Thursday, November 19, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 27

பாஜி தூக்கம் பிடிக்காமல் புரண்டு கொண்டே இருந்தாள். தூக்கம் வராமல் போனதற்கு பலப்பல காரணங்கள். பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு விட்டு டவுனுக்கு குடியேறி விட்டனர். டவுனில் குடியேறியது நவீன கால தார்சு வீடாக இருந்தாலும், என்னமோ பிறந்த வளர்ந்த வீட்டை விட்டு வெளியேறியது மனதுக்கு ரொம்பவே கஷ்டமாக இருந்தது. ஞாபகங்களை சுமந்து நின்ற திண்ணையும், எண்ணக்குவியலோடு வண்ணக்கோலமிட்ட வாசலும், ஆயிரமாயிரம் விளையாட்டுக்களை கண்டு ரசித்த கூடமும், மன ஆழத்தின் பொக்கிஷங்களை பதுக்கி வைத்திருந்த கொட்டறையும், ஏக்கங்களையும் தாபங்களையும் கண்டு எள்ளி நகையாடிய உள்ளறையும், அவள் வாழ்வோடு ஒன்றிப் போயிருந்தன.

தூக்கம் பிடிக்காமல் போக இன்னொரு முக்கிய காரணம் கமால். அழிச்சாட்டியமாக மனதில் வந்து அமர்ந்து, அவள் தனிமையோடு விளையாடிக் கொண்டிருந்தான். திருமணத்துக்கு இன்னமும் பதினைந்து நாட்கள் தான் இருந்தன. ஆனால், காதல் கொண்ட மனதுக்கு அது பதினைந்து யுகமாக தோன்றி, தூக்கத்தைத் தொலைக்க வைத்தது. அந்தகார இருளில், அவளுடைய முகத்தை யாராவது பார்த்திருந்தால், கேலி செய்திருப்பார்கள். ஏனென்றால், முகத்தில் நெளிந்த புன்முறுவல், அவளுடைய காதலை பறைசாற்றிக் கொண்டிருந்தது. தானாக தனக்குள் பூத்த முறுவல், அவளை அறியாமல் வெளிப்பட்டு வெட்கப்பட்டுக் கொண்டிருந்தது.

இது மட்டுமே காரணம் என்று சொன்னால், ஏற்றுக் கொள்ள முடியாது....முக்கிய காரணம் சின்னம்மாவின் வருகை....யாருக்கும் தெரியாது, எதிர்பார்க்கவும் இல்லை! சின்னம்மா என்று ஒருவர் இருப்பது பற்றி எள்ளளவும் தெரிந்திருக்கவில்லை...தன் தந்தை திருமணமே செய்து கொள்ளவில்லை என்று தான் மூவருமே நினைத்திருந்தனர். தன் தாயை தவிக்க விட்டதற்கு தண்டனையாக தந்தை, தற்சமயம் தனிமையில் வாடுவதாக எண்ணி தமக்குள் திருப்திபட்டுக் கொண்டிருந்தது போய், இப்போது புதிதாக ஒரு சின்னம்மா முளைத்தால்????

ஆமினா என்று பெயர் கொண்டிருந்த அந்த சின்னம்மாவைப் பற்றி கேள்விப்பட்டதும், தன் தந்தையிடம் கேட்க, ஆமென்ற தந்தை அவரை அழைத்து வந்தார் ஒரு நாள்.

சின்னம்மாவுக்கு ஒரே ஒரு பெண்பிள்ளை...பாஜியை விட நாலைந்து வயது குறைவாக இருக்கும். ராசிதா என்று பெயர்... நிறம் சற்று குறைவு என்றாலும், அசப்பில் பாஜியைப் போலவே இருந்தாள். அக்கா, அக்கா என்று அவள் உரிமை கொண்டாடியதும், இவர்களால் ஏற்றுக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

ஆமினா வேற்று மதத்தை சார்ந்தவர். தஸ்தகீரோடு தொடர்பு ஏற்பட்டதும் மதம் மாறி விட்டாள். ஆமினாவின் தாய் வீட்டு சொத்தாய் இருந்த ஒரு சிறிய வீட்டில், குடியிருந்து வந்தனர். ஆனால், எங்கேயும் தஸ்தகீர் அவரை அழைத்து வந்ததில்லை. தஸ்தகீரின் உடன் பிறப்புகளுக்குக் கூட ஆமினாவைப் பற்றியோ, ராசிதாவைப் பற்றியோ அதிகம் தெரியவில்லை.

பாஜி மெல்ல புரண்டு படுத்தாள்....விடிந்து விட்டது....தூங்காமலே விடிவது இது முதல் முறையல்ல!

திருமண வேலைகள் எல்லாம் மும்முரமாக ஆகிக் கொண்டிருந்தன. காதல் திருமணம் என்பதால், அவ்வப்போது, கமால் வந்து பாஜியிடம் பேசிச் செல்வான். ஆமினாவும் வந்து அப்பப்போ இவர்களுக்கு உதவிக் கொண்டிருந்தாள்.
திருமணத்துக்கு ஒரு வாரம் இருக்கையில், சுஹைனாவுக்கு போன் வந்தது....

