Wednesday, April 22, 2009

கொடைக்கானல் போகிறீர்களா?


“மம்மி, அப்படியே கொடைக்கானல் போயிட்டு வரலாம் மம்மீ”

என் மகள் சொன்ன அப்படியேவின் அர்த்தம், வேறு வேலையின் நடுவே ஒரு டூர் என்பது தான்.

கொடைக்கானல் அடிவாரம், பெரிய குளத்துல ஒரு சின்ன வேலை. அதான் அப்படியே ஒரு ஒன் டே டூர் போகலாம்னு, திடீர் ப்ளான் போட்டோம். மாலை தான் முடிவு செய்து, அன்றிரவே புறப்பட்டோம், நான், என் கணவர், என் குழந்தைகள் இருவர்.

“ஏங்க, ஆளுக்கு ஒரு செட் டிரெஸ் எக்ஸ்ட்ரா எடுத்துக்கட்டுமா?” நான் கேட்க,

“வேண்டாம். ஒரு நாளுக்கு எதுக்கு? பையனுக்கு வேணா ஒன்னு எடுத்துக்கோ!” அவர் சொன்னார்.

எதுக்கும் இருக்கட்டுமென்று அவருக்கு ஒரு லுங்கி மட்டும் எடுத்துக் கொண்டேன்.

இரவு 11.30 மணிக்கு புறப்பட்டு 4 மணிக்கு, பழனிக்கு வந்து சேர்ந்தோம். இந்தப்புற அடிவாரம் பழனி, அந்தப்புற அடிவாரம் பெரியகுளம்.

இரவு பஸ் என்றாலும், இங்கிதமே இல்லாமல், பஸ்ஸில் வீடியோ அதுவும் பயங்கர சவுண்டாக வைத்து கொளுத்திவிட்டான். நான் மெதுவா, கண்டக்டரிடம் கேட்டேன்,

“சார்! வால்யூமையாவது கொஞ்சம் குறைங்க சார்”

ஏதோ, கொலை செய்யுங்கள் சார் என்று சொன்னது போல, ஒரு முறை முறைத்துவிட்டு, நகர்ந்து விட்டான் நடத்துனர். விடிய விடிய தூக்கம்...ம்...ஹூம், ஒரு வினாடி கூட தூங்க முடியவில்லை.

4 மணிக்கு பழனியில் இறங்கியதும், தூக்கம் கண்ணை சுழட்டியது. சரி, ஒரு மணி நேரம் ரெஸ்ட் எடுத்து விட்டு கிளம்பலாம் என்று நடந்தோம்.

“மம்மி, ரெஸ்ட் ஹவுஸ் இருக்குமா மம்மீ?” கேட்டு, என் மகள் வயிற்றெரிச்சலை வாங்கிக் கட்டிக் கொண்டாள்.

இருட்டான ஒரு பகுதியில இருந்த நீளமான கல்பெஞ்ச்சி மேலே, பேகை தலையாணியாக வைத்துத் தூங்கி விட்டோம். அருமையான தூக்கம். ஆனா போதவில்லை. சரியா ஆறு மணிக்குள்ள தொழுதுட்டு, போனா தயாரா ஒரு பஸ். அவசர அவசரமா ஏறி சீட் பிடித்த பின்னாடி தான் தெரியுது, கீழயே டிக்கட் எடுக்கணும்னு. அதுவும், டிக்கட்ல சீட் நம்பர் வேற. வசதியா நாங்க பிடிச்ச சீட் அரோ கரா. எங்களுக்கு கிடைத்த சீட் நம்பர் 1, 2, 38. அட ஆமாங்க முப்பத்தி எட்டு தான். பையனுக்கு டிக்கட் தேவையில்லை. இதை விட்டா அடுத்த பஸ் 8.30க்கு தான் என்றார்கள். நல்லவேளை.

முன்னாடி நானும் மகளும் உட்கார, பின்னாடி அவர். நடத்துனர் சீட்டில் என் மகனை உட்கார்த்தினேன். கொஞ்ச நேரத்தில் பையன் தூங்கி வழிய, அவனை மச்சானிடம் அனுப்பி வைத்தேன்.

இருக்க இருக்க அப்பா கூட்டம் பிதுங்கி வழியுது. அதுல ஸ்வட்டர் போட்ட ஸ்கூல் பசங்க வேற வழியில ஏற, ஒரே நெரிசல். இதுல மச்சான் வேறு வாந்தியெடுக்க, அது மகன் மேலயெல்லாம் தெறிக்க, படாத பாடு. அப்புறம் தண்ணி ஊத்தி கழுவி, ஒரு வழியா கொடைக்கானல் வந்து சேர்ந்தோம்.

நாங்க கவர்ன்மெண்ட் பஸ்ஸில தான் சுத்திபார்க்க ப்ளான் பண்ணி இருந்தோம். அதுக்கு தலைக்கு 60 ருபாய் கட்டணம். அதுக்கான டோக்கன் வாங்க போகும் போது,

“சார், சைட் சீயிங் பார்க்கணுமா சார்? இந்தாங்க கார்டு” ஒரு ஆள் நீட்டினான்.

நாங்க ரொம்ப டயர்டா இருந்தோம். சரி, காரில் போய்விடலாம் என்று அவன் பேசுவதை கவனித்தோம். அவ கையில் ஒரு அட்டை.

“சார், லோக்கல்ல இருக்க, இந்த பத்து இடம் பார்க்க தலைக்கு 150 ருபா; பாருங்க இந்த பாரஸ்ட் டூருக்கு அதாவது அதிலுள்ள 9 இடம் பார்க்க ஒரு ஆளுக்கு 225 ருபா”

“என்னது! தலைக்கு மொத்தம் 375 ருபாயா?”

“ஆமாங்க! 14 சீட்டர் வண்டி”

“இல்லப்பா! நாங்க கவர்ன்மெண்ட் வண்டியிலயே போய்கிறோம்”

“சார்! கவர்ன்மெண்ட் வண்டி இப்ப வராது சார். பாருங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க. வந்தாலும் 60 பேர் சேர்ந்தாதான் எடுப்பாங்க சார்! பாருங்க எங்களுது சீப் ரேட்”

“இல்லப்பா! இவ்ளோ காசு நம்மால ஆகாது”

“சார்! பாருங்க சார்! ஒரு டிக்கட் 250 போட்டுக்கறேன் சார்! அதுவும் பையனுக்கு ஃப்ரீயா பண்ணிக்கலாம் சார்!”

“மூணு பேருக்கு 750 கொடுத்து 14 சீட்டர்ல போறக்கு தனி காரே அரேஞ்ச் பண்ணிக்கலாமே?!”

“சார்! பாரஸ்ட் டூர் சார்! ஒரு நாளைக்கு 10 வண்டிக்கு தான் அனுமதி பாரஸ்ட்டுக்குள்ள! ப்ரைவேட் கார்ல போக முடியாது. பஸ்ஸும் உள்ளாற போகாது. அனிமல்ஸ் எல்லாம் இருக்கும்”

“சரி, நாங்க மொத்தம் 600 ருபா தரோம்”

“சார்! முடியாது சார். வேணா, பாரஸ்ட் டூர் புக் பண்ணினா லோக்கல் சைட் சீயிங் ஃப்ரீயா காட்டலாம் சார். அதுவும், மூனு சீட் மட்டும் காலியா இருக்கறதுனால தான் இந்த ரேட்”

“எத்தனை மணிக்கு ரிடர்ன்? ஏனா நாங்க சாயந்திரம் 3 மணிக்கெல்லாம் பெரிய குளம் கிளம்பணும். 6 மணிக்குள்ள பெரியகுளத்துல இருக்கணும்”

“4 மணிக்கு திரும்பிடலாம் சார்! பெரிய குளம் பஸ் பிடித்தால், 2 மணி நேரத்துல போயிரலாம்.”

எங்களை யோசிக்கவே விடல. எங்க டயர்டுனஸ்ஸை அவன் சாதகமாக்கிக் கொண்டான். உடனே 500 அட்வான்ஸ் வாங்கிட்டு, ரசீது கொடுத்தான். போன் பண்ணி வண்டி கொண்டு வர சொன்னான்.

“நாங்க இன்னும் டிபன் சாப்பிடலையே!”

“தோ! எங்க வண்டி வந்திருச்சு! இதுல போய் எங்க ஆஃபீஸ்ல இறங்கிட்டு, பக்கத்துல ஹோட்டல் இருக்கு, டிபன் சாப்பிட்டுக்கங்க!”

