வாசலிலே நீர்தெளித்து, கோலமிட்டு முடிப்பதுவும்,
கிண்கிணியாய் சிரிப்பொலிக்க கிணற்றடியில் குளிப்பதுவும்
வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திருநாளினிலே!
தாயெங்கே, தந்தையெங்கே, கிணறெங்கே, சிரிப்பெங்கே?
ஆனாலும் பெருநாளும் வந்தேதான் செல்கிறது!
சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும்
சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!!
பட்டாசு வெடிவெடித்து உற்சாகம் புரண்டோட,
பட்டாடை சரசரக்க உற்றாரைக் காண்பதுவும்,
தோழியரின் கரம்பிடித்து ஊர்க்கதைகள் பேசுவதும்
வந்ததொரு நெடுங்கனவாய் இந்த திரு நாளினிலே!
பட்டாசு இருந்தாலும் வெடிவைக்க இடமில்லை,
பட்டாடை அணிந்தாலும் பாழ்மனதில் நிறைவில்லை
எட்டாத கனிக்காசை மனமெல்லாம் இப்போது!
விட்டாலும் விலகாத எண்ணத்தில் தப்பேது?
தாய் செய்யும் பட்சணத்தை நாம் திருடி வைத்திருந்து
போய் ஒளிந்து தின்னும் போது நாவினிக்கும் தனிசுவைதான்!
மாலையிலே குடும்பத்தோடு குதூகலிக்கும் நேரங்காலம்,
மங்கலாக மனவெளியில் குதியாட்டம் போடுதடா!
உயிரெல்லாம் தாய்நாட்டில் உடல்மட்டும் அயல்கூட்டில்,
வயிறெல்லாம் நிறைந்தாலும் இனிப்பில்லை, அயல்ஸ்வீட்டில்!
சந்தோஷம் எதுவென்று தேடித்தான் பிடித்தாலும்
சம்சார சாகரத்தின் அலையிங்கு இல்லையடா!!
சந்தோஷப் பரிமாற்றம் எல்லாமே ஃபோன் மூலம்,
விழியோரம் நீர்துளிக்க வாய்பாடும் பூபாளம்!
எல்லாமே இருந்தாலும் எதுவுமே இல்லாத
ஏக்கத்தின் தாக்கத்தில் உள்மனது சுருங்குதடா!
கைநிறைய பணமிருக்கு, மனம்நிறைந்த மகிழ்வில்லை,
பைநிறைய ஸ்வீட்டிருக்கு, தின்னத்தான் ஆளில்லை!
வான்வழியே பறந்து வர இறக்கை மட்டும் இருந்திருந்தால்,
மண்வாசம் தான் பிடிக்க பறந்தோடி வந்திருப்பேன்!!!
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!
(இது ஒரு மீள்பதிவு)
-சுமஜ்லா
Tweet | ||||
7 comments:
மீள்பதிவாக இருந்தாலும்
"அயல்நாட்டு தீபாவளி" அழகாக தொகுத்து எழுதப்பட்டுள்ளது..
அதற்காக உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...
நாங்கள் எல்லாம் சில வருடங்களாக அயல்நாட்டு தீபாவளி தானே கொண்டாடி வருகிறோம்...
என் மனம் கனிந்த தீபாவளி நல்வாழ்த்துக்கள் சுமஜ்லா மற்றும் குடும்பத்தார்க்கு...
சுஹைனா நலமா?
அயல் நாட்டில் உள்ளவர்ரின் ஏக்கத்தை அழகாக சொல்லி இருக்கீங்க
என் மனசுல இருந்து சொல்றமாதிரி இருக்குப்பா...நன்றி..சுஹைனா ரொம்ப பிஸியா...
அயல் நாட்டு வாழ் நண்பர்கள் பலரின் எண்ண ஓட்டங்களை அழகாக சொல்லி இருக்கின்றீர்கள், நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துக்கள்.
// வான்வழியே பறந்து வர இறக்கை மட்டும் இருந்திருந்தால்,
மண்வாசம் தான் பிடிக்க பறந்தோடி வந்திருப்பேன்!!! //
என்ன பண்றது....
இந்த வருட தொலை(தூர)தீபாவளி
அடுத்த வருட தலைதீபாவளியாய்
மாறும் என்ற நம்பிக்கையில்.....
முன்பு நான் இட்ட இந்த பதிவு பலரையும் சென்றடையவில்லை. அதனால், இக்காலம் பொருத்தமாக இருக்கும் என்று மீள்பதிவிட்டேன்.
கோபி, வசந்த் மற்றும் சாரதி உங்கள் எண்ணவோட்டம் புரிகிறது...சாரதி நீங்கள் எண்ணிய வண்ணமே, அடுத்த வருடம் தலை தீபாவளியாக அமைய வாழ்த்துக்கள்!
//சுஹைனா ரொம்ப பிஸியா...//
என்ன வசந்த, இப்படி கேட்டுட்டீங்க?!
ஆடுன காலும் பாடின வாயும் சும்மா இருக்குமாங்கற மாதிரி தான் பதிவிடுவதும்...என்ன காய்ச்சல் தலைவலியா இருந்தாலும், தினம் ஒரு பதிவு போட்டுக் கொண்டிருந்த நான், இப்போ, கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்னா அதுக்கு காரணம், 24 மணி நேரம் பற்றுவதில்லை...
அப்படியே மிஷின் மாதிரி லைஃப் போகுது...நேரம் கண் மூடி திறப்பதற்குள் பறந்து விடுகிறது...ஆனா, இந்த காலேஜ் லைஃப்ஃபும் ஜாலியாத்தான் இருக்கு! என்னப்பா செய்யுறது?????
சுஹைனா,
இந்த "சாயபு வீட்டு சரித்திரம்" மட்டுமாவது "Auto publish"ல் போட்டு விடக்கூடாதா? ரொம்பப் பொறுமையை சோதிக்கிறீங்களே!!
Post a Comment