Tuesday, August 4, 2009

காலம் என்னும் கடலிலே!

சத்தியமாக எதிர்பார்க்கவில்லை, எனது போன பதிவான என்ன தலைப்பு வைப்பது? என்ற தலைப்பில் எழுதியிருந்த என் சொந்த கதை சோக கதைக்கு இத்துணை பின்னூட்டம் வருமென்று... உண்மையில் யார் இவ்வளவு பெரிய கட்டுரையை பொறுமையாக படிக்கப் போகிறார்கள் என்று தான் நினைத்திருந்தேன்.

அன்று வாழ்க்கையாக இருந்தது இன்று கதையாகி விட்டது. எனக்காக ப்ரார்த்தித்த எல்லா நல்ல உள்ளங்களும், வாழ்வில் எல்லா நலமும் வளமும் பெற்று, அவர்களுடைய எல்லா நாட்டமும் நிறைவேறி, என்றென்றும் சுகமாக மகிழ்வுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை இருகரமேந்தி இறைஞ்சுகிறேன்.

அன்று அந்த நேரத்தில் என் டைரியில் எழுதி வைத்திருந்த கவிதையை, இப்போ வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்பதால், கீழே தந்திருக்கிறேன்.

காலம் என்னும் கடலிலே,
...வாழ்க்கை என்னும் படகிலே,
ஞாலம் முழுதும் தேடியே
...நீந்தி நீந்தி செல்லவே,

மஜ்ஹர் என்னும் துணைவனே,
...மனதில் நிறைந்த கணவனே
வழியில் இணைந்து மகிழவே
...வசந்தப் பூக்கள் பொழியவே,

லாஃபிராமா பைங்கிளி
...காதல் பரிசாய் உதித்திட
கதைகள் பேசும் கண்மணி
...கண்டு நாங்கள் களித்திட

இன்பம் கொண்ட வேளையில்
...துன்பம் கண்டதில்லையே
சோகம் தொடரும் என்று நான்
...கனவும் கண்டதில்லையே!

வானம் உருண்டு திரண்டதே
...படகில் மழையும் பொழிந்ததே
இன்பமான படகது
...கண்ணீரிலே நனைந்தது.

தண்ணீரிலே நிறையல
...கண்ணீரிலே நிறைந்தது
தத்தளிக்கும் படகிலே
...தவிக்கும் மனமும் அழுதது!

கரையும் தெரியவில்லையே,
...வழியும் புரியவில்லையே!
இறையின் அருளைக்கொண்டுதான்
...எதுவும் எங்கும் நடக்குது.

காதல் கணவன் கஷ்டத்தில்
...பங்கு கொண்டு உதவவே
காலம் செல்ல செல்லவே
...கஷ்டம் விலகிச்சென்றது.

சலனமில்லா குளத்திலே
...கல்லை வீசி எறிந்திட
மீண்டுமொரு கலக்கமே
...மீள வழி தெரியல.

நட்புக் கொண்ட உள்ளங்கள்
...நல்ல நல்ல இதயங்கள்,
இறைவன் அனுப்பி வைத்திட
...இன்பம் மீண்டும் கிடைத்தது!

புதிய வாழ்வு பிறந்தது,
...புன்னகையும் பிறந்தது!
துன்பம் மறைந்து விலகிட,
...மனங்கள் இணைந்து நிறைந்தது!!

-சுமஜ்லா
.
.

20 comments:

gulf-tamilan said...

உங்கள் போன பதிவிலிருந்துதான் படிக்கிறேன். !!!உங்கள் கணவர் போன இடுகையை படித்தாரா??

இராஜகிரியார் said...

தங்களின் சென்ற பதிவினை இன்று தான் படித்தேன். எந்த வார்த்தைகளை உபயோகிப்பது என்று தெரியவில்லை. தங்களின் மனோ தைரியமும், மச்சானின் மன உறுதியும் மெய் சிலிர்க்க வைக்கிறது.

"பெண்ணுக்கு தாஜ் மஹால் கட்டி வச்சான்டா - எவளாச்சும் ஒரு செங்கல் நட்டு வச்சாளா?"

உண்மை தான் என்று நினைத்திருந்தேன் மேற்கண்ட வரிகளை - தங்களின் பதிவை வாசிக்கும் வரை...

தங்கள் குடும்பத்தினர் மீதும், 'தோள் கொடுப்பான் தோழன்' என்ற படி சரியான நேரத்தில் வெளிக் காட்டிக் கொள்ளாமல் உதவி செய்த அந்த நல்ல நண்பர்களின் குடும்பத்தினர் மீதும் இன்னும் நல்லுள்ளம் படைத்த அனைவர் மீதும் அந்த எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பேரன்பும் - பெருங்கிருபையும் உண்டாவதாக...!

இராஜகிரியார் said...

கவிதை நன்றாக இருந்தாலும் - இதயம் கனத்திருப்பதால் ரசிக்க முடியவில்லை.

Unknown said...

நட்புக் கொண்ட உள்ளங்கள்
...நல்ல நல்ல இதயங்கள்,
இறைவன் அனுப்பி வைத்திட
...இன்பம் மீண்டும் கிடைத்தது!]]


