Tuesday, April 28, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 3


(உலவும் மனிதர்களின் உண்மைக்கதை)

“ஊரு சுத்தும் ஆளுங்கெல்லாம் அடங்கிப் போற நாளும் வரும்
வீறு கொண்டு காதல் வர, வீம்பு தானா மறைஞ்சு விடும்
பேரு சொல்லும்படியாக பெரும் பொறுப்பு தேடி வரு
ம்
பாரு போற்ற வாழும்படி, அடிமனசில் ஆசை தரும்”

ஊருக்கு பெரிய மனுஷர், தீனா கானா சாயபோட, மகள் வயிற்று மூத்த பேரன் மீரான் சாயபு, மல்லு ஜிப்பா போட்டுக்குவாரு, அத்தர் பூசிக்குவாரு, பவுடர் அப்பிக்கிட்டு, பஸ்ஸ்டாப்புகிட்டே போய் சுத்திக்கிட்டு கிடந்தாரு. ஒரு பொழப்பு தழப்பு ஒன்னும் உருப்படியா பார்க்கறாப்ல இல்ல. அவங்க அம்மா முத்தம்மாவுக்கு ரொம்பத்தான் கவலை.

முத்தம்மாவுக்கு மீரான் சாயபு தான் மூத்த மகன். முத்தம்மாவுக்கு சின்ன வயசிலியே புருஷன் மவுத்தாகி போக அவுக அப்பா தீனா கானா சாயபோட சொத்து பத்தெல்லாம் மகன் அபீபு பொறுப்புல்ல வந்துருச்சு. அபீபு தான் மாசங்கண்டா தங்கச்சிக்கு செலவுக்கு காசு தருவாரு. ஆனா ஊடு நிறைய மக்கள வெச்சிருக்கற முத்தம்மாவுக்கு அது காணல. அண்ணா கொஞ்சம் சேர்த்து கொடுண்ணா... புள்ளைங்கல்லாம் திங்கற புள்ளைங்களா ஆயிட்டாங்க. ஆசைப்பட்டதை கேட்க்குதுங்கன்னு சொல்லவும். இந்தா ஒஞ்சொத்த பிரிச்சு வாங்கிட்டு போன்னு பிரிச்சு கொடுத்திட்டாரு அவுரு.

அபீபு நல்ல ஒசத்தியான வயக்காடு, தோப்பு தொரவெல்லாம் தனக்கு வெச்சுக்கிட்டு, டவுனுல ஒன்னுமத்து போன சில கடைகண்ணிங்களையும் ரெண்டு மூனு நெல்லுவயக்காட்டையும் தங்கச்சிக்கு எழுதி வெச்சிட்டாரு. மதிப்பத்து போன இந்த சொத்துக்கு நீ தாண்டா மதிப்ப கொடுக்கணுமின்னு ஆண்டவங்கிட்டயே பாரத்த சாட்டிட்டா முத்தம்மா. ஆனாலும் அவளுக்கு ரொம்ப தான் நெஞ்சுரம். ஒத்தைல நின்னு புள்ளகள வளத்து ஆளாக்குறது என்ன சாதாரண காரியமா?

ஒரு நா, பக்கத்தூட்டு ஜிம்னிமா வந்தா, “ஏன் முத்தக்கா, மீரானுக்கு ஒரு கால்காட்டு போட்டாத்தான, அடுத்ததா ஊடு நெறையா இருக்க மக்களுக்கும் ஒரு வழி பண்ண முடியும்?”

“நான் என்னா ஜிம்னு பண்ணறது? புருஷன் இல்லாம, இதுங்கள வளர்க்கறதே பெரும்பாடா இருக்குது! வயக்காட்டு நெல்லையும் வாடக பணத்தையும் நம்பி இருக்கேன். நாம்ம புத்தி சொன்னா ஏறுமா?”

“ஏக்கா! அம்மாப்பேட்ட வயக்காட்டுப் பொறுப்ப தம்பிக்கிட்ட ஒப்படச்சா, உனக்கும் பாரங்குறையுமல்ல? அதுக்கும் ஒரு பிடிப்பு கிடைச்சாப்புல இருக்கும். கிட்டான் பண்ணாடி எத்துணை நாளைக்கு இங்கிட்டும் அங்கிட்டுமா நடந்திட்டு இருப்பான்?”