அந்த ஆம்னியில் ஏறி, போனோம். அடுத்த சந்து தான் ஆஃபீஸ். வேறு யாரும் சீப் ரேட்டுக்கு எங்களைக் கொத்திக் கொண்டு போய் விடாமல் இருக்க தான் இந்த ஏற்பாடுன்னு பிறகு தான் புரிந்தது.

சாப்பிட்டோம். வேன் தயாராக நின்றது. ஏறிக்கொண்டோம். 20 சீட்டர் வண்டி. அதுல ஒரு கைட் பேசிட்டே வந்தான். என் பையனுக்கு சீட் ஃப்ரீனு சொன்னான்; ஆனா அதுக்கு அர்த்தம் சீட்டே இல்லைனு அப்ப தான் புரிஞ்சுது. ஆஹா! காலை 11 மணியில இருந்த மாலை 4 மணி வரை அவனை மடியிலேயே வைத்திருக்கணும். சூப்பர் ஜாப்! கைடு கிட்டே கேட்டா, யார்கிட்ட காசு கொடுத்தீங்களோ, அங்க போய் கேளுங்கன்றான். நொந்து நூடுல்ஸானேன்.

அட! டூராவது ஒழுங்கா இருந்ததா? பாரஸ்ட் டூராம் பாரஸ்ட் டூர். தலை சுத்தி கீழே விழ வைக்காத குறைதான். கொடைக்கானல் மலை ஏறியதே போதும் போதும்னு ஆயிருச்சு, இதுல இந்த டூருல, அப் அண்ட் டவுன் 80 கி.மீட்டர்.

பாருங்க இதான் பாரஸ்ட் டூருனு அவங்க கொடுத்த 9 இடம்:
1.மஹாலஷ்மி டெம்பிள்
2.குண்டார் வாக்கிங் வாட்டர் ஃபால்ஸ்.
3.பழனி வியூ
4.பூம்பாறை வில்லேஜ் வியூ.
5.மானவனூர் லேக் வியூ
6.மானவனூர் லேக்
7.ஷீப் பார்ம்
8.பிரையண்ட் பார்க்.
9.லேக் டிராப்.

இதுல, ஒரு கோயில்ல போய் இறக்கி விட்டாங்க. அங்க இருந்து, கீழ பாருங்க அதான் பழனின்னாங்க. நாங்க, வேன்ல இருந்து இறங்கவேயில்லை. பக்கத்து சீட்ல விக்கினு ஒரு பொடியன் சொன்னான்,

“அங்கிள் பொய் சொல்றார். பழனியே தெரிய மாட்டீங்குது!”

அடுத்து வேன் விட்டு இறங்காமலே, நீர் தாரை விழுந்து காய்ந்து போன ஒரு பாறைய காட்டி இதான் வாட்டர் பால்ஸுன்னாங்க. நம்பித்தான ஆகணும். வாட்டர் பால்ஸ்ல குளிக்கற மாதிரி பண்ணின கற்பனை எல்லாம் பணால்!

ஒரு இடத்துல வேன நிறுத்தி, அடிவாரத்தை காண்பிச்சாங்க. அதுல கொஞ்சம் வீடுங்க இருந்தது. இது தான் சீவலபேரி பாணியின் கதையின் கரு உருவான பூம்பாறை ஆதிவாசிங்க வில்லேஜ்னாங்க. ஆதிவாசி பசங்க(!) சூப்பரா கிரிக்கெட் ஆடிட்டு இருந்தாங்க.

அப்புறம் ஒரு மேட்டுல நின்னு, கீழ குட்டி குட்டியா குறும்பை ஆடுங்க மேயுறதைக் காட்டி, அதான் ஷீப் பார்ம்னாங்க. எனக்கு கோபமே வந்திருச்சு. பின்ன, நான் ஷீப் பார்முக்குள்ள போகலாம்; இந்த முடி எடுக்கறதெல்லாம் பார்க்கலாம்னு கற்பனை பண்ணி வெச்சிருந்தேன். ஆட்டை நாங்க பார்த்ததே இல்ல பாருங்க! அங்க தான் ஷீப்ப க்ளோனிங் பண்றாங்கன்னு கைடு டாவடிக்க, க்ளோனிங்காஆஆனு எல்லாரும் வாய பிளந்தாங்க. அதிலயே அந்த பக்கம் ஷீப்பு, இந்த பக்கம் ஒரு சின்ன லேக்கு தூரத்துல தெரிந்தது. இதான் மானவனூர் லேக் வியூ அப்படின்னான். சரிப்பானு வேனுக்கு திரும்பினோம்.

