Sunday, August 2, 2009

இமயமலை சாரலிலே...

இதன் முன் பகுதி இங்கே: சிம்லாவை நோக்கி...


இந்த தலைப்பில் ஏற்கனவே ஒரு கவிதை எழுதியிருக்கிறேன். ‘இமயமலை சாரலிலே’ என்று எழுதிய இந்த கவிதையின் சிறப்பு என்னவென்றால், இது உண்மையிலேயே இமய மலை சாரலில் எழுதியது.


சிம்லா போவதை வீட்டில் யாரிடம் சொல்லவில்லை. சொன்னால் பிள்ளைகளையும் அழைத்து போக சொல்லி எங்கம்மா அப்பா சொல்வார்கள். இங்கு வந்து தான் போன் செய்து விவரம் சொன்னேன்.


இனி, நம் கதைக்கு வருவோம். சிம்லாவை சுற்றிப் பார்க்க, நாங்கள் காலை 9 மணிக்கு ரூமில் இருந்து புறப்பட்டோம். அன்று முழுவதும் சுற்றிப் பார்த்து விட்டு, மாலை மலை ரயிலைப் பிடித்து, கல்கா வந்து அங்கிருந்து ஷிவாலிக் எக்ஸ்ப்ரஸ் பிடித்து டில்லி திரும்புவதாக ப்ளான்.


எப்படியும் அன்று இரவு அங்கு தங்க போவதில்லை, அதனால், அங்கு செக் அவுட் டைமான மதியம் 12 மணிக்கு ரூமை வெகேட் செய்து விடலாம் என்று ரிசப்ஷனில் அவ்விதமே சொல்லி விட்டு கிளம்பினோம்.


காலை உணவுக்கு பின், நடந்து, நடந்து மாலுக்கு செல்லும் லிப்ட் இருக்கும் இடத்துக்கு வந்தோம். ஏற்கனவே சொன்னபடி இது, ரோட்டில் இருக்கும் பப்ளிக் லிப்ட், தலைக்கு ஏழு ருபாய்கள் கொடுத்து, மேலே மாலுக்கு வந்தோம்.


கச கச என்று நிறைய கடைகள். விலை கொஞ்சம் அதிகம் தான். காரணம் மேலே எடுத்து வரும் போக்குவரத்து செலவு. ஞாபகத்துக்காக, மச்சானுக்கு ஒரு டி சர்ட்டும், எனக்கு ஒரு செருப்பும் பிள்ளைகளுக்கு க்ளிப் தோடு போன்ற ஐட்டங்களும் வாங்கினேன்.


மேடும் பள்ளமுமான பகுதியில் நடக்க, நடக்க கால் வலி வேறு! எல்லா பஜாரிலும், வழக்கமாக ஹில் ஸ்டேஷனில் விற்கும் சுவட்டர், ஷால்வைகள் தான். ஒரு டூவீலரோ, சைக்கிளோ அங்கு கிடையாது. எல்லாரும் பாதசாரிகள் தான். காரணம், பாதி ரோடும், பாதி படிக்கட்டுமாக உள்ளது.


அவசரத்துக்கு ஒரு ஆம்புலன்ஸ் கூட வர முடியாதபடி என்ன இது என்று நினைத்தபடியே நடந்தோம். இப்போ, எங்க லாட்ஜை கண்டு பிடிக்க முடியாதபடி வழி தவறி விட்டோம்.


இப்படியே ஒரு மணி நேரம் இலக்கின்றி அலைகிறோம், எங்கள் லாட்ஜ் இருக்கும் இடத்தை கண்டு பிடிக்க முடியவில்லை. கால்வலியால் நடக்கவும் முடியவில்லை. வழக்கமாக, வெளியூரில் சுற்றிப் பார்க்க செல்லும் போது, லாட்ஜின் விசிட்டிங் கார்டு வாங்கி செல்வேன். வழி மாறி விட்டால், கண்டு பிடிக்க சுலபமாக இருக்கும் என்று! அன்று அதுவும் மறந்து விட்டேன்.


