Sunday, August 16, 2009

கனவுகள் நனவாகி...

திருமணத்துக்கு வாழ்த்து மடல் தருவது, நட்புக்களின் பழக்கம். அது போல, என் திருமணத்துக்கு என் தம்பிகள், வாழ்த்து மடல் தந்தார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால், தம்பியர் வேண்டுகோளுக்கு இணங்க, 18 வயதில் என் திருமண வாழ்த்து மடலுக்கு, நானே கவிதை எழுதித் தந்தேன். இதோ அந்த கவிதை:

பொங்கும் நல்ல இன்பங்கள் பொங்கும்
மங்கலங்கள் வாழ்த்துக் கூறும்
தங்கத்தமிழில் பாடல் இசைக்க
சங்க நாதம் உள்ளத்தில் ஊறும்!

இறையோன் அருளும் வாழ்வில் சேர
மறைநெறி வாழ்வின் முறைவழி காட்டும்
குறையிங்கின்றி மச்சான் இணைய
நிறையுடை வாழ்க்கை நித்தியமாகும்!

மாநபி வழியில் மாளிகை அமைத்திட
தேனின் சுவையாய் வாழ்வில் இனிக்கும்
கானம் பாட காதல் கிளிகள்
வானம் வரையில் வாழ்த்துக்கள் ஒலிக்கும்!

அன்பாய் யாவரும் வாழ்த்திப் பாட
மின்னல் கீற்றாய் புன்னகை ஒளிரும்
கன்னக் கதுப்பில் கண்ணீர் கரைய
பொன்னுடல் சிலிர்ப்பில் பூமுகம் சிவக்கும்!

ஏக்கம் பரவிட துள்ளும் மனதின்
தாக்கம் கண்களில் தவிப்பாய் சிரிக்கும்
பாக்கள் பலவும் பண்பாய் படித்திட
பூக்கள் சேர்ந்து புதுக்கவி பாடும்!

வித்தாய் விளைவாய் விந்தை படைக்க
மத்தாப்புக்கள் நித்திரை புரியும்
கத்தும் கடலும் வாழ்த்தாய் ஒலிக்க
முத்தும் மணியும் முத்திரை பதிக்கும்!

இதமாய் மச்சான் மனதில் சிரிக்க
நிதமும் இன்பம் உணர்வில் மலரும்
கதம்பச்சுவையில் கரும்பாய் கனிய
வதனச்சோதி முழுமதியாகும்!

வழிகள் இணைந்து வசந்தம் வீச
கழிப்பேருவகை கரையுடைந்தோடும்;
மொழிகள் மறந்து பரவசமாக
விழிகளின் அசைவு உறவைத் தேடும்!!!

-சுமஜ்லா

12 comments:

நட்புடன் ஜமால் said...

கலக்குறீங்க ...

அப்பத்திலேர்ந்தே.

manjoorraja said...

உங்களுக்காகவே நீங்கள் எழுதியதால் உங்களின் ஆசைகளே கவிதையாய் வெளிப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.

SUMAZLA/சுமஜ்லா said...

சரி தான். நொடி போல 14 வருடங்கள் முடிந்து விட்டன.

சீமான்கனி said...

//இதமாய் மச்சான் மனதில் சிரிக்க
நிதமும் இன்பம் உணர்வில் மலரும்
கதம்பச்சுவையில் கரும்பாய் கனிய
வதனச்சோதி முழுமதியாகும்!//

வரிகள் அருமை....

SUFFIX said...

கவிதையில் நீங்கள் அன்றும் என்றும் 18 தான்!!

SUMAZLA/சுமஜ்லா said...

தேங்க்யூ சிகாமணி! இதில் மச்சான் என்பது எனக்கு மட்டுமல்ல, என் தம்பிகளுக்கும் தான். இங்கே அதானே அர்த்தம்.

(நான் தான் எழுதினேன் என்னும் ரகசியம் யாருக்கும் தெரியாது அப்போ! தெரிந்தால் போச்! தலைநிமிர முடியாத அளவுக்கு கேலியாத்தான இருக்கும்!)

//கவிதையில் நீங்கள் அன்றும் என்றும் 18 தான்!!//
ஷபி, உருகிட்டேன்!

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

""என் திருமண வாழ்த்து மடலுக்கு, நானே கவிதை எழுதித் தந்தேன்.""

-'தன் கவிதையே தனக்குதவி' என்றெண்ணி
நீங்கள் கவிதை எழுதினீர்கள் என்பதை...
நான் கண்டுபிடித்துவிட்டேனே!

SUMAZLA/சுமஜ்லா said...

//'தன் கவிதையே தனக்குதவி' என்றெண்ணி
நீங்கள் கவிதை எழுதினீர்கள் என்பதை...
நான் கண்டுபிடித்துவிட்டேனே!//

ஹா...ஹா...என்ன செய்றது? தம்பிங்க, உனக்காக எழுத வேண்டாம், எங்களுக்காக எழுதித்தா என்று கேட்கும் போது...

இப்னு அப்துல் ரஜாக் said...

மாநபி வழியில் மாளிகை அமைத்திட
தேனின் சுவையாய் வாழ்வில் இனிக்கும்
கானம் பாட காதல் கிளிகள்
வானம் வரையில் வாழ்த்துக்கள் ஒலிக்கும்!
-------------------

நீ நல்லொழுக்கமுள்ளவளை மணம் புரிவதன் மூலம் வெற்றியடைந்துகொள்! என நபி(ஸல்) அவர்கள் அறிவுரை பகன்றார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரழி) நூல்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்)

தமிழ். சரவணன் said...

//அன்பாய் யாவரும் வாழ்த்திப் பாட
மின்னல் கீற்றாய் புன்னகை ஒளிரும்
கன்னக் கதுப்பில் கண்ணீர் கரைய
பொன்னுடல் சிலிர்ப்பில் பூமுகம் சிவக்கும்!//

அருமையான கவிதை வரிகள்...

SUMAZLA/சுமஜ்லா said...

சரியாக சொன்னீர்கள் பீஸ் ட்ரைன். இருவரிடமும் ஒழுக்கம் இருந்தால் எத்தகைய சோதனைகளையும் சாதனைகளாக மாற்ற முடியும்.

SUMAZLA/சுமஜ்லா said...

தமிழ்.சரவணன், எனக்கு இவ்வரிகள் தான் மிகவும் பிடிக்கும்.