Sunday, July 12, 2009

பல்லின் பல்லவி

இந்த பதிவை குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!

32 என்ற எண்ணைக் கேட்டாலே நமக்கு பற்கள் தான் நினைவுக்கு வரும்.(உதாரணமா 32 கேள்விகள்) ஆனா எத்துணை பேருக்கு வாயில் 32 பல் இருக்கு? யாராவது என்னிக்காவது கண்ணாடி முன்னாடி நின்று பற்களை எண்ணி இருக்கீங்களா?

பல்வலினா என்னன்னு அனுபவித்தவங்களுக்குத்தான் தெரியும். ஒரு வாரமா எனக்கு பல்வலி. கடைசியா பல்லப்பிடுங்கி தான் அது சரியாச்சு.

நாலைஞ்சு வருஷம் முன்னால, நான் பல் தொந்தரவுக்கு ஜேகேகே பல்மருத்துவக்கல்லூரிக்குப் போவேன். அங்க, கேப் போடறது, க்ளிப் போடறது எல்லாம் ரொம்ப சீப்பா, தரமா இருக்கும். அடிக்கடி அங்க போக வர, பல் சம்பந்தமான வார்த்தைகள் எல்லாம் அத்துப்படி ஆகிவிட்டது.

ஒரு முறை இப்படித்தான் சொத்தைப் பல் அடைக்க போயிருந்தேன். என்னுடைய தோற்றம் பார்த்தா, பர்தா போட்டுக்கிட்டு, விவரமில்லாத பட்டிக்காடு மாதிரி இருக்கும். இது எனக்கு பல நேரங்களில் அட்வாண்டேஜ் தான். யாரிடமும் நான் வெளிப்படுத்திக் கொள்ள மாட்டேன்.

டாக்டர் என் பல்லை, சரி செய்தபடியே, பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவ்வளவு நம்பிக்கை போலும் அவர்களுக்கு. காலேஜின் ஒரு காதல் கதையைப் பற்றி சுவாரஸ்யமாக பேசிக் கொண்டிருந்தனர். நானும் வாயைப் பிளந்தபடி(பல்லுக்கு ட்ரீட்மெண்ட் தர்ராங்களே) கேட்டுக் கொண்டிருந்தேன்.

கடைசியாக எல்லாம் முடிந்து, கிளம்பும் போது, டாக்டரிடம் போய், “வென் ஷுட் ஐ கம் நெக்ஸ்ட்?” என்றேனே பார்க்கணும். அவர் பாவம், ஆங்கிலத்தையே மறந்துவிட்டு, நான் கேட்டது புரியாமல் விழிக்க, எனக்கு சிரிப்பை அடக்க முடியவில்லை.

அந்த சம்பவத்துக்குப் பின் எனக்கு தனி மரியாதை கிடைத்தது வேறு கதை. இது போன்ற சம்பவங்கள் பல நேரங்களில் நடந்திருக்கு. பாமரி(பாமரன் பெண்பால்) போல இருப்பதும் நல்லதுக்கே! அந்த காலேஜில் தான் பல் சம்பந்தப்பட்ட சொற்களான, ஆர்ஸி(ரூட்கனால் என்னும் வேர் சிகிச்சை), ஜிஐ(பசை), டெம்ப்ரரி ஃபில்லிங், லிக்னோகெயின், பர்ரு போன்றவற்றை கற்றுக் கொண்டேன். இப்பவெல்லாம் காலேஜ் போவதில்லை. அதான் ஒவ்வொரு தெருவிலும் ஒரு பல் டாக்டர் வந்துவிட்டார்களே?!

பல் பிடுங்குவது சம்பந்தமான ஆங்கில கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் ஒருவர் பல் பிடுங்க போகிறார். பல் பிடுங்குவது குறித்து அவருக்கு ஏகப்பட்ட பயம். தடுப்புக்கு அந்தப்புறம் இன்னொருவரை மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்க, கடக் முடக் என்ற சத்தம் கேட்கிறது. டாக்டர் நர்ஸிடம், குறடு கேட்க, நர்ஸ் எடுத்துப் போகிறார். அடுத்ததாக, சிறிய உளியும் எடுத்துப் போகிறார். பின், ஸ்பேனர், ஸ்குரூடிரைவர் என்று ஒவ்வொன்றாக உள்ளே போக, இவர் இதையெல்லாம் பார்த்து நடுங்கியபடி உட்கார்ந்து இருக்கிறார். இறுதியாக ஒரு சிறிய கடப்பாரையை உள்ளே எடுத்துப் போக, இவர் பயத்தோடு ஆர்வமும் சேர்ந்து கொள்ள, என்ன தான் செய்கிறார்கள் என்று தடுப்பைத் தாண்டி உள்ளே போய் பார்க்கிறார். அங்கே, சாவி தொலைந்து போன ஒரு அலமாரியின் பூட்டை கஷ்டப்பட்டு நெம்பி திறந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி முடிகிறது கதை.

