Friday, December 11, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 30

(உலவும் மனிதர்களின் உண்மை கதை)

“சுற்றம் பலப்பல சூழ்கையிலே
வெற்றிக்கு அங்கு மாற்றேது?!
சற்றும் கலங்கா வாழ்க்கையிலே
முற்றும் என்பது கிடையாது!”


காத்திருத்தல் ரொம்பவும் கஷ்டம் தான்... ஆனால், சில காத்திருத்தல்கள் சுகமானது, ரசித்து அனுபவிப்பது.... காதலிக்காக காதலன் காத்திருப்பதும், தன் வயிற்றுப் பிள்ளையைக் காண கர்ப்பிணி ஆவலோடு பார்த்திருப்பதும், நாள் குறித்தபின் திருமணத்துக்காகக் காத்திருப்பதும், மொட்டாக இருக்கும் ரோஜா மலர்வதற்காகக் காத்திருப்பதும், புதுமணத் தம்பதிகள் இரவுக்காகக் காத்திருப்பதும்....இப்படி பல காத்திருப்புகள் இனிமையானவை, சுவையானவை, உள்ளத்தோடு உரசி, நெஞ்சத்தோடு கதை பேசுபவை!

இங்கேயும் காத்திருந்தாள் பாஜி, எலக்‌ஷன் ரிசல்ட்டுக்காக! எல்லாரும் எதிர்பார்த்தது வீண் போகவில்லை.... முடிவு, வெற்றி, வெற்றி, வெற்றி தான்!

வாழ்த்து சொல்ல எல்லாரும் அவள் வீட்டுக்கு விரைந்தார்கள். எல்லாருக்கும் இனிப்பு கொடுத்து கொண்டாடினாள்.

”பாஜிக்கா.... உங்க அக்கா ரெண்டு பேரும் கவர்ன்மெண்ட் சர்வெண்ட் தான்.... ஆனா, கவர்ன்மெண்ட்டே நீங்க தான்! கன்கிராட்ஸ்!” சுஹைனா சொல்ல, முகமெல்லாம் பூரிப்பு பாஜிக்கு!

பாஜியும் கமாலும் நல்ல விஷயங்களில் கவனம் செலுத்தி, தொகுதிக்கு பல சவுகரியங்களைப் பெற்றுத் தந்தனர். அதில் ரோடு வசதியும் ஒன்று! கமால் எல்லாவற்றையும் துடிப்போடு செய்ய, பாஜி அதற்கு பக்கபலமாக இருந்தாள்.

மர்ஜியின் மகன் ஆரிஃப், சண்டி சண்டி நடக்க ஆரம்பித்தான். அதற்கென்று இருக்கும் பள்ளியில் படித்து நல்ல மதிப்பெண் வாங்கினான். மர்ஜியின் மற்ற இரு பிள்ளைகளும் மர்ஜி வேலை பார்க்கும் ஸ்கூலிலேயே படித்துக் கொண்டிருந்தார்கள்.

ஆப்பியின் மகளும், பாஜியின் மகனும் கான்வெண்ட்டில் படித்தார்கள். அவர்கள் இருவருமே நன்றாக படித்து, படிப்பில் முதல் மதிப்பெண்ணே எப்போதும் வாங்குவார்கள்.

பாஜிக்கு தனக்கென ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்று ரொம்ப ஆசை! தற்போது, மாமியார் வீட்டின் மேல் மாடியில், சிறு ஓட்டு வீடொன்று கட்டி குடியிருந்து வந்தாலும், பையன் வளர்ந்து விட்டதால், அந்த சிறிய வீடு போதவில்லை.... அதனால், தனக்கென பிரிந்த பாகத்தில் ஒரு வீடு கட்ட வேண்டும் என்று அவளுக்கு ஆசை!

“ஏங்க எப்படியாவது லோன் போட்டு வீடு கட்டிடலாம்ங்க” பாஜி

“நானும் அதைத்தான் பாஜி நினைச்சிக்கிட்டு இருந்தேன்” கமால்...

“ஒரு ரூம், ஒரு ஹால், ஒரு கிச்சன் வெச்சு ரெண்டு வீடு கட்டலாம்ங்க, அதில ஒன்னுல நாம குடியிருந்துக்கிட்டு, இன்னொன்ன வாடகைக்கு விட்டுரலாம்”

“நீ சொல்லுறது சரி தான் பாஜி! அப்பத்தான் அந்த வாடகையை வாங்கி, கூட போட்டு லோன் கட்ட முடியும்”

கட்சியில் இருந்ததால், சீக்கிரமே லோன் ரெடி செய்து விட்டார்கள். அழகாக ப்ளான் போட்டு, குறைந்த பட்ஜெட்டில், சின்னதாக, சிக்கனமாகக் கட்டி விட்டார்கள்.

