Saturday, October 24, 2009

தக்கனூண்டு குட்டிப் பாப்பா நானு


நாள் நட்சத்திரம் பார்க்காமல்,
ஜாதகக் குறிப்பையும் புரட்டாமல்,
மணம் முடித்தன
சுக்கிலமும் சுரோணிதமும்!

இரண்டும் ஒன்றாய் இணைவு கொள்ள
இதயமாய் துடித்தேன் நான்!

குழாய் மூலம்
வயலுக்கு நீர்ப்பாய்ச்சுவது போல
நேரத்துக்கு நேரம்
எனக்கு சோறு பாய்ச்சினார்கள்!

பேரில் பனி இருந்தாலும்
இந்த குடத்துக்குள்
குளிரில்லை!
நீரில் நான் மிதப்பதால்,
தண்ணீர் பஞ்சம்
எனக்கில்லை!!

இடத்தகராறு நிலத்தகராறு
நான் செய்யாமல்,
கிடைத்த இடத்தில்
குந்திக் கொள்வேன்!
திட உணவு உண்ணாவிட்டாலும்,
சத்துக்களை உறிஞ்ச மட்டும்
முந்திக் கொள்வேன்!!

தடைச்சுவராய் தோள்சுவர்கள்,
தாண்டிடுவேன் ஒரு நாள் நான்!

விடைதருவேன் கருவறைக்கு
வியனுலகைக் கண்டிடவே!!

கோபமென்றாலும் குஷியென்றாலும்
விடுவேன் ஒரு உதை!
என் உதைக்கு
மனிதவதைத் தடுப்பு சட்டத்தில்
தண்டனை தர வழியில்லை
என்பதால்,
தைரியமாகச் சொல்கிறேன் இதை!!

அம்மா!
நீ தூங்கும் போது
உனக்கே தெரியாமல்
மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்
அப்பாவின் செய்கையை,
நீ அறிவாயா?!

கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!

ஐயோ, என்ன இது?
என்னை என்னமோ
ஊடுருவிப் போகுது?!
ஓ!!
ஸ்கேன் பார்க்கிறாயா நீ!!

போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!

நான் நல்லா
வளர்ந்திட்டேன் அம்மா!
உள்ளே ஒரே இட நெருக்கடி!!

உதைத்துக் காட்டுகிறேன் பாரு,
அப்ப புரிஞ்சுக்குவ
என் பலத்தை!

போரடிக்கு அம்மா!
நான்
கதவைத் தட்டிக் கிட்டே
இருக்கிறேன்!

வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!

-சுமஜ்லா.
.

25 comments:

Ungalranga said...

இந்த பாகம் பிடிக்குமென்று எந்த வரியையும் சொல்ல மாட்டேன்...

எனக்கு மொத்தமாய் பிடித்திருக்கிறது..
மனதில் வந்து நிறைந்திருக்கிறது..!!

எனக்கே கர்ப்பம் போல் ஏனோ எனக்கொரு வெட்கம்..ஹாஹா..

வரிகளில் விளையாடிய
உமக்கு என் தங்கபதக்கம்!!

வாழ்த்துக்கள் சொல்லி போக வந்தேன்.
வாழ்க உமது வரிகளில் கவிதை..!!

Anonymous said...

SAGOTHIRIKKU

NANE ENNAI UNARNTHAHU POLE ULLEN

VAZTHUKKAL
KARUNAKARAN

SUFFIX said...

கருவில் இருக்கும் ஒரு சிசுவாய் மாறிப்போனேன், சில வரிகள் சிலிர்க்கிறது, அந்த ஆணா பெண்ணான்னு பார்க்கிற வரிகள் வரும்போது, ஒருவித பயம் அறியாமல் வருகிறது, அந்த ஒரு கணத்தில் மனம் மாறி ஏதும் செய்து விருவார்களோ அல்லது அப்படியே விட்டு விடுவார்களோ, மனம் திக்..திக்!!

R.Gopi said...

//இடத்தகராறு நிலத்தகராறு
நான் செய்யாமல்,
கிடைத்த இடத்தில்
குந்திக் கொள்வேன்!
திட உணவு உண்ணாவிட்டாலும்,
சத்துக்களை உறிஞ்ச மட்டும்
முந்திக் கொள்வேன்!!//

வாவ்.... சூப்பரா இருக்கு...

//கோபமென்றாலும் குஷியென்றாலும்
விடுவேன் ஒரு உதை!
என் உதைக்கு
மனிதவதைத் தடுப்பு சட்டத்தில்
தண்டனை தர வழியில்லை
என்பதால்,
தைரியமாகச் சொல்கிறேன் இதை!!//

ஹா...ஹா...ஹா...

ஆம்... இது இன்ப‌ உதை... வாங்குவோர் மிக‌வும் ம‌கிழ்வ‌ர்... ஆக‌வே இத‌ற்கு நோ "த‌டா"...

//கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!//

அட‌... இது என்ன‌ க‌ருவ‌றையிலிருந்து அம்மாவிற்கு அட்வைஸ்??!!!

//போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!//

ஆஹா... என்னே வெட்க‌ம்....என்னே வெட்க‌ம்...

//வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!//

ந‌ல்லா முடிஞ்சுருக்கு.... வாழ்த்துக்க‌ள் சும‌ஜ்லா....

Menaga Sathia said...

மிக அருமை சுகைனா!! பாராட்ட வார்த்தையில்லை...

asiya omar said...

