Tuesday, July 7, 2009

சைக்கிள் (சிறுகதை)


“அப்பா! என் சைக்கிளுக்கு காத்து அடிச்சுத் தாங்க அப்பா!”

தூங்கிக் கொண்டிருந்த என்னை ஆறு வயசு மகன் எழுப்பி விட, சோம்பலாக இருந்தது. சிறிது நேரம் தூங்குவது போல பாசாங்கு செய்தேன்.

அப்பா! பேசாம வேற டயர் மாத்தித் தாங்கன்னு சொல்லிக்கிட்டே இருக்கேன்ல! தெனமும் காத்து எறங்கி எறங்கி போயிருது!”

இனி தூங்க முடியாது. இஷ்டமில்லாமல் எழுந்து வெளிவாசலுக்குப் போனேன். சைக்கிள் பருவம் எல்லார் வாழ்க்கையிலும் இருப்பது தானே?!

முதன்முதலில் மகளுக்கு சைக்கிள் வாங்கித் தர வேண்டும் என்று நினைத்த போது, விலை விசாரித்தால் அம்மாடியோவ் என்று இருந்தது. ஹை பேஷன்ல இன்றைக்கு கலர்கலராய் வந்து விட்டது. மகளுக்கு முதன்முதலாக மூன்று சக்கர சைக்கிளுக்கு பதிலாக ப்ளாஸ்டிக் கார் தான் வாங்கினோம். அதை கடைசிவரை அவள் ஓட்டவே இல்லை. கால் எட்டியபோது வயது பத்தவில்லை. வயது பத்தியபோது கால் எட்டவில்லை. அதாவது, ரொம்ப நீளமா வளர்ந்துவிட்டது.

அடுத்ததா ஒரு மூன்று சக்கர சைக்கிள். அதையும் கொஞ்ச நாள் தான் ஓட்டினாள். அப்புறம் அதிலேயே ஸ்கூட்டர் வடிவத்தில் இருந்ததைக் கேட்டு அடம் பிடித்துக் கொண்டிருக்கும் போதே வளர்ந்து விட்டாள். இப்போ தான் இரு சக்கர சைக்கிள் கனவு.

அவளுடைய சஞ்சாயிகா பணத்தை எடுத்து வாங்கிக் கொடுத்தோம், அப்போ தான் சேமிப்பின் பயன் புரியும் என்று! தெரு பசங்க எல்லாரும், அவளுக்கு கற்றுக் கொடுக்க முயன்று சலிப்படைந்து போக, கடைசியில் ஒரு நாள் சாக்கடையில் விழுந்தெழுந்து பழகி விட்டாள்.

இனி, மகனுக்கும் அதையே கொடுத்துவிடலாம் என்று தான் நினைத்தோம். ஏழு வயதாவது ஆனால் தான் அதை ஓட்ட முடியும். அவனுக்கோ நாலு வயதிலேயே, சைக்கிள் ஓட்ட ஆசை. சரி என்று பெரியப்பா வீட்டு சைக்கிளை இரவல் வாங்கி வந்தோம்.

முதலில் பயந்தவன், அதிகம் சிரமப்படாமலே ஓட்டிப் பழகிவிட்டான். சின்னப் பையன் எவ்வளவு அழகா சைக்கிள் ஓட்டறான் பாருனு எல்லாரும் சொன்னதுனால, கையை விட்டு விட்டு ஓட்டுவது, ஒரே பக்கம் கால்களைப் போட்டபடி ஓட்டுவது, நின்று கொண்டே ஓட்டுவது போன்ற சேஷ்டைகள் எல்லாம் செய்ய ஆரம்பித்தான்.

டயர் ரெண்டும் ரொம்பவும் தேய்ந்து போய் விட்டது. இரவல், என்று அப்படியே ஓட்டிக் கொண்டிருக்க, ஒரு நாள், மகளின் சைக்கிளை எடுத்துக் கொடுத்தேன்; இதை ஓட்டிப் பழகி விட்டால், இனி பழையதைத் திருப்பிக் கொடுத்துவிடலாம். அதுவுமில்லாமல், டயர் மாற்றும் செலவு மிச்சம்.