“ஹலோ யாருங்க?”

“நான் ரம்ஜின் பேசறேன்”

“எங்கே இருந்து பேசறீங்க?”

“நான் இப்ப யூ.கே வில் இருக்கேன்...எங்க நாட்டுல பிரச்சினையா இருந்ததனால, தொடர்பு கொள்ள முடியவில்லை...இப்ப தான் யூ.கே வந்தேன்...அதான் போன் செய்தேன்...பாஜியிடம் பேச முடியுமா???”

“பாஜிக்கு கல்யாணம் ஆகப் போவுதே?!”

எதிர் முனையில் எதிர்பாராத தாக்குதலால், மவுனம் நிலவியது...

“எப்போ திருமணம்?”

“பிப்ரவரி பதினாலு....காதலர் தினத்தன்று....”

“அப்படியா சரி, நான் போன் செய்ததாக சொல்ல வேண்டாம்.... போனை வெச்சிருங்க”

என்ன நினைத்தார் என்று தெரியவில்லை...பாஜி வீட்டில் போன் இல்லாததால், அவசரத்துக்கு ஆகும் என்று சுஹைனா நம்பரை கொடுத்து வைத்திருந்தாள் ரம்ஜினிடம்...அதனால் அவர் போன் செய்திருக்கிறார்.

சுஹைனா கடைசி வரை ரம்ஜின் போன் செய்த விஷயத்தை பாஜியிடம் சொல்லவில்லை. மர்ஜியாவிடம் மட்டும் சொன்னாள். ரம்ஜின் என்ன நினைத்தாரோ தெரியவில்லை....காதலர் தினத்தன்று தன் காதல் கருகிப் போகிறதென்றா??? இல்லை இன்னொரு காதல் அரங்கேறப் போகிறதென்றா? கமாலின் சிறு வயது காதலைப் பற்றி இவர் அறிந்திருக்க வாய்ப்பில்லையே???

பாஜியின் திருமணம் சிம்பிளாக, நல்லவிதமாக நடந்து முடிந்தது. கமால், பாஜியின் மேல் மிகுந்த காதலோடு இருந்தான்... சந்தோஷமாக குடும்பம் நடத்தி வந்தார்கள்.

பாஜியின் திருமணம் முடிந்த கையோடு, உடல் நிலை பாதிக்கப்பட்ட சின்னம்மா, நாலு நாட்கள் ஆஸ்பத்திரியில் இருந்து பின், இறந்து போனார். ராசிதாவுக்கும் தஸ்தகீருக்கும் இது மிகுந்த மன அதிர்ச்சியை கொடுத்தது. காரியம் முடிந்தபின், ராசிதாவுக்கு ஆறுதல் அளிக்கும் பொருட்டு, மர்ஜி தன் வீட்டுக்கு அழைத்து வந்து சிறிது நாட்கள் தங்க வைத்தாள்... புது உறவென்றாலும், சீக்கிரம் பழகி விட்டனர்... ‘அக்கா...நீங்களாவது ஒருவருக்கொருவர் துணையாக மூன்று பேர் இருக்கிறீர்கள்...எனக்கு யாரிருக்கா அக்கா...?’ என்று ராசிதா அழுதபோது, அனைவருமே மனம் உருகிவிட்டார்கள்... ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருப்போம் என்று அவளை தேற்றினார்கள்.

மர்ஜியின் கணவன் ஃபரீதுக்கு எந்த வியாபாரமும் ஒட்ட வில்லை...குணத்தில் குறைவில்லை என்றாலும், பணத்தில் குறையிருந்தது. எத்துணை நாளைக்குத்தான் கஷ்டப்பட முடியும்???ஒரு மேனேஜ்மெண்ட் ஸ்கூலில் ஃப்ரீ சர்விஸ் செய்து கொண்டிருந்த மர்ஜியா, கவர்ன்மெண்ட் போஸ்டிங்குக்கு முயன்று கொண்டிருந்தாள். வீட்டில் வறுமை தாண்டவமாடியது....

ஆப்பி, அனைவரிலும் நன்றாக இருந்தாள்....கணவன் அவளுக்கும் மேல் உஷாராக இருந்ததால், சிக்கனமாக இருந்து பணமும் நகையும் சேர்த்தாள். அவ்வப்போது அக்கா தங்கைக்கும் உதவி வந்தாள். ஆனாலும், நிரந்தரமாக உதவ முடியுமா? அவளும் இன்னொரு வீட்டுக்கு வாழ்க்கைப் பட்டவளாயிற்றே? மாமியார் எதாவது சொல்வாரென்று தெரிந்து பாதி தெரியாமல் பாதி செய்தாள்...அவளுடைய கவலை எல்லாம் ஆரிஃப் மீது தான். ஆரிஃப் இன்னமும் நடக்க முடியாமல் தவழ்ந்து தவழ்ந்து தான் சென்று கொண்டிருந்தான். வயது ஏழாகியும் பள்ளியிலும் சேர்க்க வில்லை. ஆனால், அவ்வப்போது ஆப்பி அவனுக்கு சொல்லிக் கொடுக்கும் பாடங்களை உடனுக்குடன் படித்து எழுதப் படிக்க கற்றுக் கொண்டான். அவனுக்கேற்ற பள்ளியில், ஹாஸ்டலில் தங்கி படிக்க வைக்க, மர்ஜியிடம் வசதி இல்லை...