நிதர்சணம்.

அரங்கப்பெருமாள் said...

உண்மைதான்... முந்தையப் பதிவின் பாதிப்பு இன்னும் இருக்கிறது சகோதரி...

//இறையின் அருளைக்கொண்டுதான்
...எதுவும் எங்கும் நடக்குது.//

"சென்று போன நாட்களில் நீங்கள் முற்படுத்தி(யனுப்பி)ய (நல்ல அமல்களின்) காரணத்தால்,நீங்கள் இப்போது மகிழ்வோடு புசியுங்கள்; இன்னும் பருகுங்கள்"(என அவர்களுக்கு கூறப்படும்) - (69:24)

SUMAZLA/சுமஜ்லா said...

//உங்கள் கணவர் போன இடுகையை படித்தாரா??//

என் எழுத்தின் முதல் வாசகர் அவர் தான். ஒரு இடுகை பதிந்த பின், வீட்டிலிருந்தால், முதலில் நான் அவருக்கு படித்து காண்பிப்பேன். ஏனோ, அவரே படிப்பதை விட, நான் படித்து காண்பிப்பதில் ஒரு திருப்தி எனக்கு!

அதோடு, நேற்று மாலை நான் வெளியே போயிருந்தேன். அப்போ, அவரே போட்டு எல்லா கமெண்ட்ஸும் படித்து விட்டு, இரவு என்னிடம் சொன்னார், ‘எவ்வளவு பேர் துவா செய்திருக்கிறார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன்!

அவருக்கும் எனக்கும் ஒரே ஈமெயில் என்பதால், அவ்வப்போது அவரும் லாக் இன் ஆவார்.

. said...

கவிதை மிகவும் அழகு!! (ஆனால் உங்கள் சோகம் தான் வருத்துகிறது மனதை...)

இனி விடுவதில்லை உங்க பதிவை... இங்கு காலை 7.30 ஆகிறது.. என் கணவர் அலுவலகம் சென்றவுடன் ஏனோ நீங்களும் உங்கள் நேற்றைய பதிவும் நினைவிற்கு வந்தது... அதான் உடனடியாக உங்கள் பக்கம் வந்து பார்த்தேன்... ஏற்க்கனவே 6கருத்துக்கள் பதிவாகி உள்ளன.. அதில் சிலர் மனது வருந்தி எழுதி உள்ளனர்... ஆனால், நான் அப்படி எழுத விரும்பவில்லை...

இதுவரை, வாழ்க்கையில் சோகங்களை நீங்கள் சந்தித்திருந்தாலும் அதனை எதிர்க்கொள்ளும் தைரியத்தையும் பக்குவத்தையும் இறைவன் அருளால் பெற்றுள்ளீர்கள்...

வேறெந்த துன்பமும் உங்களுக்கு வரக்கூடாது என்று தான் நான் வேண்டிக்கொள்கிறேன் அந்த இறைவனை....

அதிரை அபூபக்கர் said...

//கரையும் தெரியவில்லையே,
...வழியும் புரியவில்லையே!
இறையின் அருளைக்கொண்டுதான்
...எதுவும் எங்கும் நடக்குது. //

இறைவன் உதவியால்தான் எல்லாம்.. சரியான வரிகள்... நன்றாக உள்ளது.

தமிழ். சரவணன் said...

அன்புச்சகோதரியே...

தினமும் செய்தித்தாளில் "கள்ளக்காதல் கொலை" வரதட்சைணை பொய்வழக்கு என்ற செய்திகளை பார்த்தப்பார்த்து சலித்த எனக்கு தங்கள் வலைபூவில் "என்ன தலைப்பு வைப்பது?" உள்ள கட்டுரையை படித்து கண்களில் கண்ணீர் வரவலைத்தது... பெண்(உன்)உருவில் இன்னுமும் பெண்ணின் பெருமையையும் தாய்மையின் அடையாலங்களையும் தாங்கி சிலர் வாழ்ந்து கொண்டிருக்கினறனர் உன்னைப்போல்...

உங்கள் கணவர் பெரும் பெரு செய்தவர்... இவர் எல்லம் வல்ல இயற்கையில் அருளால் உடல்நலம், நீள் ஆயுல் உயர் புகழ் பெற்று வாழ (கண்டிப்பாக வாழ்வார் உங்களைப்போல் இணை கிடைத்தற்கு) பிராத்திக்கின்றேன்...வாழ்க வளமுடன்,
தமிழ். சரவணன்

SUFFIX said...

//புதிய வாழ்வு பிறந்தது,
...புன்னகையும் பிறந்தது!
துன்பம் மறைந்து விலகிட,
...மனங்கள் இணைந்து நிறைந்தது!!//

இதனை படிக்கும்போது சந்தோஷமாக இருக்கின்றது, எத்தனை சோதனைகளுக்கு பிறகு, அப்பாடான்னு சொல்லி, ஆனந்தமாய் குதூகலம். தங்கள் பகிர்வு, பலர் மனதில் தன்னம்பிக்கையையும், இறை நம்பிக்கையையும் ஊட்டியிருக்கும்.