பிரைட்லேண்ட் இன் என்று கேட்டால், இதோ பக்கம் தான் என்கிறார்கள்; ஆனால் வரவேயில்லை. நேரம் வேறு மதியம் 11.30 ஆகி விட்டது. கடைசியாக ஒருவர், எங்கள் லாட்ஜ் அருகே, ஆர்மியின் பேஸ் ஸ்டேஷன் இருப்பதாக சொல்ல, அதை அடையாளமாக வைத்து விசாரித்து, விசாரித்து முன்னேறினோம். கடைசியாக, என்னால் முடியவில்லை என்று உட்கார்ந்து விட்டேன். இறைவனிடம் இறைஞ்சினேன். பார்த்தால், நான் உட்கார்ந்திருப்பது, லாட்ஜின் நேர் பின்புறம். சந்தோஷமாக 11.45 மணிக்கு போய் சேர்ந்தோம்.


சரியாக ரூமை வெகேட் செய்து விட்டு, அங்கு ரிசப்ஷனில் சொல்லி, சிம்லாவை சுற்றிப் பார்க்க ஒரு தனி டேக்ஸி ஏற்பாடு செய்து கொண்டோம். லக்கேஜை டாக்ஸியில் வைத்து விட்டு, மாலை எங்களை ரயில்வே ஸ்டேஷனில் இறக்கிவிட வேண்டும் என்று பேசிக் கொண்டேன். காருக்கு வாடகை 550 ருபாய்.


அங்கு சிம்லாவில் பார்க்க வேண்டிய இடம் என்றால், கிரீன் வேலி மற்றும் ஒரு சில கோயில்கள், குஃப்ரி ஆகியவை.


கிரீன் வேலி என்பது மரங்கள் அடர்ந்த ஒரு போட்டோகிராபிக் ஸ்பாட் அவ்வளவு தான். அது போன்ற இடங்கள் இங்கு நிறைய இருக்கிறது. கீழே தெரிவது தான் கிரீன் வேலி.


குஃப்ரி என்பது மலையுச்சி போன்ற இடம். இது தான் இங்கு முக்கியமாக பார்க்க வேண்டிய இடம். இது சிம்லாவில் இருந்து 16 கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது.


நாங்கள் போகும் வழியில் ஒரு இடத்தில் நிறுத்தி மதிய உணவு சாப்பிட்டோம். வெறும் வெள்ளை சோறு மட்டும் ஒரு ப்ளேட் 20 ருபாய். தயிர் ஒரு ப்ளேட் 20 ருபாய். வெறும் சாதத்தில் கெட்டி தயிர் விட்டு, ஊறுகாய் தொட்டு கொண்டு சாப்பிட்டது அமிர்தம் போலிருந்தது.


சிறிது நேரத்தில் குஃப்ரியை அடைந்தோம். அங்கு, மேலே செல்ல, சதுப்பு நில பாதை மட்டுமே உள்ளது. கெண்டக்கால் வரை சேறு குழம்பி இருக்கும். குதிரையில் தான் செல்ல வேண்டும். அதற்கான ஏற்பாடு கவர்ன்மெண்ட்டே செய்துள்ளது. போக 20 நிமிஷம் வர 20 நிமிஷம், மேலே 2 மணி நேரம். தலைக்கு 250 ருபாய் கட்டணம் அதற்கு.


நாங்கள் டோக்கன் வாங்கிக் கொண்டு, குதிரையில் ஏறினோம். வாழ்நாளில் மறக்க முடியாத பயணம் அது. மாலிக் எனப்படும் குதிரைக்காரர்கள், சிறு பையன்களை வேலைக்கு வைத்திருக்கிறார்கள், குதிரையை ஓட்டிச் செல்வதற்கு. அவர்கள் காலில், முழங்கால் வரை உள்ள ஒரு வகையான ஷூ அணிந்து கொண்டு, குதிரையை வழி நடத்திச் செல்கிறார்கள்.