என் மகளுக்கு பல் விழும் வயது வந்தாலும் பல் விழாது. ஆனா, உள்ள இருந்து பல் முளைத்து விடும். ஒவ்வொரு முறையும் மருத்துவரிடம் போய் தான் பிடுங்க வேண்டும். என் மகனுக்கோ, செகண்ட் ஸ்டேண்டர்ட் வந்தும், இன்னும் பல் ஆட ஆரம்பிக்கவில்லை.

இதெல்லாம் விட ஞானப்பல் என்று ஒன்று இருக்கிறது. அதான் கடைசி பல். இது பொதுவா 26 வயதில் தான் முளைக்கும் என்று சொல்வார்கள். எனக்குத் தெரியாது. ஆனா, எனக்கு அந்த வயதில் தான் தொந்திரவு செய்தது. அது பொதுவா எல்லாருக்கும், கோணயாகவோ குறுக்காகவோ தான் முளைக்குது (ஞானம் சரியா வந்துட்டா எல்லாரும் ஞானியாயிருவாங்களே).

மாத்திரை சாப்பிட்டும் வலி குறையவில்லை. என் மகன் வேறு அப்போ, ஐந்து மாதம் வயிற்றில். கருவுற்றிருக்கும் போது, பல் பிடுங்கக்கூடாதுன்னு சொல்வாங்க. ஆனா, உண்மை என்னன்னா, பல் பிடுங்க போடக்கூடிய, வலிதெரியா ஊசியாலும், அதன் பின் எடுத்துக் கொள்ளும் ஆண்டி பயாடிக்காலும் ஏதும் பின் விளைவு ஏற்படலாம் என்ற அச்சம் தான்.

எனக்கு, கன்னமே வீங்கி விட்டது. இனி, விட்டால், வாயே திறக்க முடியாத நிலை ஏற்படும் என்று புரிந்தது. டாக்டர், என்னிடம் நெட்டில் மேய்வீர்களா என்றார்(6 வருடம் முன்பு). ஆமாம் என்றேன். சரி, 2% லிக்னோகெயின் இன் அ சொல்யூசன் ஆஃப் சம்திங்(மறந்து போச்சு) கர்ப்பிணிகளுக்குப் போடலாமா என்று பார்த்து வாருங்கள் என்றார்.

நான் நெட்டில் தேடினேன். ஃபர்ஸ்ட் ட்ரைமிஸ்டர் என்று சொல்லப்படும் முதல் மூன்று மாதங்களும், தேர்டு ட்ரைமிஸ்டர் என்று சொல்லப்படும், கடைசி மூன்று மாதங்களும் தவிர்த்து, செகண்ட் ட்ரைமிஸ்டர் எனப்படும், நடுவிலான மூன்று மாதங்களில் பல் பிடுங்கலாம் என்று அறிந்து கொண்டேன். நல்லவேளை எனக்கு அப்போது, ஐந்தாம் மாதம்.

ஒருவழியாக, கிழித்து அந்த பல்லை எடுத்து விட்டு, தையல் போட்டு விட்டார்கள்.(ஞானம் போயிருச்சு! ஞானம் போனாலும் பரவாயில்லை, கன்னம் அதிகமா வீங்கி மானம் போகாம இருந்ததே!)

அதற்கு ஓரிரு வருடங்களுக்குப் பின், இன்னொரு ஞானத்தையும் டாக்டரிடம் கொடுத்துவிட்டேன். அந்த ஹாலோ கேவிட்டி(hollow cavity – வெற்றிடம்) மறைய எனக்கு ஆறு மாதத்துக்கு மேல் ஆனது. அது வரை சிக்கும் சோற்றுப் பருக்கைகளை வெளியே எடுப்பதற்கென்றே, எப்போதும் டூத் பிக்ஸ் வைத்திருப்பேன்.

