Sunday, August 9, 2009

தலைநகர சுற்றுலா

இதன் முன் பகுதி இங்கே: இமயமலை சாரலிலே...


சிம்லாவில் இருந்து கல்கா வந்து, அங்கிருந்து ஷிவாலிக் எக்ஸ்ப்ரெஸ் ரயில் பிடித்து, இரவெல்லாம் பயணித்து, காலை டில்லி வந்து சேர்ந்தோம். ரயில் நிலையப்படிக்கட்டுகளில் இறங்கும் போதே, ஒரு புரோக்கர் எதிர் கொண்டார். தரமான லாட்ஜ் வேண்டும் என்று சொல்ல, ஒரு காரில் எங்களை அழைத்து சென்றார்.


தொடர்ந்த பயணத்தால், ரொம்ப களைப்பாக இருந்தது. ஒன்றிரண்டு லாட்ஜ்களை காண்பித்தும் எங்களுக்கு திருப்தி இல்லை. கடைசியாக பாஹர் கஞ்ச் என்னும் பகுதியில் இருந்த ரிச்மண்ட் இன் என்ற லாட்ஜ் நன்றாக இருந்தது. ஏஸி இல்லை, ஆனால் ஏர் கூலிங் சிஸ்டம், டி.வி., ஹீட்டர் இருந்தது. செக் அவுட் டைம் 24 மணி நேரம். வாடகை ரொம்ப சீப், 500 ருபாய் தான். புரோக்கர்களுக்கு நாம் ஏதும் பணம் தர தேவையில்லை. லாட்ஜ்காரர்கள் கொடுக்கிறார்கள். இதோ, நாங்கள் தங்கியிருந்த ரூமின் போட்டோ.முதலில் அலுப்பு தீர குளித்தோம். பிறகு சாப்பிடலாம் என்று வெளியே வந்தால், சிலுசிலுவென்று மழை தூரல். சந்தோஷமாக நனைந்தபடியே, பக்கத்து கடையில், கச்சோடி, ரொட்டி போன்ற நார்த் இண்டியன் புட் வாங்கி சாப்பிட்டோம்.


ரூமுக்கு திரும்பி, கொஞ்சம் நேரம் நன்றாக ரெஸ்ட் எடுத்தோம். அடுத்த நாள் ஞாயிறு, கடைகள் இருக்காது என்பதால், அன்றைய நாளில் ஷாப்பிங்கும், அடுத்த நாள் சைட் சீயிங்கும் என்று முடிவு செய்து கொண்டோம். டூரிஸ்ட் மினி பஸ்ஸில் சைட் சீயிங்குக்கு தலைக்கு 150 ருபாய் என்று ஹோட்டல் ரிஷப்ஷனில் சொல்ல, பணம் கட்டி ரசீது வாங்கிக் கொண்டோம்.


மாலை கிளம்பி, ஜும்மா மஸ்ஜித் மற்றும் அதை சுற்றியுள்ள மீனா பஜாருக்கும் சென்றோம். மசூதிக்குள் நான் செல்லவில்லை. மச்சான் மட்டும் சென்றார்கள். வழியெங்கும் நிறைய கடைகள். படத்தில் இருப்பது தான் ஜும்மா மசூதி!மகளுக்கு வேலைப்பாடு மிக்க சுடிதார், மகனுக்கு நிறைய விளையாட்டு சாமான்கள் வாங்கினோம். மிக அழகான வால்க்ளாக் 35 ருபாய் தான், இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது. அதோடு அழகழகான வாட்சுகள், ஹேண்ட் பேக் எல்லாம் 35, 40 ருபாய் தான். நிறைய வாங்கினோம். அப்போ தான் ஹெல்மெட் சட்டம் அமலானது. ஹெல்மெட் ஒன்று 80 ருபாய் என்று நான்கு வாங்கினோம். மேலும் பல பல பொருட்கள், துணி மணிகள், சப்பல், ஷூ ஆக மொத்தம் பர்சேஸ் சுமார் 5000 ருபாய் இருக்கும். பணம் அவ்வப்போது ஏடிஎம்மில் எடுத்துக் கொள்வோம்.