பயத்தோடு குதிரையில் ஏறி அமர்ந்து கயிற்றைப் பிடித்துக் கொண்டேன். 14 வயது இருக்கும் ஒரு சின்னஞ்சிறுவன் எங்களை அழைத்துச் சென்றான். மேலே ஏற ஆரம்பிக்கிறது குதிரை. மேலே ஏறும் போது, நாம் முன்புறம் சாய வேண்டும் என்றும், பள்ளத்தில் இறங்கும் போது பின்புறம் சாய வேண்டும் என்று ஹிந்தியில் அச்சிறுவன் சொல்லி விட்டு, அதற்கான தமிழ் பதத்தைக் கேட்டான். நான் சொன்னேன். அதன் படி, அவன், ‘முன்னாடி சாஞ்சுக்கோ’, ‘பின்னாடி சாஞ்சுக்கோ’ என்று சொல்லியபடியே சென்றது என்றும் மறக்க முடியாது.


திகிலுடன் கூட அட்வென்சரான பயணம் அது. அந்த பையனுடன், பேசிக் கொண்டே வந்தேன். எங்கள் இருவரின் குதிரையும் ஜோடி குதிரை என்றும், ஆண் குதிரையின் பெயர், டைகர், பெண் குதிரையின் பெயர், சமேலி என்றும் சொன்னான். அக்குதிரைகளை படத்தில் பார்க்கலாம்(வலது புறம் இருப்பது ஆண்குதிரை, இடது புறம் இருப்பது பெண் குதிரை, மேலே நாங்கள் அமர்ந்திருப்பது பிரைவஸி கருதி வெட்டி விட்டேன்).


குதிரையில் இருந்து இறங்கி நடக்க ஆரம்பித்தோம். சிறிய லேக் ஒன்று அங்கு(போட்டிங் எல்லாம் இல்லை, மிக சிறியது இது). நம்மை சுற்றியும் இயற்கை அன்னை முந்தனை விரித்திருக்கிறாள். என்னைப் போன்ற கவிச்சுவை நிரம்பியவர்களுக்கு, கவிதை பொங்கி வழியும் இடம் இது.


பசுமையான அந்த சூழலில் எங்கு திரும்பினாலும், இளம் ஜோடிகள். நாங்கள் தான் கொஞ்சம் லேட். ஆனாலும், அந்த உற்சாகம் எங்களையும் தொற்றிக் கொண்டது என்று தான் சொல்ல வேண்டும். கை கோர்த்தபடி, கால் போன போக்கில் அலைந்தோம். மனசு முழுக்க, ஒரு நிறைவு.


தூரத்தில் தெரியும், பனி போர்த்திய இமய மலையைப் பார்க்கும் போது, “வெள்ளிப் பனி மலையின் மீதுலாவுவோம்” என்ற பாரதியின் பாடல் நினைவுக்கு வந்தது. இருவரும் நெருக்கமாக நின்று போட்டோக்கள் எடுத்துக் கொண்டோம்.


அழகென்றால் அழகு, அவ்வளவு அழகை அள்ளித் தெளித்திருந்த இடம் அது. காற்று இன்னும் மாசு படாமல், அவ்வளவு தூய்மை. நாங்கள் டெலஸ்கோப் வழியாக, சைனா பார்டர் மற்றும் திபத்தின் பார்டர் ஆகியவை பார்த்தோம். இதோ, நாங்கள் டெலஸ்கோப் வழியாக பார்த்த பகுதி! இந்த பனிமலையினுள்ளே தான், சைனாவும் திபத்தும் ஒளிந்திருக்கின்றன.