அப்புறம் அடுத்த லிஸ்ட்ல இருக்க 10 இடத்தை காட்டிட்டு, லேக்கும் பார்க்கும் இருக்கற இடத்துல டிராப் பண்ணிட்டான். அது என்ன அடுத்த லிஸ்ட்? அதான் 150 ருபா சொன்னேனே ஆரம்பத்துல அந்த சமாச்சாரம்.

1.அப்பர் லேக் வியூ.
2.கோக்கர்ஸ் வாக்
3.கிரீன் வேல்லி வியூ
4.கோல்ஃப் கோர்ஸ்
5.பில்லர் ராக்
6.டெவில்ஸ் கிச்சன்(குணா கேவ்)
7.ஃபோர் பில்லர் ராக்
8.பைன் பாரஸ்ட்(ஷூட்டிங் ஸ்பாட்)
9.மோயர் பாயிண்ட்
10.லேக் டிராப்.

இதுல முதல்ல இருக்கறது, கோக்கர்ஸ் வாக். அதாவது, வாக்கிங் போற இடம். இந்த பக்கம் இறங்கி நடந்தா ஒரு 200 மீட்டர் தூரத்துல அந்த கேட் வரும். அது வழியா வெளிய வந்திர வேண்டியது தான். அங்க இருந்து கீழ பார்த்தா அதல பாதாளம்; சைட் சீயிங்; கம்பி வேலி போட்டிருக்காங்க. அங்க 5 நிமிஷத்துல மருதாணி போட்டு விடுற கடை இருந்துச்சு. ஐந்தே நிமிடத்தில அவ்ளோ அழகா டிசைன் போட்டு விடறாங்க.ஒரு கைக்கு 25 ரூபா தான். ஆனா, எங்களுக்கு மொத்தமே 15 நிமிஷம் தான் வேன்காரன் டைம் கொடுத்தான். இப்படி போய் அப்படி வர டைம் சரியா இருந்திச்சு.

ஒரு இடத்துல நிறுத்தி அப்பர் லேக் வியூ காட்டினாங்க. அதாவது மலை மேல இருந்து கீழ லேக்க பார்க்கறது. அது கிட்ட தட்ட இந்தியா மேப் ஷேப்புல இருந்தது.

சூசைட் பாயிண்ட் என்ற இடத்துக்கு தான் கிரீன் வேலி வியூனு மாற்றி வெச்சிருக்காங்க. பார்த்தா கீழ அதல பாதாளம், விழுந்தா எலும்பு கூட தேறாது. கம்பி தடுப்பு போட்டு வெச்சிருக்காங்க. அவ்ளோ தான். வேன்ல போகும் போதே, ஒரு இடத்தைக் காட்டி இதான் கோல்ஃப் கோர்ஸுன்னு சொல்றாங்க. தூரத்துல சில பேர் கோல்ஃப் விளையாடிட்டு இருக்காங்க.

பாருங்க! இந்த பில்லர் ராக், ஃபோர் பில்லர் ராக் எல்லாம் ஒன்று தான். இதெல்லாம் லிஸ்ட்டை அதிகப்படுத்துவதற்காக எழுதப்படுவது. முன்புறமாக இருந்து பார்த்தா ரெண்டு ராக் தெரியும்; எங்களை பின்புறமாக கூட்டி சென்றார்கள். காட்டுக்குள் ட்ரக்கிங் போல போனோம். 4 பில்லர் ராக் தெரிந்தது. இயற்கை செதுக்கிய எழிலோவியம்.