“சொல்லிப்பார்க்கறேன் ஜிம்னு! தோதா ஒத்து வந்தா, அதையாச்சும் உருப்படியா செய்யட்டும்”

முத்தம்மா, சொன்ன கையோட நிக்காம, பையனை அம்மாப்பேட்டைக்கு அனுப்பி வெச்சிட்டா. ரெண்டு வருஷம் அங்க இருந்தாரு நம்ம சாயபு. அந்த வருஷம் பாத்து கவன்மண்ட்டு லெவி போட, வீட்டுக்கு வர மூட்டை குறைஞ்சிருச்சு. அதுக்கு முத்தம்மா திட்ட, கோச்சுட்டு இங்கனயே திரும்பி வந்திட்டாரு.

சரி, கல்யாணமாச்சும் மூச்சறலாம்னு பேச்செடுத்தாங்க. அப்பத்தான், வில்வண்டியில போய்க்கிட்டிருந்த, பாப்பாத்திய பாத்துட்டாரு சாயபு. அது சொந்தக்கார புள்ள தான். நெறம் அப்படி ஒரு நெறம், சுண்டுனா ரெத்தம் தெரிக்கறாப்புல. அந்தப் புள்ளய முடிச்சிறச் சொல்லி வீட்டுல சொன்னாரு. பெரிய எடம், அவங்களும் சரின்னு சொல்ல கலியாணம் முடிஞ்சுது.

பாப்பாத்திக்கு புருஷன புடிக்கவே இல்லை. பின்ன, பவுர்ணமியாட்டம் தன்னோட நிறத்துக்கு அமாவாசையாட்டம் புருஷன் இருந்தா எப்படி இருக்கும்? சாயபு, அப்படியே தொட்டா ஒட்டிக்கிற கருப்பு.

ஆனா சாயபு, பொண்டாட்டி மேல உயிரா இருந்தாரு. வீட்டுல, வயசுக்கு வந்த தங்கச்சிங்க இருக்கறதுனால, ஜாதிப்பூ பொட்டலத்த, கம்பிக்குடைக்குள்ள போட்டு, மறைச்சு எடுத்துட்டு வந்து, பொண்டாட்டிக்கு வெச்சு அழகு பார்ப்பாரு. ஆனா, பாப்பாத்தி எப்பப் பாரு எரிஞ்சு எரிஞ்சு விழுவா. இவுரு, பாப்பா, பாப்பானிட்டு, சுத்தி சுத்தி வந்தா, கிட்டயே சேக்க மாட்டா, பாப்பாத்தி. முக்கால்வாசி அம்மா வீட்டுல தான் இருந்துக்குவா. புருஷன் மேல கிஞ்சித்து பிரியம் காட்ட மாட்டா.

பேரு சொல்ல புள்ள ஒன்னு பொறந்திருந்தா, மனசு ஒன்னு சேர்ந்திருக்கும். அதுல பாருங்க, புள்ளையே உண்டாகல. நாளாக, நாளாக, புருஷன வெறுக்கிட்டே வந்து, கடைசியில ஒரு நா, நெரந்தரமா அம்மா ஊட்டுல போய் உட்கார்ந்துகிட்டா பாப்பாத்தி. யாராரோ போய் தாங்கி தலப்புடுச்சும், அழிச்சாட்டியமா பொழைக்க மாட்டேன்னுட்டா.

கொஞ்ச நாளு பார்த்தாரு மீரான் சாயபு. ஒரு சிலுவக்கார பொம்பளையோட தொடர்பாயி, கல்யாணங்கட்டிக்கிட்டு, ஊட்டுக்கு கூட்டிட்டு வந்திட்டாரு. அவ யாரு எவ்வாறுனு யாருக்கும் தெரியாது. கோஷா ஆஸ்பத்திரி, ஆயாவோட புள்ளைனு சொல்லுவாங்க. பாத்திமானு பேர மாத்தி வெச்சாங்க. மூத்த பொண்டாட்டி பாப்பாவோட நெனப்புல, இவள பாப்புனு செல்லமா கூப்புடுவாரு சாயபு.

ஊட்டுல, யாரும் அவள சேத்துக்கல. அதுனால, தனியா ஊடு பார்த்து, தனிக்குடித்தனம் நடத்துனாரு. பாத்திமாவும், அவரு மனசு கோணாம நடந்து, பிரியத்த காண்பிச்சா.

இதுக்குள்ள சாயபோட தங்கச்சி, ஜமீலாவுக்கு கண்ணாலம். ஊர் பூரா அழைப்பு வெச்சாங்க. ஆனா முத்தம்மா மகன்ட்ட ஒரு வார்த்தை சொல்லல. தள்ளி வெச்சிட்டாங்க. விசேஷத்துக்கு நாலு நாள் இருக்கும் போது, சொல்லாம கொள்ளாம, பாத்திமாவக் கூட்டிட்டு, அம்மா ஊட்டுக்கு வந்தாரு சாயபு.