கதைகளிலும், காவியங்களிலும், பள்ளிப் பாடத்திலும் மட்டுமே படித்திருந்த, ‘ஹிமாலயாஸ்’, ‘இமயமலை’, ‘கைலாய மலை’ என்று பல விதமாக அழைக்கப்படும் மலைத் தொடர் இன்று கண்முன், ஏன் அதில் ஒரு பகுதியில் தானே நாங்கள் நிற்கிறோம்.


அந்நாட்டு பாரம்பரிய உடை( அசாமியர் போன்று) உடுத்தி, ஒரு புறம் மக்கள் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தனர். அங்கிருந்த மலை மாடுகளை நான் க்ளிக்கினேன். இதோ:


நாங்கள் சென்றது ஜூன் மாதம். செப்டம்பருக்கு மேல் சென்றிருந்தால், அங்கு பனி பொழிவு இருக்கும். ஸ்கீயிங் போன்ற விளையாட்டுகளும் இருக்கும்.


மனம் முழுக்க, அவ்வினிய நினைவுகளை நிரப்பிக் கொண்டு, அதே குதிரைகளில் திரும்பி, எங்களுக்காக காத்திருந்த காரில் ஏறி, ரயில்வே ஸ்டேஷன் திரும்பினோம்.


எங்கள் டிக்கட் ஆக்ராவில், ஏஜென்ஸியில் எடுத்திருந்தது, கன்பர்ம் ஆகவில்லை. கன்பர்ம் டிக்கட் என்று பொய் சொல்லியிருக்கிறார்கள். இது போன்ற விஷயத்தில் உஷாராக இருப்பது நல்லது.


அங்கு ரயில்வே ஸ்டேஷனில் இருந்த ஒரு போர்ட்டர், எங்களுக்கு அன்ரிசர்வ்டில் சீட் பிடித்துத் தந்தார். அதற்கான அன்பளிப்பு கொடுத்த போது, நானும் ஒரு முஸ்லிம் தான், எனக்காக துவா செய்யுங்கள் போதும் என்று ஹிந்தியில் சொல்லி, வாங்கவே மாட்டேன் என்கிறார். வற்புறுத்தி கொடுத்தோம். இவர்களைப் போன்றவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். அதே சமயம், நிச்சயம் கன்பர்ம் ஆகிவிடும் என்று பொய் சொல்லி, ட்ராவல் ஏஜென்ஸியில் டிக்கட் எடுத்துத் தந்தவனும் ஒரு முஸ்லிம் தான்.


ரயில் பயணம் மிகவும் சவுகரியமாகவும், ஜாலியாகவும் இருந்தது. இமய மலைத்தொடரினுள்ளே சூரியனின் மறைவை, மிகவும் ரசித்து புகைப்படம் எடுத்துக் கொண்டேன். இதோ:



கூ வென்று கத்திக் கொண்டு, மலையிலிருந்து இறங்கியவாறு, அள்ளிப் பருகும் மலையழகை எம் கண்களுக்கு விருந்தாக்கியபடி - ஆயிரமாயிரம் கனவுகளை எம் கண்களுக்கு தந்தபடி - மறக்க முடியாத நினைவுகளை எம் இதயம் சுமக்கும்படி செய்து, சென்று கொண்டிருந்த, எங்கள் பொம்மை ரயில், அழகாக வளைந்து நெளிந்து செல்லும் போது, ஜன்னல் வழியாக போட்டோ எடுத்தேன், இதோ:


இரவு, கல்கா வந்தடைந்து, அங்கிருந்த ஷிவாலிக் எக்ஸ்ப்ரெஸ்ஸில் ஏறினோம். நல்லவேளை இந்த டிக்கட் கன்பர்ம் ஆகி இருந்தது. டில்லியை நோக்கிய எங்கள் பயணத்தில் கண்களில் கனவுகளோடு, கண்ணயர்ந்தோம்.