பெரிய சைக்கிளில், அவனுக்கு ஸ்டார்ட்டிங் ட்ரபுள். ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் யாராவது பிடித்துக் கொள்ள வேண்டும். இப்படியாக, அல்லாடிக் கொண்டிருக்கும் போது தான், பெரியப்பா, அந்த சைக்கிளை அவனே வைத்துக் கொள்ளட்டும் என்று சொல்லி விட்டார்.

பிறகென்ன, முதலில ரொம்ப வீக்கா இருக்கற டயரை மாற்றிக் கொடுத்தேன். கொஞ்சம் போல் துருப்பிடித்து இருப்பதற்கு மட்டும் ஒரு அம்பது மில்லி பெயிண்ட் டப்பா வாங்கி பெயிண்ட் அடித்துக் கொடுத்தேன்.

இப்போ, இன்னொரு டயரும், அடிக்கடி காற்று இறங்கி விடுகிறது. எழுந்து போய் பார்த்தேன். தரையோடு தரையாக ஒட்டிப் போயிருந்தது. இனி இது வேலைக்காகாது என்று புரிந்தது.

“அப்பா! தினமும் காத்தடிச்சு அடிச்சு, கையே வலிக்குதுப்பா. இன்னிக்கே புது டயர், வாங்கிக் கொடுத்திருங்க!” கெஞ்சலுடன், மகன் கேட்க சரியென்று தலையசைத்தேன் நான்.

அவனுக்கு சைக்கிள் தான் ஏரோப்ளேன் மாதிரி. அதில் ஏறி உட்கார்ந்து கொண்டால், ஒரு வீரம் வரும் பாருங்கள். சும்மா, தலையில் இல்லாத முடியைக் கோதி விட்டுக் கொண்டு, சல்லுனு போக ஆரம்பித்து விடுவான்.

நான், டவுனுக்குப் போய், டயரும் ட்யூபும் வாங்கிக் கொண்டேன். என் மனைவி, சைக்கிளுக்கு முன்புறம் வைக்கும் கூடையொன்று வேண்டும் என்றாள். அதனால் அவளுக்கு ரொம்ப சவுகரியம். அவசரத்துக்கு பச்சை மிளகாய், கொத்துமல்லித் தழை போன்றவை மகனிடம் சொல்லி வாங்குவாள். அப்போ, பை சைக்கிளுக்குக் கீழாக தொங்கும். அதன் காரணமாகவே சின்னப் பை கேட்டு அவன் போகச் சுணங்குவான்.

சரி என்று ஒரு கூடையும் இப்போ வாங்கிக் கொண்டேன். அடுத்து, பக்கத்தில் சின்னஞ்சிறியதாக அழகாக ரியர்வியூ மிர்ரர் சின்ன சைக்கிளுக்கென்றே வைத்திருக்க, பக்கத்துக்கு ஒன்றாக அதையும் வாங்கிக் கொண்டேன். ஆக மொத்தம் முன்னூறு ருபாய்க்கு பில் வந்தது.

சைக்கிள் கடையில் மாற்றுவதற்குக் கொடுத்தாள். கூடையை மாற்ற முடியவில்லை. அதை லேத்தில் கொடுத்து கழட்டி வரச் சொன்னான் சைக்கிள் கடைக்காரன். அவ்விதமே கழட்டிக் கொடுத்தேன். இப்போ, கூடையின் தாங்கல் கம்பியை மாட்டினால், மரை போதவில்லை. இனி மீண்டும் டவுனுக்குப் போய், மரை போட்டுக் கொண்டு வரச் சொன்னான். அதையும் செய்து கொடுத்தேன். இப்போ, டயர் மாட்டி, கண்ணாடி மற்றும் கூடை மாட்டி, சைக்கிள் ரெடி.

ஒரு சில இடத்தில் பெயிண்டி உதிர்ந்திருக்க, அதை டச் அப் செய்தால், புதியது போல இருக்குமே என்று, டச் அப் செய்து வைத்தேன். இப்போ மொத்த செலவு ஐநூறு ஆகி இருந்தது.

