கைக்குழந்தையுடன் இருபத்தொரு வயது இளம்பெண். அன்பான அனுசரணையான கணவர். தாய் பறவைகளின் நிழலில் இருந்து விலகி அப்போது தான் தங்கள் சொந்த சிறகை விரித்து பறக்க ஆரம்பித்து இருந்தனர். சந்தோஷத்துக்கு குறைவில்லாத அருமையான தாம்பத்யம்.
பாபரி மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 இந்தியாவின் கறுப்பு தினம். டிசம்பர் 7, 1997 இவர்கள் வாழ்வின் கறுப்பு தினம். அன்று காலை தன் ஒன்னரை வயது குழந்தைக்கு போலியோ சொட்டு மருந்து ஊற்றி வந்தார். ஞாயிற்று கிழமை ஆதலால், அன்று வீட்டில் இருந்தார். மனைவியை சீண்டி, கேலி பேசிக் கொண்டு சந்தோஷமாக இருந்தவர், திடீரென்று, தலையில் கைவைத்தபடி அமர்ந்து விட்டார். பேச்சு குழற ஆரம்பித்தது.
மயக்கம் போலும் என்று நினைத்த இந்த பெண், க்ளுக்கோஸ் கலந்து கொடுத்து விட்டு, அருகில் இருந்த தன் மாமா வீட்டுக்கு, காலில் செருப்பு கூட போட மறந்தவளாக சென்று விஷயத்தை சொல்ல, அடுத்த அரை மணி நேரத்தில், அவர் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
செல்லும் வழியில் கை, கால்கள் வெடுக் வெடுக் என்று இழுக்க, வாந்தி வேறு. உடனே ஐ.ஸி.யூவில் சேர்க்கப்பட்டார். டாக்டர் சொன்ன சேதி இது தான்.
‘உடலின் வலது பக்க இயக்கத்துக்கு காரணமான இடது புற மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டிருக்கிறது. இதற்கு ‘லெஃப்ட் கேங்லியானிக் ஹெமடோமா’ என்று பெயர். ரத்த கசிவு நிற்பதற்குண்டான மருந்துகள் கொடுத்திருக்கிறோம். நிற்காவிட்டால், மண்டையோட்டை பிளந்து சர்ஜரி செய்ய வேண்டும். 48 மணி நேரம் கழித்து தான் எதுவும் சொல்ல முடியும்.’
அழுது புரண்டாள் அந்த பெண். கனவிலும் நினைத்து பார்த்ததில்லை, இது போன்று வரும் என்று. சாப்பிட முடியவில்லை, தூங்க முடியவில்லை! தன் உயிரின் மறு பாதி, அங்கே போராடிக் கொண்டிருக்க, இங்கே இவள் உயிர் அவருக்காக துடித்துக் கொண்டிருந்தது.
தங்கமான அமைதியான குணம் என்று ஊரில் பெயர் வாங்கிய அவருக்கு, நட்பு வட்டம் மிக பெரியது. பெருங்கூட்டம் சேர்ந்து விட்டது மருத்துவமனையில். அடுத்த நாள், ஆம்புலன்ஸ் வரவழைத்து, கோவை, கே.ஜி.மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு நான்கு நாட்கள் ஐ.ஸி.யில் வைத்திருந்தார்கள். அவரின் பெற்றவர்கள் தங்களிடம் பணமில்லை என்று கையை விரித்து விட, இப்பெண்ணை பெற்றவர்கள் பாதி செலவு செய்தார்கள். இவளின் நகைகள் பணமாக மாறியது.
நாலு நாட்களுக்கு பின், ரூமுக்கு மாற்றப்பட்டார். இப்போ, இவர் பேசும் திறனை முற்றிலுமாக இழந்து விட்டார். அதோடு, வலது கை இயக்கமும் 80% பாதிக்கப்பட்டிருந்தது. மூளையில் இருந்த ப்ளட் க்ளாட் கரைய மருந்துகள் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்.
டாக்டர் சொல்லும் முன்பே, இப்பெண் ஓடிப் போய், பிசியோதெரபிஸ்ட்டை விசாரித்து, நியமித்தாள். அடுத்து, ஸ்பீச் தெரபிஸ்ட்டையும் ஏற்பாடு செய்தாள்.
நாக்கு புரள மறுத்தது. தன் பெயர் கூட சொல்ல தெரியவில்லை. அல்லது சொல்ல முடியவில்லை. ஸ்பீச் தெரபிஸ்ட், ‘நிலா நிலா ஓடி வா’ பாடல் சொல்லிக் கொடுக்க, அவர் ‘ஆ ஆ ஆ ஆ’ என்று அதே தொனியில் ராகமாக சொல்ல, மனைவி, அவருக்குத் தெரியாமல் பாத்ரூம் சென்று அழுது விட்டு வருவார்.
பபுள்கம் மெல்லுவது, தேனை நக்கிக் குடிப்பது போல நாக்குக்கான பயிற்சிகளெல்லாம் தர, ஓரளவு ஓரிரு வார்த்தைகள் பேச ஆரம்பித்தார். 15 நாட்களுக்குப் பின் டிஸ்சார்ஜ் ஆனார். ஆனாலும், 6 வாரங்கள் கழித்து மீண்டும் சி.டி. ஸ்கேன் வந்து எடுக்க வேண்டும் என்றார் டாக்டர்.
அப்பெண்ணின் கனிவான கவனிப்பும், தொடர்ந்த பயிற்சியும், 6 வாரத்தில் அவரை பழையபடி ஆக்கி விட்டது. இப்போ, திக்கி திக்கி பேச ஆரம்பித்தார். கையும் பூரண குணம் அடைந்து விட்டது.
இப்போ, டாக்டர், மீண்டும் ஸ்கேன் பார்த்து விட்டு, பரவாயில்லை, ஓரளவு கசிந்து உறைந்திருந்த ரத்தம் கரைந்து விட்டது. ஆனால், ரத்தத்தில் ப்ளேட்லெட்ஸ் எண்ணிக்கை மிகக் குறைவாக உள்ளது. எனவே, ஹெமடாலஜிஸ்ட்டை உடனே போய் பாருங்கள் என்று சொல்லி அனுப்பினார்.
நம் ரத்தத்தில், சிவப்பணு, வெள்ளையணு மற்றும் ப்ளேட்லெட்ஸ் என்று மூன்று கூறுகள் உள்ளன. சிவப்பணு ஆக்ஸிஜன் கடத்தும் வேலை செய்கிறது. வெள்ளையணு, புண் போன்ற இன்ஃபெக்ஷன் ஏற்படும் போது, ஃபாரீன் பாடீஸ் எனப்படும் வெளிக்கிருமிகள் தாக்காமல், அரண் அமைத்து பாதுகாக்கிறது. ப்ளேட்லெட்ஸ் என்பது, ரத்தம் உறைவதற்காக. அதாவது, ப்ளேட்லெட்ஸ் மட்டும் இல்லை என்றால், ரத்தம் வெளியேற ஆரம்பித்தால், உறையாமல், உடலில் உள்ள ரத்தம் முழுவதுமே வெளியேறி விடும்.
இந்த ப்ளேட்லெட்ஸ் நம் உடலில் சாதாரணமாக இரண்டரை லட்சம் என்ற அளவில் இருக்கும். ஆனால், இவருக்கோ, ஐம்பதாயிரம் தான் இருந்தது. இதற்கான ட்ரீட்மெண்ட் ஆரம்பித்தார்கள். தினமும் லேபில் போய், ப்ளேட்லெட் டெஸ்ட் செய்யப்பட்டு, போன் மூலம் டாக்டருக்கு தகவல் சொல்லி ஆலோசனை கேட்கப்பட்டு வந்தது.
இந்த ப்ளேட்லெட்ஸ் குறைந்ததால் தான், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டது. எனவே, மீண்டும் இது குறைந்தால், மீண்டும் அவ்விதம் ஏற்படும் என்று பயமுறுத்தினார்கள். அவர் சாப்பிட்டு கொண்டிருந்த எப்டாயின் என்ற மாத்திரையால் கூட இது ஏறாமல் இருக்கும் என்று அதற்கு மாற்றாக அதை விட 20 மடங்கு அதிக விலையுள்ள கெபாண்டின் என்ற மாத்திரை மாற்றி தந்தார்கள்.
இப்போ, மாதத்தின் மருந்து மாத்திரை செலவு மிகவும் எகிறியது. சமாளிக்க முடியாமல், அப்பெண் உதிரி வருமானம் தேடி, வீட்டில் இருந்தபடி, டியூஷன் எடுக்க ஆரம்பித்தாள். எப்படியும் தன் கணவனை நன்றாக ஆக்க வேண்டும் என்ற உறுதியும் வெறியும் அவளிடம் இருந்தது.