ரொம்ப தூரம் காட்டுக்குள் சென்று டெவில்ஸ் கிச்சன் பார்த்தோம். அங்கே குணா படம் ஷூட்டிங் எடுத்ததனால, குணா கேவ் என்றும் பெயர் உண்டு. அங்கே உள்ளே மூச்சுதிணறி உயிரிழப்பு ஏற்பட்டதால், யாரையும் உள்ளே அனுமதிப்பதில்லை. அரை கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து கம்பி வலைகளின் நடுவே ஏதோ பாறையைக் காட்டி, இங்கே தான் கேவ் உள்ளது என்றார்கள்.

பைன் ஃபாரஸ்ட் மிக அழகான இடம். மரத்தை சுற்றி சுற்றி நடிகர்கள் டான்ஸ் ஆட ஏற்ற இடம். மிக குளுமையாக இருந்தது. எல்லாரும் பாரஸ்ட்டுக்குள்ளே போய் வந்தார்கள். மச்சானுக்கு ஒரே தலை சுற்றல்; அதனால் நான் போகவில்லை. வெளியே இருந்தே அதன் அழகை ரசித்து போட்டோ எடுத்துக் கொண்டேன்.

மோயர் என்பவர் (அது யாரோ பிரபு!) அடக்கமாகி இருக்கும் இடம் இது என்றார்கள். ஒரு கல்லறையை வேனில் இருந்தே காட்டி, இது தான் மோயர் பாயிண்ட் என்றான் கைடு.

கடைசியில் லேக்குக்கு ஒரு அரை கிலோமீட்டர் தூரத்திலேயே இறக்கி விட்டு விட்டு இதான் லேக்குனு சொல்லிட்டு போயிட்டாங்க.

மச்சான் மறுபடியும் வேனிலேயே வாந்தி எடுக்க, பையன் மேலெல்லாம் ஆகி, மச்சானுக்கு மாற்றுடையும் இல்லாமல், பையனுக்கு மட்டும் துணி மாற்றி விட்டு, இருந்த லுங்கியை மச்சானிடம் கொடுத்து மாற்ற சொல்லி, அங்கிருந்த ஊற்றில் நீர் பிடித்து எல்லாம் கழுவி, படாத பாடு ஆகிவிட்டது. ஒரு நாள் டூர் என்றாலும் மாற்றுடை அவசியம் என்பது படிப்பினை ஆகிவிட்டது.

பாரஸ்ட் டூரில், குரங்கை தவிர எந்த அனிமலும் பர்க்கவில்லை. அனிமல்ஸ் இருக்கும் என்று கைடு சொன்னதே கப்ஸா என்று நான் எண்ணிக் கொண்டேன். இந்த லட்சணத்துல, பாரஸ்ட்டுக்குள்ள போறதுக்கு தலைக்கு 20 ருபாயும், கைட் சார்ஜ் தலைக்கு 10 ருபாயும் கலெக்ட் செய்து கொண்டார்கள். விதி! கொடுத்துத் தான ஆகணும்!

மொத்ததுல, 150 ருபா டூரினால கிடைத்தது நல்ல அனுபவம். அந்த 225 ருபா பாரஸ்ட் டூரினால் கிடைத்தது, வாந்தி மயக்கம். 4 மணிக்கு திரும்பிடலாம் சொல்லி, 5.45க்கு கொண்டு வந்து விட்டான். எது தான் சொன்னபடி இருந்தது?! இதுல கூத்து என்னன்னா, தனி காரில் லோக்கல் சைட் சீயிங் பார்க்க சார்ஜே 650 ருபாய் தான். ஆனா, நாங்க 675 கொடுத்து, கஷ்டத்தை விலைக்கு வாங்கிக் கொண்டோம்.

லேக் போனோம். அங்கு பாத்ரூம் வசதி கூட சரியாக இல்லை. மணிக்கு 10 ருபா என்று கலர் கலரான வாடகை சைக்கிள் குவித்துள்ளார்கள். யார் வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். பாத்ரூம் பார்க்கினுள் என்றார்கள். ஆனால் 6 மணிக்கு மேலே பார்க்கினுள் அனுமதி இல்லை என்று சொல்லி விட்டாகள். பிறகென்ன, வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு, ஒவ்வொருவராக, அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்த தண்ணீர் இல்லாத பாத்ரூமுக்கு வாட்டர் கேன் தண்ணீர் உதவியால் போய் வந்தோம்.