அஞ்சு வருஷத்துக்கு முன்னால், வேர் சிகிச்சை செய்து கேப் போட்ட பல்லில் தான் இப்போ தொந்தரவு. வேர் சிகிச்சை நாம நினைப்பது போல சாதாரண காரியமில்லை. பல்லின் மேல் டோப்பாவையே சுரண்டி, கழட்டி அப்புறம், கஷ்டப்பட்டு வேரைக் கண்டு பிடிப்பார்கள். ஒன்று முதல் மூன்று வரை எண்ணிக்கையில் வேர் இருக்கும். சிறிய ஊசியால் குடைந்து குடைந்து, வேரையே கொஞ்சம் கொஞ்சமாக வெளியே எடுத்து விடுவார்கள்.

பல்லின் வேருக்கும், நரம்புக்கும் இடையே கனெக்‌ஷன் இருப்பதால் தான் நாம் வலியை உணர முடிகிறது. அந்த கனெக்‌ஷனைக் கட் பண்ணுவது தான் வேர் சிகிச்சை. எல்லா வேரையும் சுத்தமாக க்ளீன் பண்ணிவிட்டால் எக்ஸ்ரேவில், பல்லின் இடையே காலி இடம் தெரியும்.

இப்போ, அது வேரிழந்து பலமிழந்துவிடும். அதனால், அதற்கு நாம் தொப்பி போட்டு பாதுகாக்க வேண்டும். இல்லாவிட்டால் உடைந்து விடும். பல்லை சிமெண்ட் வைத்து அடைத்து, தொப்பியை வடிவாக உட்கார வைக்க, சரியான படி பல்லை செதுக்குவார்கள். இதற்கு க்ரௌன் கட்டிங் என்று பெயர். அப்புறமாக அளவெடுத்து, க்ரௌன் செய்து பல்லுக்கு முடிசூட்டுவார்கள். முடிந்தது, இனி நம் பல், வலியில்லாத ராஜாவாகி விடும்.

இப்படி செய்த ஒரு பல்லில் தான் மீண்டும் வலி. வேர் சிகிச்சையில் ஒரு வேரை சரியாக க்ளீன் செய்யாமல், அது கெட்டுப் போய் விட்டது. சரி செய்ய முடியாமல் அதை பிடுங்கியே விட்டார்கள்.

இதற்காக மூன்று முறை ஹாஸ்பிடல் போய், மூன்றாம் பேஷண்டாக பேர் எழுதி, மூன்று மணி நேரம் காத்திருந்து, மூன்று நாள் மாத்திரை சாப்பிட்டு, மூன்று எக்ஸ்ரேக்கள் எடுத்து…(மூன்று என் ராசி நம்பர் அல்ல!)கடைசியாக என் மூன்றாவது கடைவாய்ப்பல்லை பிடுங்கியே விட்டார்கள்.

ட்ரேவில் அநாதையாகக் கிடந்த பல்லைப் பார்க்கும் போது, அதை கேட்டு வாங்கி வந்து வீட்டில், கெட்டுப் போன வேருக்கு, நாம் குண்டூசியால் சிகிச்சை செய்து பார்க்க வேண்டும் என்ற அல்ப ஆசையை கஷ்டப்பட்டு அடக்கிக்கொண்டேன். என்னமோ இழந்தது மாதிரி இருந்தது. அட, ஒவ்வொருவருக்கும் என்னென்னமோ ஆப்பரேஷன் எல்லாம் நடக்குது, நமக்கு ஆஃப்டர் ஆல் ஒரு பல்லு தானே என்று எனக்கு நானே சமாதானம் செய்து கொண்டேன்.

எல்லாவற்றையும் விட ஹை லைட்டான விஷயம் ஒன்று இருக்கிறது. முதன் முறை டாக்டரிடம்(மூன்று முறையில் முதல் முறை) போனபோது, பல்லை இழப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை.

“பல்லைக் காப்பாத்துறது கஷ்டம்மா…பிடுங்கித்தான் ஆக வேண்டும்” டாக்டர்.

“எய்யாவ்து காஹாத்துங்க்.என்கு ஹல்லு வேனு..” வாயைத்திறந்து வெச்சிக்கிட்டு, பின்ன எப்படிங்க பேசறது.

“அம்மா நாங்க காப்பாத்தத்தான் பார்ப்போம், ஆனா முடிஞ்சா தான…”

எனக்கு வலி வேற, பல்லை இழக்கும் துக்கம் வேற. கண்ணில தண்ணியே வர்ர மாதிரி ஆயிருச்சு. அதனால், பதிலே பேசல.

டாக்டர், எனக்குப் புரியலைனு நினைச்சிட்டார் போல. அருகில் நின்று கொண்டிருந்த என் கணவரை அழைத்து இப்படி சொன்னார்.

