Tuesday, May 12, 2009

சாயபு வீட்டு சரித்திரம் - 5


(உலவும் மனிதர்களின் உண்மைக் கதை)

பிள்ளைப் பருவமது சூதுவாது அறியாதது;
கள்ளமில்லா கனவுகள் கண்களில் கொண்டது!
சொல்லத் தெரியாத ஆசைகள் மனதிற்குள்
மெல்ல சிறகினை விரிக்கின்ற வயதது!!

லைனூட்டுக்கு குடி போய், எல்லாம் ஒதுங்கு வெச்சு முடிக்கவே ஒரு வாரம் ஆயிரிச்சு. கச்சாமாவுக்கு, அக்கம்பக்கத்துல, ரஜியா, சவுதானு புதுசா செட்டு புடிச்சிட்டா. பள்ளிக்கோடமும் எல்லாரும் ஒன்னா சேர்ந்துட்டுப் போயிட்டு வந்தாங்க.

ஒரு நா, கவுறாடிக்கிட்டிருந்தா கச்சாமா. பாத்திமா கவுத்துக்கட்டிலெல்லாம் வாசல்ல கொண்டாந்து போட்டு, தொங்கல சரி பண்ணிட்டு இருந்தா. அப்பத்தான், ஒரு கட்டில்ல, கவுரு பூராம் பிஞ்சு கிடந்துச்சு. மாத்தி தான் ஆகணும். போன சந்தையில வாங்கியாந்த கயிறு கடக்குது. ஆனா, அவளுக்குக் கட்டில் போட தெரியாது. ஜாயிர அனுப்பிச்சு, கொழுந்தியா அய்சாமாவ கூட்டியாற சொன்னா. அப்ப தான் ரோட்டுல சத்தங்கேட்டுச்சு.

“பாரு பாரு நல்லா பாரு!
பயாஸ்கோப்பு படத்த பாரு.
எம்ஜியார பார்த்தியா?
எஸ்ஸெஸ்ஸார பார்த்தியா?
சிவாசிய பாத்தியா
சாவித்திரிய பாத்தியா?
பாத்தியாடி பாத்தியா
பயாஸ்கோப்பு பாத்தியா?”

பயாஸ்கோப்புக்காரன் வீதியில படங்காமிச்சிட்டு இருந்தான். அதப்பாக்க கச்சாமாவுக்கு ஆசயா இருந்திச்சு.

“அம்மா, அம்மா, ரெண்டுபிசா குடுமா! பயாஸ்கோப்பு பாக்கறம்மா!”

கயித்துசுரணைய அவுத்துப் போட்டு, அளந்து அளந்து சுத்திக்கிட்டிருந்தா பாத்திமா. கேட்டதும் அவளுக்குக் கோவமா வந்தது.

“அம்மா அம்மா காசு குடுமா”

முதுகுல ரெண்டு கொடுத்தா பாத்திமா. கோனு அழுகாச்சி புடிச்சுக்கிட்டா கச்சாமா. அப்பத்தான் அய்சாமாவும் சாதிக் அலியும் உள்ளாற வந்தாங்க.

“வா அய்சாமா! சாதிக்கு, இவ்ளோ நாளாச்சா இந்த ஊட்டுக்கு வரதுக்கு?”

“கட்டிலுக்கு சட்டத்த பூட்டியாச்சா? யா பாத்திமா! புளிமிச்ச நார் கவுறா? கத்தாழ நார் கவுறா?”

“புளிமிச்ச நார் தான். போனவாரந்தான் உங்கண்ணன் சந்தையில வாங்கியாந்தாரு!”

“அட, ஏன் புள்ள இந்த அழுவாச்சி அழுவுது?”

இவங்க இங்க பேசிட்டு இருந்தப்பவே, சாதிக்கு போய், கச்சாமாவ சமாதானப் படுத்தி, பயாஸ்கோப்பு பாக்க கூட்டிட்டுப் போயிட்டான். அவங்கப்பா குடுத்த வாரக்காசு கைல இருந்துச்சு.

மூணுகால் ஸ்டேண்டுல மேல இருந்த டப்பாவுல கண்ண வெச்சுப் பார்த்தா கச்சாமா. பயாஸ்கோப்புக்காரன், பாட்டுப் பாடிட்டே, அதச்சுற்ற, படம் மாறி மாறி வந்துச்சு. சந்தோஷமா பார்த்தாங்க ரெண்டு பேரும். அன்னிக்குப் பூராவும் ஒரே ஆட்டம் தான்.

கட்டிலு போடுறப்ப, சாதிக்கு போயி பக்கத்தால உக்காந்துகிட்டான், குத்துக்கால, தூக்கி, தூக்கி விட. அது அவனுக்கு புடிச்ச வெள்ளாட்டு. காலம் இப்டியே வேகமா போயிருச்சு. நோம்பு வந்தது. வண்டி கட்டிக்கிட்டுப் போயி எல்லாரும் நேஷனல் ஸ்டோர்ஸ்ல, துணி எடுத்தாங்க. கோஷா பொம்பளைங்களுக்குன்னு, பின் பக்கமா தனி வழி இருக்கும். 

