Thursday, July 9, 2009

இமயமலைச் சாரலிலே...


இமயமலைச் சாரலிலே, உன் மடியில் துயில் கொண்டேன்.
இதயக்கோவில் மணியோசை உன் பெயரைக் கூறக் கண்டேன்.

பனிபடர்ந்த மலைமுகடு பட்டுத் தெறிக்கும் எதிரொலியாய்,
கனிமரங்கள் இடையினிலே காதல் செய்தாய் பனித்துளியாய்!

கணுவில்லாத கரும்பைப்போல சுவைக்கும் காதல் எனக்குத் தந்தாய்!
அணுவளவும் குறையில்லாமல் ஆரத்தழுவி போதை கொண்டாய்!!

மடியில் படுத்து வானம் பார்க்க நிலவைக் கண்டேனுன் முகத்திலே!
முடியை கோத விரல்கள் நீவ சொர்க்கம் கண்டேன் சுகத்திலே!!

கவிதை போல இனிக்கும் காதல் கரங்கள் கோர்த்து சிலிர்த்தது
மலரைப் போல மென்மையான மனங்கள் இணைந்து சிரித்தது.

பூச்செண்டை நாடி அருகில் பொன்வண்டும் வந்தது
தேனுண்ட களைப்பினிலே கனவுலகில் துயிலுது!

-சுமஜ்லா

11 comments:

வால்பையன் said...

இது சினிமா பாட்டுங்களா!?

அப்படி தான் இருக்கு!

Saravanan Renganathan said...

nice :-)

Starjan (ஸ்டார்ஜன்) said...

கவிதை சூப்பர் சூப்பர்

வாங்க என் பக்கத்துக்கு

நட்புடன் ஜமால் said...

கவிதை போல இனிக்கும் காதல் கரங்கள் கோர்த்து சிலிர்த்தது
மலரைப் போல மென்மையான மனங்கள் இணைந்து சிரித்தது.]]


இரசித்தேன் ...

Nathanjagk said...

கிறுக்கல்களைத்தான் ​பெரிதும் ரசித்தேன். இது ​ரொம்ப சாதாரணமாயில்ல இருக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி, ஜெகநாதன்!

//இது சினிமா பாட்டுங்களா!?//

நிறைய பேர், இப்படித்தேன் கேட்பாங்க என் கவிதைகளை! ஏனா எல்லாமே ஒரு சந்த நயத்தோட இருக்கும். என்ன செய்யுறது, என் ஸ்டைல் அப்படி!

சரவணன் ரங்கநாதன், அப்பாடா எவ்வளவு பெரிய பேர்? நன்றி சொல்லறதுக்கே இவ்வளவு டைப் பண்ணனும்னா....

ஜமாலுக்கும் நட்புடன் நன்றி!

ஒவ்வொரு முறையும் வாங்க வாங்கனு கூவிக் கூவி கூப்பிடறீங்களே, ஸ்டார்ஜன், பேரிலேயே ஸ்டார் வைத்திருக்கும் நீங்கள், ஒளி வீசினால், வாசகர்கள் தானே தேடி வருவாங்களே?! இல்லை, இது எனக்கு விடுக்கப்பட்ட அழைப்போ?!

sshathiesh said...

உங்கள் பதிவுகள் நன்றாக இருக்கின்றன. அதேநேரம் உங்கள் பக்கம் நீங்கள் புது பதிவினை இடும்போது வாசித்து போகும் நான் பின்னூட்டம் இடுவது இல்லை. ஏனென்றால் என்ன காரணம் நான் ஒரு சோம்பேறி. பதிவுலகிற்கு நன் ஒரு குழந்தை அதேநேரம் தவழ்ந்து கொண்டிருக்கும் நான் எழுந்து நடக்க உங்களைப் போன்ற பெரியவர்களின் பதிவுகளில் இருந்து பாடம் கற்று வருகின்றேன். எனவே உங்களுக்கு என் நன்றி கலந்த வாழ்த்துக்கள்.

"உழவன்" "Uzhavan" said...

//கணுவில்லாத கரும்பைப்போல சுவைக்கும் காதல் எனக்குத் தந்தாய்!
அணுவளவும் குறையில்லாமல் ஆரத்தழுவி போதை கொண்டாய்!!//
 
ஒரு சிறு சந்தேகம் புலவரே.. கணுக்கள் நிறைய இருந்தால்தானே கரும்பு இனிப்பாக இருக்கும்? அடிக்கரும்பில் கணுக்கள் மேல் கரும்பைவிட அதிகம்தானே.. கணு அணு என்பதற்காக இப்படி வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டதா? அப்படியென்றால்..
 
அடிக்கரும்பைப்போல சுவைக்கும் காதல் எனக்குத் தந்தாய்!
முடியளவும் வெளியில்லாமல் ஆரத்தழுவி போதை கொண்டாய்!!
 
என்றும் இருக்கலாமே..
 
இது சிறியோனின் வெளிப்பாடுதான். தவறாக எண்ணிக்கொள்ள வேண்டம் :-)
 
அப்புறம்.. நம்ம கடைப்பக்கம் கொஞ்சநாளா வந்தமாதிரி தெரியல.. பிஸியோ?

SUMAZLA/சுமஜ்லா said...

அதாவது, இது தற்குறிப்பேற்று அணி. மதுரை மாநகருக்கு கோவலனும் கண்ணகியும் வரும்போது, வாரல்(வரவேண்டாம்) என்பது போல கொடி அசைந்ததாம்.

அதாவது, அப்படி இல்லையென்றாலும், புலவர் தன் குறிப்பை ஏற்றிப் பாடுகிறார்.
அது போல, கணுவில்லாத கரும்பு உலகில் கிடையாது. அப்படி இருக்கும் போது, அவ்வாறு ஒரு கரும்பு இருந்தால் அது எப்படி இருக்குமோ, அது போல இருக்கும் என்பதாம்.

அதனால் இங்கு அடிக் கரும்பு நுனிக் கரும்பு என்பதற்கு வேலையில்லை.

அதோடு,
தணலது..தணலது என்று தொடங்கும் ஒரு சாமி(முருகன்) பாட்டில், ‘கணுவில்லாத செங்கரும்பு போல நாவினில் இனிப்பான் கார்த்திகேயன்’ என்ற வரிகளை கேட்டதில்லையா?

பிஸியோடு கூட இந்த டெம்ப்ளேட் உருவாக்கம்+பல்வலி, etc etc. இன்று போய் பல் பிடுங்க வேண்டும். அதான் 2 நாளைக்கு லீவு.

SUMAZLA/சுமஜ்லா said...

//கணு அணு என்பதற்காக இப்படி வார்த்தைகள் வந்து விழுந்துவிட்டதா?//

இதற்காகத்தான் வர வேண்டுமா? என்னைக் கேட்டால், சினிமா ட்யூனுக்கு ஒன்று என்ன, ஓராயிரம் வார்த்தைகள் கண்ணதாசன் ஸ்டைலில் சந்த நயத்தோடு நொடியில் போட்டுத் தர முடியும்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அப்புறம்.. நம்ம கடைப்பக்கம் கொஞ்சநாளா வந்தமாதிரி தெரியல.. பிஸியோ?//

கூகுள் ரீடரில் படிப்பதால், சில சமயம் பின்னூட்டம் போட முடிவதில்லை.