி செய்து தர்ரேன்!”

“அப்ப நீங்க தான சார் எங்க வேணாலும் போங்கன்னு சொன்னிங்க! போக மாட்டோம்ங்கற தைரியம் தான?!”

“நடந்தது நடந்து போச்சு! இனிமே, நடக்காது, நீங்களும் இந்த வருஷம் ஹஜ்ஜுக்கு போறேன்றீங்க! எதுவும் மனசில வெச்சுக்காதீங்கம்மா!”

அடுத்த நாளே, சப் கலெக்டர் போன் செய்தார். அவர்களுக்குள் என்ன டீல் நடந்ததோ தெரியவில்லை,

“அம்மா, நான் சப் கலெக்டர் பேசறேன்மா! அவரும் பாய்! நீங்களும் பாய்! இரண்டு பேரும் சுமுகமா போயிட்டீங்கன்னா, எனக்கு ஒரு நாளைக்கு பிரியாணி கிடைக்கும்! என்னம்மா சொல்றீங்க! புகாரை வாபஸ் வாங்கிடுங்க!”

“சரி சார், நான் புகாரை வாபஸ் வாங்கிக்கிறேன். ஆனா, அதிக தொகை கேட்டதற்கு நீங்க என்ன நடவடிக்கை எடுக்கப் போறீங்க?”

“இனி, அவர் பில் தந்தா மட்டும் அதிக தொகை கொடுங்க! எவ்வளவுக்கு பில் தர்ராரோ, அந்த அமௌண்ட் மட்டும் கொடுத்திங்கன்னா போதும். நான் அவர்கிட்ட பேசிட்டேன்!”

நான் புகாரை வாபஸ் வாங்கிக் கொண்டேன்.

இது நடந்த போது, என் கணவர் கைவலிக்காக தினமும் பிஸியோதெரபி செய்து கொண்டு இருந்தார். அவரால், ஸ்கூட்டர் ஓட்ட முடியாமல் இருந்ததால், நான் தான் தினமும், ஸ்கூட்டியில் அவரை ஆஸ்பிடலுக்கு, அழைத்து போய் வந்து கொண்டு இருந்தேன்.

அன்று ஆஸ்பிடலில், அவரை டிராப் செய்து விட்டு, தனியாக நான் மட்டும் தான் கலெக்டர் அலுவலகம் சென்று புகார் கொடுத்தேன்.

பின்னால், அடிசினல் சிலிண்டர் தராமல், நமக்கு இழுத்தடித்து பிரச்சினை செய்வாங்க என்று அவர் பயந்து என்னை தடுத்தார். நான் தைரியம் சொல்லி, HP வெப்சைட்டில் போய், அடிசினல் சிலிண்டருக்கு புக் செய்து விட்டேன். கலைஞரின் இலவச கேஸுக்காக சிலிண்டர் சப்ளை செய்வதால், அடிசனல் தர சிறிது காலம் ஆகும் என்று எனக்கு மெயில் வந்தது. அதோடு விட்டு விட்டேன்.

அதன் பின், சிலிண்டருடன் எக்ட்ரா பில் எதுவும் தருவதில்லை. நானாக போனால் போகிறது என்று சிலிண்டர் தொகைக்கு மேல் பத்து ருபாய் மட்டும் டிப்ஸ் தருவேன். முன்பெல்லாம் ரொம்பவும் திமிர் பேசிய கேஸ் சப்ளையர், இப்போ, ரொம்ப மரியாதையோடு, பணிவாக வாய் பேசாமல் வாங்கி போகிறான்.

போன, நவம்பரில், அடிசனல் தருவதாக சொன்னார்கள். போய் கேட்டால், ருபாய் 3000 மதிப்புள்ள குக்கரோ, மிக்ஸியோ, கிரைண்டரோ, எதாவது ஒரு பொருள் வாங்கினால் தான் அடிசனல் என்று ஒரு லிஸ்ட்டை காட்டினார்கள்.

அப்போ, நாங்கள் ஹஜ்ஜுக்கு புறப்பட்டு கொண்டிருந்ததால், எனக்கு குக்கர் ஒன்று, அதுவும் இண்டக்‌ஷன் அடுப்பில் வைக்க, சில்வர் குக்கர் தேவைப்பட்டது. நான், 10 லிட்டர் குக்கர் வேண்டும் என்றேன். அது ஸ்டாக் இல்லை. ஒரு வாரத்தில் வந்து விடும் என்று சொன்னார்கள். நான் பார்ம் மட்டும் ஃபில்லப் செய்து கொடுத்து விட்டு ஒரு வாரம் கழித்து வந்து பணம் கட்டி பெற்றுக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டேன்.