பார்த்தொன்ன முத்தம்மாவுக்கு பேச்சும் வரல மூச்சும் வரல. அப்பத்தான் அட்டாலியில இருந்து தேக்சாவ இறக்கிட்டு இருந்தாங்க எல்லாரும்.

“மம்மாணி” உரிமையோட கூப்பிட்டுக்கிட்டு உள்ள வந்த பாத்திமாவை யாரும் ’வா’னு கூட கூப்பிடல.

“மம்மாணி, குடுங்க மம்மாணி, இந்த தேக்சாவை எல்லாம் நாங்கழுவித் தரேன்”

பதிலுக்குக் காத்திருக்காம, தேக்சாவை எடுத்து ஒட்டடைய தட்டி, புளியுஞ்சாம்பலும் போட்டு தக தகனு வெளக்கி, பளிச்சுனு தொடச்சி வெச்ச நேர்த்திய பார்த்து, முத்தம்மாவே அசந்துட்டா. அவ மனசும் அசைஞ்சிருச்சு.

“ஜமீலா! கொண்டா அந்த பூவக் கட்டித் தரேன். சல்மா, வா தலை சீவி விடரேன்! அய்சாமா, ஒஞ்ஜாக்கிட்ல சமிக்கி வெச்சு பூ வேலை செஞ்சு தாரேன், தா!” இப்படி எல்லார் மனசுலயும் சீக்கிரம் எடம் புடிச்சிட்டா பாத்திமா. ஒரு நாளுலயே குடும்பத்துல ஒருத்தியா மாறிட்டா.


வீடே கல்யாணக் களைகட்டி, கல கலனு இருந்தது. சல்மாவுக்கு அடுத்தவ ஜமீலாவுக்கு தான் கல்யாணம். சல்மாவோட பசங்க கல்யாண வீட்டுல ஒரே ஆட்டமா ஆடிட்டு இருந்தாங்க. தன் பொண்டாட்டிய பாக்க பாக்க சாயபுக்கு மனசு நெறைஞ்சு திருப்தியா இருந்திச்சு.

கல்யாணமும் நல்லபடியா முடிஞ்சுது. பாத்திமா மூத்த மறுமகளா லட்சணமா ஓடியாடி வேல செஞ்சா. அடுத்தடுத்து நாலஞ்சு மாசத்துல, கொழுந்தமாருங்க, ஆபிதுக்கும், அப்புறம் இப்ராம்சாவுக்கும் கல்யாணம் முடிஞ்சுது. எல்லாத்துலயும் சந்தோஷமா பங்கெடுத்துக்கிட்டா பாத்திமா.

முத்தம்மா வீடு, பெரிய வீடு. ஊர்ல எல்லாரும், அங்க தான் கண்ணாலம் வெப்பாங்க. பெரிய வாசல்ல, தென்புறம் ரெண்டு ரூம்புங்க. அதுல, தான் ஆபிதும் இப்ராம்சாவும் குடித்தனம் செஞ்சாங்க. பெரிய வாசல அடுத்து, வட புறம், ஓட்டுவலி திண்ணைல, முத்தமாவும் மக்களும், கட்டில் போட்டு படுத்துக்குவாங்க. வாசல்ல எடப்பக்கம் நெல்லுக் காயப்போடற திண்ணை. வலப்புறத் திண்ணைல சைக்கிள் நிறுத்தி வெச்சிருப்பாங்க. அடுத்ததா, நெழல் வாசலும் வெய்யில் வாசலுமா பெரிய பெரிய வாசலுங்க. வெய்யில் வாசல்ல, ஒரு தண்ணி தொட்டி இருக்கும். பக்கத்துல ராவுல மூத்திரம் போய்க்க ஒரு ஜலதாரை. நெழல் வாசல்ல இருந்து மேல ஏறுனா, பெரிசா சோறாக்கூடு.

நெழல் வாசல்ல இருக்க கதவு வழியா போனா, நெல்லு வேவிக்கற வாசல். நெல்லு வேவிக்க, பெரிய பெரிய அடுப்புங்க. ஊருல எங்க தண்ணி வத்துனாலும், இங்க வத்தாத அருமையான கிணறு. அதை ஒட்டி, தண்ணி சேந்தி ஊத்தற தொட்டிங்க ரெண்டு. கிணத்துக்கு பின்னாடி, பெரிசா, ஒருத்தர் குடியிருக்காப்புல பொடக்கானி. கடைசியில், மாதுள மரத்துக்கு பக்கத்துல கக்கூஸு.