பொதுவா, நாங்க வெளியூர் போனால், ஹலால் என்று தெரியாத காரணத்தால், நான் வெஜ் சாப்பிடுவதில்லை. அங்கு ஜும்மா மசூதி சுற்றிலும், ஏகப்பட்ட முஸ்லிம் கடைகள். அன்று தான் நான் வெஜ் சாப்பிட்டோம், சிக்கன் குருமாவும் பரோட்டாவும். பரோட்டா ரொம்ப சீப், 2 ருபா தான், ஆனா குருமா தனியாக 40 அல்லது 50 ருபாய்க்கு வாங்கணும். திருப்தியாக சாப்பிட்டு விட்டு, ஆட்டோவுக்கு 60 ருபாய் கொடுத்து, ரூம் வந்து சேர்ந்தோம்.


அடுத்த நாள் இரவு வரை சுற்றிப்பார்க்கணும் என்பதால், சைட் சீயிங் முடிந்ததுமே, ரயிலுக்கு போக வேண்டி இருந்தது. தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ்ஸில் புக் பண்ணி இருந்தோம். அதனால், அன்றிரவே பேக்கிங் எல்லாம் முடித்து விட்டோம். காலையில், ரூமை வெகேட் பண்ணி, கீழே லக்கேஜ் செக்‌ஷனில் ஒப்படைத்து விட்டு, டூரிஸ்ட் பஸ்ஸில் ஏறினோம், சுற்றிப்பார்க்க.


முதலில், ஓல்டு டில்லிக்கு அழைத்து சென்று அங்கு சில இடங்களை காண்பித்து, பின் நியூ டில்லிக்கு அழைத்து வருகிறார்கள். கடைசியாக நம்மை ரெட் ஃபோர்ட்டில்(செங்கோட்டை) விட்டு விடுகிறார்கள். அது தான் கடைசி ஸ்டாப். அங்கு இரவு 7 மணிக்கு லைட் ஷோ நடப்பதால், அதோடு பயணம் முடிகிறது.


இந்திரா காந்தி வசித்த இல்லத்துக்கு அழைத்து சென்றார்கள். அவர் வாழ்ந்த வீட்டை மியூஸியமாக்கி இருக்கிறார்கள். அதில், அவருடைய ரத்தம் தோய்ந்த உடைகள், அவர் உபயோகப்படுத்திய பொருட்கள், ஆபீஸ் அறை, டைனிங் ஹால் எல்லாம் அப்படியே கலைக்காமல் வைத்துள்ளார்கள்.


எங்கு முதலில் சென்றோம் என்று நினைவில்லை. போட்டோக்களின் வரிசையை பார்த்த போது தான் புரிந்தது. ஜெயின் கோயிலுக்கு சென்றோம். உள்ளே ஒன்றும் பெரிதாக இல்லை என்றாலும், வெளித்தோற்றம் அழகு. இதோ:


அடுத்து, பார்லிமெண்ட் சென்றோம். பாதுகாப்பு மிக்க மிக பெரிய வளாகம். அதனுள் தூரத்தில் பார்லிமெண்ட் கட்டிடம். சற்று தள்ளி, ராஷ்ட்ரபதி பவன். போட்டோ மட்டும் எடுத்துக்கலாம். மற்றபடி உள்ளே எல்லாம் போக முடியாது. இருந்தாலும், ஐம்பது ருபாய் நோட்டில் அடிக்கடி பார்த்திருந்த வட்ட வடிவ கட்டிடத்தை நேரில் பார்க்கும் போது மகிழ்ச்சியாக இருந்தது.

நம் நாட்டின் முதல் குடிமகன்(ள்) வாழும் ராஷ்ட்ரபதி பவன் இதோ:

அடுத்து சென்றது, மிக பிரம்மாண்டமான இந்தியா கேட்! போரில் இறந்த வீரர்களுக்காக கட்டப்பட்ட நினைவு சின்னம் இது!

