இத்தகைய ஒரு இனிய பயணத்தை நேற்று நானும் மச்சானும்(என் கணவர்) வரட்டுப் பள்ளத்தை நோக்கி மேற்கொண்டோம்.
புது ஸ்கூட்டியில் எங்காவது லாங் போகலாம்; அப்போ தான் மைலேஜ் செட் ஆகும் என்றார் அவர். சரி என்று பிள்ளைகளை அம்மா வீட்டில் விட்டு விட்டு மதியம் புறப்பட்டோம். அந்தியூரில் இருந்து 10 கிலோ மீட்டர் தொலைவில், எங்கள் ஊரிலிருந்து 35 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது வரட்டுப் பள்ளம் நீர்தேக்கம்.
அந்தியூரில் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மேலே போனோம். பர்கூர் போகும் வழியில், சிறிய ரோடு பிரிகிறது. ஒரு ஈ காக்கா கூட இல்லை என்னும் அளவுக்கு, ரூட் கேட்கக் கூட யாருமில்லாத தனிமை.
போய் இறங்கியவுடன், ஒரு நீண்ட பாலம் போன்ற பாதை. அதில் இறங்கி நடந்தால், கீழே பள்ளம். அதாவது நீர்தேக்கம். சுற்றிலும் மலைகள். பார்ப்பதற்கு அழகான இடம். இங்கு, மாலை நேரத்தில் யானை வருகிறது. இதைப் பார்ப்பதற்கென்றே ஒரு கூட்டம் மாலை நேரத்தில் வருகிறது. நாங்கள் போன போது எங்களை வரவேற்றது ஒரு மந்திக்கூட்டம்.
நாங்கள் போனதோ, 2.30 மணிக்கு. மேலே சாலை போட்டு இருக்கும் ஃபாரஸ்ட் ரேஞ்சர் தவிர, யாருமே இல்லை அங்கே. யாருமற்ற வனாந்தரத்திலே கைகோர்த்து காலார நடப்பது கூட தனி சுகம் தானே!
இயற்கையையும், அங்கு இருந்த வெண்கொக்குக் கூட்டத்தையும் சிறிது நேரம் ரசித்து விட்டு, என்ன செய்யலாம்? எப்படி மாலை வரை நேரத்தைப் போக்கலாம் என்று யோசித்தோம். எதாவது சாப்பிடலாம் என்றால் ஒரு சிறு கடை கூட இல்லை.
சரி, பர்கூர் செல்லும் காட்டுவழியில் கொஞ்சம் தூரம் போய்விட்டு திரும்பும் போது மீண்டும் வரலாம் என்றேன் நான். இப்போ, நான் ஸ்கூட்டி ஓட்ட, பின்னால் அவர்.
முதன் முறையாக மலைப்பாதையில் ஓட்டிச் செல்வது எனக்கு மிகவும் த்ரில்லிங்கான அனுபவமாக இருந்தது. ஒரே சீரான வேகத்தில் செலுத்திக் கொண்டிருந்தேன். வழியில் வெகு தூரம் வரை யாரையுமே பார்க்க முடியவில்லை.
சிறிது மேலே ஏறியவுடன், கீழே நீர்தேக்கம் சூரிய ஒளி பட்டு மின்னுவது அழகாக தெரிந்தது. ரசிப்பவருக்கு, புல் கூட அழகு தானே?!
ஹேர்ப்பின் பெண்ட். ஒன்று, இரண்டு, மூன்று, நான்கு ஆக, மொத்தத்தில் 10 கிலோமீட்டருக்கும் மேலே நாங்கள் போய்விட்டோம். வழியில் அவ்வப்போது ஒரிரு டூவீலர்கள் வருவதோடு சரி. ஒரே ஒரு பஸ் பார்த்தோம். எதிரும் புதிருமாக, இரண்டு பஸ்கள் வந்தால் கூட மிகவும் சிரமம். அவ்வளவு குறுகிய மலைப்பாதை.
