Wednesday, April 29, 2009

இப்படி கூட நடக்குமா?!


ரெட்டபாளையம் பஸ் ஸ்டாப்பில் இறங்கினான் செந்தில். அவன் பாவூருக்கு ஒரு வேலை விஷயமாக வந்திருந்தான், அப்படியே தன் பால்ய கால சினேகிதன் வேலனைப் பார்த்துவிட்டுப் போகலாம் என, ரெட்டபாளையம் வந்தான்.

“ஏங்க இங்க வேலன் வீடு எதுங்க?” பெட்டிக்கடைக்காரரிடம் விசாரித்தான்.

“யாருப்பா? போன மாசம் திருட்டுப் போச்சே அந்த வேலன் வீடா?”

“திருட்டா என்னங்க சொல்றீங்க?! பி. டபிள்யூ. டி யில் வேலை பார்க்கிறாரே அந்த வேலன் வீடு தான். சின்ன வயசுல வந்திருக்கேன். அரசமரத்துக்கு ஒட்டின சந்துல வீடு இருக்கும். இப்ப அந்த மரத்தையே காணோம். அதான் எப்படி போறதுன்னு கேட்டேன்!”

அவர் சொன்ன வழியில் நடந்தான் செந்தில். திருட்டுப் போனதை ஒரு முக்கிய அடையாளமாக சொல்கிறாரே என்று அவனுக்கு ஒரே குழப்பமாக இருந்தது. சரி எதுவாக இருந்தாலும் வேலனிடம் கேட்டுக் கொள்ளலாம் என்று நடையை எட்டிப் போட்டான்.

இருவரும் ஹாஸ்டல் ரூம் மேட்ஸ், பள்ளி நாட்களில். பாவூர் சற்று பெரிய நகரமாக இருந்தாலும் அங்கிருந்து நாலு கிலோமீட்டர் தள்ளி இருக்கும் ரெட்டபாளையத்தில், மண்ணின் வாசம் இன்னும் கொஞ்சம் மிச்சம் இருந்தது. வேலனுக்கு பாவூரிலேயே வேலையும் அமைந்து விட்டது.

ஏற்கனவே ஓரிரு முறை வந்திருந்த ஞாபகத்தில், வீட்டை எளிதாக கண்டுபிடித்து விட்டான். வெளியே ஓடோடி வந்து வரவேற்றான் வேலன்.

“வாடா செந்தில்! எங்க இங்கே திடீர்னு! மீரா என் ஃபிரெண்டு வந்திருக்கான். ரெண்டு டம்ளர் காப்பி போட்டுட்டு வா!”

சுற்றிலும் கண்களை அலைய விட்டான் செந்தில். அழகான சிறிய வீடு. வேலனின் அப்பா காலத்தில் கட்டியது. ஓரமாக புத்தம் புதிதாய் ஒரு ஃபிரிஜ். பக்கத்தில் புதிய ஆஃபீஸ் டேபிள் சேர் ஒன்று. தான் உட்கார்ந்திருந்த சோபா கூட புதிதாக இருந்தது. பரவாயில்லை சம்பளத்தோட கிம்பளமும் வரும் போலிருக்கிறது என்று எண்ணிக் கொண்டான்.

மீரா கொடுத்த காபியை குடித்துக் கொண்டே மெதுவாக கேட்டான் வேலனிடம், “என்னடா? வழி விசாரித்தாலே ஏதோ திருட்டுப் போன வீடுன்னு சொன்னாங்களே.... என்னடா திருட்டுப் போச்சு?”

“அது பெரிய கதைடா! கேட்டா, இப்படி கூட நடக்குமானு நீ நினைப்பே.....” சோகத்துடன் கூறிய வேலன், நடந்ததை விவரிக்க ஆரம்பித்தான்.

அன்று ஸ்கூட்டரில் வெளியே போயிருந்த போது, வேலனின் ஸ்கூட்டர் சாவி தெறித்து விழுந்து விட்டது. எங்கெங்கோ தேடியும் கிடைக்கவில்லை. ஆள் அனுப்பி, மாற்று சாவி கொண்டுவர சொல்லி, வீடு வந்து சேர்ந்த வேலனிடம், மீரா ஒரு ஐடியா கொடுத்தாள்.

“ஏங்க! கீ செயினில பேர் பொறித்து தருகிறவரிடம் கொடுத்து, நம்ம கீ செயினில், அட்ரஸ் போட்டுக்கலாமா? தொலைந்து போனா ஈஸியா திருப்பி நம்ம கிட்டயே தந்திடுவாங்கல்ல?!

“ஏன் மீரா? அட்ரஸ் எழுதினா ஆபத்தாச்சே! யாருடைய சாவின்னு தெரிந்திடுமே?! வேணா நம்ம செல் நம்பர் மட்டும் போட்டு வெச்சிக்கலாம். யாராவது நல்லவங்க கைக்குப் போனா, போன் பண்ணி சொல்வாங்க. போய் வாங்கிக்கலாம்ல!”

“ஆமாங்க இதான் நல்ல ஐடியா” இந்த ஐடியா அடிமடியிலயே கைவைக்கும் என்பது தெரியாமல், செல் நம்பரை பொறித்து வாங்கிக் கொண்டனர், ஸ்கூட்டர் கீ செயின், மற்றும் வீட்டு கீ செயுனுக்கு!

சரியாக ஒரே மாததில் வீட்டு சாவிக் கொத்து தொலைந்து விட்டது. நல்லவேளை செல் நம்பர் பொறித்திருக்கு, அதனால எப்படியும் கிடைத்து விடும் என்று இருவரும் நம்பினார்கள். நம்பியது போலவே போன் வந்தது.