நோன்பன்னிக்கு எல்லாரும் ஒருத்தர் ஊட்டுக்கு ஒருத்தர் வந்து புள்ளைங்களுக்கு நோம்பு காசு கொடுத்தாங்க. அன்னிக்கு புள்ளைங்கல்லாம் பார்க்குக்கு போனாங்க. காதரு, சாதிக்கு, கச்சாமா எல்லாரும் ஒரே ஆட்டம் தான். இதுல டவுனு குப்பி பசங்களும் சேந்துகிட்டாங்க. சாதிக்கு எல்லாத்துக்கும் ஐஸு வாங்கிக் குடுத்தான். கச்சாமாவுக்கு பெஷலா, பலூன்காரங்கிட்ட காத்தாடி வாங்கிக் குடுத்தான். சாயங்காலம் பெரியவங்க எல்லாரும் புள்ள குட்டிங்கள கூட்டிக்கிட்டு, சினிமாவுக்குப் போனாங்க.

“சல்மாக்கா, நீயும் உம்பசங்களும் வரீங்களா?”

“ஆமா அய்சாமா! ரெண்டு ஜமுக்காளம் எடுத்துக்குங்க”

எல்லாரும் கொட்டாயிக்கு படம் பாக்க போனாங்க. தர டிக்கட்டு தான். கட்டாந்தரையில ஜமுக்காளத்த விரிச்சு உக்காந்துக்கிட்டாங்க. படம் போடற செவுத்துக்கிட்ட இருந்த மண்ணு மேடை மேல ஏறி, கைமேல தலைய சாச்சு வெச்சுப் படுத்துக்கிட்டே படம் பார்த்தாங்க பசங்க எல்லாம். வேவிச்சப் பனங்கெழங்க எடுத்து எல்லாருக்கும் கொடுத்தா சல்மா.

படம் விட்டு வீட்டுக்கு வந்தும் எல்லாருக்கும் அன்னிக்கு கும்மாளம் தான். கச்சாமாவுக்கு, சாதிக்கு மேல ரொம்ப பிரியம். சாதிக்கு மச்சான், சாதிக்கு மச்சான்னு அவனையே சுத்தி சுத்தி வந்தா.

“கண்ணூ... கச்சாமா” கூப்பிட்டுக்கிட்டே உள்ள வந்தாரு மீரான் சாயபு.

“அப்பா! கூப்பிட்டியாபா” ஓடி வந்தா கச்சாமா.

“கண்ணு! இந்தா, உனக்கு நோட்டு பொஸ்தகம் போட பை வாங்கியாந்தேன்”

“அய்! எனக்கா? இதே மாரி பை தான்பா, கவுரியும் கொண்டாருவா”
சந்தோஷமா அந்த ஜோல்னா பையில தன்னோட நோட்டெல்லாம் போட்டு வெச்சுக்கிட்டா.

ராத்திரி தூங்குறப்ப, சாயபோட நெஞ்சுமேல ஏறித் தான் தூங்குவா. ஒரு கழுத வயசாச்சி, இன்னும் என்ன அப்பன் நெஞ்சுமேல ஏறி தூங்குறதுன்னு, பாத்திமா திட்டுனாலும், கேட்க மாட்டா. அவ்ளோ செல்லமா வளர்த்தாங்க.

மும்மக்கா சபுராகிட்ட அவ பொறப்பப் பத்தி சொல்லி முடிச்சா.

“ஏக்கா, அப்ப கச்சாமா சாதிக்கலிக்கு தானா?” கேட்டா சபுரா.

“அவங்க கட்டுவாங்களா? அதுவும், ரெண்டு பேருக்கும் ஒத்த வயசு. கச்சாமாவுக்கு முடிச்சிருவாங்க. ஆனா, சாதிக்கலி இப்பத்தான் படிச்சிட்டிருக்கான்; லேட்டாகுமுல்ல”

சொல்லிட்டிருக்கப்ப தான், சாதிக்கு அவங்கப்பா கூட வந்தான். விசேஷம் முடிஞ்சு எல்லாரும் போய்க்கிட்டிருந்தாங்க. சாதிக்கு மனசுல எந்த ஒரு எண்ணமும் இருக்க மாதிரி தெரியல.

கச்சாமாவ, பள்ளிக்கோடத்துல இருந்து நிறுத்திட்டாங்க. ஊட்டு வேலையப் பாத்துக்கிட்டு இருந்தா. அவ்வளவு சுறுசுறுப்பு. அவ்வளோ பொறுப்பு. எந்த வேலையா இருந்தாலும் பளிச்சுனு செஞ்சுருவா.

ஒரு நா, நெல்லு வேவிக்க, வர சொல்லி அவங்க தாதி முத்தம்மா ஆள் அனுப்பி இருந்தா. கச்சாமாவ கூட்டிட்டு கிளம்புனா பாத்திமா. அய்சாமா குப்பிமா மக சைதா, சாதிக்கு மச்சான் எல்லாரையும் பாக்கற ஆசையில ஊருக்கு முந்தி கிளம்பிட்டா கச்சாமா.