பாஜிக்கு அடுத்த பத்தாம் மாதம் அழகான ஆண் குழந்தை பிறந்தது...கணவன் வார்டு கவுன்சிலர் பதவி முடிந்ததும், வேறு பல சிறு சிறு தொழில்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தான். பெரிய வருமானம் என்று சொல்ல முடியாவிட்டாலும், ஏதோ வந்து கொண்டிருந்தது...மர்ஜியைப் போலவே பாஜியும், அவளுடைய நகைகளையெல்லாம் கணவனுடைய வியாபாரத்துக்குக் கொடுத்து விட்டாள்.

இப்படி மூவரும் ஒரு வழியாக வாழ்க்கையில் செட்டிலாக, ராசிதா மட்டும் தந்தையுடன் இருந்தாள். தஸ்தகீரும் அவ்வப்போது உடல் நிலை பாதிக்கப்பட, ஒரு நாள் டெஸ்ட் செய்த டாக்டர் கேன்சர் முற்றிய நிலையில் இருப்பதாகச் சொல்லி விட்டார்.
(வளரும்)

10 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நல்ல பதிவு.வாழ்த்துகள்.

Anonymous said...

kathi nala irukku ....

சீமான்கனி said...

கதை அழகாய் நகர்கிறது.....ரம்ஜின்-க்கு என்ன ஆச்சு சொல்லவே இல்லையே அக்கா????

ஹுஸைனம்மா said...

இப்பத்தான் கதை ரொம்பவே சுவாரசியமாகப் போகிறது. ஆனால் சீக்கிரம் முடிக்க வேண்டுமென்று வேகமாகக் கொண்டு செல்கிறீர்களோ?

asiya omar said...

உணமைக்கதைன்னா இதில் வரும் சுஹைனா கேரக்டர் நீங்கள் தானா?அல்லது வேறு ஒருவரா? கதை வேகமாக நகர்கிறதே !

SUMAZLA/சுமஜ்லா said...

சீக்கிரம் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது தான்...ஆனால், பாருங்கள் இப்பவே 27 வாரம் ஆகி விட்டது. ஆனால், கதையோட்டத்தோடு இணைந்து தான் முடிப்பேன். கொஞ்சம் டயலாக் மட்டும் குறைத்து விட்டேன்.

சுஹைனா கேரக்டர் நானே தான்! ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எல்லாருக்கும் புனைப் பெயர், ஆனால், எனக்கு மட்டும் அதே பெயர்!

இன்னும் ஓரிரு வாரங்களில் கதை முடிந்து விடும். உண்மை கதை என்பதால், எங்கு எல்லாரும் சுபமாக இருக்கிறார்களோ, அங்கே முடித்து விடுவது தான் நல்லது!!!

SUMAZLA/சுமஜ்லா said...

ரம்ஜின் அதன் பிறகு தொடர்பு கொள்ளவே இல்லை. ரம்ஜின் என்பது அவருடைய ஒரிஜினல் பெயர் தான். தற்சமயம் யூ.கே.வில் இருப்பார் என்று நினைக்கிறேன்...திருமணம் ஆகியிருக்கக் கூடும்...நிறைவேறாத எத்தனையோ காதல்கள் போலத்தான் இந்த காதலும்!

Jaleela Kamal said...

ரொம்ப அருமையாக போய் கொண்டு இருக்கு, எல்லாமே என்னதான் இருந்தாலும் இந்த சின்னம்மா தீடீரென்று வந்தது எல்லோருக்கும் அதிர்சி தான். அங்கும் பெண் தானா?

ரம்ஜின் பாவம் கொஞ்சம் லேட்டா வந்து விட்டார்.

ஓ உண்மை க‌தை முடிய‌ போகுதா?

இப்னு அப்துல் ரஜாக் said...

//சுஹைனா கேரக்டர் நானே தான்! ஏற்கனவே ஒரு முறை சொல்லியிருக்கிறேன். எல்லாருக்கும் புனைப் பெயர், ஆனால், எனக்கு மட்டும் அதே பெயர்!//

தைரியம் ஜாஸ்தி

இப்னு அப்துல் ரஜாக் said...

//இன்னும் ஓரிரு வாரங்களில் கதை முடிந்து விடும். உண்மை கதை என்பதால், எங்கு எல்லாரும் சுபமாக இருக்கிறார்களோ, அங்கே முடித்து விடுவது தான் நல்லது!!!//

நூத்துல ஒன்னு(நல்ல செய்தி)