நல்ல கற்பனைவளம் உங்களுக்கு உண்டு என்று யாவரும் அறிந்ததே,இந்த செல்லமான கற்பனை ரசிக்கும்படி உள்ளது.

ராஜவம்சம் said...

அம்மா!
நீ தூங்கும் போது
உனக்கே தெரியாமல்
மெல்ல எனைத் தடவிக் கொடுக்கும்
அப்பாவின் செய்கையை,
நீ அறிவாயா?!


ஒவ்வொறு தகப்பனும் அவன் நல்லவனோ கெட்டவனோ நிச்சயம் இது போன்ற சில விசயங்கலிள் ஆவலாக இருப்பான்

ரியலி சூப்பர்

புலவன் புலிகேசி said...

நல்லா இருக்கு........

வலசு - வேலணை said...

கவிதை மிகவும் அருமையாக இருக்கிறது. மனமார்ந்த பாராட்டுக்கள்

Rekha raghavan said...

அருமை மேடம். இது கவித.

ரேகா ராகவன்

அமுதா கிருஷ்ணா said...

நேற்று என்னுடைய தம்பி மனைவிக்கு 5 மாத குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது. அக்டோபர் 2லிருந்து ஆஸ்பத்திரியில் இருக்கிறாள். இந்த படத்தினையும், வரிகளையும் படித்த போது அப்படியே அழுதுவிட்டேன்.முதல் குழந்தை 8 மாதத்தில் இறந்தே பிறந்தது.
போன பிறவியில் என்ன பாவம் செய்தோமோ என்று இருக்கிறோம்.

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

:-)))))

ப்ரியமுடன் வசந்த் said...

//போம்மா,
நான் பையனா பொண்ணானு
காட்ட மாட்டேன்,
எனக்கு வெட்கமா இருக்கு!!//

ha ha haa

சகோ விடுமுறை பதிவா?

நல்ல கற்பனை வளம்

அன்புடன் மலிக்கா said...

சுமஜ்லாக்கா சூப்பர்,
இன்றுதான் 29 வருடங்களுக்குமுன் நான் பிறந்த தினம் இதை படிக்கும்போதே சிலிர்ப்பைத்தருகிறது..

பீர் | Peer said...

சூப்பர்...

பாத்திமா ஜொஹ்ரா said...

//கொஞ்சம் குறைவாக
சாப்பிடேன் அம்மா!!
இல்லாவிட்டால்,
என்னை எல்லாரும்
குண்டு பாப்பா என்பார்கள்!!//


டயட் பற்றி இப்பவே அக்கரை!!

அக்கா,மொத்த கவிதையுமழகு,அன்பு,பாசம் எல்லாம் இணைந்த கதம்பம்.

ஊடகன் said...

மிக அருமையான தாயின் கருவறை களத்தை விவரித்துள்ளீர்கள்.....

நன்று தொடருங்கள்...........

சீமான்கனி said...

ஆஹா...அக்கா அருமையா இருக்கு...
வெகு நாட்களுக்கு பிறகு வந்திருக்கும் என்னை புல்லரிக்க வைத்து விடீர்கள்....
குட்டி பாபா குட் பாபா....

"உழவன்" "Uzhavan" said...

குழந்தையாகவே இருந்துவிடலாம்..

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

very nice!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

வெளியே வர நான் ரெடி!
நீ எப்ப
கதவைத் திறக்கப் போகிறாய்?!


சூப்பெர் line அக்கா

ஸ்ரீ.கிருஷ்ணா said...

"Laptop திருடப்பட்டால் அதை எப்படி கண்டறியலாம் முக்கியத்தகவல்களை எப்படி பாதுகாக்கலாம்?" http://saidapet2009.blogspot.com/2009/10/laptop.html

தமிழ்நாடு தினசரி செய்திகள் said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இது எனது தளம் நீங்கள் செய்திகளை எனது தளத்தில்
வெளியிடலாம்
www.tamilnadudailynews.blogspot.com


mail : dailynews222@gmail.com

SUMAZLA/சுமஜ்லா said...

எல்லா நண்பர்களும் ரொம்ப ரசிச்சிருக்கீங்க...நன்றி! தனித்தனியா விரிவா பதில் சொல்ல்ணும்னு தான் இவ்ளோ நாளா பதில் போட முடியல...ஆனா, இப்ப ரொம்ப நாள் ஆயிருச்சு...

இந்த கவிதை, இப்படியே தொடர்ந்து, ஒரு மனிதனின் இறப்பு வரை கொண்டு போகணும் என்று தான் ஆரம்பித்தேன். இடையில் பலப்பல வேலைகளால் முடியவில்லை...

இன்று எப்படியும் பதிலும், புது பதிவும் போட்டு விட வேண்டும் என்று, படிப்பை சற்று ஒத்தி வைத்து விட்டு வந்துள்ளேன்.

எல்லாரும் ரொம்ப ரசித்து பாராட்டி இருக்கீங்க...உங்க விமர்சனம் படிக்க மிகவும் சுவையாக இருந்தது... மீண்டும் ஒரு முறை நன்றி!

இன்னும் ஒரு ஆறு மாதம், பின்பு பழையபடி ஓடிவந்து விடுவேன், பதிவிட...

Jaleela Kamal said...

ரொம்ப அருமையான பகிர்வு சுஹைனா, மெய்சிலிர்க்க வைக்கிறது.

வாங்க ஆறுமாதம் கழித்து வந்து கலக்குங்கள்.