(வளரும்)

-சுமஜ்லா.

10 comments:

Thamiz Priyan said...

அட.. சாயபு வீட்டுக்குள்ள ஒரு காதல் கதை இருக்கும் போல இருக்கு..ம்ம் குட்! தொடருங்கள்!

Biruntha said...

ஆமா, எனக்கும் சகோதரர் தமிழ்பிரியன் சொன்னமாதிரிதான் தோணுது.
சுஹைனா, உங்க கதை நிஜமாகவே நன்றாக நகருது. எழுதுங்க... எழுதுங்க... எழுதிக்கிட்டே இருங்க. நாங்க படிச்சு ரசிச்சுப் பாராட்டத் தயார்.

அன்புடன்
பிருந்தா

Unknown said...

பழைய பாகங்களையும் படிச்சிட்டேனுங்க.
நல்லா இருக்குங்க.

சுஹைனா said...

தமிழ் பிரியன் சார், ரவி சார், பிருந்தா, இன்னமும் என் கம்ப்யூட்டர் சரியாகவில்லை. தம்பி ஹார்டுவேர் என்சினியர். அக்கா சிஸ்டம் தானே என்று சாவகாசமாக செய்து கொண்டிருக்கிறான்.
பையனை ஸ்விம்மிங் கிளாஸில் விட வரும்போது, அவசர அவசரமாக அம்மா வீட்டுக்கு வந்து பதிவு போட்டுக் கொண்டிருக்கிறேன். 4 கிலோ மீட்டர் தொலைவில் அம்மா வீடு உள்ளது. ஆனா, இங்க சோதா கீபோர்டு. டைப்பவே முடியல. எட்டாங்கிளாஸ் அம்மாவுக்கு இது போதும்னு விட்டுட்டாங்க.
சிஸ்டம் சரியானால் தான் இன்னமும் நிறைய எழுதணும்.

Biruntha said...

பரவாயில்லை சுஹைனா, நீங்க எல்லாம் சரியானதுக்கு அப்புறம் வந்து பதிவுகளைப் போடுங்க. இதுக்காக அங்கையும் இங்கையுமா வீண் சிரமப் பட வேண்டாம்.

அன்புடன்
பிருந்தா

இப்னு அப்துல் ரஜாக் said...

//நோன்பன்னிக்கு எல்லாரும் ஒருத்தர் ஊட்டுக்கு ஒருத்தர் வந்து புள்ளைங்களுக்கு நோம்பு காசு கொடுத்தாங்க.//


ஞாபகம் வருதே,ஞாபகம் வருதே,
நோன்பும் வருது,பழைய ஞாபகம் வருதே,

நோன்புக் கஞ்சி -பள்ளியில் வாங்கியது,
நண்பர்கள் எல்லாம் ஒண்ணா இருந்து
நோன்பு கஞ்சி குடிச்சது.
தறாவீகு தொழுமுடித்து,
கிளித்தட்டு விளையாடியது..............

உங்கள் கதை,பழச ஞாபகப்படுத்துது.

SUMAZLA/சுமஜ்லா said...

பழைய கதையையெல்லாம் தூசி தட்டி படிச்சு, இப்போ, பழைய ஞாபகம் வந்திருச்சா?

இப்னு அப்துல் ரஜாக் said...

ஆமாக்கா,ஒன்னு ஒண்ணா படிக்கிறேன்.ரொம்ப நல்லா இருக்கு.ஒரு பக்கம் திகைப்பு,என்ன நடக்குமோன்னு,இன்னொரு பக்கம் பழைய ஞாபகம்.ஊர்ல இருக்கும்போது,நிறைய நாவல்கள்,கதைகள் படிச்சிருக்கேன்.உண்மையா சொல்றேன்,உங்கள் எழுத்து தனி ரகம்,ஒசந்த ரகம்,ஐ ஆர் 20 மாதிரி.
நீங்க இன்னும் நிறைய நல்ல பல விஷயங்கள் எழுதி மனித சமுதாயத்துக்கு தொண்டு செய்யணும்.வேலை விட்டு வந்துட்டு,சாப்டாம மொதல்ல உங்க பிலாகைதான் பாக்குறது.என் பிள்ளைகள் உங்கள மாமின்னுதான் (வாப்பாவின் அக்கா)கூப்பிடுகிறார்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஐ ஆர் 20 மாதிரி//

ஆளுக்கேற்ற சூப்பர் உதாரணம். நன்றி!, என் மருமக்களை எப்ப வந்து மாமிய சந்திக்க போறிங்கன்னு கேளுங்க?! அப்புறம் பீர் ப்ளாக், www.jaihindpuram.blogspot.com ல பர்தா பற்றின சர்ச்சைக்கு நான் தந்த பதில் படித்தீர்களா?

இப்னு அப்துல் ரஜாக் said...

உங்கள் பதிலடி மிக அருமை!!!இன்ஷா அல்லாஹ்,அடுத்த வருடம் உங்கள் மருமக்கமார் உங்களைப் பார்க்க ஆவலாய் உள்ளனர்.