Saturday, January 30, 2010

அரபு சீமையிலே.... - 14

இறையின் நினைவில்
குறையா அருளில்
குன்றா நம்பிக்கை
நன்றாய் கொண்டு,

பெருமகன் முஹமது சீராய் மணந்து,
அருந்தவம் கிடந்தார் ஹீரா குகையில்!

புனித ரமலான் மாதத்தில்
இனியதொரு பிறையன்று,
இறங்கியதே இறை செய்தி!
உறங்கியதே தீய சக்தி!!

இருளின் ஊடே ஒளியாய் தோன்றி,
அருளின் வடிவாய் நின்றார் ஜிப்ரீல்!

ஏகனின் தூதர்
வாகையை சூட,
வல்லவன் செய்தியை
நல்லவரிடம் சேர்த்து,
வானவர் கோமான்
ஆணைகள் போட,

”ஓதுவீராக!” என்றவரிடத்தில்,
ஓதத்தெரியாதென, மருண்டார் நபிகள்!
மும்முறை சொல்ல,
முயற்சிகள் வெல்ல,
செம்மறை திருமறை
செழிப்பாய் இறங்க,

கண்மணி முஹமது(ஸல்)
நன்மணி நாயகர்
தூதை ஏற்று தூயவராக,
போதம் தாங்கி மனையிடம் ஏக,
மறைபொருளாலே மனமெல்லாம் அஞ்சி,
மனைத்துணை கதீஜா அருகில் துஞ்ச,

ஆறுதல் சொல்ல,
தேறுதல் கொண்டார்!
ஆறுமாதம் சென்று
வேறொரு இறைசெய்திவர
மாறுதல் ஏற்று
மாட்சிமை உரைத்தார்!!
இறுதிநபி தானென்ற
உறுதி உள்ளத்தில் நிறைத்தார்!!

நாயகத்திருமேனியின்
சிறிய தந்தை புதல்வர்
ஆறு வயது சிறுவன் அலியார்,
அண்ணலாருடன் இணைந்து
இறைவணக்கம் மேற்கொள்ள,

வலக்கரம் அடிமையாய் இருந்து
உரிமைவிடப்பட்டு,
வளர்ப்புமகனாய் இருந்த ஜைதும்
உற்ற துணையாய் இருந்தார்!!!

ஆண்டுகள் செல்ல
ஆண்டவன் அருளால்,

பகிரங்கமாக தெருவெங்கும் சென்று
புதிய மார்க்கத்தை புகல்ந்தார் நபிகள்(ஸல்)!!!

ஊக்கமளிக்க யாருமில்லை;
ஊறுசெய்ய பெருங்கூட்டமிருந்தது!
ஆக்கப்பணியில் இணையவில்லை;
ஆறாய் வெறுப்பும் எதிர்ப்புமிருந்தது!!

விருந்தொன்று வைத்து
கருத்ததை உரைக்க,
விருட்டென்று யாவரும்
கடுஞ்சொற்கள் கூற
அபூலஹப் கொடியோன்,
அலப்பறை செய்து,
எதிர்த்தான், உதிர்த்தான்,
விஷச்சொற்கள் பலவும்!!

பன்னரும் மூலை
யாங்கிலுமிருந்து
இன்னல்கள் பலவும்
இளைத்திட்ட போதும்,

தாங்கி நின்றார்
தீனின் தூணை
தூக்கிச் சென்றார்,
சன்மார்க்கக் கொடியை!!

(வளரும்)

(பெருமானார் பெயர் வரும் இடங்களில் சலவாத் ஓதிக் கொள்ளுங்கள்)

-சுமஜ்லா.

6 comments:

வெள்ளிநிலா said...

வாழ்த்துக்கள், முடிந்தால் சீறாப்புராணம் போல் எளிய தமிழில் முயற்சி பண்ணுங்கள்

Unknown said...

நபிகள் பெருமானாருக்கு இறை வேதம் (திருக்குர்ஆன் )
அருளப்பட்ட அந்த இனிய செய்தியை கவிதை வடிவில்
தந்த உங்களுக்கு நன்றிகள் பல.
தொடர்ந்து முழுவதையும் கவிதை வடிவிலேயே
தாருங்கள்.
ஆவலுடன் எதிர்பார்கிறேன்.

Aashiq Ahamed said...

பிஸ்மில்லாஹ்,

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

சகோதரி சுமஜ்லா அவர்களுக்கு,

அழகான கவிதை.

சிறிய திருத்தம்...

//புனித ரமலான் மாதத்தில்
இனிய 27ம் பிறையன்று,///

முதல் இறை செய்தி, ரமலானின் கடைசி பத்து இரவுகளில் எதோ ஒரு ஒற்றைப்படை இரவில் இறங்கிற்று. தாங்கள் இதை திருத்தி கொள்ளவும்...

உங்கள் சகோதரன்,
ஆஷிக் அஹ்மத் அ

சீமான்கனி said...

//புனித ரமலான் மாதத்தில்
இனியதொரு பிறையன்று,
இறங்கியதே இறை செய்தி!
உறங்கியதே தீய சக்தி!!//

//ஊக்கமளிக்க யாருமில்லை;
ஊறுசெய்ய பெருங்கூட்டமிருந்தது!
ஆக்கப்பணியில் இணையவில்லை;
ஆறாய் வெறுப்பும் எதிர்ப்புமிருந்தது!!//
//விருந்தொன்று வைத்து
கருத்ததை உரைக்க,
விருட்டென்று யாவரும்
கடுஞ்சொற்கள் கூற
அபூலஹப் கொடியோன்,
அலப்பறை செய்து,
எதிர்த்தான், உதிர்த்தான்,
விஷச்சொற்கள் பலவும்!!//

சலாம் அக்கா...நலமா??
அழகிய ரசித்த வரிகள்...வழக்கம் போல் உங்கள் பாணியில் அழகாய் வந்துள்ளது...நன்றி அக்கா..
ஏதும் விசேஷ செய்தி.. உண்டா...??

பாத்திமா ஜொஹ்ரா said...

//(பெருமானார் பெயர் வரும் இடங்களில் சலவாத் ஓதிக் கொள்ளுங்கள்)//

உண்மை உரைத்தீர்கள்

இப்னு அப்துல் ரஜாக் said...

மிக அருமை