“சார்! உங்க கீ செயின மிஸ் பண்ணிட்டிங்களா, சார்?! பஸ் ஸ்டாப்புக்கிட்ட கிடந்தது!”

“ஆமாங்க! எங்க இருக்கீங்கன்னு சொல்லுங்க, நானே வந்து வாங்கிக்கிறேன்.”

“கீதாஞ்சலி ஹோட்டல் பக்கத்துல இருக்கிற பஸ்ஸ்டாப்ல நிற்கிறோம் சார்!”

“இதோ இருங்க, அஞ்சு நிமிஷத்துல வந்திடறேன் அங்க. வெள்ளை சட்டை, புளூ ஜீன்ஸ், ஹெல்மெட் போட்டுகிட்டு, பஜாஜ் ஸ்கூட்டர்ல வருவேன். உங்க அடையாளத்தை சொல்லுங்க சார்!”

“நேர பஸ்ஸ்டாப்புக்கு வந்திருங்க சார்! அங்க சிமெண்ட் பென்ச்ல தான் நான் உட்கார்ந்து இருக்கேன். சீக்கிரம் வாங்க; எனக்கு பஸ் வர்ர நேரம் ஆச்சு”

செல்லை அணைத்த வேலன், “ பார்த்தியா மீரா? நம்ம ஐடியா இப்போ எவ்வளவு உபயோகமா இருக்குன்னு?” என்று மனைவியிடம் சொல்லியபடி ஸ்கூட்டரைக் கிளப்பினான் வேலன்.

சொல்லிவிட்டு, சற்றே நிறுத்தினான் வேலன்.

“அப்புறம் என்னடா ஆச்சு?” செந்திலுக்கு என்ன நடந்திருக்கும் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம்.

“போனேண்டா! ஆனா அங்க யாருமே இல்லை; கொஞ்ச நேரம் தேடிப் பார்த்துட்டு வந்திட்டேன். மாற்று சாவி இருந்ததுனால அப்போ அது எனக்கு பெரிசா தெரியல. சொன்னவர், அவசரமா பஸ் வந்ததுனால கிளம்பி போயிட்டார் போலிருக்குனு நினைத்துக் கொண்டேன்; ஆனா...”

“ஆனா...”

“ஆனா... நடந்தத, சுத்தமா நான் மறந்திட்டேண்டா! ஒரு பதினைஞ்சு நாள் கழித்து லீவுக்கு, மீராவையும் பையனையும் எங்க மாமியார் வீட்டுல விட்டுட்டு வர போய்விட்டேன்!

வந்து பார்த்தா, வீடு பூட்டினது பூட்டியபடி தான் இருக்குது. ஆனா... உள்ள ஒரு சாமானும் இல்ல. பிரோவை அப்படியே எடுத்துட்டுப் போயிட்டான் திருடன். நல்ல வேளை நகைங்களை மீரா எடுத்துட்டுப் போயிட்டதால தப்பிச்சுது. ஆனா, ரொக்கம் ஒரு இருபதாயிரம், அப்புறம் வீட்டு சாமான்கள், ஃபிரிஜ், வாஷிங் மெஷின், கட்டில், பீரோ, எல்லாம் மொத்தமா வாரி வழிச்சிட்டுப் போயிட்டாங்க!”

“அக்கம்பக்கத்துல யாரும் கவனிக்கலையா?”

“கேட்டேனே! வீடு காலி பண்ணுவதாக எல்லாரும் நினைத்துக் கொண்டார்களாம். ஐயாவுக்கு சென்னைக்கு ட்ராஸ்ஃபர் ஆயிருச்சுன்னு, வந்த ஆள் யார்கிட்டயோ புருடா விட்டிருக்கான்.”

“எப்படிடா இப்படி?”

“தொலைந்த சாவியைத் தேடி நான் போனப்ப, எடுத்த ஆள், மறைந்திருந்து, என்னை கவனித்து, என்னை ஃபாலோ பண்ணி என் வீட்டைக் கண்டுபிடித்திருப்பான் போலிருக்குடா! அழகா வீட்டுக்காரனாட்டம் திறந்து நீட்டா எடுத்திட்டுப் போயிட்டான்.

பாரு! இந்த ஃப்ரிஜ், இந்த டேபிள், டீ.வி, சோஃபா செட்டெல்லாம் புதுசா ஆஃபீஸ்ல லோன் போட்டு வாங்கினேன். நினைத்தாலே மனசு ரொம்ப கஷ்டமா இருக்குடா! போலீஸில கம்ப்ளெயிண்ட் கொடுத்தும் ஒன்னும் பிரயோஜனமில்ல. விதி! வேற என்ன செய்யுறது? ஏதோ நகைங்க தப்பியதேனு ஆறுதல் பட்டு கிட்டோம்”

இப்படி கூட நடக்குமா என்று அப்படியே அதிர்ச்சியில் உறைந்து போனான் செந்தில். சிறிது நேரம் வேறு விஷயங்கள் பேசிக் கொண்டிருந்து விட்டு கிளம்பினான். தனது சாவிக் கொத்தில், தன் கம்பெனி பேர் பொறித்திருந்த தகடை கழட்டி தூர வீசியபடி நடந்தான்.

-சுமஜ்லா

2 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நடக்கும் நடக்கும் .. :) நல்ல கதையா இருக்கே.

விக்னேஷ்வரி said...

வித்தியாசமா இருக்குங்க. நல்லாருக்கு.