அடுத்த அத்தியாயம் இந்த லின்க்கில் தலைநகர சுற்றுலா


இதன் முதல் நான்கு பதிவுகள், இந்த லின்க்கில்:

1. தாஜ்மஹால் ஓவிய காதல்.
2. ஆக்ரா கோட்டை.
3. பாலைவன பயணம்.
4. சிம்லாவை நோக்கி...


Related Links: Shimla Travel Guide - My Adventures On The Paradise On The Earth


-சுமஜ்லா.
.
.

15 comments:

NIZAMUDEEN said...

முன் பதிவை (சிம்லாவை நோக்கி...) படித்த சில மணி நேரத்திலேயே
அடுத்த பதிவை அதி விரைவாக, பதிந்துவிட்டீர்கள்.
அடுத்த அத்தியாயம் படிக்க நாங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை,
உங்கள் சுறுசுறுப்பு மிஞ்சிவிடும் போலிருக்கிறது.

"முன்னாடி சாஞ்சிக்கோ... பின்னாடி சாஞ்சிக்கோ..."
என்று சிறுவனுக்கு தமிழ் கற்று கொடுத்து,
அதை அந்த்ச் சிறுவன் சொல்லச் சொல்ல குதிரையில்
சென்றதுபற்றிய வித்தியாச அனுபவம் படிக்க சுவையாய்
இருந்தது.

SUFFIX said...

பயண அனுபவங்களை நன்றாக எழுதி வருகிறீர்கள். ரசித்து படித்துக்கொன்டு இருக்கின்றோம்.

கிரி said...

//பிரைட்லேண்ட் இன் என்று கேட்டால், இதோ பக்கம் தான் என்கிறார்கள்; ஆனால் வரவேயில்லை.//

நடிகன் படத்துல வர மாதிரி இஸ்லேண்டு எஸ்டேட் மாதிரி ஆகி விட்டதா! :-))))

//அவன், ‘முன்னாடி சாஞ்சுக்கோ’, ‘பின்னாடி சாஞ்சுக்கோ’ என்று சொல்லியபடியே சென்றது என்றும் மறக்க முடியாது.//

ஹா ஹா ஹா

உங்கள் எழுத்து நடை அருமை..(டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல) தங்கு தடையின்றி படிக்க முடிகிறது...அங்கே ஓடும் நதியை போல

கிரி said...

இமயமலை செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை

S.A. நவாஸுதீன் said...

அழகான, குளிர்ச்சியான, அருமையான பயணக் கட்டுரை. அருமை சகோதரி. பாராட்டுக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

//அடுத்த அத்தியாயம் படிக்க நாங்கள் கொண்டிருக்கும் ஆர்வத்தை,
உங்கள் சுறுசுறுப்பு மிஞ்சிவிடும் போலிருக்கிறது.//

அடுத்த அத்தியாயம் கொஞ்சம் லேட்டாக, அதற்கும் முன், வேறு சில பதிவுகள் போட வேண்டி உள்ளது.

SUMAZLA/சுமஜ்லா said...

// ரசித்து படித்துக்கொன்டு இருக்கின்றோம்.//

நன்றி ஷஃபி!
ஒரு வாரமாக உங்க ப்ளாகில் ஏதும் அப்டேட் செய்யவில்லையே, பிஸியா?

SUMAZLA/சுமஜ்லா said...

//நடிகன் படத்துல வர மாதிரி இஸ்லேண்டு எஸ்டேட் மாதிரி ஆகி விட்டதா! :-)))//

எனக்கு தெரியாதே இந்த கதை(பொதுவா நான் படம் பார்ப்பதில்லை)

//உங்கள் எழுத்து நடை அருமை..(டெம்ப்ளேட் பின்னூட்டம் அல்ல) தங்கு தடையின்றி படிக்க முடிகிறது...அங்கே ஓடும் நதியை போல//

அட, நான் டெம்ப்ளேட் பின்னூட்டம்னு சொல்லிவிடுவேன் என்ற பயமா? ஹா ஹா...