“இந்த பல்ல காப்பாத்தறது கஷ்டம். முடிஞ்சவர முயற்சி செய்து பார்க்கிறேன். பாயம்மாவுக்கு விவரம் பத்தமாட்டேங்குது. நான் சொல்றத அவங்க புரிஞ்சுக்க மாட்டேங்கிறாங்க. அதான் உங்களைக் கூப்பிட்டு சொல்கிறேன்.”

மீண்டும் பாமரி ஆனேன்.

-சுமஜ்லா.

17 comments:

SUFFIX said...

First!!

SUFFIX said...

//டாக்டர் என் பல்லை, சரி செய்தபடியே, பக்கத்தில் இருந்த ஒரு பெண்ணிடம் ஆங்கிலத்தில் பேசிக் கொண்டிருந்தார். எனக்கு ஆங்கிலம் தெரியாது என்று அவ்வளவு நம்பிக்கை போலும் அவர்களுக்கு.//

பகல்ல பக்கம்பாத்து பேசுன்னு சொல்லுவாங்க, இனி பல் மருத்துவர்கள் பல்லப்பார்த்து மட்டுந்தான் பேசனும் போல!!

SUFFIX said...

நீங்கள் பல்லை இழந்ததனால் எங்களுக்கு இந்த பல்லவி!! பகிர்ந்தமைக்கு நன்றி, அடுத்து டாக்டரிடம் போவும்போது கொஞ்சம் விவரம் உள்ளது மாதிரி காட்டிக்கலாம்.

SUFFIX said...

நீங்கள் பல்லை இழந்ததனால் எங்களுக்கு இந்த பல்லவி!! பகிர்ந்தமைக்கு நன்றி, அடுத்து டாக்டரிடம் போவும்போது கொஞ்சம் விவரம் உள்ளது மாதிரி காட்டிக்கலாம்.

ஈரோடு கதிர் said...

//எய்யாவ்து காஹாத்துங்க்.என்கு ஹல்லு வேனு..” வாயைத்திறந்து வெச்சிக்கிட்டு, பின்ன எப்படிங்க பேசறது.//
உண்மைதான்

Jaleela Kamal said...

பல்ல பற்றி என்றால் பெரிய பதிவே இருக்கு, அதை டிப்ஸில் போடுகிறேன்.

பல் வலி வந்தா அவ்வளவு ரொம்ப நாள் முன்பு தம்பி கல்யாணத்தில் இந்த பெரும் அவஸ்தை பல் ரூட் கெனால் அப்படின்னு எத்தனை சிட்டிங்கோ கூடப்பீடு விட்டு கடைசியில் நரம்பு மூளைக்கு போகும் நரம்பு இது மேல் ஒன்றூம் பண்ன முடியாது எடுத்து விடுக்றேன் என்றார்கள், இத முதலிலேயே வலி இல்லாமல் செய்து இருக்கலாம்.
கடசியில் பல்லை புடிங்கி கொண்டு இருக்கும் போது கரண்ட் கட் ஆகி மயக்கம் போட்டே விழுந்துட்டேன். அப்ப பட்டதிலிருந்து பல்லை பத்திரமா பாது காத்து கொண்டு இருக்கீறேன். இது வரை ஒன்றூம் பிரச்சனை இல்லை.

உங்கள் ராட் மாதவ் said...

பற்களைப் பற்றி உபயோகமுள்ள பதிவு. வாழ்த்துக்கள்.
நீங்க உண்மையிலேயே பல் டாக்டரா?

S.A. நவாஸுதீன் said...

கலகலப்பான பதிவு. பாவம்ங்க பல்லு. உங்ககிட்ட இன்னிக்கு படாத பாடு பட்டிருக்கு. ஹா ஹா ஹா.

“பல்லைக் காப்பாத்துறது கஷ்டம்மா…பிடுங்கித்தான் ஆக வேண்டும்” டாக்டர்.

“எய்யாவ்து காஹாத்துங்க்.என்கு ஹல்லு வேனு..” வாயைத்திறந்து வெச்சிக்கிட்டு, பின்ன எப்படிங்க பேசறது.

கொஞ்சம் நேர சிரிசிட்டுதான் மேல படிச்சேன்.

Jaleela Kamal said...

எய்யாவ்து காஹாத்துங்க்.என்கு ஹல்லு வேனு..” வாயைத்திறந்து வெச்சிக்கிட்டு, பின்ன எப்படிங்க பேசறது
haa haa

SUMAZLA/சுமஜ்லா said...

//நீங்க உண்மையிலேயே பல் டாக்டரா?//

நானு...பல் டாக்டரா? ஏங்க பதிவு போட்டு உங்களை எல்லாம் கொடுமை படுத்துறது போதாதா? இனி பல்லு வேற பிடுங்கணுமா? அய்யோ ஆள விடுங்கப்பா!