இவ்விடத்தில், நிறைய தீனி கடைகள். ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிட்டு விட்டு அடுத்து சென்ற இடம், குதும் மினார். இது குதுபுதீன் ஐபக் என்ற மன்னர் கட்டியது. பெரிய, மிக பெரிய சுற்றளவுள்ள, மிக மிக உயரமான ஸ்தூபி, அதுவும், நுணுக்கமான வேலைப்பாட்டுடன். எப்படி அவ்வளவு உயரத்தில், அந்த காலத்தில், இவ்வளவு வேலைப்பாடுகள் செய்ய முடிந்தது என்று நம்மை வியக்க வைத்தது. அதை சுற்றி, ஆங்காங்கே, சிதிலமடைந்த கட்டிடத்தின் மிச்சங்கள். ரொம்ப கஷ்டபட்டு, வியூவே கிடைக்காமல், முழு தோற்றத்தையும் படம் பிடித்தோம். அப்படியும் மரம் மறைத்து கொண்டது.

அதன் கலை நுணுக்க வேலைப்பாட்டை இந்த படத்தில் பார்க்கலாம்.

அடுத்து ஒரு ஹோட்டலில், இறக்கிவிட, மதிய உணவு உண்டோம். தென்னிந்திய சாப்பாடு பிடிக்கவில்லை. தயிர் தான் கைகொடுத்தது. அடுத்து சென்ற இடம்,லோட்டஸ் டெம்பிள். இது சர்வ மதத்துக்கும் பொதுவான தியான கூடம். தாமரை வடிவில் அமைத்திருப்பது இதன் சிறப்பு. 21ம் நூற்றாண்டின் தாஜ்மஹால் என்று இதை அழைக்கிறார்கள். காரணம், இது பளிங்கியால் இழைக்கப்பட்டுள்ளது. வெகு தூரத்திலேயே, டோக்கன் கொடுத்து, நம் செருப்பை வாங்கி வைத்து கொள்கிறார்கள். பலகோண வடிவத்தில், எல்லா கோணத்திலும் ஒரே மாதிரி படிக்கட்டுகள், சிறிய நீர் தடாகம் என்று பார்க்க அழகாக இருக்கிறது. உள்ளே அமைதி, அமைதி, அமைதி! தியானம் செய்ய நிறைய இருக்கைகள் ஒரு புறம். எல்லா மத பொன்மொழிகளும் ஆங்காங்கே எழுதி வைக்கப்பட்டுள்ளன. தாமரை கோயில் இதோ:

அடுத்ததாக சென்ற இடம், நம் தேச பிதா காந்தியடிகளின் சமாதி! எல்லாரும் மௌன அஞ்சலி செலுத்திக் கொண்டிருந்தார்கள்.

இறுதியாக, எங்களை எங்கள் பேருந்து, ஜும்மா மசூதி அருகில் துப்பிவிட்டு சென்றது. அங்கிருந்து இரண்டு பர்லாங் நடையில் ரெட் ஃபோர்ட். நாங்கள் முதல் நாளே ஜும்மா மசூதி சென்றிருந்ததால், இப்போ, அருகிலிருந்த, சாந்தினி சவுக் பஜார் நோக்கி நடந்தோம், எதாவது வாங்கலாம் என்று. அன்று ஞாயிறு, அதனால் எல்லா கடைகளும் க்ளோஸ். சரியென்று ரெட் ஃபோர்ட் நோக்கி நடந்தோம். இதோ இது தான் ரெட் ஃபோர்ட்:

லைட் ஷோ பார்க்க தலைக்கு 50 ருபாய் டிக்கட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றோம். 7.30க்கு துவங்கி 8.30க்கு முடிகிறது. உள்ளே ஆங்காங்கே கட்டிடங்கள். அந்த காலத்து ராஜா கதையை ஒளி ஒலி மூலம் விளக்குகிறார்கள். திடீர் திடீரென்று ஆங்காங்கே கட்டிடத்தில் கலர் கலராய் ஒளி வெள்ளம், குதிரைகளின் காலடி சத்தம், நம்மை முகலாயர் காலத்துக்கே அழைத்து செல்கிறது. அங்கு யாவரும் அமர்ந்து பார்க்க இருக்கை போடப்பட்டுள்ளது:

கொஞ்சம் நேரம் அதை ரசித்தோம். இரவு 10.30க்கு ட்ரைன். என் தந்தை, ஹஜ்ரத் நிஜாமுதீன் மர்க்கஸ் (தப்லீக்கின் தலைமையிடம்) சென்று வர சொன்னதை கருத்தில் கொண்டு, லைட் ஷோ முடியும் முன்பே கிளம்பினோம்.


