Monday, November 16, 2009

நலங்கு பாடல் - என்னை தாலாட்ட வருவாளா?

என் மகள் லாஃபிராவுக்கு ஆறு வயதில் காது குத்தியதற்காக வைத்த நலங்கு வைபோகத்துக்கு எழுதிய பாடல்.

அன்பு லாஃபிரா திருநாளோ
தந்தை தாய் கொஞ்சும் புது நாளோ
எங்க பூந்தோட்ட மலர் தானோ
தங்க தேனூற்றாய் இனிப்பாளோ

நலங்கெனும் சடங்கில் தன்னை மறப்பாளோ
மொட்டு இதழ் முத்தம் ஒன்று தருவாளோ
பிஞ்சு விரல் கொலுசொலி கேட்கிறதே!
(அன்பு லாஃபிரா)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் நெஞ்சில் ஊட்டினாள்
வாழும் வாழ்வில் அர்த்தம் கூட்டினாள்
இரவும் பகலும் கவி பாடினாள்
இதயம் மகிழ மலர் சூடினாள்
நாய கத்தின் வழி நாடினாள்
நீ கேட்ட நலங்கின்று பொன்மானே!
நீ தூங்க மடி ஒன்று தருவேனே!!

சொந்தங்கள் உனைச் சுற்றி வாழ்த்தாதோ?!
பந்தங்கள் ராகங்கள் பாடாதோ!!
அல்லாஹ்வின் அருள் சேருமே!!
(அன்பு லாஃபிரா)

புதிய மலர்கள் அவள் கூந்தலில்,
குறும்பு தெரியும் அவள் பார்வையில்
தேனின் துளி அவள் பாதையில்

கனவு நிறைந்திருக்கும் கண்களில்
இதயம் மகிழ்வு கொள்ளும் ஆசையில்
பாசம் பொங்கும் அவள் வார்த்தையில்
மம்மியின் மனம் போல இருக்கின்றாள்
டாடிக்கு பல முத்தம் தருகின்றாள்

என்றென்றும் ஊர் போற்ற வாழ்வாளே
தீனுக்கு ஒளியாக இருப்பாளே
அல்லாஹ்வின் அருள்சேருமே!
(அன்பு லாஃபிரா)

-சுமஜ்லா.

ஒரிஜினல் பாடல் இதோ:

என்னை தாலாட்ட வருவாளோ
நெஞ்சில் பூ மஞ்சம் தருவாளோ
தங்க தேராட்டம் வருவாளோ
இல்லை ஏமாற்றம் தருவாளோ.

தத்தளிக்கும் மணமே தத்தை வருவாளா
முத்து இதழ் முத்தம் ஒன்று தருவாளா
கொஞ்சம் பொறு கொலுசொலி கேட்கிறதே
(என்னை தாலாட்ட)

பூவிழி பார்வையில் மின்னல் காட்டினாள்
ஆயிரம் ஆசைகள் என்னில் ஊட்டினாள்
ஏனோ ஏனோ நெஞ்சை பூட்டினாள்
இரவு பகலும் என்னை வாட்டினாள்
இதயம் அவள் பெயரில் மாற்றினாள்
காதல் தீயை வந்து மூட்டினாள்
நான் கேட்கும் பதில் இன்று வாராதா
நான் தூங்க மடி ஒன்று தாராதா

தாகங்கள் தாபங்கள் தீராதா
தாளங்கள் ராகங்கள் சேராதா
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்கள்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்த்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்

நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீர் ஊற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்
(என்னை தாலாட்ட)

14 comments:

ஸ்ரீதர்ரங்கராஜ் said...

நன்று.வித்தியாசமான முயற்சி.

தேவன் மாயம் said...

Very Good Work!!!

ஸ்ரீ.கிருஷ்ணா said...

really nice akka....

சீமான்கனி said...

அருமையாய் எழுதி இருக்கிங்க அக்கா ...லாஃபிக்கு காது குத்துன வழியே தெரிஞ்சுருக்காது ...
மெட்டும் அப்டியே இருக்கு....
வாழ்த்துகள்...

Jaleela Kamal said...

சுஹைனா,அந்த ஒரிஜினல் பாட்டும் சூப்பர், உங்கள் மெட்டு பாட்டும் சூப்பரரோ சூப்பர்

அரங்கப்பெருமாள் said...

சினிமாவுக்குப் பாட்டு எழுத வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்.(மனதில் தோன்றியது)...
நல்லா இருக்கு...

எப்படி இருக்கீங்க? பரிட்சை எப்போ?

பாத்திமா ஜொஹ்ரா said...

ஈத் முபாரக்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஸ்ரீ, தேவன் மாயம், ஜலீலாக்கா, சீமான்கனி, கிருஷ்ணா, பாத்திமுத்து ஜொஹ்ரா & அரங்கப்பெருமாள் அண்ணா.

அண்ணா, எங்கே உங்களைக் காணோம் என்று தேடினேன். சினிமாவுக்கு பாட்டா???? ஜோக் அடிக்கிறீங்க!!!

ஹுஸைனம்மா said...

காது குத்தவெல்லாம் விழா எடுப்பீங்களா நீங்க? கேள்விப்பட்டதில்லை.

ரொம்ப நாளா காணோமே - சாயபு வீட்டுச் சரித்திரம்?

SUMAZLA/சுமஜ்லா said...