பள்ளி விட்டு மகன் வந்தான். நேராக சைக்கிளைப் போய் பார்த்தவனுக்கு ஒரே பூரிப்பு. புது சைக்கிள் மாதிரியே இருக்குது என்று சந்தோஷமாக சொன்னான். சிறிது நேரம், அதை ஓட்டிக் கொண்டிருந்துவிட்டு, களைத்து சலித்துப் போய், உள்ளே வந்தான்.

களைத்துப் போயிருந்த மகனை, பாசமாக வேர்வையைத் துடைத்து விட்டு, கொஞ்சியவாறே சொன்னேன்,

“பாருடா! உன்னோட சைக்கிள்னால, இன்னிக்கு ஐநூறு ருபா செலவு! அதோட அலைச்சல் வேற!”

“ஏங்கப்பா! நான் டயர் மட்டும் தான மாற்றித் தர சொன்னேன். நீங்க பாட்டுக்கும் கூடை, கண்ணாடியெல்லாம் போட்டுக் கொடுத்திட்டு, இப்ப புலம்பினா?!”

அதுவும் சரி தானே!

-சுமஜ்லா.

18 comments:

அதிரை அபூபக்கர் said...

சைக்கிள் கிடைத்தப்பிறகு உங்களது மகனின் சந்தோசத்திற்கு... இந்த உலகில் அளவே கிடையாது...

அதிரை அபூபக்கர் said...

நல்ல சிறுகதை...

SUFFIX said...

//“ஏங்கப்பா! நான் டயர் மட்டும் தான மாற்றித் தர சொன்னேன். நீங்க பாட்டுக்கும் கூடை, கண்ணாடியெல்லாம் போட்டுக் கொடுத்திட்டு, இப்ப புலம்பினா?!”//

இந்த பாசத்திர்க்கு விளக்கம் சொல்ல முடியாதுங்க‌

S.A. நவாஸுதீன் said...

அப்டியே சும்மா என்ன சுத்தி அடிக்குது உங்க கதை. இரண்டு மாதம் முன்பு மகளுக்கும் மகனுக்கும் தனித்தனியே இரண்டு சைக்கிள் கார்கோவில் அனுப்பி இருந்தேன். அது கிடைத்த பிறகு இருவரும் என்னுடன் போனில் பேசியபோது நான் கண்ட உற்சாகம், வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.

கதையின் ஓட்டம் ரொம்ப நல்லா இருக்கு. கடைசி வரிகள் கண்கலங்க வைத்தது. சீக்கிரம் போகணும் ஊருக்கு

Ashif said...

புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில் உள்ள பழைய விட்ஜெட் ஒன்றையும் பெற முடியவில்லை ஏன்?

asiya omar said...

ஒரு மணி நேரத்திற்கு 30 காசு வாடகை கொடுத்து சின்ன வயதில் தினமும் சாயங்காலம் சைக்கிள் பழகியது நினைவிற்கு வந்தது.நான் கோவையில் படிக்கும் பொழுது சைக்கிள் கம்பல்சரி,என் அண்ணன் வந்து வாங்கி தந்த போது என் மனமகிழ்ச்சிக்கு அளவே இல்லை. நான் சைக்கிள் வாங்காத தோழிகளை பெருமைக்காக டபுள்ஸ் அடித்து கால்வலியை கூட பொறுத்து கொண்டது நினைவிற்கு வந்தது,கிட்ட தட்ட இந்த சின்ன பையனை போல் தான் சைக்கிளில் பறந்தேன்.அது ஒரு சைக்கிள் காலம்.

Dr.R.Gunaseelan said...

தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது.
அதனை பிற வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு இடுகை வாயிலாக விளக்கினால் நன்றாக இருக்கும்.

asiya omar said...