ரெட் ஃபோர்ட்டில், அழகழகு கலை பொருட்கள், குண்டன் கல் பதித்த ஆபரணங்கள் என கொள்ளை அழகான பொருட்கள் விற்பனை அங்காடி நிறைய இருந்தது. அங்கு, ருபாய் 650க்கு ஒரு அழகான நெக்லஸ் செட் வாங்கினேன்.

அங்கிருந்து ஆட்டோவில், ஹஜ்ரத் நிஜாமுதீன் மர்க்கஸ் சென்றோம். அங்கு பள்ளி வாசலில் போய் மச்சான் தொழுது வந்தார்கள். ரயிலுக்கு வேறு நேரமாயிற்று, அங்கிருந்து ஆட்டோ பிடித்து, (ஆட்டோவுக்கு 210 ருபாய்) நேராக, எங்கள் லாட்ஜ் வந்து, லக்கேஜ் எல்லாம் எடுத்து கொண்டு, அதே ஆட்டோவில், ஸ்டேஷன் வந்தோம். போர்ட்டருக்கு 60 ருபாய் கொடுத்தோம்.


ரிசர்வ் செய்யும் போது, வெயிட்டிங் லிஸ்ட்டில் இருந்தது. இப்போ, ஸ்டேட்டஸ் பார்க்க, இன்னொரு கட்டிடத்துக்கு போக வேண்டும் என்றார்கள். மச்சானுக்கு ஹிந்தியும் ஆங்கிலமும் அரைகுறை என்பதால், அவரை சாமானுக்கு காவலாக நிறுத்தி விட்டு, நான் சென்று விசாரித்து வந்தேன். நல்ல வேளை டிக்கட் கன்பர்ம் ஆகி இருந்தது.


தமிழ்நாடு எக்ஸ்ப்ரெஸ் டிரைனில் ஏறி உட்கார்ந்தவுடன் கிட்டத்தட்ட பத்து நாட்களுக்குப் பின், தமிழை கேட்க சந்தோஷமாக இருந்தது. மறுநாள் முழுதும் சவுகரியமான பிரயாணம்; இரண்டாம் நாள் காலை 7.30க்கு சென்னை வந்து சேர்ந்தோம். அங்கிருந்து, வெஸ்ட் கோஸ்ட் ரயிலில் ஏறி, ஈரோடு வந்தோம்.


இரண்டு வருடம் முடிந்த நிலையிலும், இது எங்கள் வாழ்வில் மறக்க முடியாத, நீண்ட ஒரு பயணம், அதுவும் இருவர் மட்டும் தனியாக, பாஷை தெரியாத ஊரில், நேரத்தை கொஞ்சம் கூட வீணடிக்காமல், ரொம்ப ப்ளானிங்கா செய்தோம்னா, அதுக்கு காரணம் இண்டர்நெட் பார்த்து எல்லாம் ப்ளான் செய்தது தான். போக வர டிக்கட் எடுத்தது போக, கையில் பத்தாயிரம் எடுத்து சென்றோம். பற்றாததற்கு ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டோம்.


இந்த பயணத்தில், மொத்தம் மூன்று நாட்கள் தான் லாட்ஜில் தூக்கம். மீதி எல்லாம் பயணம் தான். மிக தாரளமாக தான் செலவு செய்தோம். எல்லா இடங்களிலும், தனி கார், நல்ல உணவு, டீஸண்டான லாட்ஜ், வால்வோ பஸ் பயணம், ஆசைப்பட்ட பொருட்கள் பர்சேஸ் என்று பணத்தை தண்ணீராக இறைத்தது போல் தான் இருந்தது. சொன்னா நம்ப மாட்டீங்க, பர்சேஸ் எல்லாம் சேர்த்து, மொத்தம் பதினைந்தாயிரம் தான் செலவு. இதுவும் இறைவனின் அருள் தானே?!


இதன் முதல் ஐந்து பதிவுகள், இந்த லின்க்கில்:

1. தாஜ்மஹால் ஓவிய காதல்.
2. ஆக்ரா கோட்டை.
3. பாலைவன பயணம்.
4. சிம்லாவை நோக்கி...
5. இமயமலை சாரலிலே...


(நிறைவுற்றது)

Related Links: New Delhi Travel Guide

-சுமஜ்லா.
.
.