ஹஜ் கிளம்பும் வரை குக்கர் வரவில்லை. வேறு குக்கர் வாங்கி, நாங்கள் ஹஜ் போய் வந்துவிட்டோம். இப்போ, மீண்டும் கம்பெனியில் இருந்து போன் வந்தது, வந்து அடிசனல் வாங்கி கொள்ளுங்கள் என்று!

எல்லா பொருளும் எனக்கு இருக்கு, என்ன வாங்குவது என்று, நான் இரண்டு மாதமாக போய் அடிசனல் வாங்கவே இல்லை. இப்போ மீண்டும், கேஸ் கொண்டு வருபவரிடம் தூது அனுப்பினார்கள்,

“நீங்கள் பொருள் வாங்காவிட்டாலும் பரவாயில்லை, வந்து சிலிண்டருக்கான பணம் மட்டும் செலுத்தி பெற்றுக்கொள்ளுங்கள்” என்று!

சந்தோஷமாக, போய், போன ஏப்ரலில், பில் தொகை மட்டும் செலுத்தி, சிலிண்டர் பெற்றுக் கொண்டோம். பாக்கி சில்லரை நான்கு ருபாய்களை எண்ணி அவர் என் கையில் கொடுத்த போது, எனக்கு சிரிப்பு வந்து விட்டது.

ஆனால், எனக்கு தெரிந்தவர்கள் பலரும், பொருள் வாங்க காசில்லாமல், இன்னும் அடிசனல் வாங்காமலே இருக்கின்றனர்.

இப்போ சொல்லுங்கள், குட்ட குட்ட குனிவது நல்லதா? இல்லை சிறுமை கண்டு பொங்குவது நல்லதா?

-சுமஜ்லா.
.
.

24 comments:

சாருஸ்ரீராஜ் said...

மிகவும் தைரியசாலி தான் நீங்கள்

சுரேகா.. said...

நீங்க செஞ்சதுதான் சரி!

இதுமாதிரி பல அனுபவங்கள் இருக்கு எங்ககிட்ட!!
:)

Vidhoosh said...

well done. i admire you.
-vidhya

புருனோ Bruno said...

//இப்போ சொல்லுங்கள், குட்ட குட்ட குனிவது நல்லதா? இல்லை சிறுமை கண்டு பொங்குவது நல்லதா?

-சுமஜ்லா.//

பொங்குவது தான் !!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

'கேஸ்' சப்ளையர் மேலேயே, கலெக்டர்கிட்ட
'கேஸ்' குடுத்திட்டீங்க. கடை ஓனர் பேசினதோட
ரெகார்டரையும் கலெக்டர்கிட்ட ஆதாரமாக்
கொடுத்திட்டீங்க. அதுமட்டுமில்லாம
அதை வலைப் பூவுலயும் போட்டு(க் காட்டி)ட்டீங்க.
சாதிச்சிட்டீங்க.

அப்புறம்... பில் தொகை 1650 மட்டும் செலுத்தி
சிலிண்டர் பெற்றுக் கொண்டீங்க, சரி! நான்கு
ரூபாய் பாக்கி சில்லரை 'அவர்' ஏன் மீதி தந்தார்?
புரியலையே?

Anonymous said...

இப்படி கூட நடக்கிறதா. நம்ப முடியவில்லை.
இந்த விஷயம் உலகம் பூரா தெரிந்து விட்டது அந்த கலெக்டருக்குத் தெரியுமா?
வாழ்க, உங்கள் துணிவு.
வாழ்த்துகள்.


மலேசியாவிலிருந்து
முத்துக்கிருஷ்ணன்

SUMAZLA/சுமஜ்லா said...

//அப்புறம்... பில் தொகை 1650 மட்டும் செலுத்தி
சிலிண்டர் பெற்றுக் கொண்டீங்க, சரி! நான்கு
ரூபாய் பாக்கி சில்லரை 'அவர்' ஏன் மீதி தந்தார்?
புரியலையே?//

சரியான கேள்வி! 1650 என்பது அப்ராக்ஸிமேட் அல்லது நினைவில் நிற்பது! ஒரு வேளை 1640 க்கு, நாங்கள் 1650 கொடுத்து மிச்சம் 10 கொடுத்தாரா தெரியவில்லை. ஒரு வேளை எதாவது சர் சார்ஜினால், மீதி 4 ருபாய் வந்ததோ?!