வண்டியை நிறுத்தி விட்டு, சிறிது நேரம் அச்சூழலை அனுபவிக்க வேண்டும் என்று, ஒரு ஓரத்திட்டில் அமர்ந்தோம். அமைதி! அமைதி! அமைதி! நம்ம ஊரில் கிடைக்காத ஒன்று. காற்றின் ஓசையைக் கேட்க நம் காதைத் தீட்டினால், உய்ங்…என்னும் ஒரு பூச்சியின் சப்தமும், கீய்ங் கீய்ங் என்னும் வண்டின் ரீங்காரமும், க்வீக் க்வீக் என்று ஓங்கி ஒலிக்கும் தூரத்துப் பறவையில் துல்லிய ஒலியும், நம்மை இயற்கையோடு ஒன்றச்செய்கிறது.
திட்டின் அந்தப்புறம் திரும்பிப் பார்த்தால், அடர்த்தியான மரக்கூட்டத்தைத் தாண்டி, தலைசுற்றவைக்கும் கிடுகிடு பள்ளம். ஒரு அரை மணி நேரம் அங்கே எல்லாவற்றையும் ரசித்துவிட்டு, இன்னும் கொஞ்சம் மேலே சென்றோம்.
சரி, போதும் என்று வண்டியைத் திருப்பினேன். ஒரு மாதிரி உறுமியவாறே மேலே ஏறிய வண்டி, இப்போது சப்தமில்லாமல் வேகமாக இறங்க ஆரம்பித்தது. அவ்வப்போது, ப்ரேக் பிடித்தவாறே, மலையில் இறங்க மனதில் ஒரு குதூகலம். அந்தப் பயணத்தை மிகவும் ரசித்தேன். பள்ளத்தை நோக்கிப் பாயும் வெள்ளத்தைப் போல என்ன ஸ்பீடா போகுது வண்டி?!
ஒரு நாலரை மணி இருக்கும், மீண்டும் வரட்டுப்பள்ளம் வந்த போது, இப்போ, நிறைய மனிதத்தலைகள் தென்பட்டன. ஞாயிறு மாலையில், இப்படி யானை பார்க்க என்றே ஒரு கூட்டம் வருவது புரிந்தது.
திரும்பிய பக்கமெல்லாம் கூட்டம் கூட்டமாகக் குரங்குகள். பாலத்தின் மேல் கடைசிவரை ஸ்கூட்டியில் போய்வந்தோம். திட்டில் அமர்ந்து யானைக்காக காத்திருந்தபடி இயற்கையை ரசிக்க ஆரம்பித்தோம்.
ஒரு பக்கம் கூட்டம் கூட்டமாக மாடுகளும், இன்னொரு பக்கம் எருமை மற்றும் ஆடுகளும் மேய்ந்து கொண்டிருந்தன. தூரத்தில், இரண்டு ஆண்மயில்கள் தென்பட்டன. அதோடு, காட்டுப் பன்றிகளும்.
காற்று சுழன்று சுழன்று வீச ஆரம்பித்தது. யானையார் மட்டும் வரவேயில்லை. நாம் வந்தது, இப்படி மாடு வாட்சிங்கும் பேடு(bird) வாட்சிங்குமாகவே முடிந்து விடுமோ என்று கவலையாக இருந்தது.
அட, தூரத்து மரக்கூட்டத்தின் இடையே இரண்டு யானைகள், தந்தங்களைத் தூக்கியபடி. ஆனா, அது சுவாரஸ்யமா சாப்பிட்டபடி, டான்ஸ் ஆடிக்கொண்டிருந்ததே தவிர, எங்கள் பக்கம் வரவில்லை.
”டேய் பெரிய சீவன்டா!” பக்கத்திலிருந்த பட்டிக்காட்டு மக்கள் குரல் கொடுக்க, பார்த்தால், சாவகாசமாக வெளியே வந்தார் கேங் லீடர் டஸ்கர்.
ஒவ்வொன்றாக வெளிப்பட்டு, அரை மணி நேரத்தில் ஒரு பத்து யானைகளுக்கும் மேலாக ஒரு கூட்டமே வெளிப்பட்டது. “எளங்குட்டி” என்று பக்கத்து ஆட்கள் சொல்ல, பார்த்தால், மிக அழகாக தாயின் கால் நடுவே குட்டி யானை.
ஒரு மணி நேரம் போக்குக்காட்டிவிட்டு, இருட்டும் நேரம், மெதுவாக ஆடி அசைந்து வந்தது, தண்ணீர் குடிக்க. அதுவும், நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெகு தூரத்தில். வேகமாக போய், போட்டோ எடுத்தேன். அதற்குள் மாலை மயங்கி விட்டது.