கொஞ்சம் கொஞ்சமாக ஏறிய ப்ளேட்லெட்ஸ் கவுண்ட் ஒரு லட்சம் வரை தான் வந்தது. இப்போ, ஹெமடாலஜிஸ்ட் (ரத்த சம்பந்தமான படிப்பு படித்த டாக்டர்), ஒரு சிலருக்கு பிறவியிலேயே குறைவாக இருக்கும். அதனால் பாதிப்பு இல்லை என்றால் பரவாயில்லை. இதற்கான மருந்தாக ஸ்டீராய்டு அதிக நாள் எடுத்தால், சர்க்கரை நோய் வரும், அதனால் மருந்தை நிறுத்தி விடலாம் என்று சொல்லி விட்டார்.
இப்போ, கே.ஜி.யில், டாக்டர் பிரனேஷ், எதனால் இவ்வாறு ரத்த கசிவு ஏற்பட்டது என்று கண்டு பிடிக்க வேண்டும்; அப்போ தான் மீண்டும் வராது; அதனால் எம் ஆர் ஐ ஸ்கேன் எடுக்க வேண்டும் என்றார். அதுவும் எடுக்கப்பட்டது. அதில் தெளிவாக தெரியாததால், ஆஞ்சியோ கிராம் டெஸ்ட் எடுத்து பார்க்க வேண்டும் என்றார். அம்மருத்துவமனை அன்று அவ்வசதி இல்லாததால், கே.எம்.சி.ஹெச். ல் போய் ஆன்சியோகிராம் எடுத்தார்கள்.
ஆஞ்சியோகிராம் என்றால், தொடையில் சிறு துளை போட்டு, மூளை வரை, கலரான மருந்து செலுத்தி, அதன் பாதிப்பை தெளிவாக படம் பிடிப்பது. அன்று அதற்கு 15,000 ருபாய் செலவாயிற்று.
இதன் ரிசல்ட் என்னவென்றால்,
‘மூளையில், ஏவிஎம் என்று சொல்லக் கூடிய ஆர்ட்ரியோ வீனஸ் மால் ஃபார்மேஷன் இருக்கிறது. அதாவது, நல்ல ரத்தத்தை எடுத்து செல்ல கூடிய நரம்பும், கெட்ட ரத்த்தை எடுத்துச் செல்லக் கூடிய நரம்பும் ஒட்டி இருக்கிறது. இதை சரி செய்ய வேண்டும். செய்யாவிட்டால், மூளைக்குள் ஒரு டைம்பாம் துடித்துக் கொண்டிருப்பது போல அவ்வளவு ஆபத்தானது. எந்நேரமும் மீண்டும் ரத்தகசிவு ஏற்படலாம். இது பிறவியிலேயே வருவது. இதன் ரிஸ்க் வருடம் 4 சதவிதம் அதிகரித்து, 25 வயதில் 100% ரிஸ்க் ஏற்படுத்துகிறது’
திருவனந்தபுரத்தில் இருக்கும் சித்ரா திருநல் ஆஸ்பத்திரியில் இதற்கான சிகிச்சை இருக்கிறது. சென்று செய்து கொள்ளுங்கள் என்று டாக்டர் சொல்லி விட்டார்.
அப்பெண் அந்த ஆஸ்பத்திரிக்கு அப்பாயிண்ட்மெண்ட் வாங்க போன் செய்தார். அங்கு நல்ல உள்ளம் படைத்த டாக்டர் குப்தா என்பவர், நீங்கள் வீணாக அலைய வேண்டாம். ரிப்போர்ட்ஸ் மட்டும் கொரியரில் அனுப்பி வையுங்கள், என்று சொன்னார். அதோடு, இது கதீடர் எனப்படும் நுண்ணிய டியூப் உபயோகித்து செய்யப்படும் சிகிச்சை. ஒரு கதீடருக்கு 15,000 ருபாய செலவாகும். தங்களுக்கு மூன்று கதீடர்வரை தேவைப்படலாம் என்று கூறினார்.
அதன்படி அனுப்பிவைக்கப்பட்ட ரிப்போர்ட்டை பார்த்து விட்டு, ஏவிஎம் மூளையில் மிகவும் உட்புறமாக இருப்பதால், இந்த சிகிச்சை அளிக்க முடியாது. அதனால், வேலூர் சி.எம்.சி. சென்று, ஸ்டீரியோடேக்டிக் ரேடியோ தெரபி செய்து கொள்ளுங்கள். இது ஒன்று தான் தீர்வு என்று சொன்னார்.
இது பொதுவாக கேன்சர் பேஷண்ட்ஸுக்கு தரப்படும் சிகிச்சையாகும். அவர் இன்னொரு விஷயமும் சொன்னார், அதாவது, ‘கேங்லியானிக் ஹெமடோமா’ வந்து ஒரு வருடத்தில் இது தானே குணமடையவும் வாய்ப்புள்ளது. சற்று பொறுத்திருந்து பாருங்கள் என்றார்.
இவர்கள் காத்திருந்தார்கள். அதோடு, அந்த சிகிச்சைக்கு 45,000 செலவாகும் என்றும் சொன்னார்கள். 1998ல் அது ஒரு பெரிய தொகை. அதோடு, இவர்கள் கைகாசெல்லாம் கரைந்து விட்ட நிலையில் மிகவும் கஷ்டத்தில் இருந்தார்கள்.
இறைவனிடம் இறைஞ்சி அழுக, நண்பர் ஒருவர், செலவு பற்றி கவலைப்படாதே, உடனே சிகிச்சைக்கான ஏற்பாடு செய் என்று சொல்ல, அதன் படி இவரும் ஏற்பாடு செய்தார். நோயைக் கொடுத்த இறைவன், நண்பர்கள் மூலம் அதற்கொரு தீர்வையும் கொடுக்க நாடிவிட்டான்.
அப்பெண் சி.எம்.சிக்கு போன் செய்து, விவரம் முழுவதும் கூறி அப்பாயிண்ட்மெண்ட் கேட்க, அப்பெண்ணின் பேச்சைக் கேட்டு, நீங்கள் ஒரு டாக்டரா? என்று கேட்டார்கள். அந்த அளவுக்கு அந்நோயின் தன்மையோடு அவர்களின் வாழ்க்கை ஊறிப் போயிருந்தது.
அதன்படி அப்பாயிண்ட்மெண்ட் கிடைக்க, புறப்பட்டார்கள். இந்த சிகிச்சையிலும் ஒரு சிக்கல் இருந்தது. அதாவது, இச்சிகிச்சை அளிக்கப்பட்டு ஒரு வருடம் வரை ரிஸ்க் தான். இது கொஞ்சம் கொஞ்சமாக ஒட்டியிருக்கும் நரம்பை பிரிக்கும். இது மூளைக்குள் ஒரு வருடம் வரை தொடரும். அந்த ஒரு வருடத்தில், எதுவும் நடக்கலாம் என்பது தான் அது.
ஆனால், அதற்காக சிகிச்சை செய்யாமல் இருப்பது அதை விட முட்டாள்தனமல்லவா? துணிந்து இறங்கி விட்டார்கள். சொன்னபடியே, நண்பர்கள் சில பேர், அத்தொகை முழுவதையும் கட்டி விட்டார்கள். கடனாக அல்ல, சும்மா... இதுவரை யார் கட்டினார்கள் என்று அவர்களுக்குத் தெரியாது. பின்னாட்களில், அதைத் திருப்பி தர முயன்ற போது, யார் கொடுத்தது என்று யாருமே காட்டிக் கொடுக்கவில்லை. என்னே உயரிய நட்பு?! என்னே இறைவனின் அருள்?!
வேலூரில் எல்லா டெஸ்ட்டும் எடுத்தார்கள். ப்ளேட்லெட்ஸ் குறைவாக இருந்தும், ப்ளீடிங் டைம், க்ளாட்டிங் டைம் நார்மலாக இருந்ததால், சிகிச்சையை தொடங்கினார்கள்.
தலையில், நான்கு இடத்தில், ஓட்டை போட்டு, இரும்பு வளையம் ஒன்று ஸ்குரூ மூலம் ஃபிட் பண்ணினார்கள். பின், அவரை தனியறையில் படுக்க வைத்து, வெளியே டீவியில் பார்த்தபடி அந்த மிஷினை இயக்க, பெரிய பீரோ போன்ற ஒன்று கரகரவென்று சுற்றுகிறது. அவ்வளவு தான். இது கத்தியின்றி, ரத்தமின்றி செய்யப்படும் சிகிச்சை.
நான்கு நாட்களில் வீடு திரும்பினார் அவர். இறையருளால், இப்போ, பேச்சும், வலது கை இயக்கமும் முற்றிலும் பழையபடி குணமாகிவிட்டது.