இது என் நினைவலையில் ஒரு சின்ன சறுக்கல். மொத்தத்தில் நான் எதிர்பார்க்கவில்லை, மிச்சத்தை தருவார் என்று, ஆனால், தந்து விட்டார்! டாகுமெண்ட்ஸ் ஃபைலில் பில்லை தேடினால், சரியான தொகை தெரியும்.

தேதி சரியாக சொன்னது, என் செல்லில் ரெகார்டு ஆகி இருந்த தேதியை வைத்து!

SUMAZLA/சுமஜ்லா said...

//இந்த விஷயம் உலகம் பூரா தெரிந்து விட்டது அந்த கலெக்டருக்குத் தெரியுமா?//

நடந்த உண்மையை சொல்ல யாருக்கு பயப்பட வேண்டும்?!

Anonymous said...

வீரப் பெண்மணி சுமஜ்லா!

SUMAZLA/சுமஜ்லா said...

ஹலோ சார், என்னை பாராட்டுவதற்காக இந்த பதிவு இல்லை. நாலு பேருக்கு விழிப்புணர்வு வந்தால் அதுவே சந்தோஷம். நாலு பேருக்கு போய் சேர, ஓட்டு போட்டிங்கன்னா பரவாயில்லை(அரசியல் வாதி ரேஞ்சுக்கு ஆயிட்டேனோ?!)

இந்த கேஸ்காரங்க, உங்க ஊரில் எல்லாம் எப்படி?

இராஜகிரியார் said...

உங்களைப் போல் எல்லோரும் தட்டிக் கேட்க ஆரம்பித்தால் இது போல் ஏமாற்று வேலைகள் வெகுவாக குறைந்து விடும். பாராட்டுக்கள்...

ஒரு சின்ன சந்தேகம். நாம் உரையாடலை பதிவு செய்யும் போது முதலில் எதிர்தரப்பினரிடம் தெரிவித்து விட்டு தானே செய்ய வேண்டும். நீங்கள் செய்தது போல் இறுதியில் தெரிவிப்பது சட்டபடி சரியா? (கலெக்கடரிம் போட்டு காட்டியுள்ளீர்கள். சரியாகத் தான் இருக்கும். இருப்பினும் இது பற்றி தெரிந்துக் கொள்ள வேண்டும்).

SUMAZLA/சுமஜ்லா said...

நமக்கு ஆதாரம் வேண்டும். நம்மை அநியாயம் செய்கிறார்கள் எனும் போது, ஆதாரமில்லாமல், என்னை போன்ற ஒரு சாமானிய பெண்ணால் என்ன செய்ய முடியும்?

தான் வைத்தது தான் சட்டம் என்று பேசுபவரிடம், சட்டப்படி நடக்க முயன்றால், நீதி கிடைக்காது!(இது சட்டப்படி சரியா தவறா என்று எனக்கு தெரியாது என்றாலும், என் வாதம் இது!)

ரெக்கார்டு ஆகிறது என்று சொன்னபிறகும், ஓரிரு நிமிடங்கள் என்ன கெத்தாக அவர் பேசுகிறார் என்று கேட்டீர்கள் தானே?!

GEETHA ACHAL said...

கலக்கிட்டிங்க சுஹைனா ...உங்களை போன்றே அனைவரும் இருந்தால் வீட்டிற்கும் நாட்டிற்கும் நல்லது..

கலாட்டாப்பையன் said...

இப்படி தான் எனக்கும் ஒரு நிகழ்ச்சி நடந்தது, ரேஷன் கடைல போய் சுகர் வாங்க போன்னேன், அவன் சொன்னான் உங்க கார்டு ல அரிசி ல இருந்து சுகர் வர வங்கியசுனு, பட் நாங்க ஏதும் வாங்கல, எதாவது ஒன்னு வாங்கின தான் ரேஷன் கார்டு உசுரோட இருக்கும் இல்லடி செல்லமா போயடுன்ம்னு தான் சுகர் வாங்குறோம், அதையும் ஆட்டய போட்ட என்ன அர்த்தம்? சோ உடனே உணவு வழங்கல் அதிகாரிக்கு அங்க இருந்தே போன் போட்டேன் அவர் சொன்னார் அந்த ரேஷன் காரனிடம் கொடுங்க போன நு, ஸ்பிகர் போட்டு அவரிடம் கொடுத்தேன் விட்டாரு பாருங்க டோஸ்.... அப்புறம் அதுல இருந்து நான் அந்த சைடு போனா குட என்னங்க சார் சுகர் வேண்டாமா...நு கேக்குறான்......