இயற்கையின் அழகை, மலைகளின் செழிப்பை, மரங்களின் சலசல ஓசையை, மந்திகளின் சேட்டையை, தென்றலின் தழுவலை மனம் முழுக்க நிரப்பிக் கொண்டு, வந்த வழி கிளம்பி, ஏகாந்த பயணத்தின் இனிமையை ரசித்தபடி வீடு வந்து சேர்ந்தோம்.
-சுமஜ்லா.
Tweet | ||||
12 comments:
நாந்தான் முதல்ல
நல்ல அனுபவம்
வாங்க என் பக்கத்துக்கு
அந்த மலை...க்ளிக் செய்து பார்த்தால் மிக அழ்காக இருக்கு, நல்ல படங்களுடன் ஒரு பதிவு, நான் இது வரை இந்த பகுதிகளில் சுற்றியது இல்லை, விடுமுறையில் இது போன்ற அமைதியான பகுதிகளில் சிறிது நாட்கள் செலவிட வேண்டுமென்பது எனது நீன்ட நாள் ஆவல்.
நல்லதொரு பதிவு.
அருமையா பதிவு
இயற்கை வளத்தை உங்க எழுத்தில் ரசிச்சேன்
அருமையான அனுபவ பதிவு
வாழ்த்துக்கள்
//வாங்க என் பக்கத்துக்கு//
நண்பர் ஸ்டார்ஜன் அவர்களுக்கு, இவ்வாறு எழுதுவதை தயவு செய்து நிறுத்தி விடுங்கள். பெண்பதிவரில் வலையில் இப்படி எழுதினால், அர்த்தம் அனர்த்தம் ஆகி விடும். என் பெற்றோர், சகோதரர்கள், மாமா எல்லாரும் என் பதிவை படித்துக் கொண்டிருக்கிறார்கள். யாராவது, தவறாக நினைத்துக் கொள்ளக்கூடும்.
// விடுமுறையில் இது போன்ற அமைதியான பகுதிகளில் சிறிது நாட்கள் செலவிட வேண்டுமென்பது எனது நீன்ட நாள் ஆவல்.//
உங்கள் ஆவல் நிறைவேற வாழ்த்துக்கள். பிள்ளைகளை அழைத்துக் கொண்டு ஒரு டூர் போனால், பிள்ளைகளை விட்டு விட்டு, நமக்காக ஒரு டூர் போவது எங்கள் வழக்கம். வாழ்க்கையை அனுபவிக்க வேண்டாமா?
மற்றும் என் பதிவை வாழ்த்தி, இவ்வளவு ஓட்டுகள் தந்து, தமிழிஷ் முதல் பக்கத்தில் வரும்படி செய்த அனைத்து வாசக அன்பர்களுக்கும் நன்றி!நன்றி! நான் எதிர்பார்க்கவே இல்லை, இதற்கு இவ்வளவு ஓட்டுகள் கிடைக்கும் என்று!
//மாடு வாட்சிங்கும் பேடு(bird) வாட்சிங்குமாகவே //
என்னா...ஆ ஒரு ரைமிங்க்....
சூப்பர்..
இதில் கொடுமை என்னனா... பவானியிலேருந்து அந்தியூர் போற வழியிலதான் என்னோட தோட்டம் இருக்கு, ஆனா இதுவரைக்கும் வரட்டுப் பள்ளம் அணை போனதில்ல...
விரைவில் போவோம். நன்றி
நல்லதொரு அனுபவப் பதிவு.
நல்லதொரு அனுபவப் பதிவு.
ஓ.. பிக்னிக்கா.. சூப்பர். நல்லா என்ஜாய் பண்ணுனீங்களா?
உழவன், அந்த பதிவிலும் இந்த பதிவிலும், வாழ்த்துச் சொன்னதற்கு ஒரு சோம்பேறி தேங்க்ஸ், இங்கயே!
வாழ்க்கையை ரசித்து அனுபவிப்பவருக்கு, எப்பவுமே என்ஜாய்மெண்ட் தானே!
//அந்தியூரில் லஞ்ச் சாப்பிட்டுவிட்டு, மேலே போனோம்//
அந்தியூராராராராராரா!
நான் கோபி (இப்ப சிங்கப்பூர்)
Post a Comment