அட பாரப்பா, இவரும் உதாரணத்தோட சொல்ல ஆரம்பிச்சுட்டாரு!!

//இமயமலை செல்ல வேண்டும் என்பது என் நீண்ட நாள் ஆசை//

தங்கள் பெயருக்கே, மலை என்று தான் அர்த்தம். உதாரணம் சதுர கிரி, கிரி வலம்.

அதனால், நீங்கள் நிச்சயம் இமயமலை என்ன மவுண்ட் எவரெஸ்ட்டே செல்வீர்கள்.(அட்லீஸ்ட் வாழ்க்கையிலாவது அந்த உயரத்தை எட்டுவீர்கள்) அட்வான்ஸ் வாழ்த்துக்கள்.

SUMAZLA/சுமஜ்லா said...

//அழகான, குளிர்ச்சியான, அருமையான பயணக் கட்டுரை. அருமை சகோதரி. பாராட்டுக்கள்//

தங்கள் பின்னூட்டமும், படிக்க அழகாக, குளிர்ச்சியாக, அருமையாக இருந்தது; நன்றி!

SUMAZLA/சுமஜ்லா said...
This comment has been removed by the author.
SUFFIX said...

// ரசித்து படித்துக்கொன்டு இருக்கின்றோம்.//

நன்றி ஷஃபி!
ஒரு வாரமாக உங்க ப்ளாகில் ஏதும் அப்டேட் செய்யவில்லையே, பிஸியா?//

ஆமாம் ISO Audit. அடுத்த ஊர் வரை சென்றிருந்தேன்.

SShathiesh-சதீஷ். said...

என் தளத்தில் உங்களுக்கும் சுவாரஸ்ய பதிவர் விருது வழங்கி மகிழ்ந்துள்ளேன். அந்த சந்தோசத்தில் பங்க கெடுப்பதோடு இந்த சங்கிலியை தொடருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன்.
http://sshathiesh.blogspot.com/2009/07/blog-post_30.html

Unknown said...

உங்கள் எழுத்துக்களில் என் ஒரு வேகம்.. அடுத்து அடுத்து பதிவுகள்...
உங்களின் இந்த கட்டுரையினை பார்த்தவுடனே நேராக (என் கனவு தேசத்தை)போய் பார்க்கனும் என்று ஆர்வம் வந்துவிட்டது.
ரொம்ப அழகாக எழுட்தியிருக்கிங்க வாழ்த்துக்கள்

SUMAZLA/சுமஜ்லா said...

நன்றி சதீஷ்! தங்கள் விருதை ஏற்றுக் கொண்டேன்.

ஃபாயிஜா, சீக்கிரமே போய் வாருங்கள். இதெல்லாம் இளமை இருக்கும் போது அனுபவித்தால் தான், நன்றாக இருக்கும். ‘கனவு தேசம்’ என்றவுடன் என் கனவு தேசம் நினைவுக்கு வந்து விட்டது.

‘ஆல்ப்ஸ் மலையில் சிகரத்தில்
அழகிய ரைன் நதி ஓரத்தில்’

என்று பாட்டில் வருமே, அந்த ரைன் வேலி தான் என் கனவு தேசம். இத்துணைக்கும் அது எங்கு இருக்கிறது என்று கூட தெரியாது. பிரான்ஸ் என்று நினைக்கிறேன். ஆனால், அந்த பாடலில் இருக்கும் ஈர்ப்பு அதன் மேல் ஒரு பற்றை ஏற்படுத்தி விட்டது.

Arun said...

Add-தமிழ் விட்ஜெட் உங்கள் ப்ளாகில் சேருங்கள். அணைத்து தமிழ் திரடிகளிலும் எளிதில் உங்கள் இணையபக்கத்தை பப்ளிஷ் செய்யலாம். Add-தமிழ் விட்ஜெட் தரவிறக்கம் செய்ய http://findindia.net