சுஹைனா யதார்த்தமான கதை,எழுதிய விதம் அருமை.அய்யோ அந்த காற்று அடைத்த கதை,எங்க ஹாஸ்டல் வாசலில் ஒரு தாத்தா காற்று அடைக்கவென்றே உட்கார்ந்து இருப்பார்,அவருக்கு என் மேல் தனி பாசம்,என்னை கண்டால் விட்டுட்டு மெஸ் போய்ட்டு வாம்மா என்பார்,வந்து பார்த்தால் துடைத்து பளிசென்று ஜம்முன்னு இருக்கும்,என் செல்ல சைக்கிள்.இந்த சைக்கிள் கதை நியாபகம் வருதே,நியாபகம் வருதேன்னு நிறைய மலரும் நினைவுகளை கண் முன் கொண்டு வந்திட்டீங்க.

SUMAZLA/சுமஜ்லா said...

முதலில், கதையோட்டத்தில் வருவது என் மகன் என்று கண்டுபிடித்தவர்களுக்கு ஒரு ஷொட்டு. படத்தில் இருக்கும் சைக்கிள் தான் அந்த கதாநாயகன். நெட்டில் போட என்றவுடன், அப்படி ஒரு பெருமை அருமையாக போஸ் கொடுத்தான்.

SUMAZLA/சுமஜ்லா said...

//புதிய template ஐ மாற்றும் பொழுது என்னுடைய பதிவில் உள்ள பழைய விட்ஜெட் ஒன்றையும் பெற முடியவில்லை ஏன்?//

மீண்டும், Dashboard - layout - page elements - add a gadgets போய் கொண்டு வந்து விடலாம். யார், எந்த டெம்ப்ளேட் மாற்றினாலும், பழைய விட்ஜெட் போய் விடும். காரணம் டெம்ப்ளேட் என்பது பொதுவானது; அதனால், அதில் குறிப்பாக உங்கள் விட்ஜெட் ஏற்றப்பட்டிருக்காது.

SUMAZLA/சுமஜ்லா said...

அக்கா, நானும் அரை மணி நேரத்துக்கு 30 காசு கொடுத்து தான் வாடகைக்கு எடுப்பேன். போக போக அது 50 காசு ஆகிவிட்டது.

கொஞ்சம் கொஞ்சமாக ஒன்னாம் நம்பர், ரெண்டாம் நம்பர் என்று பெரிய சைக்கிளாக ஓட்டிப் பழக, கடைசியில், ஒரு நாள் நான் பெரிய சைக்கிள் எடுத்தேன். பஸ்காரன் வர, கால் எட்டாமல்(ஏறவும் இறங்கவும் கம்பம் வேண்டுமே!) போட்டு விழுந்து வைக்க, பஸ்ஸின் சக்கரம் என் சைக்கிளில் பட்டபடி நிற்க, விழுந்தது பாருங்க வீட்டில் டோஸ்.

இதில், அந்த சைக்கிளை, ஒரு குடிகாரன் எடுத்து கரகரவென்று சுழற்றி, என் வீட்டின் முன் வைத்தது மறக்க முடியாது. அதோடு என் சைக்கிள் சகாப்தம் முடிந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

அப்புறமெல்லாம், ஸ்கூலுக்கு சைக்கிளில் வரும் ப்ரெண்ட்ஸிடம் கொஞ்சம் நேரம் வாங்கி ஓட்டிக் கொண்டிருப்பேன். அதோடு சரி!

SUMAZLA/சுமஜ்லா said...

//தங்கள் வலைப்பதிவில் பூ கொட்டுவது அழகாக உள்ளது.
அதனை பிற வலைப்பதிவர்கள் எவ்வாறு பயன்படுத்துவது என்று ஒரு இடுகை வாயிலாக விளக்கினால் நன்றாக இருக்கும்.//

இதற்கு அப்படியே கோடிங் கொடுக்க முடியாது. காரணம், கோடிங் எழுதி, அதை js பைலாக சேமித்து, அதை எதாவது ஒரு சர்வரில் ஹோஸ்ட் செய்து(நம் ப்ளாகரில் செய்ய முடியாது) பின் அந்த லின்க்கை எடுத்து நம் ப்ளாகில் போட வேண்டும். நான் என் தம்பியின் வெப்சர்வரில்(காசு கொடுத்து வாங்கியது) போட்டிருக்கிறேன்.