பால் காய்ச்சி, சாமானெல்லாம் மாற்றி போய் செட்டில் ஆனதும், ஒரு நாள் எல்லாரையும் பாஜி விருந்துக்கு அழைத்தாள். சுஹைனா, சைதா, மர்ஜி, ஆப்பி, ராசிதா எல்லாரும் அங்கு ஒன்று கூடியிருந்தார்கள்.

பாஜி, தன்னுடைய பாகத்தில் வீட்டைக் கட்டி இருந்தாலும், மர்ஜி மற்றும் ஆப்பியின் பாகம் அப்படியே தான் இருந்தது! அவர்கள் வாழ்ந்த வீடு மர்ஜி, ஆப்பியின் பாகத்தில் இருந்ததால் அது வீடு கட்டுவதற்காக அழிக்கப்படவில்லை! அதை வாடகைக்கு விட்டிருந்தார்கள்!

“பாஜி! எல்லாரும் ஒன்னுகூடியிருப்பது சந்தோஷமா இருக்கு” சைதா.

“ஆமா சைதாக்கா, இன்னிக்கு இவ்ளோ கலகலப்பா நோன்பு நாள் மாதிரி இருக்கு!” பாஜி.

“சுஹைன்! உன் படிப்பெல்லாம் எப்படி போகுது?” மர்ஜி

“நல்லா போயிட்டிருக்கு மர்ஜிக்கா! ஆப்பிக்கா, உங்க பொண்ணு எங்க வரலையா?” சுஹைனா.

“தோ வந்திருக்காளே! லைனுக்குள்ள விளையாட போயிருப்பா!”

“இன்னிக்கு நீங்க மூணு பேரும் நல்லபடியா செட்டில் ஆயிட்டீங்க! கச்சக்காவும் பாத்திமா மம்மாணியும் இருந்திருந்தா, ரொம்ப சந்தோஷப்பட்டிருப்பாங்க” சைதா.

“ஆமா...சைதாக்கா...எங்கம்மா பட்ட கஷ்டத்துக்கு ஆண்டவன் இன்னிக்கு மூணு பேரையும் நல்லபடியா வெச்சிருக்கான்!”

“அக்கா...மூணு பேருன்னு சொல்லாதீங்க அக்கா.... நாம நாலு பேரு” ராசிதா சொல்ல, மூவரும் அவளை வாஞ்சையோடு பார்த்தார்கள்.

எல்லாருடைய மழலைச்செல்வங்களும் ஒரு ஏழெட்டு பேர் இருக்கும், கிணற்றடியில் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அவர்களை பார்ப்பதற்காக வெளியே வந்தனர்.

வெளியே வந்ததும், கச்சாமா வாழ்ந்த கடைசி வீட்டைக் கண்டு சைதாவின் கண்கள் கலங்கி விட்டன. பாத்திமா வாழ்ந்த முன் வீட்டைக் காண ஆவலாக இருந்தது!

“எல்லாரும் வாங்க...பழைய வீட்டைப் பார்த்துட்டு வரலாம்”

வேறொருவர் வாடகைக்குக் குடியிருந்தாலும் அனுமதி பெற்று உள்ளே போனார்கள்.

உள்ளே நுழைந்ததும் வலது புறம் இருந்த ப்ளஸ் அவுட்டாக மாறி நின்ற அன்றைய எடுப்பு கக்கூஸையும், அருகில் இருந்த செடிக்குழியையும் பார்த்தபடியே உள்ளே சென்றார்கள்.

வாசல், திண்ணை, திண்ணையின் ஓரத்தில் முன்பு டிரங்க் பெட்டி வைத்திருந்த சிறிய கொட்டறை, உள்திண்ணை, அங்கே தரையில் சிமிட்டியில் போட்டிருக்கும் தாயக்கரம், ஆயிரம் கனவுகளை சுமந்து நிற்கும் ஆஜாரம், எண்ணங்களை சிறகடிக்க வைத்த ரேடியோ ரூம், உள்திண்ணை, இன்று சுத்தமாக இருந்தாலும், கவுத்து கட்டிலும், ஒட்டடையுமாக கிடந்த அன்றைய உள்ளறை, குட்டியூண்டு சோறாக்கூடு, சின்ன வாசலும் அருகே பொடக்கானியும்..... எல்லாவற்றையும் பார்த்தபடியே வந்தார்கள்.