ஹுசைனம்மா...இதோ சாயபு வீட்டு சரித்திரம் போட்டு விட்டேன்!

என் மகளுக்கு, ஒரு வயது குழந்தையாக இருக்கும் போதே காது குத்தி விட்டோம். ஆனால், விரும்பினால், அதற்கு சீர் செய்யலாம். ஆனால், இஸ்லாத்தில் இவ்வாறு ஒன்றுமில்லை. நம் ஆசைக்காக, குழந்தையை சிங்காரித்து அழகு பார்ப்பது தான்! வேறொன்றுமில்லை!

சீருக்கு நன்னிமா வீட்டில், அதாவது குழந்தையின் தாய் வழி பாட்டி வீட்டில் நகை ஏதாவது குழந்தைக்கு தன் சக்திக்கேற்ப போடுவார்கள்...கட்டாயமில்லை, ஆசைக்கு செய்வார்கள்.

என் தாய் வீட்டில் மகளுக்கு 4 பவுனுக்கு குஞ்சம், கொப்பி மற்றும் டாலர் போட்டார்கள்.

என் மகள் முதல் பேரப்பிள்ளை, அதோடு, சின்ன குழந்தையாக இருக்கும் போது மிகவும் அழகாக இருப்பாள், அதனால், சீர் செய்து ரசித்தோம்.

ஹுஸைனம்மா said...

விளக்கமான பதிலுக்கும், சாயபு சரித்திரத்திற்கும் நன்றி சுஹைனா!!

பெண்குழந்தைக்கு அலங்காரம் செய்து பார்ப்பதற்கென்றே எத்தனை விழாக்கள் வேண்டுமானாலும் எடுக்கலாம். ஆனால் எங்கள் பக்கம் திருமணம், வளைகாப்பு மட்டும்தான் விசேஷம்.

//குஞ்சம், கொப்பி// என்னவென்று கணிக்கமுடியவில்லை :-(

SUMAZLA/சுமஜ்லா said...

//குஞ்சம், கொப்பி// என்னவென்று கணிக்கமுடியவில்லை :-(//

குஞ்சம் என்றால், பின்னலில் வைத்து பின்னுவது...அது கருப்பு நிறத்தில் மூன்று கயிறுகள் கொண்டு, கீழே பந்து போன்றோ, அல்லது முடி போன்றோ நூல் தொங்கும்...அதில் இடையிடையே தங்கத்தில் கொப்புகள் இருக்கும்.

கொப்பி என்றால், வட்ட வடிவ தங்க வில்லை...விரும்பினால் கல் பதித்தும் செய்யலாம்...குறைந்த பவுனில் செய்ய வேண்டும் என்றால், உள்ளே அரக்கு வைத்தும் செய்வார்கள். இதற்கு நகாசு கொப்பி என்று பெயர். இதை சடைக்கு மேலே, பூ வைக்கிறோமே அந்த இடத்தில் வைத்து பின்னுவார்கள்...எங்கள் குடும்பங்களில் நிச்சயமாக இவ்விரண்டும் இருக்கும்...

அப்பாடி இவ்வளவு நீள விளக்கத்துக்கு ஒரு பதிவே போட்டிருக்கலாம் போல...எதோ, இந்த இரண்டு நாளும் ஸ்டடி லீவில் நெட் பக்கம் வந்தேன், உங்களுக்கு பதில் தர முடிந்தது...ஆமா...இதெல்லாம் தெரியாது என்கிறீர்களே? நீங்கள் எந்த ஊர்???

ஹுஸைனம்மா said...

சுஹைனா,

மறுபடியும் நன்றி.

குஞ்சம் என்றால் அதுதான் என்று தெரியும். ஆனால் நீங்கள் தங்கத்தில் செய்தது என்று சொன்னதால் சந்தேகம் வந்தது. நாங்கள் தங்கம் இதில் உபயோகிப்பதில்லை. குழம்பி, குழப்பி விட்டேனோ?

கொப்பி- இதை கொண்டைப்பூ என்று நாங்கள் சொல்வோம். என் அம்மாவிடம் சிகப்புக் கல் பதித்தது இருக்கிறது.

நான் திருநெல்வேலியைச் சேர்ந்தவள். சாயபு சரித்திரத்தில் வரும் சில சொற்களும் புரிந்து கொள்ள முடிவில்லை. ஆனால் யூகித்துக் கொள்ள முடிவதால் கதையோட்டம் தடைபடவில்லை.

ஸ்டடி லீவா, அதான் பதிவுகள் அதிகம் வருகிறதா, சந்தோஷம். ஆனால் ஸ்டடி லீவு படிப்பதற்காகத்தானே? ;-)

SUMAZLA/சுமஜ்லா said...

ஹுசைனம்மா...ஒரு வழியாக புரிந்ததற்கு நன்றி!

//ஸ்டடி லீவா, அதான் பதிவுகள் அதிகம் வருகிறதா, சந்தோஷம். ஆனால் ஸ்டடி லீவு படிப்பதற்காகத்தானே? ;-)//

நாங்க படிச்சிட்டே பதிவு போடுவோம்ல?!!:)

எம்.ஏ. எக்ஸாம்ஸ் அடுத்த மாதம் வருகிறது. அதற்கு படிப்பதற்காக ஒரு மூன்று நாட்கள் நான் தான் லீவு போட்டேன். ஆனால், மூன்று நாட்களும் தூங்கி தூங்கியே ஓடி விட்டது!