நான் போட்ட அதே கோடிங்கை நீங்களும் போட்டால், அதே ரோஜா தான் கொட்டும். உங்க ப்ளாகுக்கு ஏற்ற மாதிரி வேறு படம் தெரியாது. அதோடு, நான் எதாவது மாறுதல் செய்தால், உங்களுடையதிலும் மாறி விடும். அது தான் பிரச்சினை.

வேண்டுமானால், உங்களுக்கு இது தேவை என்றால், உங்களுக்கு பிடித்த படம் (மேலிருந்து விழுவதற்கு) அனுப்பி வையுங்கள், நான் என் தம்பியிடம் கேட்டு போட்டுத் தருகிறேன். இது சம்பந்தமாக எனக்கு ஒரு டெஸ்ட் மெயில் அனுப்புங்கள்.

Jaleela Kamal said...

சுஹைனா சைக்கிள் கதையும் அருமை , உங்கள் பையன் போஸும் அருமை.

குழந்தைகளுக்கு போட்டோ எடுக்கீறேன் என்றதும் ஒரு புது குதுகலம் தான்


உங்கள் பிளாக் திறந்ததும் அந்த ரோஸ் கொட்டுவது முதலில் என்னை பூ தூவி வரவேற்பது போல் எனக்கு தோணுது.

முன்பொரு காலத்தில் இந்த ஒத்த ரோஜா வைக்காமல் இருக்க மாட்டேன், ரொம்ப பிடிக்கும் (யெல்லோ, ரோஸ், வொயிட் என்று போட்டு கொள்ளும் டிரெஸ்ஸுக்கு ஏற்றார் போல்).

முனைவர் இரா.குணசீலன் said...

ஓ அப்படியா.............
பரவாயில்லை நண்பரே.........
இணையதள தொழில்நுட்ப வசதி விரைவில் இதற்கும் ஒரு தீர்வளிக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது..
ஹைப்பருல் என்ற ஒரு தளம் பார்த்தேன் அதில் ஜாவா நிரலில் இது போன்ற தொழில்நுட்பங்களை வழங்குகிறார்கள்...
கூகுளில் கர்ஸர் ஸ்கிரிப்ட் என்று அடித்துத் தேடினால் நிரைய இலவச இணைதளங்கள் வருகின்றன.
காத்திருப்போம்........

Menaga Sathia said...

கதை நல்லாயிருக்கு சுகைனா.அதை விட டெம்ப்ளேட்டில் ரோஜாப்பூ கொட்டுவது அழகாயிருக்கு.

"உழவன்" "Uzhavan" said...

சிறுகதை என்று சொல்வதற்குப் பதிலாக அனுபவம் என்று சொல்லியிருக்கலாம்.
சைக்கிள் புதுசான சந்தோசத்தில் இப்ப பையன் இருக்கான். குட் :)

SUMAZLA/சுமஜ்லா said...

நாலு விஷயத்தை அனுபவம் என்று சொல்லி போட்டு விட்டால், அப்புறம் எழுதும் எல்லாமே என் சொந்த அனுபவம் என்பது போன்ற முத்திரை விழுந்து விடுமோ என்ற பயம் தான்.
அதோடு, அவங்கப்பா சொல்வது போல கதையோட்டம் அமைத்திருப்பதால், சிறுகதை என்றே போட்டு விட்டேன்.

இராஜகிரியார் said...

நான் சைக்கிள் கற்றுக் கொள்ளும் போது மணிக்கு 60 காசுங்க. ஆனால் பாருங்க--60 காசுகள் கொடுத்து நான் கற்றுக் கொள்கிறேனோ இல்லையோ, எனக்கு கற்றுக் கொடுக்கும் என் நண்பர்கள் ஆளுக்கொரு ரவுண்டு என்று அவர்கள் தான் ஓட்டிக் கொண்டிருந்தார்கள். கடைசியில் நான் எனது நண்பனின் சைக்கிளை ஒரு ரவுண்டுக்கென்று ஓசி வாங்கி அந்த ஒரே தடவையில் கற்றுக் கொண்டேன்.

ம்... எல்லாம் பழைய ஞாபகங்கள்...