14 comments:

நட்புடன் ஜமால் said...

எம்மாடி எம்பூட்டு விடயங்கள் சொல்லியிருக்கீங்க ...

சென்ஷி said...

:)

எதையும் மிஸ் பண்ணாம எழுதியிருக்கீங்க.. சுகமான பயண அனுபவங்கள்!

NIZAMUDEEN said...

பத்து நாட்களில் ஒரு சுற்றுலா சென்று வந்துள்ளிர்கள்.
இதில் மனக் கசப்பான நிகழ்வுகள் இல்லாமல்
இனிப்பான நினைவுகளே அமைந்ததற்கு
இறைவனுக்குத்தான் ந்ன்றி கூறவேண்டும்.

சரியான திட்டமிடல் என்பது பாதி செயல் நிறைவுக்குச் சமம்.

அபுஅஃப்ஸர் said...

பிளேனிங் பண்ன பயணம் குறைந்த செலவில் நார்த் இன்டியா முழுதும்..

அழகான வர்ணனையுடன் ஒரு பெரிய சுற்றுலா சென்ற திருப்தி

Anonymous said...

i think you will be selected for some thiratti's award soon.
Be prepared mentally for that.
Advance congrats

சுல்தான் said...

என்னங்க. பழைய கதையா? நாங்கள் குடும்பத்தோடு கடந்த ஜூனில்தான் போய் வந்தோம். இன்னொரு முறை போய் சுற்றி வந்தது போல் இருக்கிறது.

Anonymous said...

You are very good narrator.

Sridharan

SUMAZLA/சுமஜ்லா said...

சுல்தான் முதல் அத்தியாயம் பாருங்கள். தேதியும் வருடமும் தெளிவாக குறிப்பிட்டிருக்கிறேன். உங்க பட்ஜெட் எவ்வளவு ஆயிற்று?

thank you Sridharan.

PEACE TRAIN said...

பேஷ்,பேஷ் ரொம்ப நன்னா இருக்கே?

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி ஜமால், சென்ஷி, நிஜாம் அண்ணா, அபூ அப்ஸர். பல விஷயங்கள் மறந்து போய், என் டைரி குறிப்பை புரட்டினேன்.

நிஜாம் அண்ணா சொன்னது போல, எந்த மன கசப்பும் இல்லை. டில்லியில் பேக்கிங்கின் போது, அவர் அசால்ட்டாக டி.வி.பார்த்துக் கொண்டிருக்க, நான் டென்ஷன் ஆன சில நிமிடங்கள் தான் திருஷ்டி பரிகாரம். எங்கள் உல்லாச மனநிலை, தனி பிணைப்பை ஏற்படுத்தி, எந்த மனவேறுபாடும் வராமல் பார்த்துக் கொண்டது

SUMAZLA/சுமஜ்லா said...

thankyou sai, I dont know what made you say so, but i am happy with your warm words.

PEACE TRAIN said...

//சொன்னா நம்ப மாட்டீங்க, பர்சேஸ் எல்லாம் சேர்த்து, மொத்தம் பதினைந்தாயிரம் தான் செலவு. இதுவும் இறைவனின் அருள் தானே?!//

அல்லாஹ்வின் பரக்கத்!!

Jawarlal said...

போட்டோக்கள் ஒவ்வொன்றும் அருமை. அதிலும் குதுப்மினாரை முழு உயரத்தில் தெளிவாகப் படம் பிடித்ததற்கு இரட்டைப் பாராட்டுக்கள்.

தாஜ்மஹால்?

http://kgjawarlal.wordpress.com

SUMAZLA/சுமஜ்லா said...

சரியாக சொன்னீர்கள் பீஸ் ட்ரைன். அதைத்தான் யாவரும் புரிந்து கொள்ளும் விதமாக சொன்னேன்.

நன்றி ஜவஹர்லால்! தாஜ்மஹால் தனி காவியமல்லவா? அதோடு இந்த பயணத்தில் முதலிலேயே ஆக்ரா போனதால், அதை தனி அத்தியாயமாக கொடுத்திருக்கிறேன், தாஜ்மஹால் ஓவிய காதல் என்ற லின்க்கில்...படித்து பாருங்கள்.