கடைக்குட்டி said...

ஹா ஹா...அருமைக்கா...

முனைவர் இரா.குணசீலன் said...

/பல் பிடுங்குவது சம்பந்தமான ஆங்கில கதை ஒன்று நினைவுக்கு வருகிறது. அதில் ஒருவர் பல் பிடுங்க போகிறார். பல் பிடுங்குவது குறித்து அவருக்கு ஏகப்பட்ட பயம். தடுப்புக்கு அந்தப்புறம் இன்னொருவரை மருத்துவர் கவனித்துக் கொண்டிருக்க, கடக் முடக் என்ற சத்தம் கேட்கிறது. டாக்டர் நர்ஸிடம், குறடு கேட்க, நர்ஸ் எடுத்துப் போகிறார். அடுத்ததாக, சிறிய உளியும் எடுத்துப் போகிறார். பின், ஸ்பேனர், ஸ்குரூடிரைவர் என்று ஒவ்வொன்றாக உள்ளே போக, இவர் இதையெல்லாம் பார்த்து நடுங்கியபடி உட்கார்ந்து இருக்கிறார். இறுதியாக ஒரு சிறிய கடப்பாரையை உள்ளே எடுத்துப் போக, இவர் பயத்தோடு ஆர்வமும் சேர்ந்து கொள்ள, என்ன தான் செய்கிறார்கள் என்று தடுப்பைத் தாண்டி உள்ளே போய் பார்க்கிறார். அங்கே, சாவி தொலைந்து போன ஒரு அலமாரியின் பூட்டை கஷ்டப்பட்டு நெம்பி திறந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி முடிகிறது கதை./

கதை அருமையாகவுள்ளது..
பல்லின் பல அரிய தகவல்களை அறிய தங்கள் இடுகை துணைபுரிந்தது...


அந்தக்காலத்தில் பல்லைப் பிடுங்குவது பற்றி ஒரு கதை செய்தி படித்தேன்....

பிடுங்கவேண்டிய பல்லை ஒரு நரம்பில் கட்டிவிட்டு அதன் மறு முனையை கதவில் கட்டிவிடுவார்களாம்...

பிறகு கதவை டமார்னு சாத்துவார்களாம் பல் நரம்பில் இருக்குமாம்...

இன்று எவ்வளவு எளிமையாக பல் பிடுங்குகிறோம்...

எல்லாம் அறிவியல் வளர்ச்சி..

SUMAZLA/சுமஜ்லா said...

//பிடுங்கவேண்டிய பல்லை ஒரு நரம்பில் கட்டிவிட்டு அதன் மறு முனையை கதவில் கட்டிவிடுவார்களாம்...

பிறகு கதவை டமார்னு சாத்துவார்களாம் பல் நரம்பில் இருக்குமாம்...//

என்ன கொடுமைங்க?! நல்லவேளை நாம அந்தக்காலத்துல பிறக்கலையேனு ஆறுதலா இருக்கு!

"உழவன்" "Uzhavan" said...

பற்களை வைத்து சொற்களை அடுக்கியுள்ளீர்கள். அருமை.
இப்ப எல்லாம் சரியாயிடுச்சா சகோ?

"உழவன்" "Uzhavan" said...

யூத்புல விகடன் குட் பிளாக்கில் இடம்பெற்றுள்ளது. வாழ்த்துக்கள்

Dr.தமிழ் said...

உங்களின் "பல் சிகிச்சை" க்கான வர்னணை நன்றாக இருந்தது...
நானும் J.K.K.நடராஜா பல் மருத்துவ கல்லூரியில் பயின்றவன்தான்...தற்செயலாக‌
உங்களது "பல்லின் பல்லவி" யை படிக்க நேர்ந்தது...

வாழ்த்துக்கள்
Dr.தமிழ்.
drtamil123@gmail.com

Dr.தமிழ் said...

அந்தக்காலத்தில் பல்லைப் பிடுங்குவது பற்றி ஒரு கதை செய்தி படித்தேன்....

பிடுங்கவேண்டிய பல்லை ஒரு நரம்பில் கட்டிவிட்டு அதன் மறு முனையை கதவில் கட்டிவிடுவார்களாம்...

பிறகு கதவை டமார்னு சாத்துவார்களாம் பல் கதவில் இருக்குமாம்...



பிடுங்கப்பட்ட பல்லு கதவில இருக்கும் சரி...

ஆளு இருப்பாரா?