என்ன மம்மீ! இப்படி ஓட்டறீங்க! என்ன மாதிரி பாஸ்ட்டா ஓட்ட தெரியாதானு நான் சைக்கிள் ஓட்டியதைப் பார்த்து கை கொட்டி கேலி செய்கிறான் என் ஐந்து வயது மகன்.

போட்டிங்கும் 6 மணியோட சரி! சும்மா வேடிக்கை பார்த்துட்டு, கிளம்பினோம் பஸ்ஸுக்கு. பெரிய குளத்துக்கு த்ரூ பஸ் அப்ப இல்லாததனால், 2 பஸ் மாறி போகணும். மணி வேற 7 ஆயிருச்சு. போய் சேர 10 ஆகும். எல்லாருக்கும் டயர்டு. அதனால் அன்று தங்கிட்டு அடுத்த நாள் போகலாம்னு முடிவு பண்ணினோம்.

ஒரு நாள் டூர் தானன்னு கையில அதிகமா பைசா எடுத்துட்டு போகலை. அப்போ ஒரு புரோக்கர் வந்தான்.

“சார்! டபுள் ரூம் 400, 500, 600 ருபா தான் சார்! 24 அவர் செக் அவுட்; வாங்க சார்!”

“அட! எங்கனால் அதிகமா நடக்க முடியாது! இங்கயே எங்கியாவது பக்கத்துல பார்த்துக்கறோம்”

“சார் பக்கத்துல தான் சார்”

சொல்லியபடி எங்களை அவன் அழைத்துச் சென்ற லாட்ஜில் இடம் இல்லை. உடனே எங்க சூட்கேஸை வாங்கிக் கொண்டு, முன்னாடி நடக்கிறான், நடக்கிறான்; எங்களுக்கு மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்குது. வழியில் மீடியமா, டீசெண்டான லாட்ஜ் நிறைய இருந்தும், அவனுக்கு கமிஷன் கிடைக்கும் லாட்ஜுக்கு எங்களைக் கூட்டுட்டு போறான்னு தெரிஞ்சது. சூட்கேஸ் அவன்ட்ட இருக்கனால, ஆட்டுக் குட்டு மாதிரி, பின்னாடியே நடந்தோம்.

வாடகை அவன் சொல்லியபடி இல்லை. மிக அதிகமாக சொன்னார்கள். பொய் சொல்லி இருக்கிறான் என்று புரிந்தது. கோபத்தில் நன்றாக திட்டினேன். எங்களை நன்றாக அலைய விட்டு, கடைசியில் 600 ருபா வாடகைக்கு, ஒரு ரூமில் செட்டின் ஆனோம். ஏண்டா இவன் பேச்சை கேட்டோம் என்று இருந்தது. காலை 10 மணிக்கு செக் அவுட் டைம் என்று சொல்லிவிட்டார்கள்.

காலை மூஞ்சிக்கல் ஸ்டாப்பிங்கில் பஸ் பிடித்தோம். வத்தலகுண்டு பஸ்ஸில் ஏறி, காட் ரோட்டில் இறங்கி, பெரிய குளம் வந்து, எங்கள் வேலையை முடித்துக் கொண்டு, திண்டுக்கல் வந்து, பஸ் மாறி, எங்கள் ஊருக்கு வந்து சேர இரவாகி விட்டது.

மலை இறங்க இறங்க, மச்சான், மகன், நான் எல்லாரும் லைனா வாந்தி எடுக்க, ஏண்டா டூர் போனோம்னு இருந்திச்சு. என் மகளோ இன்னும் 4 வருடத்துக்கு டூரே கேட்க மாட்டேனு சொல்லிட்டா.

ஆக ஒரு படிப்பினை என்னன்னா, புரோக்கரை நம்பாதீங்க! ஒரு நாளா இருந்தாலும் மாற்றுடை எடுத்துப் போங்க! எங்களை மாதிரி திடீர்னு கிளம்பாம, எதையும் ப்ளான் பண்ணி செய்யுங்க! ஓக்கேவா!

-சுமஜ்லா

14 comments:

Menaga Sathia said...

//புரோக்கரை நம்பாதீங்க!//நல்லா சொன்னிங்க.நான் கூட இந்தியா வந்தால் கோடைக்கானல் போகலாம்னு நினைத்தேன்.உங்க கட்டுரையைப் படித்ததும் பார்த்த மாதிரி ஆகிடுச்சு!!முன்னாடியே இந்த கட்டுரையை போட்டுட்டீங்க,இல்லன்னா நானும் அரோகரா தான்!! நன்றி சுமஜ்லா!!