சின்னஞ்சிறு சிட்டுக்களாகத் துள்ளி விளையாடிய இடம்! கண்ணாமூச்சி விளையாட்டில் ஒளிந்த கதவுச்சந்து! மவுத்தாப்போன கச்சாமாவும், மீரான் சாயபும், பாத்திமாவும் கிடத்தி வைக்கப்பட்டிருந்த திண்ணை! வெளியுலகத் தொடர்புக்கென உள்ளறையில் இருக்கும் ஒற்றை சன்னல்! அவரவர் தத்தம் பொக்கிஷங்களை சேகரித்து வைத்திருந்த அலமாரிகள்! அதிகாலைக் குளிரில், கைகால் அலம்ப தண்ணீர் மெத்தும் உள்வாசல் தண்ணீர் தொட்டி! யாரிடமும் வெளியிடாத உண்மை நண்பனாய் பல ரகசியங்களை சுமந்து நிற்கும் சுவர்கள்!

மனிதர்கள் மாறிவிட்டாலும், நினைவலைகள் அங்கேயே நிரந்தரமாகத் தங்கி இருக்கின்றனவே! கச்சாமா பட்ட வேதனைகளின் சுவடுகள் ஆங்காங்கே பிரதிபலித்தது! அதோடு, இம்மூன்று பிள்ளைகளுக்காகவே தம் வாழ்வை அர்ப்பணித்த பாத்திமாவின் உருவம், அவள் உருவத்தின் வடிவம், அந்த தாயின் கனவு, அங்கு ஒவ்வொரு இண்டு இடுக்கிலும் தெரிந்தது....!

பசுமையான பழைய நினைவுகள் தந்த மனபாரத்தால், ஒவ்வொருவரும் தம்முடைய கண்ணீர் துளியை பிறர் அறியாமல் துடைத்துக் கொண்டனர்! உதடு சிரித்தாலும் உள்ளம் ஏனோ, பலப்பல ஞாபக அலைகளின் வேகத்தால் உந்தப்பட்டு அழுதது! நினைத்ததை நடத்திக் காட்டிவிட்ட மந்தகாசத்தில் காலம் அவர்களைப் பார்த்து சிரித்தது!

(முற்றும்)

-சுமஜ்லா.

13 comments:

ஹுஸைனம்மா said...

சுபம் போட்டாச்சா? எல்லாரும் நல்ல நிலைமையில் இருப்பதுப் படித்து சந்தோஷம். சுவையாக எழுதியிருந்தீங்க. இனி படிப்பு முடிஞ்சதுக்கப்புறம் இன்னொரு கதை எழுதுங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

முதல் கருத்துப்பதிவுக்கு நன்றி, ஹுசைனம்மா...இது முழுக்க முழுக்க உண்மைக்கதையே! சுவை கூட்டுவதற்காக சில சம்பவங்கள் மட்டும் சேர்த்தேன்! கதை மாந்தர்களின் தற்காலம் வரை சொல்லி விட்டேன்! எங்கள் ஊருக்கு வந்தால், கதை மாந்தர்களைப் பார்க்கலாம்!!!

மர்ஜி, ஆப்பி, மற்றும் பாஜி ஆகியோர், இக்கதையின் முதல் ஏழெட்டு அத்தியாயங்களை வாசித்துப் பார்த்தார்கள். ஆனால், இன்னும் முழுவதுமாகப் படிக்கவில்லை! அவர்கள் வீட்டில் சிஸ்டம் இல்லாததால், எங்கள் வீட்டுக்கு வந்தால் மட்டும் படிப்பார்கள்!

படிப்பு முடிந்தபிறகு, இறைவன் நாடினால், மீண்டும் தொடர்கதை எழுதுகிறேன். ஆனால், இப்ப முடியாது! என் மற்ற பதிவுகள், வழக்கம் போல் அவ்வப்போது தொடரும்!!!

seemangani said...

பாதியில் இருந்து படித்தாலும் உங்கள் எளிய எழுத்துநடை தொடரும் ஆர்வத்தை தூண்டி விடுகிறது...

//காதலிக்காக காதலன் காத்திருப்பதும், தன் வயிற்றுப் பிள்ளையைக் காண கர்ப்பிணி ஆவலோடு பார்த்திருப்பதும், நாள் குறித்தபின் திருமணத்துக்காகக் காத்திருப்பதும், மொட்டாக இருக்கும் ரோஜா மலர்வதற்காகக் காத்திருப்பதும், புதுமணத் தம்பதிகள் இரவுக்காகக் காத்திருப்பதும்....இப்படி பல காத்திருப்புகள் இனிமையானவை, சுவையானவை, உள்ளத்தோடு உரசி, நெஞ்சத்தோடு கதை பேசுபவை!//

அக்கா...நாங்களும்...இதுபோல் இன்னொரு கதைக்காய் காத்திருக்கிறோம்...

ஆனந்த நீருற்றாய் கண்ணீரோடு சுபம்,அருமை...
மர்ஜி, ஆப்பி, மற்றும் பாஜி ஆகியோர்க்கு வாழ்த்துகளை தெரிவிதுவிடவும்...அன்புடன் தம்பி...

asiya omar said...

