Friday, May 1, 2009

அரபு சீமையிலே - 6


மக்கா,
தரிசிக்க பலபேர் வந்ததனால்,
பரிசுத்தத் தலமாய் மாறியது.
தந்தை ஹாஷிமின் உபயத்தால்-பெரும்
சந்தையாய் வாணிபம் சிறந்தது.

அதனால்,
குறைஷிகள் கழிப்புற்றனர்;
செல்வத்தால் செழிப்புற்றனர்!
தம்மை மிக்காரும் இல்லை,
தமக்கு தக்காரும் இல்லை
என அக்காலம் செருக்குற்றனர்!
கைநிறைய திருப்பெற்றனர்!!

பெரும்சிறப்பு
அப்துல் முத்தலிபின்
தந்தை ஹாஷிமுக்கு!
அவர்தான் பாட்டனாராம்
எங்கள் நபி
அபுல் காஸிமுக்கு!!

ஹாஷிம் மதினாவில்
வியாபாரம் செய்தார்;
அப்போ ஸல்மாவைக் கண்டார்;
தம் துணையாக்கிக் கொண்டார்!

புதினத்தில் புண்ணிய பூமி
மதினத்தில் உதித்தவர்தாம்
நஜ்ஜார் கோத்திரத்து
நல்லழகி ஸல்மா!
ஸல்மாவின் புதல்வர் தான்
அப்துல் முத்தலிஃப்
என்கிற ஷைபா!!

இவர் உண்மை பெயர்
ஆமிர்,
நெற்றியில் இருந்தது
நரைமயிர்!
அதனால் மக்கள்,
ஸல்மா புதல்வரை
ஷைபா என்றனர்;
பெரிய தந்தை முத்தலிபின்
அடிமை என்றனர்!!

பெரிய தந்தை முத்தலிஃப்
கண்ணாய் பார்த்துக் கொண்டார்
ஆமிரை!
அதனால், அப்துல் முத்தலிபென
மாற்றிக் கொண்டார் தன்
பெயரை!!

அப்துல் முத்தலிப் மற்றும் அவர்
சகோதரர் அப்துத்தார்
இருவருக்கும் பொறுப்புகளை
பகிர்ந்தளித்தார்
பாட்டனார் அப்துல் மனாப்.

காபா பாதுகாப்பு, கொடி,
தாருன் நத்வா நிர்வாகம்
அப்துத் தாரின் வாரிசுகள்
பொறுப்பு!
தண்ணீர் வழங்குதல்,
யாத்ரிகர்களின் உபசரணை
அப்துல் மனாப் மக்களின்
விருப்பு!
திருவுள சீட்டின் படி
அது ஹாஷிமின் ஏக புத்திரர்
அப்துல் முத்தலிபுக்குக்
கிடைத்ததன் சிறப்பு!!!

ஹாஷிமின் சகோதரர்
அப்துஸ்ஸம்ஷின்
புத்திரர் உமய்யா,
ஹாஷிம் கோத்திரத்தின் மீது
கொண்டார் அழுக்காறு மெய்யா!!

சமயம் பார்த்து
உமய்யா மோத,
அமரப் பெரியோர்,
சமரசம் செய்தனர்.
எனினும் பொறுப்புகள்
தனக்கு இராமை
அதனால் அவர் கொண்டார்
பொறாமை!

யாத்ரிகர்களுக்கு தண்ணீர் தானம்
செய்து காத்தார் - அப்துல் முத்தலிப்
தம் குல மானம்.

அக்காலம் ஜம் ஜம் கிணறு
தூர்ந்து போயிருந்தது.
மக்கள் தம் கண்ணிலிருந்து
மறைந்து போயிருந்தது.

ஆங்கதைக் கண்டுபிடித்தால்,
அன்னவர் தண்ணீர் தர்மத்துக்கு
அது தான் பெரும் உதவி!
-மக்கள் மனதில்
கிடைக்கும் பெரும் பதவி!

இதை எண்ணி எண்ணி
அப்துல் முத்தலிஃப்
ஏங்கிக் கொண்டிருந்தார்;
காபாவின் அருகில்
தூங்கிக் கொண்டிருந்தார்!

அன்னவர் கனவில் வந்து
கிணறு தோண்டுமாறு
சொன்னவர் ஒரு வானவர்!
அடுத்த நாள் கனவிலும்
முன்னவர் சொன்னதை
முன்மொழிந்தார் இன்னவர்!!

“ஒரு எறும்புப் புற்றின் மீது
அண்டங்காக்கையொன்று
நோண்டும்;
அவ்விடத்தில், இஸாப், நாயிலா
விக்கிரகங்களுக்கு மத்தியில்
நீர் தோண்டும்;
அங்கிருக்கும் ஜம் ஜம்
கிணறு யாண்டும்!”
என மூன்றாம் நாள் கனவில்
தோன்றி கூறினார் மீண்டும்!!

மறைந்த கிணறை
விரைந்து தோண்ட,
மறுநாள் காலை,
தன்மகன் ஹாரிதுடன்,
தொடங்கினார் வேலை...

(வளரும்)

-சுமஜ்லா

No comments: