Friday, July 31, 2009

ஆக்ரா கோட்டை

இந்த பதிவை குட் ப்ளாக்ஸ் பகுதியில் வெளியிட்ட யூத்ஃபுல் விகடனுக்கு நன்றி!


இதன் முன் பகுதி இங்கே: தாஜ்மஹால் ஓவிய காதல்


நாங்கள் தாஜ் மஹாலை விட்டு வெளியே வந்தோம். பக்கத்தில் இருந்த ஹோட்டலில் போய் ரோஸ்ட் சாப்பிட்டோம். நம்ம ஊரில் வட இந்திய நாண் போன்ற உணவுகள் விலை அதிகம் போல அங்கு தென்னிந்திய உணவுகள் விலை மிக அதிகம். சாதாரண ரோஸ்ட் அதுவும் சாதாரண ஹோட்டலில் 36 ருபாய்.


அடுத்து நாங்கள் சென்றது ஆக்ரா கோட்டை. மிகப் பெரிய அகலமான நெடுஞ்சுவர். அதன் அகலத்தில் பாதை. அதன் வழியாக நீண்ட தூரம் நடந்தால், அரண்மனை அமைந்திருக்கிறது.


மிகவும் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள். இங்குள்ள ஒரு பாதாள சிறையில் தான் ஷாஜஹான் கடைசி காலத்தில் சிறைவைக்கப்பட்டிருந்தார். அச்சிறையில் இருந்தபடியே தாஜ்மஹாலைக் கண்டு ரசிக்க ஒரு சிறு துவாரம் அமைக்கப்பட்டிருந்ததாம்.


இந்த அரண்மனையில் இருந்து தான், பெரும்பாலான முகலாய மன்னர்கள் இந்தியாவை ஆட்சி செய்தனர். அங்கு பல மாடங்களான ராஜ தர்பார், ராஜ பிரதானிகளின் அவை, பெண்களின் இடம், அவர்கள் குளியல் தொட்டி, அவர்களின் அந்தப்புர வேலைப்பாடு மிக்க கூடங்கள் யாவும் ரசிக்கும் படி இருந்தது. கீழே படத்தில் காண்பது தான் பிரதான அவை நடக்கும் இடம். இந்த மைதானத்தில் தான், அரச படைகள் அணிவகுத்து நிற்குமாம்.




வெண் பளிங்குனால் செதுக்கப்பட்ட நுண்மையான கலைவேலைப்பாட்டை கீழே இருக்கும் படத்தில் காணலாம்.




இந்த அழகையெல்லாம் உள்ளம் கொள்ளுமளவு அள்ளிப் பருகிவிட்டு, மாடியில், திறந்த அழகாய் அமைக்கப்பட்ட பால்கனியில் பார்த்தால்.... காற்றில் கலந்த ஓவிய சிற்பமாய் தாஜ்மஹாலின் எழில் தோற்றம். இதோ பாருங்கள்:





அடுத்து, பதேபூர் சிக்ரி நோக்கி எங்கள் பயணம். சுமார் 40 கி.மீ, யாருமற்ற காட்டுப் பகுதியில், தன்னந்தனியாக காரில் நாங்கள் இருவர் மட்டுமே, ஊர் பேர் தெரியாத டிரைவருடன். இப்போது நினைத்துப் பார்த்தால் பயமாக இருக்கிறது.


பதேபூர் என்பதும் சிக்ரி என்பதும், அருகருகே அமைந்திருக்கிறது. ஆனால், தனி தனி எண்ட்ரன்ஸ். பதேபூர் என்பது, நம்ம ஊர் தர்காவைப் போல. பல மகான்கள், ராஜ குடும்ப வாரிசுகள் மற்றும் மந்திரி பிரதானிகளின் அடக்கஸ்தலம் அமைந்துள்ளது. அதன் உள்ளே செல்ல கட்டணம் ஏதும் கிடையாது. ஆனால், சிக்ரிக்குள் நுழைய தலைக்கு 20 ருபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள்.


பதேபூரில் நுழைந்தவுடன், பெரிய கோட்டை வடிவ மதில் சுவர் உள்ளது. அதைத் தாண்டி சென்றால், பெரிய மைதானம். இது தான் அந்த கோட்டை.





கோட்டைக்குள்ளே இருக்கும் மைதானத்தில், ராஜ பரம்பரை வாரிசுகளின் அடக்கஸ்தலங்கள்.





அங்கே சலீம் சிஷ்தி என்னும் பெரியவர் அடங்கி இருக்கிறார். அதன் மேல் கட்டப்பட்டிருக்கும், கட்டிடம் மொகலாயக் கட்டிடக் கலையின் அழகை சொல்லாமல் சொல்கிறது!





குளோசப்பின் அதன் கலையழகை தெளிவாகக் காணலாம்:




சிக்ரியில் நாம் காண்பதும் அரண்மனை, அதன் அறைகள், தளவாடங்கள் இருந்த பகுதி, படைகளின் இருப்பிடம் ஆகியவை. ஆனால், 'ruins' என்று ஆங்கிலத்தில் சொல்லும் வகையில், எல்லாமே காலத்தால் சிதிலமடைந்து உள்ளன. அங்கே இருந்த முக்கிய மணிமண்டபம் கீழே:





அதைத்தாண்டி சென்றால், நடுவில் நீச்சல் குளமும், அதன் மேல் நாற்புறமும் பாதைகளும் அமைக்கப்பட்ட அழகான அமைப்பு. நீச்சல் குளத்துக்கு நாற்புறமும் படிக்கட்டுகள்.





இங்கே நாங்கள் சென்ற சமயம் கூட்டமே இல்லை. இதில் மாடங்கள் போல தெரிவதெல்லாம் கூடங்களாகும். அங்கு ஓரிருவர், பானையில் வெய்யிலுக்கேற்ற பானம் ஏதோ வைத்து விற்றுக் கொண்டிருந்தர்.


இதையெல்லாம் பார்த்துவிட்டு, வெளியே வந்தோம். அங்கு பலரும், அவ்விடத்தின் போட்டோக்கள் சிடி போன்றவை விற்றுக் கொண்டிருந்தனர். அதில், பார்த்தாலே ஏழ்மை தெரியும் ஒரு பத்து வயதுச் சிறுவன், கையில் சிடி வைத்து விற்றுக் கொண்டிருந்தான். அவன் ஹிந்தியில், பேசிக் கொண்டிருந்தவன், எங்கள் முகத்தில் தெரிந்ததை வைத்து, ஹிந்தி தெரியாது என்று புரிந்து கொண்டு, சரளமாக ஆங்கிலத்தில் பேச ஆரம்பித்து விட்டான்.


எனக்கோ ஒரே ஆச்சரியம். பள்ளிக்கூட வாசலைக் கூட அவன் மிதித்திருப்பானா என்று சந்தேகம். அங்கு வரும் வெளிநாட்டு டூரிஸ்ட்களிடம் பழகி பழகியே ஆங்கிலம் கற்றுள்ளான். நல்ல தெளிவாக அழகாக அவன் பேசிய விதத்துக்காகவே, அவனிடம் சில போட்டோக்களும் சி.டியும் வாங்கினோம்.


எல்லா இடத்தையும் சுற்றிப் பார்த்து விட்டு, காரில் ஏறி அமர்ந்தோம்.


இதன் தொடர்ச்சி இங்கே உள்ளது பாலைவன பயணம்


இதன் ஆரம்ப அத்தியாயத்தை தாஜ்மஹால் ஓவிய காதல் என்னும் இந்த லின்க்கில் படிக்கலாம்.


Related Links: Agra Travel Guide


-சுமஜ்லா.
.
.

14 comments:

Starjan (ஸ்டார்ஜன்) said...

அந்த கால மன்னர்களின் ரசனையே தனி தான் !!

எப்படி அனுபவித்து ரசித்து கட்டியிருக்காங்க பாருங்க‌

Unknown said...

நீண்ட நாள் ஆசை இங்கும் சிம்லாக்கும் போகனும் என்று. இன்று ஓர் ஆசைநிறைவேறியது போல் ஓர் உணர்வு. போட்டோகளுடன் உங்கள் எழுத்து வரிகள் என்னை அங்கே அழைத்து சென்றது..

பீர் | Peer said...

மீதியை எழுதிமுடிங்க, நானும் ஆக்ரா செல்ல வேண்டும் என்ற என் நீ...ண்ட நாள் ஆசையை நிறைவேற்றியது போலாகும். அழகான படங்களுடன் கூடிய அருமையான பயண இடுகை.

அப்டியே மொத்த செலவையும் சொல்லிடுங்க.

இந்த இடுகைக்கு தொடர்பில்லாத பொதுவான சந்தேகம்;
ரீடரில் வாசிப்பவர்களுக்கு தனியா ஒரு நன்றி சொல்றீங்களே.. அது எப்படி?

(உங்களுக்கு ஏற்கனவே டிப்ஸ் திலகம் அவார்ட் கொடுத்திருக்கேன்.) ;)

sakthi said...

நல்ல பகிர்வு தோழி

நட்புடன் ஜமால் said...

பயண கட்டுரை நல்லா எழுதுறீங்க.

ஆக்ரா! இது இன்னும் போகலை, போகனும் என்ற லிஸ்ட்டில் சிம்லா தான் முதலிடத்தில் இருக்கு ...

SUMAZLA/சுமஜ்லா said...

பீர் சார், நிச்சயமா உங்க எல்லா கேள்விக்கும் பதில் தருகிறேன் கட்டுரையில், செலவு உட்பட!

ரீடரில்.... தொடர்பான சந்தேகத்துக்கு ஒரு தனி பதிவு தருகிறேன், ஓரிரு நாட்களில்! எல்லா வாசகர்களுக்கும் பயன்படுமே?!

உங்க அவார்டுக்கு நன்றி! மீண்டும் அதை குறிப்பிட்டு ‘ஐஸ்’ வைத்தமைக்கும் நன்றி! ஹா! ஹா!

SUMAZLA/சுமஜ்லா said...

ஜமால், இந்த பயணத்தில், நாங்கள் சிம்லாவும் தான் சென்றோம்; டெல்லியும் கூட. இனி அது பற்றியும் வரும். We made the best of ten days என்று தான் சொல்ல வேண்டும். நிச்சயம் வட இந்திய டூர் செல்ல விரும்பும் யாவருக்கும் இது பயன் தரும்.

Jaleela Kamal said...

சுஹைனா எனக்கும் ரொம்ப ஆசை ஆக்ரா எல்லாம் போன தில்லை ஓவொரு முறை ஊர் போகும் போதும் வீட்டு கல்யாணங்கள் ஆகையால் போவது கிடையாது,

இனி இதை பார்க்கும் போது ரொம்ப ஆசையா இருக்கு, நானும் இப்ப பையனை காலேஜ் சேர்க்க அலஹாபாத் போனோம், மொத்தமே இரண்டு நாள் தான் அங்கே இரண்டு இடங்களுக்கு சென்றோம், கங்கா காவேரி சங்கமம், சூரிய கிரகணம் அன்று அங்கு தான் இருந்தேன்,

அடுத்து மோதிலால் நேரு வாழ்ந்த இடம் ஆனந்தபவன், இரண்டும் போட்டோ எடுத்து வந்தேன், உஙக்ளை பார்த்து தான் அந்த ஆர்வம் வந்தது, நேரம் கிடைக்கும் போது பிளாக்கில் போடனும்.

உங்கள் மூலம் இலவச டூர் போயாச்சு.

S.A. நவாஸுதீன் said...

அழகான புகைப்படங்களுடன், அருமையான பயணக் கட்டுரை.

SUMAZLA/சுமஜ்லா said...

//உஙக்ளை பார்த்து தான் அந்த ஆர்வம் வந்தது, நேரம் கிடைக்கும் போது பிளாக்கில் போடனும்.//

ஹா...ஹா... உங்களையும் தொத்திக்கிச்சுன்னு சொல்லுங்க.

நன்றி நவாஸ் உங்க கருத்துக்கு...

அப்துல்மாலிக் said...

படங்களுடன் கூடிய விர்சுவல் சுற்றுலா சூப்பர்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி, செய்திவளையம் குழுவினருக்கும், அபூ அப்ஸருக்கும்!

NIZAMUDEEN said...

அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள்.

படக் கதைபோல் இது, படக் கட்டுரை!

SUMAZLA/சுமஜ்லா said...

//அழகான வர்ணனை, பொருத்தமான இடங்களில் சரியான படங்கள்.

படக் கதைபோல் இது, படக் கட்டுரை!//

தவறை சுட்டிக்காட்டும் இடத்தில் சுட்டிக் காட்டுவதும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டுவதும், உங்கள் தனிச்சிறப்பு!