சரியாக ஒரு வருடம் கழிந்தது. மூளையில் செலுத்தப்பட்ட கதிர்கள், தேவையான செல்களை அழிப்பதோடு, பக்கத்திலும் லேசான பாதிப்பு ஏற்படுத்த, மீண்டும் வலது கை இயக்கமும், பேச்சும் பாதிக்கப்பட்டது. இந்த முறை கை இயக்கம் முற்றிலும், பேச்சு 70% பாதிக்கப்பட்டது. காலையில் எல்.கே.ஜி. படிக்கும் தன் குழந்தையை, டூவீலரில் பள்ளி சென்று விட்டவர், மாலைக்குள் வலது கையை தூக்கக் கூட முடியவில்லை. இடது கையினால் வலது கையை தூக்கிவிட்டு, விட்டுவிட்டால், தொப்பென்று கை கீழே விழுகிறது.
மீண்டும் வேலூர் போய், மீண்டும் எம்.ஆர்.ஐ ஸ்கேன் பார்த்து, மாத்திரைகள் கொடுத்தார்கள். டெக்டாக் என்னும் ஸ்டீராய்டு அது. சாப்பிட்டால், கை கொஞ்சம் கொஞ்சமாக இயங்க ஆரம்பிக்கிறது. நிறுத்தினால், மீண்டும் பழையபடி! அதிக நாட்கள் இம்மாத்திரையை எடுக்கவும் கூடாதாம். நான்கு மாத்திரை சாப்பிட்டவர், கிரேஜுவலாக, அரை அரை மாத்திரையாக குறைத்து, நிறுத்தினார்.
இப்போ, எல்லா மருந்தும் நிறுத்தியாகிவிட்டது. பேச்சு முற்றிலும் சரியாகி பழையபடி ஆகி விட்டது. ஆனாலும் கவனித்துப் பார்த்தால், சின்னஞ்சிறு தடுமாற்றம் தெரியும். கை சரியானாலும், ஆள்காட்டி விரல் மட்டும் சரியாக இயங்கவில்லை.
சில நாட்கள் பிசியோதெரபி செய்தார். இதற்கும் மேல் ட்ரீட்மெண்ட் இல்லை என்று டாக்டர் சொல்லி விட்டார். எல்லாம் செய்ய முடிகிறது, ஆனால் எழுத மட்டும் முடியவில்லை. பேனா பிடிக்க முடியவில்லை.
மனம் தளராமல் இடது கையால் நன்றாக எழுதி பழகிவிட்டார். மற்றபடி, சாப்பிடுவது, டூவீலர் ஓட்டுவது எல்லாம் செய்ய முடிகிறது. இப்போ, அது அவர்களுக்கு ஒரு குறையாகவே தெரியவில்லை.
ஆனால், 1997 இறுதியில் துவங்கி, சுமார் மூன்றாண்டுகள், தொடர்ச்சியான போராட்டம். ரத்த பந்த உறவுகள், விலகி இருந்து கைகட்டி வேடிக்கை பார்த்த வேளையிலும், அவர் அன்பு மனைவி தான் உடனிருந்து, ஆறுதலும் தேறுதலும் தந்து அவரை மீண்டும் முழு மனிதனாக்கினார். பணம் லட்சக்கணக்கில் தண்ணீராய் கரைந்தாலும், இறுதியில், இறைவன் அருளால், நோயை வென்று விட்ட மகிழ்ச்சி இருந்தது.
ஒரு நாள் கோவை கே.ஜி.யின் டாக்டர் பிரனேஷ் அவரிடம் சொன்னார், “நீங்கள் உயிரோடு இன்னிக்கு முழு மனிதனாக இருக்கிறீர்கள் என்றால், அதற்கு உங்கள் மனைவி தான் காரணம். வாழ்நாள் முழுவதும் அவருக்கு நீங்கள் கடன்பட்டுள்ளீர்கள்” என்று. ஆனால், எல்லாவற்றிற்கும் காரணம் இறைவனின் அருள் தான்!
அவர் அப்படி சொன்னாலும், அது ஒரு மனைவியின் கடமை தானே! இன்றும் அப்பெண் ஒரு மனைவியை விட மேலாக - ஒரு மந்திரியாக - ஒரு தோழியாக - அவரின் வலதுகரமாக இருந்து கொண்டிருக்கிறார்.
அதற்குப்பின் தான், அவர், தன் மனைவியை தபால் மூலம் படிப்பை தொடர சொன்னார், ஒரு கஷ்ட நேரத்துக்கு கை கொடுக்குமே என்று. எல்லா மருந்து மாத்திரைகளையும் நிறுத்தி கிட்டத்தட்ட, பத்து வருடங்கள் ஆகிவிட்டன. இன்றும் அவர் இடது கையில் தான் எழுதுகிறார்! நமக்கு இடது கைபோல் அவருக்கு வலது கை, நமக்கு வலது கைபோல் அவருக்கு இடது கை!
இன்று பதிவுலகிலும், எழுத்துலகிலும், சுமஜ்லா என்ற புனைப்பெயர் தாங்கி நிற்பவர் தான் அந்த பெண். ஆம், இன்று நினைத்தாலும், என் உள்ளம் நடுங்கும் கறுப்பு நாட்கள் அவை. எனக்கு வாழ்க்கைப் பாடத்தை கற்றுக் கொடுத்து, எதிர்நீச்சல் போட்டு முன்னேறும் துணிச்சலை தந்தது அந்த சம்பவம் தான்.
-சுமஜ்லா.
Tweet | ||||
111 comments:
கண்ல தண்ணீர் வந்துடுச்சு சுஹைனா
இவ்ளோ போராட்டத்துக்கு காரணமான தங்களை மனைவியாக பெற்ற தங்கள் கணவர் மிகவும் கொடுத்துவைத்தவர்,,,
தங்கள் மன தைரியத்திற்க்கு சபாஷ்...
மச்சான் இப்போ எப்டி இருக்கார் சகோதரி...
எதிர் நீச்சல்....
really you are great and luky lady beause of success of your lifeby the help of ........email
தாங்களின் மன தைரியமும் விடாமுயற்சியுமே உங்களது அன்பான வாழ்க்கைத் துணையை நல்ல நிலையில் வைத்துள்ளது.
அனுபவத்தை பகிர்ந்து கொண்டதிற்கு நன்றி....
இறைவன் அருளால் உங்களால் சாதிக்க முடிந்தது.
இது போன்ற மிகப்பெரிய அழுத்தங்கள் மனிதனை சாதிக்கத் தூண்டுகிறது.
சாதாரணமாக ஓடவே சிரமப்படும் மனிதன் நாய் துரத்தி வந்த போது எட்டடியை அனாயசமாக தாண்டியிருப்பான். திரும்ப வந்து பார்த்தால் நாம்தான் தாண்டினோமா என்று அவருக்கே மலைப்பாய் இருக்கும்.
இறைவன் உங்கள் இருவருக்கும் எல்லா நல்லருளும் செய்யட்டும்.
பெண்களால் சிறப்பாக சாதிக்க முடியம் என்பதை எடுத்துக் காட்ட இந்த இடுகையையே ப்ரிண்ட் போட்டுத் தரலாம்.
கண்ணில தண்னி வர வச்சுட்டீங்க.இதைவிட சோதனை என்ன வரப்போகிறது.
சத்தியவான்-சாவித்திரி என்று கதை படித்துள்ளேன்.
உங்கள் அனுபவத்தையும் ,சாதனையையும்
படித்த போது...
பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
துணிவே துணை
இடுக்கையை முழுதும் படித்தேன்.
தங்களின் தன்னம்பிக்கை, காதல், அவரின் ஊக்கம், நண்பர்களின் கடமை,
இப்படி பல தலைப்புகள் வைக்கலாம்.
எல்லாம் வல்ல ஏகன் மென்மேலும் உங்களுக்கு(ம்) துணை நிற்கட்டும்.
I appreciate you courage and Oh my God. I pray God be with you always and forever.
-Vidhya
வேறு ஒருவருடைய அனுபவம் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் உங்கள் பெயரை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். பாராட்டுக்கள், சகோதரி. இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் அருளட்டும்.
Your courage and love is amazing. You are certainly blessed by God. All the best to you.
என்ன சொல்வது? அது போக நீங்கள் தலைப்பாக கொடுத்துருப்பது தான் ஆச்சரியமாக இருந்தது? அதுவே பொருத்தமானது தான். சித்தம் கலங்கி விட்டது.
ஜோதிஜி
தேவியர் இல்லம். திருப்பூர்.
http://texlords.wordpress.com
texlords@aol.in
தங்களின் கனவர் மேல் வைத்துள்ள காதல் மனம் உருக வைக்கிறது.
வாழ்த்துக்கள்!!!
சுமஜ்லா நான் எதிர்பார்க்கவில்லை
நீங்கள் கூறிய அதே பிரச்சனை எங்கள் டீமில் உள்ள ஒருவருக்கு ஒரு வாரம் முன்பு தான் ஏற்பட்டது ஸ்ட்ரோக் வந்து அவரது தலையை திறந்து ஆபரேசன் செய்தார்கள்..தற்போது அவரது வலது புறம் வேலை செய்யவில்லை... நண்பர்கள் நாங்கள் இணைந்து அவருக்கு சிறு உதவி செய்ய நினைத்து இன்று அதை செய்ய போகிறோம்..