சுஹைனா சாயபு வீட்டு சரித்திரம் உலவும் மனிதர்களின் உண்மைக்கதை என்பதால் மீண்டும் பகுதி இரண்டை எதிர்பார்க்கலாம் தானே!உங்களுடைய வேலைபளுவின் மத்தியிலும் விடாமல் எழுதி வாசக நெஞ்சங்களை திருப்தி செய்து கதையை அருமையாக முடித்தமைக்கு பாராட்டுக்கள்.

அண்ணாமலையான் said...

தொடர் கதையா? யெம்மாடி நம்மள ஆகாது. படிக்கறீங்களாமே? வாழ்த்துக்கள்.

தியாவின் பேனா said...

வாழ்த்துகள்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி சீமான்கனி! நிச்சயமாக ஒரு நாள் இக்கதை மாந்தர்களை, இக்கதையை படிக்கச்செய்வேன்! அப்போது அவர்களின் கருத்துக்களை வெளியிடுகிறேன்!

ஆசியா அக்கா, இந்நாள் சம்பவம் வரை எழுதி முடித்துவிட்டதால், பாகம் இரண்டுக்கு வாய்ப்பில்லை! அதில் சுஹைனாவின் படிப்பு பற்றி ஒரு வரி வந்திருக்குமே! அது நான் இப்போது படித்துக் கொண்டிருப்பது தான்! படிப்பு முடிந்த பிறகு வேறு தொடர்கதையோ, உண்மை கதையோ எழுதுகிறேன்!

அண்ணாமலையாரே! கதை தொடர்ந்து, முடிந்து விட்டது...ஆக, இனி எல்லாவற்றையும் ஒன்று சேர்த்து படிக்கலாம்!

Jaleela said...

இந்த முப்பது பதிவும், ஏட்டில் எழுத வேண்டியது தான், உண்மை கதையை ரொம்பவே சுவாரஸ்யமாக கொண்டு சொன்று முடித்து இருக்கிறீர்கள்.


வெற்றி பெற்ற பஜிக்கு வாழ்த்துக்கள். என்னதான் வீடு வசதி வந்தாலும், நாம் வாழ்ந்த பழைய வீடு அந்த நினைவலைகள் ரொம்ப பசுமையானது.

உங்களுடன் ஒன்றி விட்டேன், முடிவு அருமயாக இருக்கு. நேரம் கிடைக்காத போதும் எப்படியவது வந்து பதிவு போட்டது ரொம்பவே ஆச்சரியம் சுஹைனா.

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜலீலாக்கா.... நான் வேலைப்பளுவால், பதிவிட முடியாத போதெல்லாம் எனக்கு நினைவூட்டி, இக்கதையை இவ்வளவு பேர் ஆர்வத்துடன் படிக்கிறார்கள் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி, என்னை உற்சாகப்படுத்தியவர்களில் தாங்களும் ஒருவர். உங்கள் நட்பு கிடைத்தது மிகவும் சந்தோஷம்!

Jaleela said...

சுஹைனா உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்று கொள்ளுங்கள். உங்கள் கதை, கவிதை, ஆங்கிலபுலமை, ஹஜ் பதிவு(ஒரு விஷியம் கூட மறவாமல், 42 பதிவுகள் பிரமிக்க வைக்கிறது )இதற்கே ஆயிரம் விருதுகள் கொடுக்கலாம்.

Mrs.Menagasathia said...

தொடர் முடிந்துவிட்டதா?இப்போ அனைவரும் நல்ல நிலையில் இருப்பது சந்தோஷம்.30 பாகமும் தொடர்ந்து படித்து வந்தேன்.விறுவிறுப்பா இருந்தது.இன்னும் கச்சமாவைதான் மறக்க முடியவில்லை.படிப்பு முடிந்ததும் தொடர்கதை எழுதுங்கள்.எதிர்பார்க்கிறேன் சுகைனா...

பாத்திமா ஜொஹ்ரா said...

//பசுமையான பழைய நினைவுகள் தந்த மனபாரத்தால், ஒவ்வொருவரும் தம்முடைய கண்ணீர் துளியை பிறர் அறியாமல் துடைத்துக் கொண்டனர்! உதடு சிரித்தாலும் உள்ளம் ஏனோ, பலப்பல ஞாபக அலைகளின் வேகத்தால் உந்தப்பட்டு அழுதது! நினைத்ததை நடத்திக் காட்டிவிட்ட மந்தகாசத்தில் காலம் அவர்களைப் பார்த்து சிரித்தது!//

ஒரு பக்கம் ஆனந்தம்,மறு பக்கம் ஆதங்கம்-வாழ்க்கையை,எண்ணி?

mimak said...

உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. நான் வலைப்பூ உலகத்திற்கு புதிது. ஆனாலும் உங்கள் பதிவுகள் பார்த்தவுடன் பிடித்து விட்டது.நன்றி.