நட்புடன் ஜமால் said...

இப்போ சொல்லுங்கள், குட்ட குட்ட குனிவது நல்லதா? இல்லை சிறுமை கண்டு பொங்குவது நல்லதா? ]]

குனிவது கூடவே கூடாது


பொங்குதலும் ஜாக்கிரதையா இருக்கனும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//பொங்குதலும் ஜாக்கிரதையா இருக்கனும்.//

நன்றி ஜமால்! இதையே தான் எங்கம்மாவும் சொல்வார்கள். பெரிய இடத்து வம்பை விலை கொடுத்து வாங்குகிறேன் என்பது அவர் எண்ணம்!

யாசவி said...

ur action give a ray of hope still we can do something against these people.

But beware all people not like this.

:-)

வால்பையன் said...

அவர் ஒரு முஸ்லீமாக இல்லையென்றால் கேஷை வாபஸ் வாங்கியிருப்பிங்களா!?

SUMAZLA/சுமஜ்லா said...

//அவர் ஒரு முஸ்லீமாக இல்லையென்றால் கேஷை வாபஸ் வாங்கியிருப்பிங்களா!?//

புகார் செய்யும் முன்பாகவே தெரியும் அவர் ஒரு முஸ்லிம் என்று! எனக்கு தெரியாது என்று அவர் தான் நினைத்திருக்கிறார்!

மதம் வேறு! மனிதம் வேறு! இரண்டையும் சம்பந்தப்படுத்துவது, மதத்தின் மட்டுமல்ல, மனிதத்தின் புனிதத்தையும் கெடுத்துவிடும்!

உங்களுக்கு தெரியுமா? எனக்கு ஹிந்து தோழிகள் தான் அதிகம்! என் வகுப்பில் நான் ஒரே ஒரு முஸ்லிம் மட்டுமே!

வரதராஜலு .பூ said...

துணிந்து ரிஸ்க் எடுத்து சாதித்ததற்கு வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

சபாஷ்!
 
நானும் இப்ப அடிஷனல் சிலிண்டர் இல்லாமல் கஷ்டப்படுறேன்.  அடிஷனல் சிலிண்டர் பெற எந்த வெப்சைட்டில் அப்ளை பண்ணனும். லிங்க் கொடுங்க

SUMAZLA/சுமஜ்லா said...

உழவன், உங்கள் ஊரில் இப்படி அதிக டிப்ஸ் எல்லாம் கேட்பதில்லையா?

அப்புறம், எந்த கம்பெனி, இண்டியன் ஆயிலா, பாரத் கேஸா, ஹிந்துஸ்தான் பெட்ரோலியமா? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு வெப்சைட்!

என்னுடையது HP நான் பதிந்தது, www.hindustanpetroleum.com ல்!

S.A. நவாஸுதீன் said...

எல்லாரும் பாராட்டுரதால எல்லா இடத்திலும் இப்படி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. சில இடங்களில் விலகி இருப்பதே நல்லது

SUMAZLA/சுமஜ்லா said...

//எல்லாரும் பாராட்டுரதால எல்லா இடத்திலும் இப்படி இருக்க வேண்டாம் என்பது என் கருத்து. சில இடங்களில் விலகி இருப்பதே நல்லது//

நீங்கள் அக்கரையோடு சொல்வது புரிகிறது. ஆனால், நான் பாராட்டை எதிர்பார்த்து, இதை சொல்லவில்லை சகோதரரே! விழிப்புணர்ச்சி தேவை, குறிப்பா நம்ம மார்க்கத்தில் பெண்களிடம் அது வெகு குறைவு!

அதோடு, இதற்கான பதிலை, வேறொரு சமயத்தில், வேறொரு அனுபவ இடுகையின் மூலம் சொல்கிறேன்.

ஏனோ நியாயம் கிடைக்கும் வரை போராடுவது என் பிறவி குணமாக ஆகிவிட்டது. அதனால், பல பேரிடம் கெட்ட பேரும் கூட!