SUFFIX said...

//அதோடு, நேற்று மாலை நான் வெளியே போயிருந்தேன். அப்போ, அவரே போட்டு எல்லா கமெண்ட்ஸும் படித்து விட்டு, இரவு என்னிடம் சொன்னார், ‘எவ்வளவு பேர் துவா செய்திருக்கிறார்கள்’ என்று நெகிழ்ச்சியுடன்!//

உணர்வுப்பூர்வமான நெகிழ்ச்சி, மச்சான ஷஃபி ரொம்ப விசாரித்தாக சொல்லுங்க.

S.A. நவாஸுதீன் said...

இனிமேல் வாழ்வில் எல்லா வளமும் நலமும் பெற்று வேதனைகள் மறந்து வாழ வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

asfar said...

still not forget your story, God bless with all in your activities..

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி பிரியங்கா! உங்கள் பாஸிடிவ்வான பதிலுக்கு!

SUMAZLA/சுமஜ்லா said...

//இறைவன் உதவியால்தான் எல்லாம்..//

அவனின்றி அணுவும் அசையாதே!

SUMAZLA/சுமஜ்லா said...

தமிழ்சரவணன், தங்களுக்கு மெயிலிலும், போன பதிவிலும் விரிவாக எழுதியுள்ளேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//எத்தனை சோதனைகளுக்கு பிறகு, அப்பாடான்னு சொல்லி, ஆனந்தமாய் குதூகலம். தங்கள் பகிர்வு, பலர் மனதில் தன்னம்பிக்கையையும், இறை நம்பிக்கையையும் ஊட்டியிருக்கும்.//

ஷஃபி, உண்மையில் தாங்க கூடிய துன்பத்தைத்தான் இறைவன் எனக்கு தந்திருக்கிறான். இதைவிட எவ்வளவு பெரிய கஷ்டங்களையெல்லாம் எவ்வளவோ பேர் அனுபவித்திருக்கிறார்கள். நான் கே.ஜி.யில் இருந்த போது, பக்கத்து ரூம்களில் ஒவ்வொருவர் கதையை கேட்டால், ஒரு தனி பதிவே போடலாம்.

இது என் பல கவிதைகளில் பிரதிபலித்திருக்கிறது,
“வேப்பமர அசைவில் நான் பார்ப்பதென்ன
வேகம் போகும் காற்று காதில் சொல்வதென்ன
காலம் நல்ல காலம் இனி எந்நாளுமே
கரைந்து போன சோகம் யாவும் மறைந்தோடுமே” என்ற தொடங்கும் ஒரு கவிதை கூட, இதை பேஸ் பண்ணி எழுதியது தான். இதை போட்டு விட்டேனா என்று பார்த்து, இல்லாவிட்டால், இந்த வாரத்துக்குள் போடுகிறேன்.

பொதுவாக அடுத்தவர் கதைகளைக் கேட்கும் போது, கெட்டபழக்கம் உள்ளவர்களுக்குத் தான் இம்மாதிரி நேருகிறது. ஆனால், என்னவரோ பத்தரை மாற்று பசும்பொன். இவருக்கு பிறவியில் இருந்த நரம்பு பிடிப்பால் நேர்ந்திருக்கிறது.

நவாஸ், இன்னும் ஒரு சில விஷயங்கள், என் வாழ்வில் ஆச்சரியப்பட தக்க வகையில் நடந்ததுண்டு. ஆனால் எல்லாம் வரியாக எழுத முடியாதே! தக்க இடைவெளியில் வெளியிடுகிறேன்.

அடுத்து, வேறு சில முக்கிய பொதுவான பதிவுகள் எழுத வேண்டி உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

i know brother asfar! just to change that meloncholy mood, i wrote this long back written poem.

NIZAMUDEEN said...

'காலம் என்னும் கடலிலே' கவிதை,
தங்கள் வாழ்வின் நெருக்கடியான
சூழ்நிலையின் சாராம்சத்தை,
ஒரு பெண் மன வெளிப்பாடாய்
கொண்டிருந்தது.

ஆனால், 'நன்றாகயிருக்கிறது'
என்று சொல்லமுடியாதே...
அப்படிச் சொல்வது, தங்கள்
கஷ்ட நிலையை நாங்கள்
பாராட்டுவதாய் அமைந்துவிடக்கூடும்.

எனவே,

தங்கள் மன உளைச்சல்களை,
வார்த்தைகளாய், கவிதையில்
தந்துள்ளீர்கள் என்று குறிப்பிட
விரும்புகிறேன்.

SUMAZLA/சுமஜ்லா said...

//ஆனால், 'நன்றாகயிருக்கிறது'
என்று சொல்லமுடியாதே...
அப்படிச் சொல்வது, தங்கள்
கஷ்ட நிலையை நாங்கள்
பாராட்டுவதாய் அமைந்துவிடக்கூடும்.//

நீங்கள் சொல்வதும் ஒரு விதத்தில் சரிதான். ஆனால், கடைசி பாராவுக்கு எக்செப்ஷன் உண்டு தானே?!