Unknown said...

நல்ல அனுபவமுள்ள(!?) பயணக்கட்டுரை!

இதுப்போல் ஏமாற்றுபவன்களை அரசு தடுக்கவேண்டும்!

Unknown said...

//நல்லா சொன்னிங்க.நான் கூட இந்தியா வந்தால் கோடைக்கானல் போகலாம்னு நினைத்தேன்.உங்க கட்டுரையைப் படித்ததும் பார்த்த மாதிரி ஆகிடுச்சு!!முன்னாடியே இந்த கட்டுரையை போட்டுட்டீங்க,இல்லன்னா நானும் அரோகரா தான்!!//

இதே கருத்துதான் என்னோடதும்!!

Anonymous said...

I love the way you write. Enjoyed it. Thank you so much for your advice also.

Ravi

சுஹைனா said...

அட! என்னங்க மேனகா அண்ட் அதிரை சகோதரரே! கொடைக்கானல் ஒரு இயற்கை எழில் கொஞ்சும் இடம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. ப்ரீ புக்கிங் அண்ட் ப்ரீ ப்ளானிங் இருந்தால், நன்றாக இருக்கும்.

இயற்கை அன்னையின் கரங்களில் தவழும் கொடைக்கானலில், அருமையான க்ளைமேட், க்ளைமேட்டை மட்டுமே(!) அனுபவிக்க வரும் ஹனிமூன் கப்பிள்ஸ், மெயின் பஜார் தவிர, நகரத்தின் நாகரிகம் இன்னுமே கலந்திராத பலப்பல இடங்கள், நம் கையில் இருக்கும் உணவை பறித்து செல்லும் மந்தி கூட்டம், ஏரியின் கரங்கள் தாலாட்டும் அழகிய படகுகள், இப்படி எவ்வளவோ இருக்குங்க ரசிக்க.

ரவி சார், என்னை உற்சாகப்படுத்தியதற்கு தேங்க்ஸ்.

Thamiz Priyan said...

பெரியகுளம் என்ற பெயரைப் படித்ததும் நம்ம ஊரைப் பற்றி ஏதும் குறை சொல்லிட்டீங்களோன்னு பயத்தோட படிச்சிக்கிட்டே வந்தேன்.. ஹிஹிஹி கொடைக்கானலோட விட்டுட்டீங்க.. நல்லவேளை எங்க ஊர் தப்பிச்சது.. ;-)

Anonymous said...

Yedhayum plan panni seyyanum, plan pannaama seiyakkoodathu!!! AVVVVVVVVVVV

SUMAZLA/சுமஜ்லா said...

அட பெரியகுளம் உங்க ஊரா சார்! அங்கு பெண்கள் மதரஸாவில் தான் என் மகளை சம்மர் கோர்ஸ் சேர்த்துள்ளேன். அதற்காகத்தான் அங்கு சென்றோம்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

படாத பாடு பட்டிருப்பீங்க போல பாவம் :(

வெற்றி-[க்]-கதிரவன் said...

கோக்கர்ஸ் வாக் உண்மையிலேயே ஒரு அற்புதமான இடம்.... 15 நிமிடம் ரொம்ப கம்மிதாங்க..... :(

raffik said...

ur realy lucky(dont curse me) some tours include shopping spree which includes only artiefacts that too to place where those guys get commission

SUMAZLA/சுமஜ்லா said...

Ofcourse Sir! these people also took us to such places. They tried to play guile on us, by giving explanation of pure eucalyptus oil. But we were purely not in the mood of shopping and so escaped from their clutches.

Are you madras electricals raffik? This is Tamil Blog. why dont you try to comment in tamil.

FAAIQUE said...

YOUR ARTICLE "WRITTEN STYLE" NICE

Nathanjagk said...

அட்டகாசம்! ஆர்வமா படிக்க முடிஞ்சது உங்க பயண கட்டுரையை! பயணிகள், பக்தர்கள் அதிகம் வர்ர இடம்னாலே பிராடுதனம் அதிகமாயிடும் ​போல!