தற்போது நீங்கள் கூறியதை படித்த பிறகு என்னால் அவரின் நிலையை மேலும் உணர்ந்து கொள்ள முடிந்தது ..அவரது பெண் நண்பிக்கு கேன்சர் வேறு..
உங்கள் மீது எனக்கு மரியாதை உண்டு..அது இதை படித்த பிறகு இன்னும் அதிகமாகிறது. உங்களை உயர்த்தி உங்கள் கணவரை பரிதாபமாக பார்க்கும் வகையில் எனக்கு எண்ண தோன்ற வில்லை ..உங்களின் கணவரின் மன உறுதியும் விடாமுயற்சியும் இல்லை என்றால் என்ன தான் மருத்துவம் பார்த்தாலும் அது சரி பட்டு வராது.. உங்களின் அனுசரணையான அன்பும் அவரின் மன உறுதி இரண்டுமே நீங்கள் வெற்றி அடைந்ததற்கு காரணம் என்பது என் கருத்து..கஷ்டத்திற்கே கஷ்டம் கொடுத்த உங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.
படித்தவுடன் ஆடிப்போய்விட்டேன்.சில சோதனைகளை இறைவன் தந்தாலும்,பொறுமை கொண்டு அந்த சோதனையை தாங்கிக் கொண்ட உங்கள் மன உறுதி.உங்கள் கணவர்,நீங்கள்,மற்றும் உங்கள் குடும்பம் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
படிக்கும் பொழுதே கண்களில் நீர் வருகிறது. உங்களின் விடமுயற்சியும் தன்நம்பிக்கையும் நண்பர்களின் உதவியும், இறைவனின் அருளும் இருக்க போய்தான் இன்று உங்கள் கணவரை முழுதாக குணமனடை செய்துள்ளது..
நீங்கள் உங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவ்வானாகவும் ஆமீன்.
//இவ்ளோ போராட்டத்துக்கு காரணமான தங்களை மனைவியாக பெற்ற தங்கள் கணவர் மிகவும் கொடுத்துவைத்தவர்,,,//
நன்றி வசந்த், தங்கள் அன்புக்கு! இத்துணை மனதிடம் கொண்ட கணவரை அடைவதற்கு நான் தான் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.
//மச்சான் இப்போ எப்டி இருக்கார் சகோதரி...//
இப்போ, வலது கை ஆள்காட்டி விரல் சரிவர இயங்குவதில்லை என்பதைத் தவிர வேறெந்த குறையும் இல்லை, எங்கள் வாழ்வில்.
இறையருளால், அழகான சொந்த வீடு, மணியான இரு குழந்தைகள், ஹஜ்ஜுடைய பாக்கியம், தேவைக்கேற்ற செல்வம், போதுமென்ற மனம் என்று தற்சமயம் எங்களுக்கு எந்த குறையும் இல்லை!
//தாங்களின் மன தைரியமும் விடாமுயற்சியுமே உங்களது அன்பான வாழ்க்கைத் துணையை நல்ல நிலையில் வைத்துள்ளது.//
இல்லை நண்பரே, அந்த சம்பவம் தான் எனக்கு மன தைரியத்தையும் விடாமுயற்சியையும் தந்தது. அன்று இருபத்தியொரு வயது கூட முடியாத உலகமே தெரியாத பெண்.
படித்துக்கொடிருக்கும்போதே இடையில் சிறிய சந்தேகம் ஏற்பட்டது எனக்கு. அருகில் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்ததைபோல் எப்படி இப்படி தெளிவாக எழுத முடிகிறது என்று.
உங்களின் அசாத்திய தைரியமும், மனப்பக்குவமும், அன்பும் மெய்சிலிர்க்க வைக்கிறது. வாழ்வில் இதைவிட கடுமையான சோதனைகள் இருக்கமுடியாது. இருந்தும் அதை எதிர்த்து நின்று வெற்றி கண்ட உங்களைப் பாராட்ட வார்த்தைகள் இல்லை சகோதரி.
கண்ணீர் வரவழைத்தாலும் உங்களின் மன உறுதி கண்டு மகிழ்ச்சியாகவே இருக்கிறது. இறைவன் அருளால் இனி எந்த பிரச்னைகளும் இல்லாமல் நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் சந்தோசமாகவும் வாழ வல்ல இறைவனை வேண்டுகிறேன்
//இறைவன் அருளால் உங்களால் சாதிக்க முடிந்தது.
இது போன்ற மிகப்பெரிய அழுத்தங்கள் மனிதனை சாதிக்கத் தூண்டுகிறது.//
சத்தியமான வார்த்தை நண்பர் சுல்தான்!
//கண்ணில தண்னி வர வச்சுட்டீங்க.இதைவிட சோதனை என்ன வரப்போகிறது.//
அன்புக்கு நன்றி நண்பரே; மிகவும் சிறிய வயதில் வந்ததால் தான் கஷ்டமாக இருந்தது. அதே சமயம் சிறு வயதில் வந்ததால் தான் தாங்கக்கூடிய மனபலமும் இருந்தது.
"Always God is Great" but after read ur story ,your the god of your family
//உங்கள் அனுபவத்தையும் ,சாதனையையும்
படித்த போது...
பாராட்டாமல் இருக்க முடியவில்லை.
துணிவே துணை//
நன்றி யோகன்! துணிந்தவருக்கு சமுத்திரம் முழங்கால் வரை தான்!
நன்றி ஜமால்!
//தங்களின் தன்னம்பிக்கை, காதல், அவரின் ஊக்கம், நண்பர்களின் கடமை,
இப்படி பல தலைப்புகள் வைக்கலாம்.//
ஏனோ இதற்கு தலைப்பிட என் மனம் விரும்பவில்லை. அதனால் தான் என் மனவோட்டத்தையே தலைப்பாக்கினேன்.
//I appreciate you courage and Oh my God. I pray God be with you always and forever.
-Vidhya//
Thank you Vidhya for your kind prayer. God is there for all people.
Islam says,
'IF you walk towards God, He runs towards you!
IF you run towards God, He flies towards you!'
//வேறு ஒருவருடைய அனுபவம் என்று நினைத்தே வாசிக்க ஆரம்பித்தேன். கடைசியில் உங்கள் பெயரை பார்த்ததும் அதிர்ந்து விட்டேன். பாராட்டுக்கள், சகோதரி. இறைவன் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் எல்லா நலன்களையும் அருளட்டும்//
நன்றிங்க, முன்பே பெயர் சொல்லியிருந்தால், என்னால் என்னைப் பற்றி முழுமையாக, சொல்ல முடியாமல் போயிருக்கும் அல்லது சுயபுராணம் போல் தோன்றியிருக்கும். அதான் இப்படி.
//Your courage and love is amazing. You are certainly blessed by God. All the best to you.//
Thank you Sir, for the kind prayers and wishes. God Blesses Everyone.
நன்றி ஜோதிஜி! தங்கள் வலைப்பூ பார்த்தேன். இவ்வரிகள் என்னை மிகவும் கவர்ந்தன:
//உரையாடத் தெரிதல் வேண்டும்
ஒளித்து வைத்து உருக வேண்டும்.
கல்லாலோ சொல்லாலோ அடித்தாலும்
எந்நாளும் கலங்காத மனமும் வேண்டும்.//
//தங்களின் கனவர் மேல் வைத்துள்ள காதல் மனம் உருக வைக்கிறது.
வாழ்த்துக்கள்!!!//
இது எனக்கு மட்டுமே அல்லாத பரஸ்பர அன்பு தான்! நன்றி நண்பரே!
நண்பர் கிரிக்கு,
தாங்கள் என் மேல் வைத்திருக்கும் மரியாதைக்கு மிக்க நன்றி!
தங்கள் நண்பருக்கு இப்பொழுது தேவை, தன்னம்பிக்கையும், தன்னால் மீண்டும் பழையபடி ஆக முடியும் என்ற நம்பிக்கையும் தான்.
//உங்களை உயர்த்தி உங்கள் கணவரை பரிதாபமாக பார்க்கும் வகையில் எனக்கு எண்ண தோன்ற வில்லை ..உங்களின் கணவரின் மன உறுதியும் விடாமுயற்சியும் இல்லை என்றால் என்ன தான் மருத்துவம் பார்த்தாலும் அது சரி பட்டு வராது.. //
சத்தியமான வார்த்தைகள். எப்போதும் அவருக்குப் பின்னால் இருப்பதையே நான் விரும்புகிறேன். இது கட்டுப் பாட்டினால் அல்ல, காதலால்.
நான் அடிக்கடி அவரிடம் சொல்வேன், ‘நான் கிங் மேக்கராகவே இருந்து கொள்கிறேன். நீங்களே கிங்காக இருங்கள்’ என்று. இது வியாபார ரீதியிலான என்னுடைய பல உதவிகளுக்கு சொல்வது.