ஊர்லயே அந்தூட்டுல தான் மொதமொதோ கரண்ட்டு வந்திச்சாம். அப்பவெல்லாம் சாயந்திரம் ஆறு மணிக்கு தான் கரண்ட்டு விடுவானாம். ஆறு மணியானா, நானு, நீயினு, சின்ன புள்ளைங்க சுச்சப்போட சண்டை போடுவாங்களாம். கருப்பா வட்டமா, ஒரு டைப்பா இருக்கும் சுச்சுங்க.

நெல்லு வேவிக்கற வாசல்ல, நெல்லு அடுக்க கொட்டாயி ரூமு ஒன்னு பெரிசா இருந்தது. தம்பிங்க மட்டும் இங்க குடும்பத்தோட இருக்காங்களேனு, மீரான் சாயபும், வீட்டை காலி பண்ணி, இந்த கொட்டாயி ரூமைக் கொஞ்சம் ஒதுக்கி, அங்கயே குடி வந்திட்டாரு.

எல்லாம் இருந்திச்சு, மீரான் சாயபுக்கு. ஆனா குழந்த தான் இல்லை. ஜாடை ஜாடையா எல்லாரும் கசமுசனு பேச, எடுத்தாவது வளர்ப்பமுன்னு, நெனச்சிக்கிட்டு இருந்தாரு சாயபு. அப்பத்தான், ஒரு நாளு, கரிவண்டியில ஏறி, பட்டணத்துக்குப் போயிட்டு, திரும்பி வந்துக்கிட்டு இருந்தாரு. ரயிலுப்பொட்டி அந்தப்புறம், கொழந்தையோட அழுகாச்சி சத்தம் விடாம கேட்டுச்சு. என்னன்னு போயி பார்த்தாரு சாயபு....

(வளரும்)

-சுமஜ்லா.

10 comments:

seik mohamed said...

அருமையான எழுத்து நடை.
அருமை,
அருமை,
அருமை
அடுத்த பகுதி, அடுத்த வாரமா?

சுமஜ்லா said...

குமாரன் சார்,
உங்க பாராட்டுக்கு நன்றி. ஒவ்வொரு வாரமும், செவ்வாயிலிருந்து வியாழனுக்குள், அடுத்த பகுதியை எதிர்பார்க்கலாம்.

Thamiz Priyan said...

அமர்க்களமாக தொடர்கிறது அக்கா! மொழிநடை அழகா இருக்கு! தொடருங்கள்!

சுமஜ்லா said...

உங்க பாராட்டுக்கு நன்றி தம்பி!

(அக்கானு கூப்பிட்டா, உங்க வயசு குறைஞ்சிடும்னு ஐடியாவா? எத்துணை பேர் இப்படி கிளம்பி இருக்கீங்க?!)

KarthigaVasudevan said...

சாயபு வீட்டு சரித்திரம் ...படிக்கப் படிக்க இண்ட்ரஸ்ட்டிங்கா தான் போயிட்டு இருக்கு,தொடருங்கள் சுமஜ்லா .

Biruntha said...

அடுத்தது என்ன? எப்போ தொடரும் என்று ஆவலைத் தூண்டுகின்றது. ஒரே நாளில எழுதினீங்க என்டால் எங்களுக்கெல்லாம் எவ்வளவு வசதியா இருக்கும். ம்... உங்க கஸ்டமும் புரியுது. பொறுத்திருந்துதான் படிப்பமே.
அதிலும் அந்த மொழி நடை சூப்பர்.

அன்புடன்
பிருந்தா

Unknown said...

அருமை.தொட்ருங்கள்.

asiya omar said...

அய்யோ!சுஹைனா பாராட்ட வார்த்தை இல்லை.எழுத்து நடை,வழக்கத்தில் இல்லாத மறைந்து கொண்டிருக்கும் சொற்களை கையாளும் அழகு.இன்னும் மெருகேற்றுங்கள்.அவார்டு தேடி வரலாம்.

SUMAZLA/சுமஜ்லா said...

பாராட்டிய எல்லாருக்கும் நன்றிங்க! அப்புறம், ஆசியா அக்கா, என்ன காணோம்னு நினைத்தேன். வீட்டில் எல்லாரும் சுகம் தானே?

இப்னு அப்துல் ரஜாக் said...

தஞ்சாவூர்ல இருந்து,மதராஸ் வந்தாலே நம்ம ஊர் தமிழ் மறந்துடுது,ஆனா அக்கா,ஈரோடில் இருந்தாலும்,இன்னும் பழைய,அழகான,ஊர் மொழியை மறக்காமே இருக்கியளே,எப்டீங்க?

ஜமாயிங்க அக்கா?