நீங்கள் சொல்வது போல, அவர் மிகவும் திடமான தன்னம்பிக்கை உடையவர். இல்லாவிட்டால் வெகு சீக்கிரம் இடது கையில் எழுதி பழகி இருக்கிறார். நாம் இரு கையை உபயோகித்து செய்யும் பல காரியங்களை(உதாரணமாக பணம் எண்ணுவது) அவர் ஒரே கையில் செய்வதைப் பார்க்கும் போது எனக்கே பல நேரம் ஆச்சரியமாக இருக்கும்.
ஆனாலும் வலது கையால், எழுதுவது தவிர எல்லா காரியங்களும் ஓரளவு செய்ய முடியும்.
நானாவது, சில நேரம் அவருக்கே தெரியாமல் போய் அழுதுவிட்டு வருவேன். அவர் ஒரு போதும் கண்கலங்க மாட்டார்.
நான் ரொம்ப எமோஷனல்; அவர் ரொம்ப நிதானம்!
ஆயினும், ஒரு குழந்தையை போல அவரை பராமரித்தது, குளிப்பாட்டியது, சோறூட்டியதெல்லாம் ஒரு மனைவியின் கடமை தானே?! அதை நல்ல முறையில் செய்து குணப்படுத்திய திருப்தி எனக்கு இருக்கிறது.
நான் 10த் உடன் என் படிப்பை தந்தை நிறுத்தி விட்டார். பின் தபாலில் படித்து +2 ரிசல்ட் என்று திருமணம். இன்று, B.A (english) முடித்து, M.Com முடித்து, தற்சமயம் M.A.(english) கரெஸ்ஸில் படிப்பதுடன், B.Ed ம் படிக்க காலேஜில் சேர்ந்திருக்கிறேன் என்றால், அது என் கணவரின் ஊக்கம் தான் காரணம். இத்துணைக்கும் அவர், ஸ்கூல் படிப்பு தான். அதன் பின், சொந்தமாக தோல் பதனிடும் தொழிற்சாலை இருந்ததால், பிஸினஸில் இறங்கி விட்டார்.
உலகமே தெரியாமல் இருந்த எனக்கு உலகத்தைக் காட்டியது என்னவர்தான். இன்று குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகி விட்டேனோ?!
//நீங்கள் உங்கள் கணவர் மற்றும் பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவ்வானாகவும் ஆமீன்.//
நன்றி பாயிஜா! இறைவன் போதுமானவன்.
//"Always God is Great" but after read ur story ,your the god of your family //
Thank you for the love you shower on me. But no body is equal or par to Almighty.
It is the grace of Almighty, that gave me courage during calamity.
//படித்துக்கொடிருக்கும்போதே இடையில் சிறிய சந்தேகம் ஏற்பட்டது எனக்கு. அருகில் இருந்து அனைத்தையும் கவனித்துக் கொண்டிருந்ததைபோல் எப்படி இப்படி தெளிவாக எழுத முடிகிறது என்று.//
ரொம்ப புத்திசாலி நீங்கள்!
உங்களைப் போன்ற நட்புள்ளங்களின் அன்பும் துவாவும் என்றும் தேவை!
நன்றி சகோதரரே!
உங்களுக்கும்..உங்கள் கணவருக்கும் எல்லாம் அருளும் இறைவன் வழங்கட்டுமாக...... உங்களது அன்பும், முயற்சியும்.. வியக்க வைக்கிறது... மாசா அல்லாஹ்..
படித்தவுடன் கஷ்டமாக உணர்ந்தேன்...
அன்புள்ள தோழி,
வார்த்தைகள் வெளியே வர மறுக்கின்றன.
நெஞ்சம் கனத்துவிட்டது தோழி
கடவுள் என்றும் தங்கள் ரூபத்தில் தங்களின் கணவர் கூடவே இருபதற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்.
சகோதரி, எதுவும் சொல்ல வார்த்தை இல்லை! ஆம்! உங்களின் நல்ல மனதிற்கும், உங்களின் கொடுத்து வைத்த(உங்களை மனைவியாய் அடைய) கணவரின் தன்னம்பிக்கைக்கும் மிகப் பெரிய சல்யுட்! வாழ்க வளமுடன்!
அன்பின் சகோதரி,
விழி கசிய வைத்த பதிவு..!
வாழ்வின் அனைத்துச் சிறப்புக்களும் பெற்று நீங்களும் ,கணவரும், குடும்பமும் மகிழ்வாக வாழ எனது அன்பான பிரார்த்தனைகள் !
உங்கள் அன்பிற்க்கும், தைரியத்திற்க்கும் பாராட்டுக்கள். மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கு சகோதரி. சென்ற வருடம் Non Hodgkins Lymphoma ட்ரிட்மென்ட்டின்போது நானும் இந்த பிளேட்லட் பிரச்னைகளால் மிகவும் கஷடப்பட்டேன். பெற்றோர்கள், மனைவி இவர்கள் கூட இருந்து கவனித்துக்கொண்டது மிகவும் ஆருதலாக இருந்ததது. இறைவனின் அருள் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிழவுட்டுமாக.
கண்களில் கண்ணீர் நிக்குது :-(
நீங்கள் தலைப்பை தேடுகிறீர்கள், நாங்கள் படித்து விட்டு வார்த்தைகளை தேடுகின்றோம்.
Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net
அன்பு சகோதரி,
உங்களின் இந்த பதிவை படித்தவுடன் மனம் பதைபதைத்தது. இனி வரும் காலங்கள் எல்லாம் வசந்த காலங்களாகவே இருக்க ஏக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்.
இந்த மாதிரி சோதனைகளை நீங்கள் தாங்கும் சக்தி கொடுத்த வல்ல இறைவனுக்கே எல்லா நன்றியும்.
சுகைனா படித்து முடித்ததும் கண்கள் கலங்கி விட்டது.என்ன சொல்றதுன்னே தெரியல.
உங்களின் மனதைரியத்தையும்,தன்னம்பிக்கையும் பாரட்டுகிறேன்.
அதவிட அண்ணாவின் மன உறுதியை பாராட்டுகிறேன்.
நீங்கள்,அண்ணா மற்றும் குழந்தைகளுடன் அனைத்து நலன்களும்,செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ ப்ராத்திக்கிறேன்!!
என்ன சொல்றதுன்னு தெரியலீங்க அக்கா.. காலைல blogs i'm following la உங்களோட இந்த இடுகைக்கான தலைப்பை படிச்சேன்...
அதுக்கு கீழ தெரிந்த வரிகள பாத்துட்டு எதோ கதை மாறி இருக்குன்னு நெனச்சிக்கிட்டு நான் எப்பவும் போல என்னோட blog ல கிறுக்க ஆரம்பிச்சிட்டேன்... இப்போ தான் உங்க இடுகை நினைவுக்கு வந்துச்சி... சரி படிக்கலாம்னு வந்து படிக்க ஆரம்பிச்சேன்...
நீங்க medical terms ஒவ்வொன்றையும் சொல்லி அதை விளக்கி எழுதி இருந்தத பாத்துட்டு... medical terms லாம் கூட நல்லா தெரிஞ்சி வெச்சிருக்காங்களே நு தான் தோனுச்சி... ஆனா.. கடைசி வரிகள படிக்கறச்சே கண் கலங்கிடுச்சிங்க...
நீங்க எழுதுற ஒவ்வொரு பதிவிலிருந்தும் ஒவ்வொரு விஷயத்தை அறிந்து கொண்டேன் நான்...
இப்பதிவிலிருந்து, வாழ்வின் இக்கட்டான சூழலிலும் உங்களைப் போன்று எப்படி துணிச்சலாக இருக்க முடியும் என்று அறிந்தேன்...
எத்தனை சோதனைகள் உங்களுக்கு
நினைத்தாலே கண்ணுல தண்ணி
உங்கள் தன்னம்பிக்கையும் இறைவனின் அருளும் தான்
உங்கள் கணவர் குணமானது ..
எல்லாம் இறைவன் அருள்
இந்த மாதிரி சோதனைகளை நீங்கள் தாங்கும் சக்தி கொடுத்த வல்ல இறைவனுக்கே எல்லா நன்றியும்.
உங்கள் பொருமைக்கும் மன உறுதிக்கும் அல்லாஹ் நற்கூலியை வழங்குவான்!
"தக்தீரை (விதியை) நம்பு;
அல்லாஹ்வை திக்ர்(தியானம்) செய்; பொருமையுடன் இரு காலத்தை எதிர் பார்"
என்று எனது வாப்பா எனக்கு ஒருமுறை எழுதிய கடித வாசகம் இது!
சோதனையைத் தந்த இறைவன், நண்பர்கள்மூலமாகத் தீர்வையும்
கொடுத்துவிட்டான்.
அதே நேரம் கஷ்டமேபட்டாலும்கூட குணமானது
இறைவனருள் என்று கூறினீர்கள், டாக்டரிடம்.
தங்களின் இப்படியான கடுமையான சூழலை சிறிதளவே நான் முன்பு
அறிந்திருந்தேன் என்றாலும்கூட, இவ்வளவு விரிவாகப் படிக்கையில்
எப்படி நான் பதறினேனோ, அந்த நிலையில் தங்களின் திடம்...
மாஷா அல்லாஹ்.
அனைவரது நல்வாழ்விற்காகவும் அருளாளனிடம் நானும் து'ஆ
இறைஞ்சுகிறேன்.
//உங்களுக்கும்..உங்கள் கணவருக்கும் எல்லாம் அருளும் இறைவன் வழங்கட்டுமாக...... //
நன்றி அபுபக்கர்; இறைவன் போதுமானவன்.
//படித்தவுடன் கஷ்டமாக உணர்ந்தேன்..//
சரவணன் சார், இதை எழுதி முடித்து, பின் பிழைதிருத்த படித்த போது, எனக்கே பெருமூச்சு வந்தது, எப்படி இதை தாண்டினோம் என்று!
//அன்புள்ள தோழி,
வார்த்தைகள் வெளியே வர மறுக்கின்றன.
நெஞ்சம் கனத்துவிட்டது தோழி
கடவுள் என்றும் தங்கள் ரூபத்தில் தங்களின் கணவர் கூடவே இருபதற்கு நான் பிரார்த்தனை செய்கிறேன்.//
நாடி, தங்கள் அன்புக்கு நன்றி! கடவுளுக்கு இணையாக யாருமில்லை. சோதனைகளைக் கூட தாங்கிக் கொள்ளக் கூடியவர்களுக்கு மட்டுமே கொடுக்கிறார்.
//சகோதரி, எதுவும் சொல்ல வார்த்தை இல்லை! ஆம்! உங்களின் நல்ல மனதிற்கும், உங்களின் கொடுத்து வைத்த(உங்களை மனைவியாய் அடைய) கணவரின் தன்னம்பிக்கைக்கும் மிகப் பெரிய சல்யுட்! வாழ்க வளமுடன்!//
தங்கள் வாழ்த்துக்கு நன்றி மோகன். இணையத்தில் இவ்வளவு சகோதரர்களா என்று மனம் ஆனந்தமும் பெருமிதமும் கொள்கிறது.
//வாழ்வின் அனைத்துச் சிறப்புக்களும் பெற்று நீங்களும் ,கணவரும், குடும்பமும் மகிழ்வாக வாழ எனது அன்பான பிரார்த்தனைகள் !//
நன்றி ரிஷான். தாங்கள் சமீபத்தில் உடல் நலமில்லாமல் இருந்த போது, நானும் தங்களுக்காக ப்ரார்த்தித்தேன்.
//சென்ற வருடம் Non Hodgkins Lymphoma ட்ரிட்மென்ட்டின்போது நானும் இந்த பிளேட்லட் பிரச்னைகளால் மிகவும் கஷடப்பட்டேன். பெற்றோர்கள், மனைவி இவர்கள் கூட இருந்து கவனித்துக்கொண்டது மிகவும் ஆருதலாக இருந்ததது. இறைவனின் அருள் தாங்கள் அனைவர் மீதும் என்றென்றும் நிழவுட்டுமாக.//
தாங்கள் சொல்வது போல் இறைவன் போதுமானவன்! Non Hodgkins Lymphoma என்றால் என்ன என்று புரியவில்லையே!
//கண்களில் கண்ணீர் நிக்குது :-(//
//நீங்கள் தலைப்பை தேடுகிறீர்கள், நாங்கள் படித்து விட்டு வார்த்தைகளை தேடுகின்றோம்.//
சுரேஷ், ஷபி, இன்று இது ஒரு லெஜெண்ட் (legend)அதாவது ஒரு கதை ஆனாலும், அன்று நான் சிந்திய கண்ணீர் இருக்கே?!
//இனி வரும் காலங்கள் எல்லாம் வசந்த காலங்களாகவே இருக்க ஏக இறைவனிடம் இறைஞ்சுகிறேன்//
மிக்க நன்றி சேக் தாவூத்! எல்லாருக்கும் இறைவன் எல்லா அருளையும் தர வேண்டும்.
//நீங்கள்,அண்ணா மற்றும் குழந்தைகளுடன் அனைத்து நலன்களும்,செல்வங்களும் பெற்று சந்தோஷமாக வாழ ப்ராத்திக்கிறேன்!!//
என்னை அண்ணி ஆக்கி விட்டீர்கள். இனம், மதம், நாடு எல்லாவற்றையும் கடந்த இந்த பாசத்துக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன்?
//இப்பதிவிலிருந்து, வாழ்வின் இக்கட்டான சூழலிலும் உங்களைப் போன்று எப்படி துணிச்சலாக இருக்க முடியும் என்று அறிந்தேன்...//
தேங்க்ஸ் பிரியங்கா. ரொம்ப நாளைக்கு அப்புறம் உங்கள என் ப்ளாக்ல பார்க்கிறேன்.
சோதனையான நேரத்தில் மட்டும் ஒரு தனி தன்னம்பிக்கை வரும். நிச்சயம் வென்று காட்ட வேண்டும் என்ற வெறி வரும். அது இறைவனின் அருட்கொடை என்று தான் கூற வேண்டும்.
//எத்தனை சோதனைகள் உங்களுக்கு
நினைத்தாலே கண்ணுல தண்ணி //
நன்றி ஸ்டார்ஜன், நீங்கள் சொன்னது போல எல்லாம் இறைவன் அருள் தான்.
//இந்த மாதிரி சோதனைகளை நீங்கள் தாங்கும் சக்தி கொடுத்த வல்ல இறைவனுக்கே எல்லா நன்றியும்.//
இறைவன் போதுமானவன்.
//தக்தீரை (விதியை) நம்பு;
அல்லாஹ்வை திக்ர்(தியானம்) செய்; பொருமையுடன் இரு காலத்தை எதிர் பார்//
உண்மைதான் சகோதரரே! ஆயிணும் தக்தீரை மாற்றாக்கூடிய சக்தி துவாவில் இருக்கிறது தானே?!
புது இடத்துக்கு ஷிஃப்ட்டிங் எல்லாம் நல்லபடி முடிந்ததா?
//தங்களின் இப்படியான கடுமையான சூழலை சிறிதளவே நான் முன்பு
அறிந்திருந்தேன் என்றாலும்கூட, இவ்வளவு விரிவாகப் படிக்கையில்
எப்படி நான் பதறினேனோ, அந்த நிலையில் தங்களின் திடம்...//
இப்பொழுது நினைத்தாலும், அது ஒரு பயங்கர கனவு போல் இருக்கிறது அண்ணா!
இது போன்ற தருணங்களை தாங்கி நிற்கவே, பெண் கல்வி அவசியம்.
சுஹைனா ஏற்கனவே உங்களை பற்றி எனக்கு ஓரளவிற்கு தெரிந்து இருப்பதால் படித்து கொண்டு இருக்கும் போதே தெரிந்து கொண்டேன்.
என் தூஆக்கள் என்றும் உங்களுக்கு உண்டு.
என்றும் உங்கள் எண்ணம் போல் சந்தோஷமாய் வாழ ஆண்டவன் கிருபை புரியட்டும்.
போதுமடா சாமி.......
என்ன சொல்வதென்றே தெரியவில்லை. நீங்கள் யாரைப்பற்றியோ சொல்லவருகிறீர்கள் என்று நினைத்து படித்தேன். கடைசியில் அது உங்களின் வாழ்வின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் என்பதை அறிந்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத பயம், வலி இன்னும் ஏதேதோ...
ஆரூரன்.
நிறைய நண்பர்கள் பின்னுட்டம் விட்டுள்ளார்கள். உங்களை போல மனைவிகள் இருப்பதால் தான் இன்றும் மழை பெய்கிறது.. எல்லோருக்கும் இந்த போராடுகிற மனது இருக்காது... இடிந்து தான் போவர்கள்... உங்கள் கணவருக்கு இப்படி கஷ்டத்தை கடவுள் கொடுத்தாலும் உங்களை போல மனைவியை அவருக்கு கொடுத்துள்ளர் அது தான் கடவுளின் கிருபை ....இனியாவது சந்தோசமாக நீங்கள் வாழ்வதற்கு கடவுளிடம் மனபுர்வமாக வேண்டுகிறோம்...
மற்ற பிலோக்கர்களுக்கு .... இவரை போல பின்னுட்டம் விட கூகிள் இந்திக் ற்றன்ச்லடோர் எல்லோரும் அமைத்தால் உடனே பின்னுட்டம் விட வசதியாக இருக்கும் ... எல்லோரும் அவரவர்களின் ப்ளோகில் அமையங்கள்...தட்சை கண்ணன்
நிறைய நண்பர்கள் பின்னுட்டம் விட்டுள்ளார்கள். உங்களை போல மனைவிகள் இருப்பதால் தான் இன்றும் மழை பெய்கிறது.. எல்லோருக்கும் இந்த போராடுகிற மனது இருக்காது... இடிந்து தான் போவர்கள்... உங்கள் கணவருக்கு இப்படி கஷ்டத்தை கடவுள் கொடுத்தாலும் உங்களை போல மனைவியை அவருக்கு கொடுத்துள்ளர் அது தான் கடவுளின் கிருபை ....இனியாவது சந்தோசமாக நீங்கள் வாழ்வதற்கு கடவுளிடம் மனபுர்வமாக வேண்டுகிறோம்...
மற்ற பிலோக்கர்களுக்கு .... இவரை போல பின்னுட்டம் விட கூகிள் இந்திக் ற்றன்ச்லடோர் எல்லோரும் அமைத்தால் உடனே பின்னுட்டம் விட வசதியாக இருக்கும் ... எல்லோரும் அவரவர்களின் ப்ளோகில் அமையங்கள்...தட்சை கண்ணன்
கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது சகோதரி...
ஒவ்வொரு நிமிடமும் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்து இருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது...
இனி தங்கள் வாழ்வில் என்றும் அமைதியும், அன்பும், நிம்மதியும், சந்தோசமும் நிறைந்திருக்க எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்...
இப்படிப்பட்ட மனைவி அமைய தங்கள் கணவர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்...
Stunning
//என் தூஆக்கள் என்றும் உங்களுக்கு உண்டு.
என்றும் உங்கள் எண்ணம் போல் சந்தோஷமாய் வாழ ஆண்டவன் கிருபை புரியட்டும்.//
நன்றி அக்கா, உங்கள் துவாவுக்கு
//கடைசியில் அது உங்களின் வாழ்வின் ரத்தம் தோய்ந்த பக்கங்கள் என்பதை அறிந்தவுடன் ஏதோ ஒரு இனம் புரியாத பயம், வலி இன்னும் ஏதேதோ... //
ப்ளாகில் கதை கட்டுரையெல்லாம் எழுதி எழுதி, ஒரு சஸ்பென்ஸ் வைத்து எழுதுவதே பழக்கமாகிவிட்டது. ரிலாக்ஸ்...
நன்றி தட்சை கண்ணன், உங்கள் அன்பிற்கு! தாங்கும் உள்ளம் இருப்பவருக்குத்தான் சோதனை வரும்! ஆனால், ஒவ்வொரு புயலுக்குப் பின்னும் அமைதியுண்டு. ஒவ்வொரு மேகத்துக்குப் பின்னும் சூரியன் உண்டு.
//கண்ணில் கண்ணீர் வந்துவிட்டது சகோதரி...
ஒவ்வொரு நிமிடமும் எப்படிப்பட்ட வேதனையை அனுபவித்து இருப்பீர்கள் என்பதை உணர முடிகிறது...//
எனக்காக உருக இத்துணை அன்புள்ளங்களா? ஆனால், இன்று என் வாழ்க்கை சீராக சென்று கொண்டிருக்கிறது. இளமையில் தாங்க கூடிய பருவத்தில், சோதனைகளை அனுபவித்து விட்டால், பின்னாட்கள் சுகமாக அமையும் என்று சொல்வார்கள். நன்றி சகோதரி, தங்கள் ப்ரார்த்தனைக்கு!
//Stunning//
May be ofcourse!
நீங்கள் தலைப்பை தேடுகிறீர்கள், நாங்கள் படித்து விட்டு வார்த்தைகளை தேடுகின்றோம்
உண்மை !!! என்ன சொல்வது என்று தெரியவில்லை.வார்த்தைகள் வெளியே வர மறுக்கின்றன
ஒரு உயிரையே திரும்ப கொண்டு வந்திருக்கீங்க. தலை வணங்கிறேன், சகோதரி. கணவர் கொடுத்து வைத்தவர் மட்டும் அல்ல, பல ஜென்மங்களில் பெரும் புண்ணியம் செய்திருக்கிறார்.
உங்கள் போராட்டம் வலிமை மிக்கது. மிக நெகிழ்ச்சியுடன் படித்தேன். என்ன கூறுவது என்றே தெரியவில்லை.
"அவர்கள் நம்பிக்கை கொண்டு தங்களை காப்பாற்றிக் கொண்டால், அல்லாஹ்விடமிருந்து கிடைக்கும் நற்கூலி மிகவும் மேலானதாக இருக்கும்." (2:103).
கல்ஃப் தமிழரே, தங்கள் முதல் வருகைக்கு நன்றி! வரவேற்கிறேன்!
//ஒரு உயிரையே திரும்ப கொண்டு வந்திருக்கீங்க. தலை வணங்கிறேன், சகோதரி. கணவர் கொடுத்து வைத்தவர் மட்டும் அல்ல, பல ஜென்மங்களில் பெரும் புண்ணியம் செய்திருக்கிறார்.//
தங்கள் அன்புக்கு நன்றி இலா! எல்லாம் இறையின் திருவிளையாடல்! எந்த ஒரு காரியத்துக்கும் ஒரு காரணம் இருக்கும், ஆனால், அது மனிதனின் சிற்றறிவுக்கு எட்டாது!
அரங்க பெருமாள் அண்ணா, நீங்கள் சொன்ன திருவசனத்தின் மேல் தான் நாங்கள் நம்பிக்கை கொண்டிருந்தோம், அன்றும் இன்றும் என்றும்!!!
//அவர் அப்படி சொன்னாலும், அது ஒரு மனைவியின் கடமை தானே! இன்றும் அப்பெண் ஒரு மனைவியை விட மேலாக - ஒரு மந்திரியாக - ஒரு தோழியாக - அவரின் வலதுகரமாக இருந்து கொண்டிருக்கிறார்.//
அன்புச்சகோதரியே...
தினமும் செய்தித்தாளில் "கள்ளக்காதல் கொலை" வரதட்சைணை பொய்வழக்கு என்ற செய்திகளை பார்த்தப்பார்த்து சலித்த எனக்கு தங்கள் வலைபூவில் "என்ன தலைப்பு வைப்பது?" உள்ள கட்டுரையை படித்து கண்களில் கண்ணீர் வரவலைத்தது...
பெண்(உன்)உருவில் இன்னுமும் பெண்ணின் பெருமையையும் தாய்மையின் அடையாலங்களையும் தாங்கி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர் உன்னைப்போல்...
உங்கள் கணவர் பெரும் பெரு செய்தவர்... இவர் எல்லம் வல்ல இயற்கையில் அருளால் உடல்நலம், நீள் ஆயுல் உயர் புகழ் பெற்று வாழ (கண்டிப்பாக வாழ்வார் உங்களைப்போல் இணை கிடைத்தற்கு) பிராத்திக்கின்றேன்...
வாழ்க வளமுடன்,
தமிழ். சரவணன்
//பெண்(உன்)உருவில் இன்னுமும் பெண்ணின் பெருமையையும் தாய்மையின் அடையாலங்களையும் தாங்கி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர் உன்னைப்போல்...//
நன்றி சகோதரரே! தங்கள் ப்ரார்த்தனை மற்றும் வாழ்த்துக்கும்...
‘கணவனின் காலடியில் சொர்க்கம் இருப்பதாக’ இஸ்லாம் சொல்கிறது. அது உண்மையில் அதை உணர்ந்தவர்களுக்குத் தான் புரியும். எந்த ஒரு மனைவியும் என்னுடைய நிலையில் இருந்திருந்தால் அதைத்தான் செய்திருப்பார்கள். ஆனால், என்ன, நான் கொஞ்சம் விவரமான ஆள். எதையும் சட்டென்று புரிந்து கொள்வேன். அதனால், அந்த சூழ்நிலையில் தக்கபடி நடந்து கொள்ள முடிந்தது.
துணிவான உங்கள் வாழ்க்கை எதிர் நீச்சல் பெண்மையின் திடத்தை...உரத்தை உலகறியச் செய்வது.
புதுமைப் பெண்ணின் இலக்கணமாய்க் ’காதலன் ஒருவனைக் கைப்பிடித்து’ அவன் காரியம்....சோதனை என அனைத்து நிலையிலும் துணை நின்ற சுமஜ்லா...உங்களுக்கு என் தலைதாழ் வாழ்த்துக்கள்
எம்.ஏ.சுசீலா
என்ன சொல்வதென்றே தெரியவில்லை தோழி. படித்த போது மனதில் ஏதோ ஒரு இறுக்கம் காணப்பட்டது. இதற்குமேலயும் ஒரு துன்பம் உங்களுக்கு வரப்போவதில்லை. இப்போது எல்லா வளமும் பெற்று நமமோடு வாழ்வது கண்டு அகமகிழ்கிறேன்.
"கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு
கட்சிக்கும் அதனைப் பொதுவில் வைப்போம்
கண்கள் இரண்டினில் ஒன்றைக் குத்தி
காட்சி கெடுத்திடலாமோ
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம்
பேதமை அற்றிடும் காணீர்
காதல் ஒருவனைக் கைப்பிடித்தே அவன்
காரியம் யாவினும் கைகொடுத்து
மாதரறங்கள் பழமையைக் காட்டிலும்
மாட்சி பெறச் செய்து வாழ்வமடி"
பாரதியின் இவ்வரிகளை நினைவுபடுத்தி என்னை வாழ்த்திய சுசீலா அம்மையாருக்கு என் பணிவான நன்றிகள்!
ஆமாம் உழவன், நீங்கள் சொல்வது போல, இப்போதைய நலமான வளமான வாழ்வு, "there is a calm after every storm" என்று சொல்வது போலத்தான்!
எதையும் தாங்கும் இதயம் பெற்ற தன்னம்பிக்கை மிக்க பெண் நீங்கள். முயன்றால் சாதிக்க முடியும் என்பதன் எடுத்துக்காட்டு. இறையருள் நிறையட்டும். வாழ்த்துகள்.
சுஹைனா முதலிலே உங்களை பற்றிகொஞ்சம் தெரியும் ஆனால் இவ்வளவு விரிவாக நீங்கள் கடந்துவந்த பாதையை பார்க்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது....
இன்னும் சின்ன உதவிகளுக்கு, கடைக்கு போவதற்க்கு கூட மத்தவர்களை எதிர்பார்க்கும் பெண்களிடையில் நீங்கள் ஒரு வைரக்கல்...நிஜமாக என் கண்களில் நீர் இப்போது...!!!!
ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னாளில் வருவதை தவிர்க்க உதவும்.,
இது தங்களின் குடும்பத்தின் மீது கொண்ட அக்கறையினால்..
ஜெஸிலா, சோதனை வரும்போது, தன்னம்பிக்கையும் கூடவே வரும்; அது இறைவன் தரும் அருட்கொடை!
//சுஹைனா முதலிலே உங்களை பற்றிகொஞ்சம் தெரியும் //
அப்படியா? எப்படி தெரியும் ஹர்ஷினி அம்மா? எனக்கு உங்களைப் பற்றி அவ்வளவாக தெரியாதே?
//ஹோமியோபதி மருத்துவமுறையை பற்றி கொஞ்சம் விசாரித்து வைத்துக் கொள்ளுங்கள்.//
நிகழ்காலத்தில் என் குடும்பத்தின் மீது கொண்ட நம்பிக்கைக்கு மிக்க நன்றி!
என்ன சுஹைனா நெஜமாவே மறந்துடீங்களா????....அருசுவையில் முதலிலே பேசியிருக்கேன்...ஹாசினி.
படிக்க படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கின்றது..
எற்கனவே நீங்கள் இதனை பற்றி அருசுவையில் எழுதி இருக்கின்றிங்க...ஆனாலும் திரும்பவும் படிக்கும் பொழுது அழுகை வரதான் செய்கின்றது..
உங்களிடம் நாங்கள் அனைவரும் கற்று கொள்ள வேண்டியது கடல் அளவில் இருக்கின்றது...அக்கா(என்று கூப்பிடலாம் அல்லவா...)
கீதாச்சல், கருத்திட்டமைக்கு நன்றி! பெயர் சொல்லியே கூப்பிடுங்கள். நட்புக்கு வயதில்லை, தோழி!
தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.
தன்னம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் அக்கா.
\\உலகமே தெரியாமல் இருந்த எனக்கு உலகத்தைக் காட்டியது என்னவர்தான். இன்று குருவை மிஞ்சிய சிஷ்யை ஆகி விட்டேனோ?!\\
நெகிழ்வான பகிர்வு.வாழ்த்துக்கள் பல.
அஸ்ஸலாமு அலைக்கும் சிஸ்டர்..
அல்லாஹ்வே!!! உங்களுக்கு என்ன ஒரு ஸ்ட்ராங்கான மனது.. இவ்வளவு போராட்டம், கஷ்டம்.. போராடி வென்று மீண்டும் போராடி வென்று யா அல்லாஹ்... கண்ணில் தண்ணீரை தவிர வார்த்தைகள் வரவில்லை..
இவ்வுலகில் படும் ஒவ்வொரு கஷ்டத்திற்கும் அல்லாஹ் மறுமையில் சிறந்த கூலியை தருவான். நீங்கள் மறுமையில் உங்கள் கணவன், குழந்தையுடன் சுவனத்தில் சந்தோசாமா வாழ்வதற்கு வல்ல இறைவன் துணை புரிவான்...
அஸ்ஸலாமுஅலைக்கும் சகோதரி,
எனக்கு வார்த்தையில விவரிக்க தெரியல, கண்ணீர் விட்டு அழுகுறேன் அல்லாஹ்வின் நாட்டத்தை கண்டு.
நீங்க, உங்க கணவர், பிள்ளைகள் எல்லாம் இன்ஷாஅல்லாஹ் ஜென்னதுள் பிர்தொஷ்-ல் நபி ஸல் அவர்களுடன் அல்லாஹ் சுபஹானுவதாலா ஒன்று சேர்க்க துவா செய்கிறேன்.
சகோதரி உங்களையும், உங்கள் குடும்பத்தையும் அல்லாஹ் பொருந்திகொள்ள துவா செய்கிறேன்.
UR HUSBAND MOST BLESSED MAN.
வாழ்த்துக்களம்மா.
நிங்கள் ஒவ்வொரு பெண்ணிற்கும் சிறந்த உதாரணம்.
உங்கள் கணவரின் அன்பே இந்தளவு தூரம் உங்களை போராட வைத்துள்ளது.
பொன்னும் பொருளும் அல்ல, பொருத்தமான உள்ளங்களே சந்தோசமான வாழ்வுக்கு அவசியம் என்பதை உணர்த்தியும் விட்டீர்கள்..
Mashaallah Allah ungaluku uyarntha sorkathai kudupaan akka ,padikumpothu aluthuten SuhAina akka kulla ipdi oru poorali erupaanganu terilaka😨😨😨
யார்மா நீங்க? உங்க பேர்?
இரும்பு பெண்மணி !! நீங்க சுஹைனா ..
மனசு அப்படியே நெகீழ்ந்தது !!..எந்த நிலையிலும் கைவிட்டாமல் காத்த இறைவனுக்கு நன்றி .
சின்ன கஷ்டங்கள் வந்தாலே துவண்டு போறாங்க நிறைய பேர் ..இந்த மாதிரி பதிவுகள் நிச்சயம் அப்படிப்பட்ட பலருக்கு தன்னம்பிக்கையூட்டும் ..
சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந்தாச்சு என்ற ஆசுவாசம் இப்ப...
சோதனைகளே நம்மை சாதனை செய்ய தூண்டுகின்றனப்பா... கடந்தாச்சு என்ற ஆசுவாசம் இப்ப...
..............
:'( :'( :'(
இதயம் நடுங்கிக்கொண்டேதான் இதை படிக்க முடிந்தது .....
எத்தனை பெரிய சோதனை , எத்தனை உறவுகளின் துரோகம் .....
சாதாரண பெண்ணால் எதிர்கொள்ள முடியாத சவால் ......
உங்கள் மனவுறுதியும் இறையருளும் நிகரற்ற நட்பும்தான் அவரை காப்பாற்றியிருக்கிறது.....
இப்போதுதான் புரிகிறது உங்கள் தன்னம்பிக்கையின் வேர் எதுவென்பது.....
ல்லாம் வல்ல அல்லாஹ் மஜ்ஹர் பாய் அவர்களையும் உங்களையும் நீண்ட நாள் பூரண நிம்மதியும் நலமுமாக வாழச்செய்வானாக..... ஆமீன் ஆமீன் ஆமீன் !
ஆமீன்...
அல்ஹம்துலில்லாஹ்... எல்லாம் கடந்துவிட்டோம் அல்லாஹ்வின் அருளால்... சோதனைகளை தரும் அதே அல்லாஹ் தான் மனம் தளராமல் உறுதியுடன் இருந்தால் அதன் பின் வெற்றியையும் தருகிறான்.
உங்கள் மனஉறுதி அபாரமானது. மிக எளிமையான வார்த்தைகளில் மருத்துவம் சார்ந்த விஷயங்களையும் தெளிவாக அழகாக எழுதியுள்ளீர்கள். கண் கலங்க வைக்கும் பதிவு. லேஅவுட்தான் படிக்க கொஞ்சம் இடையூறாக உள்ளது.
2009ல் பதிந்தது. ரொம்ப பழைய வலைப்பூ இது. இப்ப அப்டேட் செய்வதில்லை.
Nama ask jansi channel mulama vandhen... Romba kashtama iruku vunga valkaila nadandha sambavam.. aana romba perumaiyavum tonudhu.. neenga tan irumbu penmani.. mama va pathi neenga eludinadhu vachu avar Mel neengalum vunga Mel avarum yevlo kaadhala irukinganu puriudhu.. yen valkaila vungala Mari Oru pen maniya pathi Ila irumbu pen maniya pathi terinjukitadhuku Nan kadavulku nandri solven.. yepovum yenoda prarthanaila vunga kudumbamum irukum..
Ritu
Post a Comment